Saturday 29 March 2008

12-இந்தியாவின் கரிசனையில் பொதிந்துள்ள அர்த்தங்கள்....

"இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வுத்திட்டம் பற்றிய சிந்தனையே இலங்கை அரசுக்குக் கிடையாது. அது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரேயொரு இராணுவ நோக்கத்துடன் மாத்திரமே செயற்படுகின்றது.''இவ்வாறு விசனத்துடன் கருத்துக்கூறியிருக்கின்றார் இந்திய மத்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.அவர் அலங்கரிக்கும் பதவி வெறும் ஆலோசகர் கதிரை அல்ல. அது, இந்திய மத்திய அரசின் அமைச்சரவை அந்தஸ்து உள்ள ஓர் அமைச்சருக்குரிய இராஜதந்திர பதவி நிலையாகும். இந்தியாவின் போர் அல்லது சமாதானம் மற்றும் அவை போன்ற பாதுகாப்பு விடயங்களில் ஆட்சித் தலைவரான பிரதமரின் சார்பில் முடிவெடுக்கும் தகுதியும் அதிகாரமும் இப்பதவியில் இருக்கும் பிரமுகருக்கு உண்டு. அந்த வகையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை விட இவ்விடயங்களில் முக்கியமானவராகின்றார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.அத்தகைய ஒருவரே இப்போது ஈழத் தமிழரின் நலனுக்காக நீலிக் கண்ணீர் முதலைக் கண்ணீர் வடிப்பவர் போல கருத்து வெளியிட்டிருக்கின்றார்.இலங்கை விவகாரத்தை ஒட்டி புதுடில்லி அதிகார வர்க்கத்தின் முக்கிய குரல் ஒன்று வெளியிட்டிருக்கும் இத்தகைய கருத்துக்கள் ஈழத் தமிழர்களுக்கு எவ்வளவு தூரம் சாதகமானவையாக பயனுள்ளவையாக இருக்கும் என்று கருதமுடியும்?இலங்கைச் சிக்கலை இனப்பிரச்சினையை எப்போதுமே அந்தக் களத்தில் அதனை எதிர்கொள்ளுபவர்களின் சூழ்நிலையில் இருந்து நோக்குவது புதுடில்லியின் பண்பியல்பல்ல. தன்னுடைய அரசியல், புவியியல், கேந்திர நலன்களின் அடிப்படையிலே அவற்றை நோக்குவதையே தன்னுடைய புத்தி சாதுரியமான நடவடிக்கையாக பலமான செயற்பாடாகக் கருதிக் காரியமாற்றுவது புதுடில்லியின் போக்காகும். தனித்துவமாகவும், தூரநோக்கோடும், உலகில் பாதிப்புற்ற மக்களின் இரட்சகராகத் தன்னைக் கருதும் தாராளத்தோடும் விடயங்களை அணுகி வந்த அன்னை இந்திரா காந்திக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஒரு புறம் தமது கருத்தியல்புச் சிந்தனையே காரியமாக ஆற்றப் பட வேண்டும் என்று திட்டவட்டமாக வழிப்படுத்தும் ஆளு மையோ, அதிகாரமோ, செல்வாக்கோ, உறுதியோ இல்லாதவர்களாக இருந்து வருகின்றார்கள். அந்தக் காரணத்தால் மறுபுறத்தில் இலங்கைப் பிரச்சினை போன்ற சர்வதேச அரசியல் சிக்கல் விவகாரங்களில் அதிகாரவர்க்கத்தின் மகுடிக்கு ஏற்ப ஆடவேண் டியவர்களாகவும் ஆடுபவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள்.இவ்வாறு புதுடில்லி அரசியல் தலைமைகளை ஆட்டுவிக்கும் அதிகாரவர்க்கப் பிரகிருதிகளுள் ஒருவராகக் கருதப்படவேண்டிய நாராயணனின் உள்ளத்திலிருந்துதான் கொழும்பு அரசைக் குறைகூறும் வார்த்தைகள் இப்படி வந்திருக்கின்றன.ஏற்கனவே இந்தியாவின் உளவுத்துறையான றோ மற்றும் மத்திய புலனாய்வுத்துறையான ஐ.பி. போன்றவற்றின் தலைவராக இருந்து பல குசும்புத்தனங்களைப் பண்ணிய நாராயணனுக்கு இலங்கை விவகாரம் பாலர் விளையாடும் மைதானம் போன்றது. இப்போது ஏதோ ஓர் அந்தரங்கத் திட்டத்தோடு காய்களை நகர்த்துவதற்காக இப்படிக் கொழும்பைக் கரித்துக் கொட்டுபவர் போல பாவனை பண்ணுகின்றார் அவர் என்றே கருதவேண்டியுள்ளது.மோசமான மனித உரிமை மீறல் போக்குக்காகவும், தீவிர யுத்த வெறி முனைப்புக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குலகின் கடும் கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் கொழும்பு இலக்காகியிருக்கின்றது.