Friday, 1 February 2008

6 - ஐ.நா. செயலாளருக்குப் புலிகள் கடிதம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஐந்து தசாப்தகால நீண்ட பெரும் எடுப்பிலான மோசமான உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்குரிய ஆக்கபூர்வமான அணுகுமுறையாக தமிழர் இறைமையை அங்கீகரிக்கும் செயற்பாட்டைக் கருத்தில் கொள்ளவும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கோரியுள்ளார்.சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கத் தமது அமைப்புத் தயாராக இருப்பதாகவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மடுவில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களின் பஸ் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ள பா.நடேசன் யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய பின்னர் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீதான படுகொலை வேகத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை மீளப் பெறுவதற்கு ஒரே வழி தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிப்பதே என்பதும் சர்வதேச சமூகத்துக்கு இப்போது தெளிவாகியிருக்கும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்தக் கடிதத்தில் நடேசன் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:மடுபாலம்பிட்டி வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி பொதுமக்களின் பஸ் மீது மேற்கொண்ட தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.அவ்வேளை பாடசாலையிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பஸ்களில் காணப்படுவர் என்பது தாக்குதலை மேற்கொண்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் காரணமாக இந்தத் தாக்குதல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவு. கொல்லப்பட்டவர்களில் 8 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும் அடங்குவர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் உப்புக்குளம் பகுதியில் ஜனவரி 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் மூன்று முதல் பதினாறு வயதுடைய ஏழு சிறுவர்கள் காயமடைந்தனர்.இரண்டு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் 27ஆம் திகதி முதலுதவி பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த மாணவர்களின் வாகனம் கிளைமோர் தாக்குதலிற்கு உள்ளானதில், ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.இதே தினம் "புலிகளின் குரல்' மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் வீதியால் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இதற்குச் சில நாள்களுக்கு முன்னர் முல்லைத்தீவு தர்மபுரத்தில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.அதே மாதம் எட்டாம் திகதி அலம்பிலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட இன்னுமொருவர் காலை இழக்க நேர்ந்தது.யுத்தநிறுத்தம் அமுலில் இருந்த காலத்திலும் பொதுமக்கள்மீது இலக்குயுத்த நிறுத்தம் நடைமுறையிலிருந்த ஆறு வருட காலப் பகுதியிலேயே இலங்கை அரசினால் பொதுமக்கள் இலக்குவைக்கப்படுவது இடம்பெற்றுள்ளது.தற்போதைய ஜனாதிபதி நவம்பர் 2005 இல் பதவியேற்ற பின்னர் 132 தமிழ்ச் சிறுவர்கள் உட்ட 2056 தமிழ் பொதுமக்கள் அரசபடைகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிய பின்னர் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களை வெளியேற்றிய பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை அனுமதிக்க மறுத்துள்ள பின்னர் இலங்கை அரசால் தமிழ் மக்கள் கொல்லப்படும் வேகம் அதிகரித்துள்ளது.மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் எழுப்பிய கரிசனைக்கு இலங்கை அரசின் பதில் நாகரிகமற்றதாக அமைந்தது. அவர்களை "பயங்கரவாதிகள்' , "காலனித்துவவாதிகள்' என்றெல்லாம் கொழும்பு குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களை சரி செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை இலங்கை அரசு தடுத்து வருகின்றது.இலங்கை அரசு யுத்த நிறுத்த காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகள் தொடர்பாகத் தான் ஏற்றுக் கொண்ட பல உறுதிமொழிகளை நிறைவு செய்யாமல் கைவிட்டது. இலங்கையில் மனித உரிமை நிலைவரத்தை சரிசெய்து சமாதானத்தை ஏற்படுத்தும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை விடுதலைப் புலிகள் எப்போதும் மதித்து வந்தமையையும் நாம் வலியுறுத்திச் சுட்டிக் காட்டுகிறோம் என்று உள்ளது.
jaalavan@gmail.com

No comments: