Tuesday 13 January 2009

** கையாலாகத தமிழனாக இருப்பதற்கு வெட்கமும் வேதனையும் இருக்கிறது.. தவறை திருத்தி கொள்ள ஆசை படுகிறோம். எவ்வாறு என்று தெரியவில்லை?

இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக்குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில்கையெழுத்தி இடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில்கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கியபோது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்...... எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டுவரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா,மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?

அம்மா, அப்பாவின்மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்...... அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட்அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்பார்த்திருந்தீர்கள்.... அதனால் தான் எழுதவில்லை......... ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலைநாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம்மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது..... அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும்திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களைஅனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு 20 இரங்கற்பாஅனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவதுகிடைக்கும் அல்லவா?இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்குபயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும்வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள்.

கொஞ்சம்பாவமாவது குறையட்டும்....... மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின்பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள்எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம், குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலைவெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போதுநீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத்தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள்தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக்கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் "சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின்இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால்அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில்எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில்முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறைஅடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்றுபோவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும்.

ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்....... அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத்தோன்றவில்லை...... எனக்கு.... அமைதியாய் விடியும் பொழுதும்,அழகாய்க் கூவும் குயிலும்,தோகை விரிக்கும் மயிலும்,காதல் பேசும் கண்களும்,தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா ௨லகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம்அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத் தமிழர்களே........ ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின்விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.

இப்படிக்கு,வலி கலந்த நம்பிக்கைகளுடன்,உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து...
_________
Pathivu.com

Thursday 8 January 2009

** வன்முறைக் கலாசாரம் மூலம் ஊடகக் குரல்வளை நசிப்பு

இலங்கையில் ஊடக சுதந்திரம் எத்தகைய மிக மோசமான கட்டத்தில் இருக்கின்றது என்பதற்கு நேற்று விடிகாலை 2 மணியளவில் பன்னிப்பிட்டியவில் நடந்தேறிய கோரம் - கொடூரம் - நல்லதோர் சாட்சியாக அமைந்திருக்கின்றது. தலைநகரில் - அதுவும் இலங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த - மூன்று மொழியிலுமான - தொலைக்காட்சி ஊடகமான ‘சிரச’, ‘எம்.ரி.வி.’, ‘சக்தி’ தொலைக்காட்சிச் சேவைக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து தென்னிலங்கை மாத்திரமல்லாமல், ஊடக சுதந்திரத்தில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருமே அதிர்ச்சியில் உறைந்து போகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அதிகம் மக்கள் வரவேற்புப் பெற்ற ‘சக்தி’ தொலைக்காட்சி சேவைக்கே இந்தக் கதி என்றால் இலங்கையில் ஏனைய ஊடகங்களின் ஆபத்து நிலைமை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது.தலைநகரில் - பன்னிப்பிட்டியவில் - இருபது பேர் கொண்ட குண்டர் குழு ஒன்று முகமூடி அணிந்தபடி இயந்திரத் துப்பாக்கிகள், கிரனேட்டுகள் சகிதம், தொலைக்காட்சிச் சேவை நிலையத்தின் கலையகம் மற்றும் அலுவலகத்துக்குள் புகுந்து, கண்மண் தெரியாமல் சுட்டு, அங்கிருந்த பெறுமதியான தொழில்நுட்பக் கருவிகளைத் தேடித் தேடி நாசமாக்கி, நெருப்பிட்டு அழித்து சுமார் இருபது நிமிட நேரம் கோர வெறியாட்டம் நடத்திவிட்டு, கிரனேட்டை அங்கு வெடிக்க வைத்த பின்னர் சாவகாசமாக வெளியேறியிருக்கின்றது.

இருபது பேர், சுமார் இருபது நிமிட நேரம், புகழும் செல்வாக்கும் பெற்ற தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்து கோரத் தாண்டவம் ஆடிவிட்டு, இப்படி வெகு சாவகாசமாகத் தப்பிச்செல்ல இயலுமானால் -இத்தகைய கொடூரத்தின் பின்னணியில் பச்சைக்கொடி காட்டி, இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த தரப்பின் - சூத்திரதாரிகளின் - கையை அடையாளம் காண்பது நாட்டு மக்களுக்கு அப்படி ஒன்றும் புரியாத காரியம் அல்ல.கிளிநொச்சி மீட்பு போன்ற வெற்றிப் பூரிப்பின் பின்னணியில், ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் பற்றிய உண்மைச் சொரூபம் மக்களின் மனதில் படாமல் அடிபட்டுப் போய்விடும் என்ற நினைப்போடு இந்தக் கொடூரம் புரியப்பட்டிருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி - சர்வதேச ஊடக சுதந்திர தினத்துக்கு முதல் நாள் - முன்னிரவு வேளை முகமூடி அணிந்த ஐந்து, ஆறு ஆயுததாரிகள் யாழ்ப்பாணம் உதயன் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மாதிரி - பின்னர் கொழும்பில் ‘த சண்டே லீடர்’ அச்சகத்துக்குள் புகுந்து அதன் அச்சு இயந்திரங்களைத் தீயிட்டுக் கொளுத்தியமை போல -யாழ்ப்பாணத்தில் உதயனின் களஞ்சியம் தீயிட்டு எரிக்கப்பட்டமை போல -இப்போது பன்னிப்பிட்டியவில் ‘சக்தி’ அலுவலகம் மீது கோரக் கைவரிசையைக் காட்டியிருக்கின்றது அராஜகக் கும்பல்.இருபதுக்கு மேற்பட்ட குண்டர் குழுவினர் வந்து, சுமார் இருபது நிமிட நேரத்துக்கு மேல் ‘சக்தி’ தொலைக்காட்சிக் கலையகத்துக்குள் நிலையெடுத்து, அட்டகாசம் பண்ணிய போதிலும், ‘உதயன்’ அலுவலகத் தாக்குதல் போன்று இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் போனமை தெய்வாதீன அதிஷ்டமே.

இந்த ஆட்சிப் பீடத்தின் கீழ் ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெரும் பயங்கரவாதத்தின் மற்றோர் அங்கமே நேற்று பன்னிப்பிட்டியவில் அரங்கேறியிருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.இத்தகைய இழிசெயல் தாக்குதல்கள் தொடர்கதையாகத் தொடர்கின்ற போதிலும், இவற்றுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் எவரும் கைது செய்யப்படுவதில்லை; சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை என்பதே இங்கு உண்மையான யதார்த்தப் புறநிலையாகும்.