இச்சமயத்தில் மேற்குலகோடு ஒத்துப்போகின்றமைபோலக் கருத்து வெளியிடாமல் விட்டால், பிராந்தியத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவையே ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தம்பாட்டில் காரியம் பண்ணும் வேலைக்கு மேற்குலகமும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் போய்விடும்.அதேசமயம், கொழும்பின் யுத்த வெறித் தீவிரத்துக்கு எதிராகத் தமிழகத்திலும் உணர்வலைகள் கொதித்து எழும்பி வருகின்றன.இவற்றையெல்லாம் சமாளித்து, தானும் நீதி, நியாயத்தோடு செயற்படுகின்றது என்று காட்டவேண்டிய இக்கட்டு புதுடில்லிக்கு உண்டு. அதற்காகத்தான் கொழும்பை வைகின்றவர்போல ஒரு முகமூடியணிந்து நாடகமாடுகின்றார் நாராயணன். இலங்கை விவகாரத்தில் உண்மையாகவே இதய சுத்தியுடன் நேர்மை, நாணயத்தோடு செயற்பட இந்தியாவும், நாராயணன் உட்பட்ட அதிகார வர்க்கமும், அந்தத் தரப்பினால் ஆட்டுவிக்கப்படுகின்ற அரசியல் தலைமைகளும் விரும்புமானால் முதலில் அவை இவ்விடயத்தில் தமது உண்மையான நண்பன் யார், சதித்திட்ட உள்நோக்கோடு காரியமாற்றும் எதிரி யார் என்பதை ஒரு தடவை எண்ணிப்பார்க்கவேண்டும்.அந்த அளவுகோலைக்கொண்டு எதிர்காலக் காரியங்களைக் கட்டவிழ்க்க புதுடில்லி முனையுமானால், இந்தப் பிராந்தியத்தில் நீதி, நியாயமான அமைதித் தீர்வுக்குச் சாத்தியம் ஏற்படும் என நம்பலாம்.
நன்றி:உதயன்.
jaalavan@gmail.com

Monday 10 March 2008

11-மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா?: விடுதலைப் புலிகள்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
10.02.2008.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கௌரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்கால சூழலில், தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரச கௌரவத்தை வழங்கியுள்ள இந்திய அரசின் செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
சிறிலங்கா அரசின் இராணுவ வழித்தீர்வுக்கு ஒருபுறமும் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக, உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது.
ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளிவிட்டு அதிகளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப்படைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த உண்மையை மூடிமறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு, தொடரும் போரிற்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.
சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பிற்குத் துணைபோகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.
இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு, அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.
இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத்தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளிவிடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக்காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.
நாம் போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எமது மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக ஒரு தற்காப்புப் போரையே நடாத்தி வருகின்றோம்.
நாம் இன்னமும் நோர்வேயின் தலைமையிலான அமைதிவழி முயற்சிகளிலிருந்து விலகவில்லை. நோர்வே அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கின்றது.
இந்த நிலையில், அரசியல்-இராணுவ- பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முண்டு கொடுக்கும் இந்திய அரசின் செயலானது ஈழத்தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
"புலிகளுடனான போரில் சிங்களப் படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை." என்ற இந்தியப் படையதிகாரிகளின் கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முண்டு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.
இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப்போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jaalavan@gmail.com

10-மன்னாரில் பெண் புலிகளின் வீரம்

ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம்.சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணியினரைச் சந்திப்பதற்காகத்தான் போகின்றபோது காடுகளிடையே பழைய கட்டடங்களின் அத்திவாரங்களை இடையிடையே காண்பதாகக் கேணல் யாழினி (விதுஷா) சொன்னார். காட்டு வழிகளில் தொடர்பேயில்லாமல் மா போன்ற வீட்டுப் பயன்பாட்டு மரங்கள் நிற்பதாகவும் காலாறுவதற்காக அத்திவாரத்தைக் கைகளால் தட்டியபோது அது சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்ததைக் கவனித்ததாகவும் கூறினார். மாநகரம் ஒன்று காடு மூடிக் கிடக்கின்றது. இதைச் சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ?ழூழூழூமாந்தை துறையின் கடலின் அடியில் நங்கூரத்தைப் பாய்ச்சி விட்டுக்கடலின் மடியில் ஆடிக்கொண்டிருந்தது அரபிக் கப்பல் ஒன்று. குதிரைகளை இறக்கிவிட்டு யானைகளை ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்தது அது. மீண்டும் புறப்பட ஒரு திங்களாவது செல்லும். மாந்தையில் இறங்கி உலாவிக் கொண்டிருந்த அராபிய வணிகர்கள் அங்காடிகளில் யானைத் தந்தங்கள், அரிசிக் குவியல்கள் என்பவற்றுக்குச் சமமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த முத்துக்களை வாய்பிளந்து பார்த்தார்கள். இவற்றை வாங்குவதற்கு இன்னும் மூன்று கப்பல்களில் குதிரைகளையும் கம்பள விரிப்புக்களையும் கொண்டு வந்து கொட்டவேண்டும்.மன்னாரின் கண்டமேடை அடித்தளத்தில் விளையும் முத்துக்களை ஒத்த அழகோடு சுவையான பழங்கள் பாலை மரங்களில் தொங்கிக்கிடந்தன. அவை வணிகர்களின் வாய்களில் நீரை ஊறவைத்தன. பன்னாட்டு வணிகர்களினாலும் உள்நாட்டு வணிகர்களினாலும் மாந்தைத் துறைக்குப் போகும் முதன்மைச் சாலையும் அங்காடித் தெருவும் நிறைந்திருந்தன. வலிமை மிக்க உயர்ந்த கட்டடங்களால் மாந்தையின் அழகு திகழ்ந்தது.ழூழூழூமுத்துக்கள் விளையும் கடலினடியில் முத்தை விடவும் அதிகமாக உலகை ஈர்க்கின்ற ஒரு பொருள் இருப்பது தெரிந்ததும் கழுகின் கவனம் இங்கே குவிந்தது. மூன்றுதலைச் சிங்கமும் அதற்கே முயன்றது. மன்னாரை விலைபேச வாளேந்திய சிங்கம் புறப்பட்டது. வந்தவர்களை வழிமறிக்க விடுதலைப் புலிகளும் புறப்பட்டனர்.***கீர்த்தியின் கொம்பனி 2007 மார்ச்சில் அள்ளிக் கட்டிக்கொண்டு மன்னாருக்குப் போய் இறங்கியதும். 1999 இல் போர் முழக்கம் (ரணகோச) - 03,05 நடவடிக்கைகளை எதிர்கொண்டு முறியடித்த பட்டறிவைக் கொண்ட பழையவர்கள் சிலரும் மன்னாரின் நிறம் தெரியாத புதியவர்கள் பலருமாகப் போயிறங்கி, அகழிகளை வெட்ட மண்வெட்டிகளை ஓங்கி நிலத்தில் போட்டனர். பட்டுத் தெறித்தது மண் அல்ல. மண் வெட்டிதான். ஒன்றுமே இல்லாத சதுப்பு நிலத்தில் இன்று இஸ்ரேல் எழுந்து நிற்கின்றது. வெட்டப்படாத நிலம் வேண்டாம் என்று மன்னாரை விட்டுவிடமுடியவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு அகழிகளை வெட்டிமுடித்து, மரக்குற்றிகளைத் தூக்கிவரப் போயினர். காடு மூடிக்கிடந்த காலம் மூடிக்கிடந்த மாநகரத்தின் காலடியில் காப்பரண்கள் எழுந்தன.ஆறு மாதங்களின் பின் முதற் சண்டை வந்தது. 2007.09.24 அன்று காலை கட்டுக்கரைக்குளக்கட்டோடு அமைக்கப்பட்டிருந்த லெப். அருமலரின் காப்பரணைச் சிங்களப் படையினர் தாக்கினர். அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய சண்டை மாலை ஐந்து மணிவரை நீடித்தது. பெரும் பலத்தோடு வந்து ஒற்றைக் காப்பரணைத் தாக்கிய சிங்களப் படைகளைக் காப்பரணில் நின்ற ஐவரும் எதிர்த்துக் கொண்டிருந்தனர்.காயம். அதைக் கட்டு. சுடு. மறுபடி காயம். மீண்டும் கட்டு. தொடந்தும் சுடு. ஐவரின் உயிர்கள் வீழ்ந்த பின்னும் ஆண்மாக்கள் போராடின. அவர்களின் காப்பரண் எதிரிகளிடம் வீழவில்லை. அவர்கள் விரும்பியதும் அதைத்தான்.****கட்டுக்கரைக் குளக்கட்டுக் காப்பரணை இலக்கு வைத்து மறுபடியும் வந்த சிங்களப்படைகளை இம்முறை எதிர்கொண்டது கப்டன் கோதையின் அணியினர். முதற்சண்டையில் விதையாகிய தோழியரின் இரத்தமும் தசையும் ஊறி வீரம் ஊறிக்கிடந்த காப்பரண் இந்தமுறை கடுமையாக மோதியது.சண்டை கடுமையாக நடந்தது. படைத்தளம் ஒன்றைத் தாக்கும் பலத்தோடும் வளத்தோடும் வந்து தனித்த ஒற்றைக் காப்பரணைத் தாக்கிக்கொண்டிருந்த சிங்களப் படையினருக்கு இலக்காகாமல், வெளியேறுவதற்கிருந்த ஒற்றை வழியால் வெளியேறித் தேடிவந்தவர்களை ஏமாற்றியிருக்கலாம். கோதை ஒப்பவில்லை.'வரமாட்டேன். விடமாட்டேன் என்று துணிவோடு நின்றவர்கள் வீழ்ந்த பின்னும் காப்பரண் வீழவில்லை. தம்மால் தாக்கப்பட்ட காப்பரணைத் தக்கவைக்க முடியாமல் சிறிலங்காவின் மேன்மை மிகு படையினர் திரும்பிச் சென்றனர்.2007.09.24 அன்று கட்டுக்கரையில் தொடங்கிய சண்டை காலையில் பாலைக்குழி, மாலையில் பெரியபண்டிவிரிச்சான், இரவு திருக்கேதீச்சரம், மறுநாள் காலை முள்ளிக்குளம், மதியம் உயிலங்குளம் என்று தொடர்கின்றது. என்னதான் நடக்கின்றது மன்னாரில்? நாளாந்த ஏட்டின் தலைப்புச் செய்தியை நாள்தோறும் உருவாக்குகின்ற மன்னார் சண்டைகளின் பின்னணி என்ன?சிங்கள அரசின் மேன்மை மிகு தரைப்படைகளின் பலம் மேலும் பெருக்கப்பட்டுள்ளதா? முன்பென்றால் மாதம் ஒரு சண்டை. இருபது போராளிகள் வீரச்சாவு, ஐம்பது படையினர் சாவு என்றொரு செய்தி மறுபடியும் நாளேட்டில் வர ஒரு மாதமாவது செல்லும். இப்போது நாளாந்தம் சண்டையென்றால்...?'வீட்டுக்கு ஒராளைத் தந்திருக்கிறோம். கூட்டிக்கொண்டு போய் என்ன மோனே செய்யிறியள்? அவன் எந்த நாளும் வந்து அடிச்சுக்கொண்டிருக்கிறான். பார்த்துக்கொண்டிருக்கிறியள���"கோவப்படாதீர்கள் ஐயா கொஞ்சம் பொறுங்கள். விடுதலைப் புலிகளின் போர்முனைப்பையோ, ஒருங்கிணைந்த பலத்தையோ, ராங்கிகளின் நகர்வால், பல்குழல் பீரங்கிகளின் செறிவான சூடுகளால் குலைத்துவிட எந்தச் சிங்கள மேலாண்மைச் சக்திகளாலும் முடியவில்லை. கால்களை, வாலை, தலையை ஓட்டினுள் இழுத்து வைத்துக்கொண்டு இருந்துவிட்டு, எல்லாம் முடிந்ததும் வெளியே தலையை நீட்டும் ஆமையைப் போலே, மண்ணின் மடியில் இருந்து எழும் புலிகள் மறுபடியும் உலாவுகின்றார்கள். இவர்களோடு நேரே மோதுவதைத் தவிர வேறு வழியில்லை.மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட இனம், உலக வல்லரசுகள் பின்னால் நிற்கும் பலம் இரண்டும் கைகோர்க்க அதிகரித்த மனித, படைக்கல வளத்தோடு எங்களின் ஒற்றைக் காப்பரணை ஒரு படைத்தளமாகக் கருதியே தாக்குகின்றார்கள் ஐயா, சண்டையின் கணக்குப்படி பார்த்தால், வீட்டுக்கொருவராக எழுந்து வந்த உங்களின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இருபது சிங்களப் படையினருக்குச் சமம் ஐயா ஒற்றைக் காப்பரணைத் தாக்க நூறு பேர் அல்லவா வருகின்றார்கள்.****சண்டையில் நிற்கும் பிள்ளைகளைப் படம் எடுக்கப் போகின்றேன் என்று சாரதா கிளம்பி மன்னாருக்குப் போய்விட்டார். ஒவ்வொரு காப்பரணையும் படம்பிடித்து அவர்களோடு இருந்து அளவளாவி, உசாவி நிலமை அறிந்தபடி சாரதாவோடு ஒரு அணி நகர்ந்து கொண்டிருந்தது.அடுத்த காப்பரணுக்குப் போவதற்கு இடையில் ஒரு வெட்டையை ஓடிக்கடக்க வேண்டும். மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருக்கும் போதே சற்றுத் தூரத்தே கனரகச் சுடுகலனின் தொடர் சூடு கேட்கத் தொடங்கியது. ஐயமில்லாமல் இது 50 கலிபரின் அடிதான். எங்களுடைய காப்பரண் ஒன்று சிங்களப் படைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கி���்றது. ஓட்டமாக ஓடிப்போய் அடுத்த காப்பரணில் புகுந்து இருந்தபோது காது கிழிந்தது. இந்தக் காப்பரணுக்கு ஏறத்தாழ ஐம்பது, அறுபது மீற்றர்கள் தொலைவில் தமது ஐம்பது கலிபர் சுடுகலனை நிலைப்படுத்திய சிங்களப் படையினர், சற்றுத் தள்ளியிருந்த முதன்மைச்சாலை ஒன்றில் சற்று முன்னதாக நீட்டியபடி அவர்களுக்குத் தொந்தரவாக இருந்த எங்களின் அடுத்த காப்பரணை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள்.அருகிலிருக்கும் எதிரிகளைத் தாக்கி, இதிலேயும் ஒரு காப்பரண் இருக்கின்றது என்று காட்டவேண்டிய தேவையில்லைத்தானே. எனினும் விழிப்பாகக் கண்காணிப்பில் நின்றார்கள். இவர்களைக் கண்டதும்'வாங்கோ வாங்கோக்கா" என்றவாறு உள்ளே இழுத்தெடுத்தார்கள்.ஒருவர் அடுப்பை மூட்டி, தண்ணீரை ஏற்றினார். மற்றவர் உணவுப் பொதிகளை அவிழ்த்தார்.'ரீ குடியுங்கோ. சாப்பிடுங்கோக்கா..."என்னடா இது. முன்னுக்குச் சண்டை நடக்கின்றது. இவர்களை நோக்கி எந்த நேரமும் அது திரும்பலாம்.'நீங்கள் சாப்பிட்டிட்டிங்களோ?"'