Friday 31 October 2008

** ஈழத்தமிழரின் எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு கட்சிகளிடையே ஒற்றுமை: ஆனந்த விகடன்

எங்களுக்கு முக்கியத் தேவை உங்கள் ஒற்றுமைதான்! அதனை விடுத்து கவனம் திரும்பி, உங்களுக்குள் நடக்கும் யுத்தத்தை நோக்கி எல்லோர் கவனத்தையும் திசை திருப்பி விடாதீர்கள்' என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறான் அந்த ஈழத் தமிழன் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
-
இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்துள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
சிறிலங்கா அரசுக்கு ஆயுதமும் இராணுவ நுட்பமும் கொடுக்காதீர்கள்' என்ற குரலுக்கு, இந்திய அரசு நிம்மதியான ஒரு பதிலும் தராமல் போனதில் ஈழத் தமிழனுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்! அதைக்கூட தாங்கிக்கொள்ள முடிந்த அவனால், 'தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனே நிறுத்துங்கள்' என்று உரக்கச் சொல்வதற்குக்கூட இந்தியா தயங்குவதைத்தான் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அவனுடைய ஒரே ஆறுதல், தமிழகத்திலிருந்து சகோதர பாசத்தோடு எழும் ஆதரவுக்குரல்கள் மட்டுமே. அதேசமயம், 'ஆதரவுக் குரல்களே குயுக்தி குரல்களாக மாறி, தமிழக அரசியல் கட்சிகள் பரஸ்பரம் தங்களை வீழ்த்திக்கொள்ளும் ஆயுதமாவதை அவன் அதிர்ச்சியோடு கவனிக்கிறான். தமிழகத்தில் அரங்கேறும் கைதுகள் ஒருபோதும் தன் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்பதை அவன் அறிவான்.

'சகோதர சொந்தங்களே... இந்த நேரத்தில் எங்களுக்கு முக்கியத் தேவை உங்கள் ஒற்றுமைதான்! அதைவிடுத்து கவனம் திரும்பி, உங்களுக்குள் நடக்கும் யுத்தத்தை நோக்கி எல்லோர் கவனத்தையும் திசைதிருப்பி விடாதீர்கள்' என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறான் அந்த ஈழத் தமிழன். மறவாமல் அவன் வைக்கும் முக்கிய கோரிக்கை ஒன்று உண்டு - 'எங்களுக்காகக் குரல் கொடுக்கும்போது உணர்ச்சி மேலீட்டில் நீங்கள் உதிர்க்கிற வார்த்தைகளில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள்.

இந்திய அரசும் உதவிக்கு வராத நிலையில், எங்களைத் தொடர்ந்து நசுக்கி வரும் சிறிலங்கா அரசின் ஆவேசத்தை மேலும் தூண்டிவிடாதீர்கள். இராமேஸ்வரம் நிகழ்ச்சியில்கூட ராஜபக்ச பற்றி உங்களில் சிலர் உதிர்த்த வர்ணனை வார்த்தைகளைத் தவிர்த்திருக்க வேண்டும். ஏற்கெனவே இரத்தவெறி பிடித்தவர்களின் ஆத்திரத்தை அது இன்னும் விசிறிவிட்டால், எங்களை நசுக்கித் தள்ளும் வேகமல்லவா இன்னும் கூடிவிடும்' என்று கவலையோடு கதறுகிறான் ஈழத் தமிழன். அர்த்தமுள்ள கதறல்தான்...

வீரியத்தை விடவும் காரியம்தானே முக்கியம்! என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com
*****

** ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று முழு கதவடைப்பு!

ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் தாக்குதலை நிறுத்தக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை முழு கதவடைப்பு நடத்தப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் அழைப்பு விடுத்திருந்த இந்த கதவடைப்பு போராட்டம் பெருவெற்றி கண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இன்றைய இந்த போராட்டத்தினால் சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
-
பலசரக்கு கடைகள், தேநீர் கடைகள், காய்கறி கடைகள், புடவைக் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.
சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
பெரம்பூர், வியாசர் பாடி, மயிலாப்பூர், அடையார், கோடம்பாக்கம், திருவொற்றியூர், திருவான்மியூர் உட்பட நகரின் பல பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகள், காய்கறிகள் கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சிலர் காலை வியாபாரத்தை முடித்த பின்னர் கடைகளை அடைத்து விட்டனர்.