இப்போதும் கூட - கூட்டமாக இருபது பேர் வந்து இந்த அராஜகத்தைப் புரிந்துள்ள நிலையில் கூட - வழமை போன்று - இத்தகைய கொடூரக் குற்றச்செயல் குறித்து யாரும் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ போவதில்லை என்பதை இப்போதே உறுதியாகக் கூறிவிட முடியும்.விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் தலைநகரில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு சீருடைத் தரப்பு குவிக்கப்பட்டிருக்கின்றது. வாகன நகர்வுகள் நுணுக்கமாக அவதானிக்கப்படுகின்றன. சந்திக்குச் சந்தி வாகன மறிப்பும், சோதனைகளும் தொடர்கின்றன. கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக்கொண்டு பாதுகாப்புத் தரப்பு தலைநகரைக் கண்காணித்துக் கொண்டிருக்கத் தக்கதாகத்தான் இருபது பேர் கொண்ட குழு ஒன்று, சிவிலுடையில், முகமூடியணிந்து, இயந்திரத் துப்பாக்கிகளுடன் விடிகாலை வேளை வாகனத்தில் பயணித்து, சக்தி தொலைக்காட்சி நிலையத்துக்குள் கோரத் தாண்டவம் ஆடி, பெரு நாசத்தையும், நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி விட்டு சாவகாசமாகத் திரும்பிச் சென்றிருக்கின்றது.இதிலிருந்து இந்த அராஜகத்தின் பின்புலத்தில் அதிகாரத்தின் அரூபக் கரங்கள் தொடர்புபட்டிருப்பதை நாம் இலகுவாக ஊகித்துக் கொள்ளமுடியும்.

அச்சுறுத்தல்கள் மூலம் அரசியல்வாதிகளை அணி தாவ வைத்துத் தமது காலடியில் விழச் செய்திருக்கும் அதிகாரத் தரப்பு, ஊடகங்களையும் தனக்குச் சாதகமாக வளைத்துப் போட சாம, பேத, தான, தண்ட வழிவகைகளை நாடுகின்றது என்பது வெளிப்படை. அதில் தண்ட வழிமுறையே ‘சக்தி’ தொலைக்காட்சி மீது இப்போது ஏவி விடப்பட்டிருக்கின்றது.
_________
Uthayan.com

Wednesday 7 January 2009

** மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கொடும்பாவி எரிப்பு

தமிழர் விரோத 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் நேற்று 07.01.2009 காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதோடு போரையும் இந்திய அரசுதான் நடத்தி வருகிறது.

சிங்கள அரசோ தடைசெய்யப்பட்ட வான்படை மூலமாக தமிழினத்தை நிர்மூலமாக்கி வருகிறது. இதற்கு இந்தியா, அமெரிக்கா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் துணையுடன் கோழைத்தனமாக போரை நடத்தி வருகிறது.

தமிழர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், போரை நிறுத்தக் கோரியும் செவிமடுக்காத மன்மோகன்சிங்; சென்னையில் நடைபெற உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் வர்த்தக மாநாட்டிற்கு 07.01.09 சென்னை வந்தார். தமிழர் விரோத மன்மோகன்சிங் கும்பலை தமிழகத்தில் அனுமதிக்க இயலாது என்று புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்தஆர்ப்பாட்டத்தில் தோழர்.மார்க்ஸ் தலைமையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) அருகில் குவிந்தனர். சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு துணைபோகும் அமெரிக்க கைக்கூலி மன்மோகன் சிங்கே திரும்பிப்போ! என்று முழக்கமிட்டனர். அப்போது மன்மோகன்சிங் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். கண்டனஆர்ப்பாட்டத்தினையும் நடத்தினர். போராடிய தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது. முன்னதக மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து சுவரொட்டிகள் பரப்புரை செய்த புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.
__________
Sankathi.com

** பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம்

ஈழத்தில் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அப்பாவித் தமிழர்கள் மீதான வன்முறைகளும் எறிகணை வீச்சுக்களும் தொடர்ச்சியாக இடம் பெற்றவண்ணமுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை பி.ப 4 மணியளவில் பிரான்சின் றிபப்ளிக்கு எனும் பகுதியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

நூற்றுக்கும் அதிகளவில் அங்கு திரண்ட மக்கள் உலகியல் போர் நியமங்களை மீறி படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசபயங்கரவாதிகளின் கோரத்தனமான இன அழிப்பு வன்முறையை விபரிக்கும் சுலோகங்களைத் தாங்கியவாறு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். கடுங்குளிரின் மத்தியிலும் உணர்வு கிளர்ந்த முகங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பின்னர் பி.ப 6 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
_________
Sankathi.com

** ஐ.நா செயலா, தமிழக முதல்வர் ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதம்

கிளிநொச்சியை ஆக்கிரமித்து சிறிலங்காப் படையினர் வன்னிப் பகுதியில் உள்ள மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வான் தாக்குதல்கள் மூலம் மக்களை படுகொலை செய்து வருகின்றனர். சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையின் உச்சகட்டமாகவே எமது மாணவர் ஒன்றியம் இதனைப் பார்க்கிறது.

எனவே சிங்கள அரசின் திட்டமிட்ட இவ் இனப் படுகொலையை உடனடியாக தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிற்கும் தமிழக முதல்வரிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.
__________
Sankathi.com

** சிறிலங்கா நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு தடை

தமிழீழ விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் தடை உத்தரவின் பிரகாரம் விடுதலைப் புலிகளுடன் எவரும் தொடர்பு வைத்திருக்க முடியாது எனவும் விளக்கமளித்தார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளை தடை செய்தமை பற்றிய முழுமையான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
_________
Sankathi.com

** 20 வருடங்களுக்கு மகிந்தவின் ஆட்சி தொடர சட்டத்திருத்தம் வேண்டும், மீட்கப்பட்ட வன்னி சிங்களவர்களின் பிரதேசம் - எல்லாவல மேதானந்த தேரர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 20 வருடங்கள் ஆட்சிபுரியும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர், வன்னியில் படையினரால் மீட்கப்படும் பகுதிகள் சிங்களவர்களின் வாழ்விடங்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இந்த நாட்டின் எத்தனையோ தலைவர்களை நான் கண்டுவிட்டேன் ஆனால் அவர்கள் அனைவரும் என்னை மட்டுமே கண்டுள்ளார்கள் என்று பிரபாகரன் கூறியிருந்தார். ஆனால் அதற்கு தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நல்ல பதில் வழங்கியுள்ளார்.

இந்த நாட்டின் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருவராலேயே முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இதனை அவர் நிரூபித்துள்ளார். எனவே தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தை 20 வருடங்களாக்க சட்டதிருத்தம் கொண்டுவரப்படவேண்டும்.