இல்லையக்கா, காலையும் மதியமும் இப்ப உங்களுக்குப் பின்னாலைதான் வந்தது. நீங்கள் சாப்பிடுங்கோ. நாங்கள் பிறகு சாப்பிடுவம்"'பரவாயில்லை. களைச்சுப் போனீங்கள் சாப்பிடுங்கோ"சண்டையில் நிற்பவர்கள் என்று இவர்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க, நீண்டதூரம் நடந்து வருகின்றார்கள் என்று அவர்கள்இவர்களுக்கு விட்டுக்கொடுக்க...அதற்குள் தேநீர் தயாரிக்கப்பட்டுவிட்டதால் அதைக் குடித்துவிட்டு வந்தவர்கள் புறப்பட,'கவனமக்கா. பாத்துப் போங்கோ"என்று நின்றவர்கள் வழியனுப்பினார்கள்****மன்னார் போரரங்கில் நிற்கும் 2 ஆம் லெப். மாலதி படையணியின் எல்லா உறுப்பினர்களுக்கும் சத்தான இடைநேர உண்டிகளை வாங்கிக் கொடுக்கும்படி தலைவர் அவர்கள் கேணல் யாழினி (விதுஷா) யிடம் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்தார்.பங்கிடப்படும்போது வீணாக்கக்கூடாது. மன்னாரின் இந்தத் தொங்கலிலிருந்து அந்தத் தொங்கல் வரை நிற்பவர்களுக்கு எறிகணை வீச்சுக்களுக்குத் தவழ்ந்து, ஆறு கடந்து, சேறு கடந்து, குளம் கடந்து தேடுதல் அணியின் பின்னே போய் கொடுத்து முடியவே ஆறேழு நாளாகும். அதுவரை பழுதாகவும் கூடாது. அண்ணை நல்ல சாப்பாடு கொடுத்துவிட்டிருக்கிறார் என்று வயிறாற, மனம் நிறைய விரும்பிச் சாப்பிடக் கூடிய மாதிரியும் இருக்க வேண்டும். நிறைய யோசித்த யாழினி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 'சோன்பப்டி" இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக்கொடுத்துவிட்டார். எல்லோர் கைகளுக்கும் போய்ச் சேர்ந்துவிட்டது.முன்னரங்கைப் பார்வையிட்டவாறு போய்க்கொண்டிருந்த யாழினி அந்தக் காப்பரணில் காலாற அமர்ந்து கதைத்தார். ஒரு புதிய போராளி உசாவத் தொங்கினார்.'அக்கா, அண்ணை ஏன் எங்களுக்குச் சாப்பாடு குடுத்துவிடவேணும். மூண்டு நேரம் சாப்பாடு தந்தாக் காணும்தானே. அதை இஞ்ச தருகினம்தானே..."இவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பொதிகளையும் (கண்டோஸ்) தந்து, பற்தூரிகையையும் தந்து விடுபவர்தான் தலைவர் அவர்கள் என்று இவர் விளக்கினார்.'ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி ஏனக்கா? எங்கட வீட்டிலை நாங்க மூண்டு பிள்ளையள். வசதியான குடும்பந்தான். ஆனா ஒரு பெட்டி வாங்கிவந்து எல்லாருக்கும் தாறதே தவிர, ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி எண்டு ஒரு நாளுமில்லை. இந்தளவுக்கு வீட்டிலை கூட எங்களைக் கவனிக்கேல்லை. அண்ணையைப் பற்றி இப்பத்தான் விளங்குது" என்றார் அவர்.****அண்ணையை நாங்கள் சந்திக்கப் போறம். கேட்டுச் சொல்லுங்கோ"யாழினியிடம் புதிய போராளிகள் சிலர் கேட்டனர்.'நாலு பேர் வீரச்சாவடைஞ்சதுக்கு நேற்று நல்லா வாங்கிக் கட்டினனான். இப்ப அவரிட்டைக் கேக்கேலாது. கேட்டால் பேசிப்போடுவார்"சட்டென அவர்கள் சொன்னார்கள்'உங்களைத்தானே பேசினவர். எங்களை அவர் பேசமாட்டார். நாங்கள் கேக்கிறமெண்டு போய்க் கேளுங்கோ"
நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)
jaalavan@gmail.com

Sunday 9 March 2008

9-மற்றோர் உதயத்துக்கு கால்கோள்.