சென்னையில் மிகப் பெரிய காய்கறிச் சந்தையான கோயம்பேட்டில் நள்ளிரவு 12:00 மணி முதல் காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டன. கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக சரக்குகள் ஏற்றி வரக்கூடிய சுமையூர்திகள் இன்று நிறுத்தப்பட்டன. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இன்று கொண்டு வரப்படவில்லை.இதனால் காய்கறி-பழ வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.
-
பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் வாங்க பல்வேறு வாகனங்களில் கோயம்பேடுக்கு வழக்கமாக வரும் சுமார் 1,000 வாகனங்களும் வராததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி மொத்த-சில்லறை வியாபார கடைகள் மூடுப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கோயம்பேடு காய்கறி சந்தையின் பிரதான கதவு மூடப்பட்டு இருந்தது. பூக்கடை தவிர தங்ககங்கள், தேநீர் கடைகள், பல்பொருள் கடைகள் போன்றவை மூடப்பட்டன.



இதே போல தாம்பரம், ஆவடி, ஆம்பத்தூர், திருநின்றவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் செயற்படும் காய்கறி சந்தை வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தெரு வீதிகளில் திறந்திருந்த ஒரு சில சிறிய கடைகளில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்து இருந்தது.காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நகரில் உள்ள சில கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.
puthinam.com
*****

Thursday 30 October 2008

ரஜினி-கமல்: 'பேசா' உண்ணாவிரதம்?

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!.

இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே.சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.

இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் பேரணியில் வரம்பு மீறிப் பேசியதற்காக இயக்குநர்கள் சீமானும், அமீரும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தமிழக அரசுக்கும் இதனால் சில சங்கடங்கள் உருவாயின.பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்துவிட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அஜீத், விஜய் போன்ற நடிகர்களும் இந்த வகை 'பேசா உண்ணாவிரதப் போராட்டம்' பிரச்சனை இல்லாதது என நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதைவிட முக்கியமான விஷயம், நடிகர் சத்யராஜை அடக்கி வாசிக்குமாறு தமிழக முதல்வரிடமிருந்தே அறிவுரை வந்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது.பிரச்சினைக்குரிய எந்த விவகாரம் குறித்தும் நடிகர்கள் பேசவேண்டாம் என்றும், உணர்வைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இனி தமிழக அரசு நடந்து கொள்ளாது என சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த 'அறிவுரை' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாளை நடக்கும் உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான மேடை போடப்பட்டுள்ளது.கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
thatstamil.com
*****

** களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 24 மில்லியன் ரூபா இழப்பீடு: 435 மெகா வாட்ஸ் மின்சார வீழ்ச்சி!

களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்தில் தமிழீழ வான்படையினர் நடத்திய வான்தாக்குதலில் நாள் ஒன்றுக்கு 24 மில்லியன் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.அத்துடன் களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தியில் 275 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

நாடுதளுவிய ரீதியில் 435 மெகா வாட்ஸ் மின்சார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான நேர இடைவெளியில் மின்சார இணைப்பில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகின்றது.இதனை சீர்செய்வதற்கு 6 மாத காலம் தேவை என மின்வலுத்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தபோதும், 3 மாத காலத்தினுள் ஓரளவு மீளமைப்பு செய்ய முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
pathivu.om
*****

** வன்னிவேளாங்குளத்தில் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முறியடிப்பு: 5 படையினர் பலி!

வன்னிவேளாங்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 5 படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் பல படையினர் காயமடைந்துள்ளனர்.இன்று வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் நோக்கி எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் இரு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.

படையினரின் முன்னகர்வுகளை வழிமறித்த போராளிகள் ஒன்றைரை மணி நேர முறியடிப்புச் சமரின் பின்னர் படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போதே படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
pathivu.com
*****

Tuesday 28 October 2008

*** களனி மின்வழங்கல் நிலையம், சப்புகஸ்கந்த எண்ணெய் குதம், தள்ளாடி படைமுகாம் மீதும் வான்புலிகள் தாக்குதல்

மன்னார் தள்ளாடிப் படைமுகாம் மீது வான்புலிகள் வான்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.50 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் தள்ளாடிப் படைமுகாம் மீது இருகுண்டுகளை வீசிச் சென்றுள்ளன. குண்டுவீச்சின் போத பெயரிளவு சேதங்கள் ஏற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கொழும்பில் இரவு 11.30 மணியளவில் களனி மின்சார வழங்கல் நிலையம், சப்புகஸ்கந்த எண்ணெய்குதம் மீதும் வான்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். களினி மின்சார வழங்கல் பகுதியும், எண்ணெய்க் குதமும் சேதமடைந்துள்ளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா தீ அணைக்கும் படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. மின்சாரங்கள் அணைக்கப்பட்டு விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வான்நோக்கி சுடப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலையடுத்து இரவு 11.00 மணிக்கம் 11.30 மணிக்கும் இடையில் சிறீலங்காவின் மிகையொலி யுத்த வானூர்திகள் கிளிநொச்சி, இரணைமடு, விசுவமடு, முரசுமோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாப் பறந்து பரா வெளிச்சக் குண்டுகளை வீசிய வான்புலிகளின் வானூாதிகளைத் தேடியுள்ளன.
pathivu.com
****

*** பரந்தனின் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 3 பேர் பலி; 11 பேர் காயம்; 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் பரந்தன் சந்தை மற்றும் நகரம் செறிவான மக்களுடன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் மக்களுக்கு அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் வகையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.


இதில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் அழிந்துள்ளதுடன் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் மூவரும், மாணவர்கள் மூவருமாக ஆறு பேர் காயமடைந்தனர்.
குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். வான்படையின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் மாணவர்கள் பதறி- அவலப்பட்டு- சிதறி ஓடினர்.


மாணவர் அவலப்பட்டு காப்பகழிகளுள்ளும் வெளியிலும் கதறி அழுதவாறு சிதறியோடினர். பாடசாலை வளாகத்திலும் வகுப்பறைகளிலும் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்துள்ளன. இதில் மாணவர்கள் காயமடைந்தனர்.
வான்படையின் குண்டுத்தாக்குதலினால் பரந்தன் நகரம் அவலப்பட்டு சிதறி ஓடியது. திட்டமிட்டு சிறிலங்கா வான்படை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.
குண்டுத்தாக்குதலில் கிறிஸ்டி (வயது 16) எனும் மாணவனின் வாயில் குண்டுச்சிதறல் தாக்கியுள்ளதுடன் கனிஸ்டன், தனுசன் ஆகிய மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

வீடுகளிலிருந்து காயமடைந்த சுகுமார் ரதி (வயது 47), பத்மசீலன் (வயது 37), வீ.காண்டீபன் (வயது 29) ஆகியோர் கிளிநொச்சி நகரில் இயங்கிவரும் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐந்து பேர் பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி காரணமாக இராஜதந்திர அழுத்தங்களுக்கு அஞ்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொதுமக்கள் மீதான வான்தாக்குதலை இடைநிறுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு-எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிக்கை விடுத்ததன் மூலம் தான் முன்னர் விதித்திருந்த பதவி விலகல் காலக்கெடுவிலிருந்து விலகியதனையடுத்து-சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
puthinam.com
******

இலங்கைத் தமிழருக்காக குவியும் நிதி உதவிகள்! இன்று மதியம் வரை ரூ.26லட்சம் வரை நிதி உதவிகள்

இலங்கையில் நடைபெற்றுவரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் பல்வேறு தரப்பினர் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டார். மேலும் தனது சார்பில் 10லட்ச ரூபாயையும் வழங்கி நிதி உதவியை இன்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை செயலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியிடம் நிதி உதவி அளித்தனர். அந்த வகையில் இன்று மதியம் வரை ரூ.26லட்சம் வரை நிதி உதவிகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உணவு மற்றும் உடைகள் வழங்க விரும்புவோர் அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உரிய ரசீதினை பெற்றுள்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கைத்தமிழருக்காக நிதிகளை சேகரிக்காமல் தமிழக அரசே தனது சொந்தப்பணத்தில் நிதி உதவி அளித்திட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
kumudam.com
*****

