Sunday 10 February 2008

8-தமிழர் தேடும் சுதந்திரம்

மேற்கத்தேய வல்லாதிக்கங்களான காலனித்துவ சுரண்டல் சக்திகள், கிண்டிக் கிளறி ரணகளப்படுத்தி விட்டுப் போனதால் எழுந்த தீராத வலிகளில் இருந்து மூன்றாம் மண்டல நாடுகள் இன்னும் விடுபட்டுக் கலூன்றி எழுந்து நிற்கவில்லை. காலனித்துவம் விதைத்து விட்டுச் சென்ற விஷத்தின் நீண்டகால விளைவுகளை இன்னமும் அனுபவித்துத் தட்டுத்தடுமாறித் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.பூமியின் முகத்தைக் காலனித்துவம் கோரமாக அகோரமாக ஆழமாக சிதைத்துவிட்டே மூன்றாம் மண் டல நாடுகளிலிருந்து அகன்றிருக்கின்றது.தன்னுடைய ஆதிக்க, அதிகார வலுவால் பூமியின் பிற பிராந்தியங்களை ஆக்கிரமித்த காலனித்துவம், ஒரு புறம் தேசங்களை தேசியங்களை பிரித்து, சமூகங் களைப் பிளந்து, பண்பாடுகளைச் சீர்குலைத்து, சுதேசி களைச் சின்னாபின்னப்படுத்திய அதேசமயம் மறுபுறம், வெவ்வேறு தனித்துவமான பண்பியல் புகளைக் கொண்ட தேசியங்களை வல்வந்தமாக இணைத்து, ஒன்றின் கீழ் மற்றையதை அடிமையாக்கி, அச் சமூகங் களை எதிரி வர்க்கங்களாக உருவேற்றி, உசுப்பேற்றி, நாக ரிகங்களை ஒன்றையொன்று கபளீகரம் செய்ய வைத்து, தேசியங்களை நிரந்தர விரோத சக்தியாக பகையுறவுப் பங்காளிகளாக மாற்றிவிட்டுச் சென்றிருக்கிறது.இந்தப் பின்னதன் விளைவைக் கொடூர யுத்தமாக சுலபமாகத் தீர்க்க முடியாத இனச் சிக்கலாக பேரழிவு தரும் கொடூரப் போராக இன்றும் அறுவடை செய்து கொண்டிருக்கும் அபாக்கிய பூமியில் இலங்கைத் தீவும் அடங்கும்.சரித்திர காலம் தொட்டே தனித்தனிப் பண்பாடு, மொழி, பழக்க வழக்கம், தெளிவாக அடையாளப்படுத் தப்பட்ட பாரம்பரியத் தாயகப் பூமி ஆகியவற்றோடு விளங்கிய இரு தேசியங்களை சிங்களம், தமிழர் தாயகம் ஆகிய இரு தேசங்களை தனது ஆட்சி அதிகார நலனுக்காக ஒன்றிணைந்த காலனித்துவம், தனது ஆதிக் கப் பிடியைத் துறந்த சமயத்தில் கூட நீதியாக நடந்து கொள்ளாததன் விளைவை இன்று இலங்கைத் தீவு விரும்பியோ விரும்பாமலோ எதிர்கொண்டபடி இருக் கிறது.சுதந்திரத்துக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், நீதிக்காகவும் ஈழத் தமிழர்கள் இன்று நடத்தும் வாழ்வா, சாவா என்ற உயிர்ப் போராட்டம் இந்த இலங்கைத் தீவை ஆக்கிரமித்த மேற்குலகக் காலனித்துவம் குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியப் பேராதிக்கம் இத் தீவில் விதைத்து விட்டுச் சென்ற நச்சு விதையின் பெறு பேறன்றி வேறில்லை.