வன்னியில் படையினரால் மீட்கப்படும் பகுதிகள் சிங்களவர்களின் வாழ்விடங்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. வன்னியில் 1500க்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. சிங்கள மன்னர்களால் கட்டப்பட்ட 1500க்கு மேற்பட்ட வாவிகள் தற்போதும் இருக்கின்றன என்று தெரிவித்தார்.
__________
Sankathi.com

Sunday 4 January 2009

** பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம்

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து முல்லைத்தீவின் இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி தொடக்கம் மும்முனை முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுகளுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி இன்று பிற்பகல் படையினரின் நகர்வினை முறியடித்தனர்.
இதில் சிறிலங்கா படையினர் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100 க்கும் அதிகமானபடையினர் காயமடைந்துள்ளனர்.படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
பிகே எல்எம்ஜி - 01
ஏகே எல்எம்ஜி - 01
ஆர்பிஜி - 01
ரி-56 ரக துப்பாக்கிகள் - 04

உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

முரசுமோட்டையில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்காக அப்பகுதி மீது கடந்த சில தினங்களாக கடுமையான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தியிருந்த படையினர் இன்று அப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் நகர்ந்துகொண்டிருந்தபோதே, 2ம் கட்டையில் விடுதலைப் புலிகள் நடத்திய வழிமறிப்புத் தாக்குதலில் பெரும் அழிவைச் சந்தித்துள்ளனர்.
__________
Sankathi.com

** பிரான்சில் கைது செய்யப்பட்ட சமூகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரி ஒன்றுகூடல்

பிரான்சில் கைது செய்யப்பட்ட சமூகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரியும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் ஒன்றுகூடல் எதிர்வரும் 7ம் திகதியன்று மாலை நான்கு மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வொன்றுகூடல் பிரான்சின் தலைநகர் பரிசின் முக்கிய பகுதியாக றீப்பப்ளிக்கு பகுதியில் நடைபெறவுள்ளது.
__________
Sankathi.com

Saturday 3 January 2009

** கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா?

<<வன்னியன்>>

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது.

விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட்டத்தின் நெருக்கடிகளை எல்லாம் சாதுரியமாக தீர்வுகண்டு முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் யாழ். குடாநாட்டையும் கிளிநொச்சி நகரப்பகுதி தவிர்ந்த மாவட்டத்தின் பெரும்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

கிளிநொச்சியின் இராணுவக் கேந்திரத்தன்மையை 1984 ஆம் காலப்பகுதியில் உணர்ந்ததனாலேயே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கிளிநொச்சியில் தங்கியிருந்து போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டவேளை 1985 ஆம் காலப்பகுதியில் கிளிநொச்சி இராணுவப் பொலிஸ் நிலையம் மீது முதலாவது வாகன குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலுடன் கிளிநொச்சி நகரத்தின் மீதான அழிவுத் தாக்குதல்கள் ஆரம்பமாகி இன்றுவரை அந்நகரம் மாறிமாறி மிகப்பெரும் அழிவுகளைச் சந்திப்பது அந்நகரத்தின் துரதிஷ்டமே. வடமாகாணத்தின் முக்கியமான விவசாய வர்த்தக நகராக உருவெடுத்த கிளிநொச்சி பின்நாளில் தமிழரின் இராஜதந்திர நகரம் என்று உலகளாவிய ரீதியில் அறியப்படும் அளவிற்கு அதன் வளர்ச்சி அபரிமிதமானது. 1985ஆம் ஆண்டு வாகனக் குண்டுத் தாக்குதலுடன் ஆரம்பமாகிய கிளிநொச்சி மீதான படைநடவடிக்கைகள் இந்திய இராணுவ வருகையுடன் மேலும் சிதைவுகளைச் சந்தித்தது.

இந்திய இராணுவம் வெளியேறியபின் 1990 ஆம் ஆண்டு 2ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றுவதற்காக புலிகள் இயக்கம் உக்கிரமான முற்றுகைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஒரு மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இதனைப்பயன்படுத்தி கிளிநொச்சியிலிருந்த இராணுவத்தினர் ஆனையிறவுக்குத் தப்பிச்சென்றனர். இந்த இரு பகுதியினரும் மேற்கொண்ட மீட்புச் சண்டையினால் கிளிநொச்சி நகரம் இரண்டாவது தடவையாகவும் பெரும் அழிவைச் சந்தித்தது. ஆனால் இதன்மூலம் ஆனையிறவுக்குத் தெற்கே கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

கிளிநொச்சி மீண்டும் புத்துயிர் பெற்று வன்னியின் வர்த்தக மையமாக வளர்ச்சியடையத் தொடங்கிய போதிலும் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதும் யாழ். குடா புலிகளின் கையிலிருந்து நழுவியபின் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவமுகாமை புலிகள் மீட்டுவிட, அன்றைய சந்திரிக்கா அரசாங்கம் கிளிநொச்சி மீது 1996 இல் சத்ஜெய 01, 02, 03 என மூன்று மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கிளிநொச்சி நகரத்தையும், அதன் தெற்கே ஏ9 வீதியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி வரை கைப்பற்றியது. 1997 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல் தாக்குதல்கள் அதிகரித்தன. யாழ்ப்பாணத்திற்கான கடற்போக்குவரத்திற்கு கடற்புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் தடையினால் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையின் அவசியத்தை உணர்ந்த அரசு யாழ்ப்பாணற்கான தரைவழிப்பாதை திறப்பு எனக்கூறிக் கொண்டு 1997 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 பாதையூடாக மாங்குளத்தைக் கடந்து கிளிநொச்சியில் தரித்து நின்றவர்களும் மாங்குளம் வந்தவர்களும் கைகுலுக்குவதற்கு தயாரான போது, கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 1998 ஆண்டு ஜனவரி மாதம் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதல், அதன் பின்னர் 1998 செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி நகரத்தின் மீது புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 2 நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் கிளிநொச்சி நகரம் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ் வந்தது. ஆனால், 1985 இலிருந்து 1998 செப்டெம்பர் வரை கிளிநொச்சி நகரம் கண்ட பல இராணுவப் பலப்பரீட்சைகளும், அதனால் மூண்ட கடும் சண்டைகளும் அந்நகரத்தினை மண்மேடாக்கிவிட்டுப் போய்விட்டது.

1998 செப்டெம்பர் கிளிநொச்சி நகரம் புலிகளால் கைப்பற்றப்பட்டாலும் அது இராணுவ தாக்குதல் வளையத்துக்குள் தொடர்ந்தும் உட்பட்டதாகவே இருந்தது. 1999 நவம்பர் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பை புலிகள் கைப்பற்றியதோடு கிளிநொச்சிக்கான அச்சுறுத்தலாக இருந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளமும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பரப்பளவும் அதாவது இரணைமடுச் சந்தியிலிருந்து முகமாலை வரையான பகுதிகள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன.