** இயக்குனர்கள் சீமான், அமீர் ஜாமீன் மனு!

திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு தலையிடக்கோரி தமிழ்த்திரைப்படத்துறையினர் ராமேஸ்வரத்தில் நடத்திய கூட்டத்தில், உரையாற்றிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சீமான் மற்றும் அமீர் சார்பில் ராமநாதபுரம் விரைவு நீதி மன்றத்தில் இன்று காலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மாயாண்டி, வழக்கினை வருகிற 31ம்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான திரைப்படத்துறையினர் மதுரை மத்திய சிறையில் இயக்குனர்கள் சீமான்,மற்றும் அமீர் ஆகியோரை இன்று நேரில் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, இலங்கைத் தமிழருக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தங்களிடம் தெரிவித்ததாக கூறினார். பாரதிராஜாவுடன் இயக்குனர்கள் செல்வமணி, சேரன், பாலா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.
kumudam.com
****

*** இராஜிநாமா நாடகத்தை ஒட்டி புரிந்ததும், புரியாதவையும்.

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை ஒட்டிய விடயத்தில், காலத்தை இழுத்தடித்துத் தனது காரியத்தைச் சாமர்த்தியமாக நிறைவேற்றும் கொழும்பின் இராஜதந்திரத்துக்கு மீண்டும் ஒரு தடவை பலியாகியிருக்கின்றது புதுடில்லி.இம்முறை அதனோடு சேர்ந்து சென்னையும் கட்டையில் ஏறியிருப்பதுதான் புதிய விடயம்.

ஈழத் தமிழர்களுக்கு நியாயம் வேண்டி - அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் - தமிழகத்தில் ‘உரு’க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை - கிளர்ச்சியை - இவ்வளவு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் பண்ணிய கொழும்பின் ‘இராஜதந்திரம்’ வியப்புக்குரியதே.

எனினும், புதுடில்லியிலும் சென்னையிலும் அரசியல் சுயலாபக் கும்பல்களின் ‘வெட்கக்கேடான’ முறையில் அமையும் கையாள்கைகளுக்கு இந்த விவகாரம் உட்பட்டது என்பதால் இப்படியெல்லாம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் இருந்து வந்ததே என்பதும் மறைக்கப்பாலதல்ல.கடந்த முப்பத்தியைந்து ஆண்டுகளாக இலங்கை விவகாரத்தை புதுடில்லியும் சென்னையும் கையாண்டு வருகின்ற முறைமையை விளங்கப்படுத்துவதற்கு சிறிய கதை ஒன்றை ஒரு வாசகர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கருத்தாகக் குறிப்பிட்டிருந்தார்.காது கேட்காத இருவர் வழியில் எதிரெதிரே சந்தித்துக் கொண்டார்களாம். "குளிக்கப் போகின்றீர்களா?" - என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். அதற்கு அவர், "இல்லையில்லை. நான் குளிக்கப் போகிறேன்." - என்று பதிலளித்தாராம். அதற்கு முதலாமவர் "அப்படியா, நான் என்னவோ நீங்கள் குளிக்கப் போகின்றீர்களாக்கும் என்றல்லவா நினைத்தேன்!" எனக் கூறினாராம்.- இவ்வாறு ஒருவர் பேசுவதை மற்றவர் புரியாமல் உரையாடுகின்ற செவிடர்களின் பேச்சுப்போல இருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விடயம் தொடர்பான கொழும்பு - புதுடில்லிப் பேச்சுகளும் அதை யொட்டிய இழுபறிகளும்."இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது. அரசியல் தீர்வே ஒரே வழி. அதை முன்வையுங்கள்!" - என்று இந்தியா படித்துப் படித்துக் கூறுவதும் -"ஆமாம். அரசியல் தீர்வே வழி. அதற்கான திட்டத்தை வைப்போம்!" - என்று புதுடில்லிக்குக் கூறியவாறே, அமைதித் தீர்வு எத்தனத்தை அடியோடு கைவிட்டுவிட்டு புலி எதிர்ப்பு யுத்தத்தை முழுக் குரூர - கொடூர - முனைப்பில் கொழும்பு முன்னெடுப்பதும் -"முதலில் புலிகளைச் சம்ஹாரம் செய்தல். பின்னர் தீர்வு பற்றிப் பார்க்கலாம்." - என்று கொழும்பு அரசு தென்னிலங்கைக்குப் பகிரங்கமாகக் கூறியபடி தனது யுத்தத் திட்டத்தை வெளிவெளியாகத் தொடர்வதுமாகக் கட்டவிழும் விடயங்களைப் பார்க்கும்போது கொழும்பு - புதுடில்லிப் பேச்சும், கருத்துப் பரிமாற்றமும், தொடர்பாடல்களும் இரு செவிடர்கள் இடையே நடப்பவை போலத்தான் தோன்றுகின்றன.

பேச்சு மூலமான அமைதித் தீர்வை புதுடில்லி வற்புறுத்துவதும், ‘ஆமாம்’ என்று தலையாட்டியபடி தனது யுத்த முனைப்பைக் கொழும்பு தொடர்வதும், அதைத் தடுக்கத் திராணியில்லாத இப்பிராந்திய வல்லாதிக்க (?) நாடான இந்தியா, அந்தப் போர்முனைப்புப் போக்குக்கு இராணுவ ரீதியிலான உதவிகளை எல்லாம் மறுபக்கத்தில் வாரி வழங்கிக்கொண்டு வாளாவிருப்பதுமாக இடம்பெறுகின்ற சம்பவங்களின் சூட்சுமமும் அதற்குள் புதைந்து கிடக்கும் அர்த்தங்களும் ‘காது கேட்காத செவிடர்கள் போல’ நடிக்கின்ற புதுடில்லி, சென்னை அரசியல் தலைவர்களுக்கு விளங்குகின்றனவோ என்னவோ தெரியவில்லை.

ஆனால் இப்பிரச்சினையில் அல்லல்பட்டு, அவலப்படுகின்ற அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் புரியவில்லை என்பதுதான் நிஜம்.இலங்கையில் கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சினைக்காகத் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வெழுச்சியை வெறும் எண்ணூறு தொன் நிவாரணப் பொருட்களை வன்னி மக்களுக்கு இலங்கை அரசு ஊடாக அனுப்புவது என்ற தீர்மானத்தின் மூலம் அடக்கி விடத் தெரிந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தந்திரத்தின் ஆழமும் ஈழத் தமிழர்களுக்குப் புரியவேயில்லை.

ஈழத்தில் போரை நிறுத்தச் செய்வதற்குக் காத்திரமான நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு வார காலத்துக்குள் தமிழக எம்.பிக்கள் அனைவரும் கூண்டோடு இராஜிநாமா என்ற அறிக்கை - அறிவிப்பு - வெளியான பின்னர், அந்தக் காலக்கெடு முடிவடைய இரண்டு நாட்கள் இருக்கையிலேயே, - புதுடில்லி அரசுத் தலைமையின் வெறும் வாய்ச்சொல் செய்தி ஒன்றை வைத்துக் கொண்டே, அந்த முன்னைய அறிவிப்பைக் குப்பையில் தூக்கி எறியும் விதத்தில் ‘இராஜிநாமா அறிவிப்பு நாடகத்தின்’ வாபஸ் கட்டம் அரங்கேறியது எங்ஙனம் என்பதும் ஈழத் தமிழர்களுக்குப் புரியவில்லை.இவ்வாறு புதுடில்லி, சென்னை, கொழும்பு ஆகிய முத்தரப்புகளும் கூட்டுச் சேர்ந்து அரங்கேற்றிய இந்த நாடகத்தை ஒட்டி ஈழத் தமிழர்களுக்குப் பல விடயங்கள் புரியாமல் போனாலும் ஒரேயொரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.அது - நம் கையே நமக்கு உதவி. பிறரை நம்பிப் புண்ணியமில்லை - என்பதுதான்.
*****

Sunday 26 October 2008

*** பரிதியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக பிரான்சில் தமிழ் மக்கள் போராட்டம்!

பிரெஞ்சு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிpழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் திரு.பரிதி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக இன்று பரிசில் தமிழ் மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று மதியம் இரண்டு மணியளவில் பரிஸ் ரீப்பப்பிளிக் மையத்தில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் இந்த ஆதரவுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.