மனிதன் உணர்வற்ற, உயிரற்ற, விருப்பு வெறுப் பற்ற, அசைவற்ற, வெறும் ஜடப்பொருள் அல்லன். அவன், சுயவுணர்வுடன், சுயவிருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, சுய முடிவுகளை எடுத்து, சுய பிரக்ஞையுடன் தனியனாகவும் அதேசமயம் குடும்பம், கிராமம், நகரம், சமூகம் என்று கூட்டாகவும் வாழ உரிமையுடைய ஆற றிவு ஜீவன்."மனிதன் சுதந்திரமாக வாழ விதிக்கப்பட்டிருக்கின் றான்'(Man is Condemned to Freedom)என்றுரைத்திருக் கின்றார் பிரெஞ்சு தத்துவ வித்தகர் சாத்தர். அது அவனது வாழ்நிலை உரிமை மட்டுமல்ல, தலைவிதியும் கூட. அதற்காகவே அவனது வாழ்நிலைப் போராட்டமும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.மனித வாழ்வைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது வெறும் உணவும், உடையும், உறைவிடமும், பொழுது போக்கும் கட்டுப்பாடின்றிப் பெறுவதல்ல. அதேபோல் அபிவிருத்தியையும், வசதிகளையும் ஈட்டுவதை மட் டும் அது குறிக்கவில்லை. அதற்கு அப்பாலும் அதில் அனேகம் உண்டு.சுதந்திரம் என்பது மனவுலகத்தின் வெறும் மானசீகப் பொருளும் அல்ல.அது, சமூக வாழ்வியல் நிலையோடு ஒன்றிணைந்து பின்னிப்பிணைந்தது. ஒருபுறம் அகவயமாகவும், மறு புறம் புறநிலையாகவும் அனுபவித்து, அறியப்பட்ட உரிமை யுள்ள விவகாரம் அது. அடிமைத்தளையிலிருந்து ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து அதிகார விலங்குக் கட்டுகளிலிருந்து ஒடுக்குமுறை நெருக்குவாரங்களில் இருந்து மனிதன் விடுபட்டு, சமூகத்தில் ஒத்திசை வாகவும், கௌரவ வாழ்நிலையோடும், பிற மனிதனு டன் சம அந்தஸ்துடனும் சமத்துவமாகப் பரிமளிப்பதை குறிக்கின்றது இந்த வாழ்வியல் சுதந்திரம்.அதிகார ஆதிக்கப் பிடிகள் அற்றுப்போக, அடக்கு முறைச் சுவர்கள் தகர, தனி மனிதனின் அக வாழ்வும், புற வாழ்வும் தேவையற்ற தளைகள் நீங்கித் தழைத் தோங்க வழி செய்யப்படுவதே உண்மையான சுதந்திரமாகும்.மதம், மொழி, இனம், சாதி, பால், நிலை ஆகியவை காரணமாகப் பாகுபடுத்தலுக்கு உள்ளாக்கப்படாமல் தன்னுடைய சமூக, இனப் பண்பியல்புகளைக் கட்டிக் காத்து, தனது மத நம்பிக்கையைப் பேணி, கருத்து வெளியிடும் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமை களை அனுபவித்து, உணர்வுபூர்வமாக ஒரு மனிதன் வாழ்வதற்கு உரித்துடையவன். இது உறுதிப்படுத்தப் படுவதே உண்மைச் சுதந்திரம் ஆகும்.காலனித்துவ ஆதிக்க சக்திகளில் இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான தேசியத்திடம் அடிமை சாசன மாக எழுதி ஒப்படைக்கப்பட்ட தனது இந்த உரிமைகளை அதாவது தனது தேசியத்தின் இறைமையை மீட்டெ டுப்பதே தனது சுதந்திர மீட்பு எனத் தமிழக தேசம் கருது கின்றது. அந்தச் சுதந்திரத்தையே தமிழர்கள் தேடுகின் றனர். அதன் பொருட்டே இந்தப் போராட்டம் எல்லாம்.
நன்றி உதயன்
jaalavan@gmail.com

Saturday 2 February 2008

7 - என் இனத்திற்கு எதிராக நீ முடிவெடுக்கிறாய்- யாரைக் கேட்டு நீ முடிவெடுப்பது? தொல்.திருமாவளவன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடி புதைப்பு மற்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ஆகியவற்றுக்காக சிறிலங்கா அரசு மீது இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
சிறிலங்காவைக் கண்டித்து முழக்கங்களை திருமாவளவன் எழுப்ப திரண்டிருந்தோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
நிகழ்வில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
இந்திய அரசே! இந்திய அரசே!போர் தொடு! போர் தொடு!
சிங்கள அரசுக்கு எதிராகபோர் தொடு! போர் தொடு!
தமிழக மீனவர்களைமீனவ தமிழர்களைகாப்பாற்று! காப்பாற்று!படையெடுப்பு செய்! படையெடுப்பு செய்!
அகற்றிடு அகற்றிடுகடலிலே மிதக்கின்றகண்ணிடிவெடிகளை அகற்றிடு!கண்ணிவெடிகளை அகற்றிடு!
சர்வதேச சமூகமே!சர்வதேச சமூகமே!வேடிக்கை பார்க்காதே!வேடிக்கை பார்க்காதே!
தடை செய்! தடை செய்!சிங்கள அரசுக்குபொருளாதார தடை செய்!
சர்வதேச சமூகமேசர்வதேச நாடுகளே!
தடை செய்! தடை செய்!சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகபொருளாதார தடை செய்!
குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்!ஆதரவுக் குரல் கொடுப்போம்!
குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்!உயிர் மூச்சு உள்ளவரையில்தமிழீழ சொந்தங்களுக்கு தமிழீழ விடுதலைக்குஆதரவாகக் குரல் கொடுப்போம்!ஆதரவாகக் குரல் கொடுப்போம்!
கருத்துரிமையை வென்றெடுக்கமனித உரிமையை வென்றெடுக்ககுரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்!பின்வாங்க மாட்டோம்!பின்வாங்க மாட்டோம்!
உருட்டல் மிரட்டல்களுக்குபின்வாங்க மாட்டோம்!
பின்வாங்க மாட்டோம்!பின்வாங்க மாட்டோம்!அச்சுறுத்தல்களுக்கு பின்வாங்க மாட்டோம்!
கருத்துரிமை பறிபோனால்!கருத்துரிமை பறிபோனால்!உயிர்கொடுத்தேனும் மீட்டெடுப்போம்!உயிர்கொடுத்தேனும் மீட்டெடுப்போம்!
மனித உரிமை பறிபோனால்மனித உரிமை பறிபோனால்உயிர்கொடுத்தேனும் மீட்டெடுப்போம்!
மீட்டெடுப்போம்!மீட்டெடுப்போம்!கச்சத்தீவை மீட்டெடுப்போம்
மீட்டெடுப்போம்!மீட்டெடுப்போம்!கருத்துரிமையை மீட்டெடுப்போம்!
பாதுகாப்போம்! பாதுகாப்போம்!மனித உரிமைகளைப் பாதுகாப்போம்!
பாதுகாப்போம்! பாதுகாப்போம்!கருத்துரிமைகளைப் பாதுகாப்போம்!
இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது:
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவ தமிழர்கள் கடந்த 20ஆம் நாள் 599 படகுகளில் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையினர் சுற்றி வளைத்திருக்கிறார்கள். ஏராளமான மீனவத் தமிழர்கள் தங்களது படகுகளை விரைந்து ஓட்டி வந்து கரையேறிவிட்டாலும் சில படகுகள், சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையின் சுற்றிவளைப்புக்குட்பட்டு 12 பேர் பிடிபட்டனர்.
அந்த 12 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நிறுத்தி சிங்கள இனவெறி அரசு சிறைபிடித்து வைத்தது. படகுகளையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இந்த நிலையில்தான் இராமேஸ்வரம் மீனவத் தமிழர்கள் கடந்த 25 ஆம் நாள் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலே ஈடுபட்டனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சிகரமான செய்தியும் கசிந்தது.
என்ன செய்தி?
சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள்- சிங்க இனவெறி கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்கிறார்கள் என்ற செய்தி.
ஒரு உண்மையை இங்கு நாம் உணர வேண்டும்
இந்திய அரசுக்கு தெரியாமல் சிங்கள அரசு கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்க முடியாது. ஏனெனில் சிங்களக் கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்ட செய்தி அறிந்ததும் எதிர்வினையாற்றி இருக்க வேண்டும் இந்திய அரசு.
ஆனால் இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன?
"தமிழ்நாட்டு மீனவர்களே நீங்கள் மீன்பிடிக்கச் செல்லாதீர்கள்- சிங்கள அரசு கடலில் கண்ணிவெடிகளை போட்டிருக்கிறது" என்று சொல்லுகிறார்கள். இது எவ்வளவு கேவலமானது- அருவருப்பானது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதல் உலக யுத்தத்தின் போதுதான் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் உண்டு.
இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்ற 1945-1949 வரையிலான காலகட்டத்தில் பாரசீக வளைகுடாக் கடற்பரப்பில் கடல் கண்ணிவெடிகளை போட்டிருந்ததாகவும் அந்த கண்ணிவெடிகளை 1988 ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல் ஒன்று மிதித்ததாகவும் அதில் அந்தக் கப்பல் சேதமடைந்ததாகவும் செய்திக்குறிப்புகள் சொல்லுகின்றன.
கடல் கண்ணிவெடிகள்- நிலக்கண்ணிவெடிகளைப் போன்றதல்ல. ஆனால் கடல் கண்ணிவெடிகள் மிதந்து கொண்டே- நகர்ந்து கொண்டே இருக்கும். ஓரிடத்தில் இருக்காது.
ஆகவே மிகப் பெரிய ஆபத்து அது. தீங்கு விளைவிக்கக்கூடியது.
இரண்டாவது- நிலத்தில் புதைக்கப்படுகிற கண்ணிவெடிகளின் ஆயுட்காலம் குறைவு.
ஆனால் கடலிலே மிதக்க விடுகிற- புதைக்க விடுகிற அந்தக் கண்ணிவெடிகளின் ஆயுள் மிக நீண்டது என்பது பாரசீகுடா வளைகுடா கண்ணிவெடிகள் வெடித்ததிலிருந்து உணரமுடிகிறது.
யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு என்பது சிறிலங்காவுக்குச் சொந்தமானது
கச்சதீவு என்பது இந்திய அரசுக்குச் சொந்தமானது.
ஆனால் இந்திய அரசு- தமிழ்நாட்டைக் கேட்காமல்- தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கேட்காமல்- தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் தமிழ்நாட்டினது ஒப்புதல் பெறாமல் 1970-களின் தொடக்கத்திலே கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது இந்திய அரசு.
கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடிகளைப் போடுவதற்கு சிங்கள அரசுக்கு யார் அதிகாரம் தந்தது? எதற்காகக் கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள்?
கண்ணிவெடிகளைப் போடுவது என்பதுகூட போர் நடைபெறுகிற சூழல்தான்.
இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே போர் மூளுகிற நடைபெறுகிற சூழலா உள்ளது?
விடுதலைப் புலிகளுக்கு எதிராக கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள் என்றால் அது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இடையூறு இல்லாது இருக்க வேண்டும் அல்லவா?
அப்படிக் கண்ணிவெடிகளைப் போட்ட பின்னரும் கூட இந்திய அரசு ஆத்திரப்படவில்லை.
இந்திய அரசு - கண்டன அறிக்கை வெளியிடவில்லை.
கண்ணிவெடிகளை அகற்ற இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை எச்சரிக்கிறது. மிகக் கேவலமான அணுகுமுறை இது.
கடலிலே கண்ணிவெடிகளை போட்டிருப்பது என்பது சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டிய ஒரு நடவடிக்கை.
இந்நேரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.