போரின் கோரவடுக்களால் மண்மேடாகிக் கிடந்த கிளிநொச்சி நகரம் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கிற்று. அத்தோடு வன்னிக்கான நிர்வாக மையமாகவும், விடுதலைப்புலிகளின் நிர்வாக மையமாகவும் மாற்றமடையத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது, தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் மூலம் புலிகளால் நிலைநிறுத்தப்பட்ட இராணுவச் சமநிலையும், இதனால் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையும் சர்வதேச இராஜதந்திரிகளின் கிளிநொச்சி வருகையும், அவர்களின் சமரசப் பேச்சுக்களும் கிளிநொச்சியை சர்வதேச அளவில் புலிகளின் இராஜதந்திர நகரமாக மாற்றியது.

துரித கதியில் மகோன்னத வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது என்று செல்வதே பொருத்தம். ஏனெனில், சமாதான ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சிப் பகுதியெங்கும் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளின் வேகமும் அதன் வளர்ச்சியும் சர்வதேச இராஜதந்திரிகளை வியப்புக்குள்ளாக்கியது. இதன் வெளிப்பாடுதான் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் "இரண்டாம் உலகப் போரின் அழிவிலிருந்து ஐரோப்பா மீண்டெழ நீண்ட காலம் எடுத்தது. ஆனால் குறுகிய சில மாதங்களிலேயே வன்னியின் எழுச்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எனக் குறிப்பிட்டமையாகும். இதிலிருந்து கிளிநொச்சியின் வளர்ச்சியின் போக்கினை நாம் உணரமுடியும்.

மீண்டெழுந்த கிளிநொச்சியின் துரதிஷ்டமோ என்னவோ, சமாதான உடன்படிக்கை முறிவும், கடந்த ஒன்றரை வருடங்களாக கிளிநொச்சியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையும் பல பரிமாணங்களைத் தாண்டி, 2008 டிசம்பர் 31 இல் பரந்தன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜனவரி 2 இல் கிளிநொச்சி நகரத்தினை இராணுவப் பிடிக்குள் மீண்டும் சிக்கவைத்துவிட்டது. இதற்கான போரின் மூலம் கிளிநொச்சி நகரம் அழிந்த நகரமாக மக்கள் அற்ற நகரமாக, பாழடைந்த நகரமாக மாற்றமடைந்து விட்டது. கிளிநொச்சி நகரத்திற்கான படையெடுப்பானது 57 ஆவது டிவிசன், கூஊ1 படையணிகள் முறையே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மற்றும் பிரிகேடியர் சவீந்திர சில்வா ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது.

படையினர் கடந்த மூன்று மாதங்களாக முட்டி மோதி பாரிய இழப்புக்களைச் சந்தித்து பரந்தனூடாக முன்னேறி, ஏ9 வீதியை இரண்டாகப் பிழந்து பெட்டியடித்து நிலைகொண்டு, கிளிநொச்சியை மூன்றுபக்கமும் சூழ்ந்து பரந்தனிலிருந்தும், அடம்பனிலிருந்தும், இரணைமடுச்சந்தியிலிருந்தும் மும்முனைகளில் நகர்ந்து கிளிநொச்சி நகரத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர். இதன்மூலம் ஏ9 வீதியில் வவுனியாவிலிருந்து பரந்தனுக்கு அப்பால் உமையாள்புரத்திற்கு அண்மைவரை ஏ9 வீதியையும், அதற்கு மேற்குப் புறமுள்ள மேற்கு வன்னியின் முழுப்பரப்பையும் படைகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளன. அத்துடன் கிழக்கு வன்னியின் மாங்குளத்திற்கும், முல்லைத்தீவுக்கும் இடையேயான ஏ34 வீதியின் தென்பகுதியாகிய கிழக்கு வன்னியின் தென்அரைப்பாகம் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது.

கிளிநொச்சி நகரத்தின் முழுப்பகுதியும் இராணுவப் பிடியில் அகப்பட்டதோடு பரந்தனிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதியின் இரண்டாம் மைல்கல்லுக்கு அண்மைவரை படையினர் அண்மித்திருக்கின்றனர். கிளிநொச்சி நகரம் முழுவதும் இறுதிவரை சண்டையிட்ட புலிகளின் படையணிகள் தமது இழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் படிப்படியாக பின்வாங்கி திருவையாற்றுப் பகுதியிலும் இரணைமடு குளக்கட்டுப் பகுதிலும், வடக்காக முரசுமோட்டை கண்டாவளை, ஊரியான் ஆகிய பகுதிகளை இணைக்கும் ஒரு நேர் கோட்டில் புதிய முன்னரங்கப் பகுதியை நிறுவி நிலையெடுத்திருப்பதாக களமுனைத் தகவலிகளிலிருந்து அறியமுடிகின்றது.

இதன்மூலம் இரணைமடுக்குளத்தின் ஆரம்பத்திலிருந்து ஊரியான் வரையான புதிய முன்னரங்கப் பகுதியில் சண்டைகள் நிகழ்வதற்கு சிறிது காலம் தாமதமாகலாம். ஆனால், புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியதனால், பரந்தனில் நிலைகொண்டிருக்கும் படைகளுக்கு ஏற்பட்ட உளவுரண் உறுதி அவர்களை ஆனையிறவு நோக்கி நகர உந்துவது இயல்பானதே. எனவே படைகள் உடனடியாக உமையாள்புரப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் முன்னரங்கை நோக்கி ஒரு பாய்ச்சல் சூட்டோடு சூடாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். கிளிநொச்சியின் வீழ்ச்சியானது முகமாலைப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் படையணிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே.

ஏனெனில் முகமாலை பகுதிக்கான நேரடி வழங்கல் பாதை முடக்கப்பட்டு விட்டது. எனினும் முகமாலைப் பகுதிக்கான விநியோகங்களை கடல் வழியாகவோ அல்லது சுண்டிக்குளம் வழியாகவோ கடைசிவரை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும்.எது எப்படியிருப்பினும் ஆனையிறவு நோக்கி படையினர் நகருகின்ற போது கிளாலி முகமாலைப் பகுதிலும் சரி, நாகர்கோவில் பகுதியிலும் சரி, சண்டையிடும் புலிகளின் படையணிகளுக்கு பெரும் நெருக்கஎகள் ஏற்படுவது தவிர்க் முடியாதது. ஏனெனில், முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பச்சிலைப்பள்ளிப் பிரதேசமும், சுண்டிக்குளம் தொடக்கம் நாகர்கோவில் வரையான வடமராட்சி கிழக்குப்பகுதியும் ஒடுங்கலான பிரதேசமாகவுள்ளது.