இலங்கைத் தமிழர்களின் விடுதலை வேட்கையாக வெடித்துப் பீறிட்டுவரும் சுதந்திர தேசிய இன உணர்வை எப்படியாவது அடக்கி, ஒடுக்கி, அமுக்கிவிட வேண் டும் என்பதில் கங்கணம்கட்டி நிற்கும் தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கம், அதற்கு நியாயமற்ற அநீதியான மிகமோசமான வழிமுறைகளையும் நாடி நிற்கிறது.நாட்டில் மிக மோசமாக இடம்பெறும் ஆள்கடத்தல் கள், காணாமல் போகச் செய்தல்கள், வகை தொகை யற்ற கைதுகள், கண்மூடித்தனமான விமான ஷெல் குண்டுத் தாக்குதல்கள் போன்றவை எல்லாம் இந்தத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான அடக்குமுறை மற் றும் ஆக்கிரமிப்பு மேலாண்மைப் போக்கின் வெளிப் பாடுகள்தாம்.ஆட்சி அதிகாரத்தின் இந்த ஆக்கிரமிப்பும் அராஜக மும் இன்று சர்வதேச மட்டத்தில் விசனத்தோடு நோக் கப்படும் விவகாரங்களாகிவிட்டன.இலங்கை ஆட்சி அதிகாரத்தின் உண்மைச் சொரூபத் ததை அம்பலப்படுத்தும் விதத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் பகிரங்கமாக வெளி யிட்டுவரும் அறிக்கைகள் இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்தின் கண் இலங்கை மீது நுணுக்கமாகப் பதி யத்தொடங்கி விட்டது என்பதற்கான சான்றுகளாகும்.பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான அடிப் படையில் முன்னெடுக்கப்படுகின்ற சுயநிர்ணய உரி மைப் போராட்டங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை பெரிதும் மாறி வருகின்றது. அதற்கு கொசோ வோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்குலகு வர வேற்று அங்கீகரித்து இருப்பது நல்லதோர் முன்னு தாரணமாகும்.1999 இல் ஐ.நா.தீர்மானம் ஒன்றின் மூலம் கொசோ வோப் பிரதேசம் சேர்பியாவின் ஆள்புல இறையாண் மைக்கு உட்பட்ட பகுதி என்று ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இருந்தது. சர்வதேச உலகம் கடந்த ஒன்பது ஆண்டு காலத்துக்குள் அந்த நிலைப்பாட்டைத் தலை கீழாக மாற்றிக்கொண்டு விட்டது.ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட கொசோவோ மக்க ளுக்கு நியாயம் செய்ய மறுத்து தனது ஆக்கிரமிப்பு அரா ஜகத் திமிர்ப் போக்கை சேர்பியா குரூரமாகத் தொடர்ந்த காரணத்தினாலேயே அவ்விடயத்தில் மேற்குலகு தனது படைகளை அனுப்பித் தலையிட்டது. இறுதியில் கொசோவோ என்ற தனிநாட்டு உதயத்துக்கு அது ஆசீர் வாதமும் வழங்கியது.இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை ஆளும் சிங்களவர்கள், அடக்கப்படும் தமிழர்கள் என இரண்டு இனங்கள் சார்ந்ததாக இருக்குமாயினும் இப்பிரச்சினை யின் பிரதான இரு தரப்புகள் ஆக்கிரமிப்பு ஆட்சியைத் தொடரும் அரசும் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் விடுதலைப் புலிகள் அமைப்பும்தான் என்பது வெளிப் படை.