சிங்கள இனவெறி அரசானது பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கூடிக் குலாவினாலும் இந்திய அரசுக்கு எதிராக செயற்திட்டங்களை முன்னெடுத்தாலும் வலிந்து வலிந்து சிங்கள அரசுக்குத் துணை போகிறது.அதற்கு என்ன காரணம் எனில் தமிழீழம் அமைவதைத் தடுப்பதுதான்.
ராஜீவ் காந்தி கொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்படவில்லை என்பதே உண்மை.
உண்மையில் தமிழீழம் அமைவதில் இந்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை.
தமிழீழம் அமைவதை இந்திய அரசு விரும்பவில்லை.
சிங்கள அரசு - ஒரு கட்டத்திலே போனால் போகட்டும்- நம்மிடத்திலே இருப்பவன் கூலி வாங்கிக் கொண்டு போரிடுகிறான் - புலிகளோ உயிரைக் கொடுத்து சண்டை போடுகிறார்கள். எனவே ஈழத்தை பிரித்துக் கொடுத்துவிடுவோம் என்று அவன் கீழிறங்கி வந்துவிட்டால் தனக்கு ஆபத்து என இந்தியா நினைக்கிறது.
இரு பெரிய அரசுகளுக்கு தமிழீழம் அமைவதிலே விருப்பம் இல்லை.
1. அமெரிக்க அரசு.
2. இந்தியப் பேரரசு.
தமிழீழம் அமைவதை அவர்கள் விரும்பவில்லை- அதனாலேயே தடை விதித்திருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக புலிகள் மீது தடை விதிக்கவில்லை.
அப்படியானால் ராஜீவைக் கொன்றதற்காக அமெரிக்கா தடை விதித்தது? கனடா தேசம் ஏன் தடை விதித்தது? ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது ராஜீவைக் கொன்றதற்கா?
ஏன் தடை விதித்திருக்கிறார்கள் என்றால் "அமெரிக்க ஏகாதிபத்திய"த்தின் நெருக்கடியால்தான் தடை விதித்திருக்கிறார்கள்.
இந்திய அரசு தடை விதித்திருப்பதற்கு 2 காரணங்கள் உண்டு.
1. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது தமிழீழத்துக்கு எதிராக இருக்கிறது- தமிழீழம் வந்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் எழுச்சிப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது.
2. இந்திய அரசாங்கமும் அமெரிக்க அரசாங்கமும் கட்டுப்பட்ட அரசாங்கம். இந்தியாவின் பொருளாதார- வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்ற இடத்தில் அமெரிக்கா உள்ளது.
இதெல்லாம் காங்கிரசின் ஞானசேகரனுக்கும் அண்ணன் இளங்கோவனுக்கும் தெரியாமல்தான் ராஜீவ் காந்தி- ராஜீவ் காந்தி என்று எதற்கெடுத்தாலும் சொல்லுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தவறு என்றுதான் சொல்லுகிறோம்.
என் இனத்திற்கு எதிராக நீ முடிவெடுக்கிறாய்- யாரைக் கேட்டு நீ முடிவெடுப்பது?
வெளிவிவகாரக் கொள்கை என்றால் 4 அதிகாரிகளை வைத்து முடிவெடுப்பதா?
அந்த அதிகாரிகளில் ஒருவனாவது தமிழன் உண்டா?
தமிழ்நாட்டு மக்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?
தமிழ்நாட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கருத்து கேட்டீர்களா?
தமிழ்நாட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்டிருக்கிறீர்களா?
நாடாளுமன்ற மக்களவை- மாநிலங்களவையிலே விவாதித்திருக்கிறீர்களா?
தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?
யாரிடத்திலே கேட்டீர்கள்?
தமிழ்நாட்டு மக்களிடத்திலே பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்-
இந்தியப் பேரரசுக்கும்
இந்திய தேசிய காங்கிரசுக்கும் துணிச்சல் இருந்தால் "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்று அறிவித்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்! முடியாது உங்களால்.
"தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" பகிரங்கமாக பிரகடனம் செய்துவிட்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க துணிச்சல் இருந்தால் சந்தியுங்கள்!
காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன் தனியாக நின்றால் 4 வாக்குகள் வாங்குவாரா?
காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் தனியாக நின்றால் 3 வாக்குகள் வாங்குவாரா?
தி.மு.க.வின் தயவிலே வெற்றி பெற்றுவிட்டு இன்று தி.மு.க. அரசுக்கே நெருக்கடி கொடுப்பதா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1967ஆம் ஆண்டு சட்டம் பற்றி சொல்லியிருக்கின்றார்கள். அ.தி.மு.க, காங்கிரஸ் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் தயவு இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது. காங்கிரசுக்கு இருக்கிற வாக்கு வங்கி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கிதான்.
இந்தத் திருமாவளவன் எழுப்பியிருக்கும் கருத்துரிமை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கருத்துரிமைக்காக.
நாங்கள் கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்தியதே முதல்வர் கலைஞருக்காகத்தான்.
தமிழ்நாட்டு முதல்வர்- 4 வரி கவிதை எழுதினால் அது "அம்மா"வுக்குப் பொறுக்கவில்லை.
ராஜீவ் கொலைக்கும்- புலிகள் மீதான தடைக்கும் இந்திய அரசினது வெளிவிவகாரக் கொள்கைதான் காரணம். இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை அச்சப்படுகிற கொள்கை.
தமிழீழம் அமைந்துவிட்டால் தமிழ்நாடு- தனிநாடாக விடும் என்று கற்பனையில் அச்சப்படுகிறார்கள்.
தமிழ்நாடு தனிநாடாகி விடும் என்று நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்-?
அப்படியானால் அதற்குரிய தேவை இருக்கிறது என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?
அதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளன என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?
தமிழ்நாடு- தனிநாடாகது என்று சொல்லக்கூடிய திராணியும் தெம்பும் ஏன் உங்களுக்கு இல்லை-
மறுபடியும் சொல்கிறேன்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இருந்தால் தமிழ்நாட்டின் ஆறரைக் கோடி மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள். இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள்.
தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும்- புலிகள் இயக்கத்தை தடை செய்யுங்கள் என்று-
தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும் தமிழீழம் அமைவதனை நாங்கள் விரும்பவில்லை என்று-
நாங்கள் வாயை மூடிக்கொள்கிறோம். "புளி"யை கரைத்து ரசம் வைப்பதைக் கூட நாங்கள் நிறுத்தி விடுகிறோம்.
தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழினத்தினது எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?
சட்டம் கொண்டு வந்தால் அதற்கு கட்டுப்பட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை-
அது தவறு என்றால் தவறு என்று சொல்லக்கூடிய உரிமை எங்களுக்கு உண்டு.
அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு.
இந்திரா அம்மையாருக்கும் சிறீமாவுக்கும் இடையேயான ஒப்பந்தமானாலும் சரி தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா?
கடல் எல்லைகள் வரையறை தொடர்பில் தமிழ்நாட்டு அதிகாரிகளின் கருத்து கேட்கப்பட்டதா?
கச்சத்தீவை தாரை வார்க்கிற அந்த ஒப்பந்தம் தொடர்பில் தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு முதல்வராக அப்போதிருந்த கலைஞரிடத்திலே சொல்லிவிட்டா செய்தீர்கள்?
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் போடப்பட்டதே- அது தமிழீழம் தொடர்பிலானது. அந்த விடுதலைப் போராளிகளிடத்தில் கருத்து கேட்டா போட்டீர்கள்?
அந்த ஒப்பந்தத்திலே மேதகு பிரபாகரன் கையெழுத்திட்டாரா?
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகள் கட்டுப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? என்ன நீதி?
அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை சிங்கள அரசு மதித்திருக்கிறதா? நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறார்கள்?
கச்சத்தீவு கடற்பரப்பில் எமது மீனவ தமிழர்கள் சுதந்திரமாக மீன்பிடித்துவிட்டுத் திரும்ப வேண்டும்.