தற்போதைய நிலையில் அதன் இருபக்கங்களிலும் இராணுவம் நிலைகொண்டிருப்பதோடு பாக்கு வெட்டியில் அகப்பட்டிருக்கும் பாக்கின் நிலையை ஒத்ததாகவே பச்சிலைப்பள்ளி இருக்கின்றது. இவ்வாறு ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை புலிகள் தக்கவைப்பதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கப் போகின்றார்கள் என்பதையிட்டு இராணுவ விற்பன்னர்கள் மண்டையைப் பிய்க்கத் தொடங்கிவிட்டனர். எனினும் முகமாலைப் பகுதியை எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் வந்தாலும் தக்கவைப்பதற்கு புலிகள் முனைவர். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை முல்லைத்தீவு நோக்கிய நகர்வின் முனைப்பினை மேலும் தீவிரப்படுத்தக் கூடும்.

59ஆவது டிவிசன் மணலாற்றுப் பகுதியிலிருந்து நகர்ந்து ஏ34 வீதியில் கூழாமுறிப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு முல்லைத்தீவின் நுழைவாயிலான நீராவிப்பிட்டி வரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததோடு, வீதியின் வடபுறம் நகர்ந்து வற்றாப்பளை கிராமத்தை முற்றுகையிடுவதோடு வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கேப்பாபுலவு நோக்கி நகர்ந்து கேப்பாபுலவுக்குத் தெற்கே 3 மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

முல்லைத்தீவினுள் நுழைவதற்கு ஏ34 வீதியில் நீராவிப்பிட்டிக்கு அப்பால் நகர்வதற்கு புலிகள் கடும் எதிர்ப்புக் காட்டுவதனால் முல்லைத்தீவு நகரையும், முள்ளிவாய்க்கால்ப் பகுதியையும் முற்றுகையிடும் நோக்கில் கேப்பாபுலவைத் தாண்டி நந்திக்கடலைச் சுற்றிச் சென்று ஏ35 வீதியை முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் ஊடறுப்பதன் மூலம் முல்லைத்தீவை வீழ்த்துகின்ற மூலோபாயத்தினை படைத்தரப்பு வகுத்திருப்பதாகவே தெரிகிறது. கூழாமுறிப்புப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் படையினர் மேற்கு நோக்கி ஒட்டுசுட்டான் நோக்கியோ அல்லது கெருடமடு, பேராற்றுப் பகுதி நோக்கி நகர்ந்து ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை ஊடறுப்பதன் மூலம் ஒட்டுசுட்டானை வீழ்த்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கான முஸ்தீபுகளில் படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாங்குளம் பகுதியிலிருந்து நகர்ந்த படையினர் கரிப்பட்ட முறிப்புவரை நகர்ந்து அங்கிருந்து தெற்காக அம்பகாமம், பீலிக்குளம் வரை நகர்ந்து இரணைமடுக்குளத்தின் தென்புறத்தை அண்மித்து இரணைமடுக்குளத்தின் கிழக்குப் புறமாக பழைய கண்டிவீதிவழியே வட்டக்கச்சி நோக்கி நகர்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆகவே, மொத்தத்தில் வன்னிமீதான படைநடவடிக்கை என்பது பூநகரி ஊடான யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சி கைப்பற்றுதல், வன்னிமக்களை விடுவித்தல், ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான போர். என நோக்ங்கள் காலத்திற்குக் காலம் மாறி தற்போது புலிகளை அழித்தொழித்தல் என்ற கோசத்துடன் இன்று வன்னியில் மிகப்பெரும் மனிதப் பேரவல விளிம்பில் வந்து நிற்கிறது.

இராணுவம் மேற்கொண்ட படைநடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமது இழப்புக்களை முடிந்தவரை குறைத்து படையினருக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்தி, படைகளின் முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்து படிப்படியான தந்திரோபாயப் பின்வாங்கல்களை மேற்கொண்டுவந்த புலிகள் இயக்கம் இன்று கிழக்கு வன்னியின் வட அரைப்பாகத்தில் குறுகிய பகுதியினுள் தனது முழுப்படையணிகளையும் குவித்துள்ளது. இந்நிலையில் மூன்று பக்கங்களிலும் இராணுவ நெருக்குதல்களை எதிர்கொண்டவாறு தற்காப்புத் தாக்குதல் வியூகத்தை கடைப்பிடிப்பதென்பது இனியும் தொடர முடியாது.

வன்னியில் ஆனையிறவு நோக்கியமுனை, இரணைமடுக் குளப்பகுதி நோக்கியமுனை, கரிப்பட்டமுறிப்பு ஒட்டுசுட்டான், மற்றும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு, ஆகிய முனை கள் நோக்கி சண்டைகள் விரிந்திருப்பதனால் ஒடுக்கப்பட்டிருக்கின்ற குறுகிய நிலப்பரப்பினுள் செறிந்திருக்கும் ஒட்டு மொத்த வன்னிமக்களின் அன்றாடப் பிரச்சி னைகள் ஒருபுறம், இராணுவ நெருக்குதல்கள் மறுபுறம் என புலிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களை முறியடிப்பதற்கு வெறும் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல்கள் இனியும் பயனளிக்கப் பேவதில்லை.

எனவே வன்னிமீது போடப்பட்டிருக்கும் இறுக்கமான முடிச்சை அவிழ்ப்பதற்கும் இராணுவ முஸ்தீபை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரேவழி புலிகள் மேற்கொள்ளும் வலிந்த தாக்குதலேயன்றி வேறெகுவும் இல்லை என்ற நிலைக்கு விடுதலைப் புலிகளை இட்டுச் சென்றுவிட்டது. ஆகவே, தமிழீழ விடுதலைப் போராட் டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமா னவையும் அல்ல.

இதற்கு உதாரணமாக கிளிநொச்சி நகரமே பல முறை கைமாறி விட்டதல்லவா? காலத்திற்குக் காலம் ஏற்பட்ட நெருக்கடிகள் இழப்புக்களையும் தாண்டி ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் உத்வேகத்துடன் முன்னோக்கி தள்ளப்பட்டதுதான் வரலாறு. ஆகவே கிளிநொச்சி வீழ்ந்தால் என்ன?. முல்லைத்தீவு பறிபோனால்தான் என்ன? வெற்றிகள் எப்போது ஒருவருக்குச் சொந்தமானதல்லவே. காலச்சக்கரம் சுழலும் காத்திருக்கும் தருணம் கைகூடும். களங்கள் கைமாறும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பாதையை மீண்டும் ஒரு முறை செப்பனிட்டு முன்னோக்கி நகர்ந்த்தபடும் என்பதில் புலிகள் இயக்கம் உறுதியாகவே உள்ளது. எனவே விடுதலைப் போராட்டங்கள் முடிந்ததாகவோ அழிந்ததாகவோ உலக வரலாற்றில் நாம் எங்கேனும் கண்டதுண்டா? போராட்டம் என்பது தொடர்ச்சியானதே. அது முடிவில்லாததும் கூட.