இந்த இரண்டு தரப்புகள் தொடர்பான சர்வதேச பார்வை இன்று வேறுபாடானது. ஒன்றை அரசாகவும் (State Factor) மற்றைய தரப்பான புலிகள் அமைப்பை அரசு அல்லாத கட்டமைப்பாகவும் (Non State Factor) உலகம் நோக்குகின்றது.அதனால், தன்னை ஒத்த அரசுக் கட்டமைப்பு என்ற காரணத்தால் இலங்கை அரசை இப்பிரச்சினையில் மேம்பாடான தரத்தில் வைத்து சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உலக நாடுகள் நோக்கு கின்றன. ஓர் அரசுக் கட்டமைப்புக்குரிய மரியாதை யை யும், முன்னுரிமையையும், தனித்துவச் சிறப்புக்களை யும், அங்கீகாரத்தையும் கூட இலங்கையின் ஆட்சி அதி காரத்துக்கு அவை வழங்குகின்றன.மறுபுறத்தில், விடுதலைக்காகப் புரட்சி செய்யும் கிளர்ச்சிக் கட்டமைப்பாக மட்டுமே புலிகள் அமைப்பை நோக்குகின்றன.ஆனால், ஒன்பது, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கொசோவோவை அடக்கித் தனது ஆட்சி அதிகாரத்துக் குள் அமுக்கி வைத்திருந்த சேர்பியாவையும் சர்வதேசம் இப்படித்தான் மேன்மைப்படுத்தி மதித்தது என்பதும் கொசோவோ மக்களின் விடுதலைக்காகப் புரட்சி செய்த கொசோவோ விடுதலை இராணுவத்தை இப் படித்தான் கிளர்ச்சி அமைப்பாகக் கருதி சர்வதேசம் மிதித்தது என்பதும் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை.ஆனால் சர்வதேசத்தின் நிலைப்பாடு இன்று அடி யோடு மாறிவிட்டது.ஆக்கிரமிக்கப்பட்டு, அடக்கப்பட்ட மக்களுக்கு எதி ரான அராஜகம் தொடரும் போது "அரசு' என்ற கட்ட மைப்புக்குக் கொடுக்க வேண்டிய தனித்துவ மரியாதை யின் எல்லை மீறப்படுகின்றபோது அநீதிக்கு எதிராகத் தீர்க்கமான முடிவை எடுக்க சர்வதேசம் பின் நிற்காது என்ற உண்மை இப்போது அம்பலமாக அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.இலங்கையிலும், அடக்கப்பட்டு, அநாதரவாக்கப் பட்டிருக்கும் தமிழினத்துக்கு எதிரான அரச பயங்கர வாதமும், அராஜகமும் எல்லை கடந்து செல்வதைச் சர்வதேச அமைப்புகளின் பகிரங்க அறிக்கைகள். வெளிப்படுத்தி வருகின்றன. அவற்றை ஒட்டி, சர்வ தேச சமூகத்தின் கருத்தியலிலும், குரலிலும் மெல்லிய மாற்றம் ஏற்பட்டிருப்பதும் புலப்படத் தொடங்கியி ருக்கின்றன.1999 இற்குப் பிந்திய கொசோவோ நிலைமையை நோக்கி இலங்கை விவகாரமும் நகரத் தொடங்கியிருப் பதாகவே தோன்றுகின்றது.மற்றோர் உதயத்துக்கான பாதையின் ஆரம்பமாக இது இருக்கலாம்.
நன்றி:- உதயன்.
jaalavan@gmail.com