அதற்காக சிங்கள இனவெறி அரசு இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
கடலடியில் மிதக்கவிடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
jaalavan@gmail.com

Friday 1 February 2008

6 - ஐ.நா. செயலாளருக்குப் புலிகள் கடிதம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஐந்து தசாப்தகால நீண்ட பெரும் எடுப்பிலான மோசமான உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்குரிய ஆக்கபூர்வமான அணுகுமுறையாக தமிழர் இறைமையை அங்கீகரிக்கும் செயற்பாட்டைக் கருத்தில் கொள்ளவும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கோரியுள்ளார்.சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கத் தமது அமைப்புத் தயாராக இருப்பதாகவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மடுவில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் பஸ் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ள பா.நடேசன் யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய பின்னர் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீதான படுகொலை வேகத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை மீளப் பெறுவதற்கு ஒரே வழி தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிப்பதே என்பதும் சர்வதேச சமூகத்துக்கு இப்போது தெளிவாகியிருக்கும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்தக் கடிதத்தில் நடேசன் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:மடுபாலம்பிட்டி வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி பொதுமக்களின் பஸ் மீது மேற்கொண்ட தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.அவ்வேளை பாடசாலையிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பஸ்களில் காணப்படுவர் என்பது தாக்குதலை மேற்கொண்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் காரணமாக இந்தத் தாக்குதல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவு. கொல்லப்பட்டவர்களில் 8 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும் அடங்குவர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் உப்புக்குளம் பகுதியில் ஜனவரி 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் மூன்று முதல் பதினாறு வயதுடைய ஏழு சிறுவர்கள் காயமடைந்தனர்.இரண்டு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் 27ஆம் திகதி முதலுதவி பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த மாணவர்களின் வாகனம் கிளைமோர் தாக்குதலிற்கு உள்ளானதில், ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.இதே தினம் "புலிகளின் குரல்' மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் வீதியால் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இதற்குச் சில நாள்களுக்கு முன்னர் முல்லைத்தீவு தர்மபுரத்தில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.அதே மாதம் எட்டாம் திகதி அலம்பிலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட இன்னுமொருவர் காலை இழக்க நேர்ந்தது.யுத்தநிறுத்தம் அமுலில் இருந்த காலத்திலும் பொதுமக்கள்மீது இலக்குயுத்த நிறுத்தம் நடைமுறையிலிருந்த ஆறு வருட காலப் பகுதியிலேயே இலங்கை அரசினால் பொதுமக்கள் இலக்குவைக்கப்படுவது இடம்பெற்றுள்ளது.தற்போதைய ஜனாதிபதி நவம்பர் 2005 இல் பதவியேற்ற பின்னர் 132 தமிழ்ச் சிறுவர்கள் உட்ட 2056 தமிழ் பொதுமக்கள் அரசபடைகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிய பின்னர் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களை வெளியேற்றிய பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை அனுமதிக்க மறுத்துள்ள பின்னர் இலங்கை அரசால் தமிழ் மக்கள் கொல்லப்படும் வேகம் அதிகரித்துள்ளது.மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் எழுப்பிய கரிசனைக்கு இலங்கை அரசின் பதில் நாகரிகமற்றதாக அமைந்தது. அவர்களை "பயங்கரவாதிகள்' , "காலனித்துவவாதிகள்' என்றெல்லாம் கொழும்பு குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களை சரி செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை இலங்கை அரசு தடுத்து வருகின்றது.இலங்கை அரசு யுத்த நிறுத்த காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகள் தொடர்பாகத் தான் ஏற்றுக் கொண்ட பல உறுதிமொழிகளை நிறைவு செய்யாமல் கைவிட்டது. இலங்கையில் மனித உரிமை நிலைவரத்தை சரிசெய்து சமாதானத்தை ஏற்படுத்தும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை விடுதலைப் புலிகள் எப்போதும் மதித்து வந்தமையையும் நாம் வலியுறுத்திச் சுட்டிக் காட்டுகிறோம் என்று உள்ளது.
jaalavan@gmail.com