[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

__________
Pathivu.com

** துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள் கி.வீரமணி

இலங்கையில் கிளிநொச்சியைப் பிடித்து விட்டதால் போர் முடிந்து விட்டது என்று அவர்களே கூட ஒப்புக் கொள்ள முடியாத நிலையில்தான் சிங்கள அதிபரும், அதன் தளபதியும் உள்ளனர்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாரும் வசிக்காமல், மக்களும் அவர்களைப் பாதுகாக்கப் போராடும் புலிகளம் கைவிட்ட, ஆள் அரவம் அற்ற பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி வாழ்வுரிமைக்குப் போராடும் நிலையில் அங்கே நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போரில் இப்படிப்பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள். புலி பதுங்கினாலும் மேலும் தீவிரமாக பாயும் என்பது தமிழ்ப் பழமொழி.

எப்படியாயினும் இடையில் எமது ஈழத்தமிழர்கள் இப்படிக்கு குண்டுமழையால் கொல்லப்பட்டு மடிகின்றனரே, எவ்வளவு காலம் இந்த ரத்த ஆறு ஓட வேண்டுமோ இன உணர்வு மட்டுமா - மனித நேயம் கூட செத்து விட்டதா என்று கேட்த் தோன்றுகிறது.
__________
Sankathi.com

** வன்னியில் நடாத்தப்படும் கொடூர வான் தாக்குதலை நிறுத்த, வன்னித் தமிழர் பேரவை ஐ.நா. செயலரிடம் கோரிக்கை

வன்னியில் நடாத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதலை நிறுத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காசா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை, வன்னியில் நடாத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீதும் கொண்டுவர விளைகின்றோம்.

இரவு பகல் பாராது தினமும் பொது மக்கள் இலக்குகள் மீது சிறீலங்கா குண்டவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. சிறீலங்கா வான்படையின் புள்ளிவபரப்படி 2007ம் அண்டில் 900 தாக்குதல்களும், 2008ம் ஆண்டில் இதேபோன்ற 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத் தாக்குதல்கள் மாபெரும் உயிர் அழிவை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை சிறீலங்கா அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதல்களாகவே செய்கின்றது.

இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும், யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.
அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே சிறிலங்கா கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது.

2008-12-31, 2009-01-01, 2009-01-02 நாட்களில் இடம்பெற்ற இழப்புக்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31ம் திகதி நாலு பொது மக்கள் கொல்லப்பட்டு 19 பேர் படுகாயம் அடைந்தனர். 01ம் திகதி ஆறு பொது மக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயம் அடைந்தனர். 02ம் திகதி ஏழு பொது மக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இத்தகைய மனிதப் படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை மேன்மைதங்கிய தங்களால் எடுக்கப்படும் என்று நம்புகின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
__________
Sankathi.com

** சிங்களப் படைகளின் தமிழினப் படுகொலை இன்னும் அதிகரித்தே செல்கின்றது - தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்றியம் கண்டன அறிக்கை

புதுவருடப் பிறப்பு நாளிலும் அதற்கு முன்புமாக தொடராகத் தமிழினப் படுகொலையைச் செய்து தன் இனப்படுகொலையை சிங்கள அரசு இன்னமும் தீவிரப்படுத்தி வருகின்றது எனத் தனியார் கல்வி நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பரந்தன் பூங்காவனச் சந்திப்பகுதியிலும், புளியம்பொக்கணைச் சந்திப்பகுதியிலும், அதற்கு முதல்நாள் கண்டாவளைப் பகுதியிலுமாக பத்து வரையான பொது மக்களைப் படுகொலை செய்த சிங்கள வான்படையின் செயலைக் கண்டித்து விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மகிந்த hஜபக்சவின் அனவெறிச் சிங்களப் பேரினவாத அரசு இடையறாது தனது வான்படை மூலம் வன்னியில் ஒரு தமிழினப் படுகொலையைச் செய்து வருகின்றது. நாள்தோறும் எனது உறவுகளைக் கொன்று குவித்துக் கொண்டு இனங்காணப்பட்ட இலக்குகளை அழித்தொழித்து விட்டதாக பொய்யான அறிக்கைகளை விடுத்து தனது கொலைக் கலாசாரத்தை மூடிமறைத்து வருகின்றது.

அன்றாட வாழ்விற்காக அல்லற்பட்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்;து நொந்துபோய் இருக்கும் எம் இரத்த உறவுகள் மீது தனது இனவாத மழையை குண்டு மழையாகப பொழிந்து வருகின்றது. அந்தவகையில் 31.12.2008 அன்று முரசுமோட்டைப் பகுதியிலும் புதுவருட நாளான நேற்று முன்தினமும் தமிழினப் படுகொலையை அரங்கேற்றியிருக்கின்றது. இத்தாக்குதலில் பல பொதுமக்கள் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் பல பத்து அப்பாவிப் பொதுமக்கள் படுகாயங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எம் உறவுகளின் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை ஏவி அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு அவர்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த போது அவர்களைக் கலைத்துக் கலைத்து குண்டு மழை பொழிந்து கொன்று குவித்துக் காயமடையச் செய்திருக்கின்றது சிறிலங்கா அரசு.

அத்துடன் தமிழனின் கல்வியைச் சீர்குலைத்து எம்மினத்தை அறியாமை என்னும் இருளில் தள்ளி தமிழினத்தின் இருப்பையும் அவர் தம் பாரம்பரியத்தையும் வழையடி வாழையாக இம்மண்ணில் வாழ்ந்துவரும் வரலாறுகளையும் அழித்துவிடும் நோக்கிலும் எமது அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் பாடசாலைகளையும் அழிக்கும் எண்ணத்துடன் முரசுமோட்டை முருகானந்தா மகாவித்தியாலயத்திற்கு மிக அருகி;ல் குண்டுகளை வீசிப் பாடசாலையையும் சேதப்படுத்தியுள்ளது.

சிங்கள அரசின் கபடத்தனமான மிலேச்சத்தனமான கொடிய செயலைக் கண்டு தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களாகிய நாம் குருதி கொதித்துப்போயிருக்கின்றோம். இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடராமல் மாணவர்களாகிய நாமும், எம் மக்களையும், கல்வியையும் காக்கும் பணியைத் தொடர்வதற்காக ஆயுதமேந்திப் போரிடவேண்டியிருக்கும் என்பதை சிங்கள அரசிற்குத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இக்கொடிய இனவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தாக்குதல் பற்றி சர்வதேச சமூகத்திற்கும் மனித உரிமைகள் சார் அமைப்புக்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
_________
Sankathi.com

** களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல்

கண்டாவளைக்கோட்ட தேசியப் போரெழுச்சிக் குழுவினது ஒழுங்குபடுத்தலில் நேற்று முன்தினம் களமுனைப் போராளிகளுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது. கண்டாவளைக் கோட்ட தொழிற்சங்கங்களின் இணையம், தருமபுரம் வட்டத்திற்குட்பட்ட மாதர் சங்கங்கள், கட்டைக்காடு அ.த.க பாடசாலை ஆகியவற்றின் பங்களிப்புடன் இவ்வுணவு வழங்கல் இடம்பெற்றது.

காலை 11.30 மணியளவில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கண்டாவளைக்கோட்ட வெகுசன அமைப்பின் ஒன்றியத் தலைவர் செ.புஸ்hராசா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் கருத்துரைகளை இணையத்தின் துணைத்தலைவர் திருமதி ம.துரைராசாவும், கண்டாவளைக் கோட்ட எல்லைப்படைத் துணைப் பொறுப்பாளர் நர்மதனும் நிகழ்த்தினர். பதிலுரையை வடபோர்முனைத் தளபதிகளிலொருவரான மகேஸ் நிகழ்ததினார். சிறப்புரையினைக் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இதனைக் கண்டாவளைக் கோட்ட தொழிற்சங்கங்களின் இணையத்தின் பொருளாளர் திருமதி சி.செல்வகுமார் வழங்கிவைக்க வடபோர்முனை நிர்வாகப் பொறுப்பாளர் வேந்தன் பெற்றுக்கொண்டார்.
__________
Sankathi.com

** ஆட்சியின் வழியில் படைகள்

உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவரின் சடலத்தை, அரச படைகளைச் சேர்ந்தோர் என்று கூறப்படும் அணியினர் கேவலமாகக் கையாண்டனர் என்று வெளியான தகவல் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. எனினும் ஊடகங்களில் இவ்விடயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது.மேற்படி அநாகரிகமான செயற்பாட்டை கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோப் படமாக யாரோ ஒருவர் எடுத்துள்ளமையை அடுத்து, அந்தப் படம் இப்போது பல தரப்புகளுக்கும் அனுப்பப்பட்டு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. இந்த விவகாரம் குறித்து, தலையிட்டு, விசாரித்து உண்மையை அம்பலப்படுத்தும்படி ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஐ.நா. பொதுச் செயலாளரைக் கோரியிருக்கின்றது.


ஆனால், இவ்விடயத்தில் ஐ.நா.தலையிடுமா என்பது கேள்வியே.வன்னிப் பெருநிலப்பரப்பு மீது கொடூர யுத்தத்தை இலங்கை அரசு தொடுத்திருக்கின்றது. இதனால் அங்கு மனிதப் பேரவல நெருக்கடிஎழுந்துள்ளது. யுத்தக் கொடூரத்தால் வீடு,வாசல்களை விட்டு வெளியேறி மரநிழல்களிலும், காடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ள பல லட்சம் மக்கள் பேரிடர்களை அனுபவிக்கின்றார்கள். போதாக்குறைக்கு பெரு மழையும், வெள்ளமும் சேர்ந்து அவர்களை சொல்லொணாத் துன்ப,துயரத்துக்குள் ஆழத்தி நிற்கின்றன.


இச்சமயத்தில் அவர்களுக்கு ஆபத்பாந்தவர்களாக உதவி வழங்கக்கூடிய தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தோரையும், ஐ.நா. முகவர்களையும் அங்கிருந்து வெளியேற்றி விட்டது இலங்கை அரசு.இலங்கை வரலாற்றில் மிக மோசமான மனிதப் பேரவலத்தைச் சந்திக்கும் கொடூரம் வன்னி மக்களுக்கு இப்படி நேர்ந்திருக்கையில், அவர்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் ஐ.நா. வெறுமனே பார்த்திருக்கின்றது.அப்படிப்பட்ட ஐ.நா., மேற்படி விடுதலைப் புலிகளின் பெண் போராளியின் சடலம் கேவலமான முறையில் கையாளப்பட்ட அநாகரிகம் குறித்து ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பது அபத்தமாகும்.


மேற்படி சம்பவத்தை அம்பலப்படுத்தும் வீடியோ பதிவு குறித்து அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் -உண்மையில் தவறிழைக்கப்பட்டிருக்குமானால் அதை இழைத்தோர் இராணுவ நீதிமன்றத் தண்டனைக்கு உள்ளாவர் எனவும் -அரசின் சார்பில் பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல உறுதியளித்திருக்கின்றார்.தமிழர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பில் இழைக்கப்படும் கொடூரங்கள், குற்றங்கள் தொடர்பில் இந்த அரசு - குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு - எடுத்தவை எனக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து ஈழத் தமிழர்களுக்குத் திருப்தி ஏதும் இல்லை என்ற பின்னணியில் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இப்போது அளித்துள்ள உறுதி மொழியும் தமிழர்களைப் பொறுத்தவரை சிரத்தைக்கோ, கருத்துக்கோ எடுக்கத்தக்க விடயமே அல்ல என்பதே உண்மை.எனினும், உயிரிழந்த எதிரியின் - அல்லது புலிகளின் - சடலங்கள் சம்பந்தமாக கொழும்பு அரசும், அதன் அதிகாரிகளும் இதுவரை எடுத்து வந்த நடவடிக்கைகளும், செயற்பாடுகளும், மேற்படி வீடியோப் படத்தில் பெண் புலி ஒருவரின் சடலம் தொடர்பில் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்று கூறப்படும் அரச படையினர் விடயத்தில் அவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உத்தரவிடுவதற்கான தார்மீக அதிகாரத்தை அரசுத் தலைமைக்கு இல்லாமல் செய்துவிட்டன என்பதே நியாயமாகும்.போரில் உயிரிழந்தவர் எதிரி என்றாலும் அவரின் சடலமும், அச்சடலம் நீங்காத்துயில் கொள்ளும் சமாதியும் மரியாதைக்குரியவை.


எதிரியானாலும் உயிரிழந்த பின் இந்த மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதே மனித நாகரிகப் பண்பியல்பாகும். சட்டமும் அதுவே. நீதியும் அதுவே. மனித நாகரிக வழக்காறும் அதுவே.ஆனால் அந்த நாகரிக அடிப்படையையே தொலைத்து அநாகரிகமாக நடந்துவரும் ஓர் அரசுக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும், மேற்படி வீடியோப் படத்தில் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் படையினர் தொடர்பில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையோ இராணுவ நீதிமன்ற நடவடிக்கையோ எடுக்க அருகதை ஏதும் இல்லை என்பதுதான் நிஜம்.


யுத்தங்களில் கொல்லப்பட்ட எதிரிகளின் சடலங்கள் புதைக்கப்பட்ட சமாதிகளைப் போற்றிப் பாதுகாத்து, மரியாதை செய்வது உலக வழக்கு; நியதி; நடைமுறை.ஆனால், இவ்வுலக வாழ்வைத் துறந்து மீளாத் துயில் கொள்ளும் புலிகளைக் கூட அப்படித் துயில் கொள்ள விடாது கோரத்தாண்டவம் ஆடியது - ஆடி வருகிறது - சிங்களம்.தான் கைப்பற்றிய பிரதேசங்களில் இருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை - போராளிகளின் சமாதிகளை - வித்துடல் புதைக்கப்பட்டு நடு கற்கள் நாட்டப்பட்ட பகுதிகளை - அப்பிரதேசம் கைப்பற்றப்பட்டவுடனேயே புல்டோஸர் கொண்டு சிதைத்து அழிக்கும் - மனித நாகரிகத்துக்கே கேவலமான இழிசெயலை - காட்டுமிராண்டித்தனத்தை - மோசமான நடவடிக்கையை - தொடர்ந்து செய்து வந்திருக்கின்றது கொழும்பு அரசு.


‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ என்பது போல, பல்லாயிரக்கணக்கில் புலிகளின் சமாதிகளை புல்டோஸர் கொண்டு இடித்து, அழித்து, கிளறி, சின்னாபின்னமாக்கி, நாசமாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நாட்டின் தேசியக் கொள்கையாகக் கருதி அரசு முன்னெடுத்து வருகையில் - அதே வழியில் ஒரு பெண் போராளியின் சடலத்தில் அதே காட்டுமிராண்டித்தனத்தை இந்தப் படையினர் செய்திருக்கின்றார்கள் போலும்!
__________
Uthayan.com

** தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் பேசவும் - அமெரிக்கா

தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் சிறீலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி நகரை சிறீலங்கா படையினர் கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து விடுவோம் என சிறீலங்கா அரசு கூறிவரும் நிலையில், இந்தியா உட்பட அனைத்துலக நாடுகள் அமைதி காத்து வருகின்றன.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளதால் எழுந்துள்ள இராசரீக கருத்து முரண்பாடுகளின் மத்தியில், ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காது அமெரிக்கா கண்துடைப்புக் கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என சிறீலங்கா அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் காரணமாகவே இந்தியா, நோர்வே உட்பட அனைத்து நாடுகளும் பேச்சுவார்த்தை பற்றி பேசாது மெளனித்து இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி நகரில் இருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கினாலும் போராட்டம் தொடரும் என, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் கிளிநொச்சி நகரில் இருந்து பின்வாங்கும் திட்டத்தை விடுதலைப் புலிகள் ஏற்கனவே தீர்மானித்து விட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
_________
Pathivu.com

** கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது: வைரமுத்து

கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது என்று தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாக்களில் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய 11 இலக்கிய சொற்பொழிவுகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

"என் தம்பி வைரமுத்து'' என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை தாங்கி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் முடிவில் கவிஞர் வைரமுத்து ஏற்பு உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்று கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை. கிளிநொச்சி வீழலாம். 'கிலி' வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் இரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது.

நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

இலங்கையில் போர் நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு போரை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.
___________
Puthinam.com

** ஈழத் தமிழர்களை காக்க அனைவரும் வீறுகொண்டு எழுங்கள்: கனிமொழி வேண்டுகோள்

ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாக்களில் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய 11 இலக்கிய சொற்பொழிவுகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

"என் தம்பி வைரமுத்து'' என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை தாங்கி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் கவிஞர் கனிமொழி கருணாநிதி உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழர்கள் எப்போதுமே தங்களுடைய கடந்த கால பெருமைகளில் ஆழ்ந்து அதைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி இன்று காதில் விழுந்தது. அங்கு ஒரு இனம் மெல்ல அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் அதனை மறந்து, அதனை தாண்டி ஏதேதோ தேடல்களில் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது.

எது நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்தோமோ? அது இன்று நடைபெற்று விட்டது. நாம் இன்னும் பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இதற்காக இந்த படுகொலைகளை எதிர்த்து, இன அழிவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தயவு செய்து, வீறுகொண்டு எழுங்கள், நம்முடைய சகோதரர்களுக்காக, தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
___________
Puthinam.com

Thursday 1 January 2009

** இளையோர் அறிவியற்கழக 3ம் ஆண்டு நிறைவு விழாவும், சான்றிதழ் வழங்கும் வைபவமும்

இளையோர் அறிவியற்கழக 3ம் ஆண்டு நிறைவு விழாவும், சான்றிதழ் வழங்கும் வைபவமும் இளையோர் அறிவியற் கழக வளாகத்தில் இன்று மாலை 3 மணியளவில் மாணவத் தலைவர்கள் செல்வி செ.தர்சாந்தினி, செல்வன் ந.ஜதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை கழக மாணவியும் 3மாவீரர்களின் சகோதரியுமான செல்வி வே.மாதவச்செல்வி ஏற்றினார்.


தேசியகொடியை தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்கள் ஏற்றினார். பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த முனைவர் திரு அன்பரசு அவர்களும் முன்னாள் அனைத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் லெப்கேணல் கலையழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அனைத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் பொ.ஜெயகரன் அவர்களும் ஈகச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தனர்.


கழகத்தின் கல்விநோக்கம் தொடர்பாகவும், கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கழக முதல்வர் செல்வி பிரதீபா உரையாற்றினார். சிறப்புரையை திரு வெ.இளங்குமரன் அவர்கள் ஆற்றினார். கழகத்தின் ஆண்டுநூலினை கழகப் பணிப்பாளர் திரு திலீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க கல்விக்கழகப் பொறுப்பாளர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
___________
Sankathi.com

** களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவு வழங்கல்

வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து களமுனைப் போராளிகளுக்கு இன்று உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். நாகர்கோயில்ப் பகுதியில் உள்ள களமுனைப் போராளிகளுக்கே இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


__________
Sankathi.com

** தமிழ் உறவுகளுக்கு புதுவருட வாழ்த்துக்கள்..


இவ் வருடம் தமிழீழ மக்களிற்கு விடிவு கிடைக்கவும் தாயகத்தில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு நின்மதியான வாழ்வு கிடைக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

போர்க்களங்களில் பல துன்பங்களுக்கு மத்தியிலும் நின்று போராடும் எம் உறவுகளுக்கு அவர்களின் இலக்குகள் அனைத்தும் வெற்றி நிறைந்தவையாகக இருக்கவும் வாழத்துக்கள்.
_____________________
Vaththirayan.blogspot.com