இப்போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்டு, சிறீலங்காவின் இன அழிப்புப் போரையும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மிறல்களையும் அம்பலப்படுத்தியிருந்தனர்.
_


திரு பரிதி அவர்கள் நேற்று 25ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இன்று 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை சுமார் 36 மணித்தியாலங்கள் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கை அரசால் மனித உரிமைகள் மீறப்படுதல்,இரண்டு இலட்சத்துக்கும் கூடுதலான மக்கள் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை அம்பலப்படுத்துவது,அரசசார்பற்ற நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றி மக்கள் மீது எறிகணை வீச்சுக்களையும் விமானத் தாக்குதல்களையும் நடத்துவதை நிறுத்துதல், தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதால் அவர்கள் மீதான ஐரோப்பிய நாடுகளின் தடை நீக்கப்படுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
_




திரு.பரிதி அவர்கள் கடந்த 01.04.2007ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு காவல்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவருடன் இன்னும் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் மேலும் ஒருவர் நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sankathi.com
*****

*** ஈழத் தமிழ் மக்களுக்காக ஒன்றுபடுவீ்ர் தமிழகத்தீரே!

ஈழத்தமிழர்களின் பிரச்சினையால் கொதித்துப் போய் இருக்கின்றது தாய்த்தமிழகம். தமிழகத்தின் எழுச்சியும் கிளர்ச்சியும் தங்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.அந்த எதிர்பார்ப்பைப் பயனற்றதாக்கிவிடும் செயற் பாட்டில் தமிழகத்தின் ஈழ ஆதரவுச்சக்திகள் ஈடுபட்டு விடக்கூடாது என்பதுதான் ஈழத்தமிழர்களின் இன்றைய - பிரதான - கோரிக்கையாகும்.

தமிழக அரசியல் கட்சிகள் இடையேயான கொள் ளைக் கோட்பாட்டுப் பிரச்சினைகளை, அரசியல் போட்டா போட்டிகளை, உள்வீட்டுக் கழுத்தறுப்புக்களை பதம் பார்க்கும் பிரச்சினையாக ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமை தொடர்பான இந்தப் போராட்டத்தைப் பார்க்கக் கூடாது என்பதுதான் தமிழகக் கட்சிகளுக்கு ஈழத்தமிழர்களின் பணிவான வேண்டுகோளாகும்.ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிட்டுவதற்காக உயிரும் கொடுப்போம், சிறையும் செல்வோம் என்றெல்லாம் கூறி, ஈகையின் உச்சத்தில் நிற்கும் தமிழகத் தலைவர்களின் - பிரமுகர்களின் - தியாகம் நம்நெஞ்சைத் தொடுகின்றது; உள்ளத்தை உருக்குகின்றது.ஆனால் அந்த ஈகையும், தியாகமும், உணர்வெழுச் சியுடன் கூடிய உற்சாகமும் மூலநோக்கத்துக்கு கேடு பண்ணுபவையாக வந்து விடக்கூடாதே என்பதே நமது பிரதான கவலையாகும்.

ஆனால், ஈழத் தமிழரின் இனப்பிரச்சினை விவ காரத்தில் நமது நியாயமான சிரத்தையை வெளிப்படுத் துகின்றோம் என்று கூறிக்கொண்டு - தமிழகக் கட்சிகள் தங்களுக்குள் ஒன்றுபட்டு, ஒரே இலக்கில் செயற்படு வதை விட்டு - இந்த விவகாரத்திலும் தமது சொந்த அரசியல் குரோதங்களையும் குளறுபடிகளையும், காட்ட முற்படுமானால் அது ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய் வதாக முடியாது. பாதிப்பையே ஏற்படுத்தும்.ஈழத் தமிழருக்கு ஆதரவான உணர்வெழுச்சி இன்று தமிழகத்தில் உச்சக்கட்டத்தை - ‘கிளைமாக்ஸ்’ கட் டத்தை- எட்டியிருக்கின்றது. அதைக்கண்டு புதுடில்லி மத்திய ஆட்சிப்பீடமே ஆடிப்போயிருக்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் இந்திய மத்திய அரசை இந்த உணர்வெழுச்சி தள்ளிவிட்டிருக்கின்றது.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்கள் வயது வேறுபாடு, ஆண்-பெண் வேறுபாடு போன் றவை எல்லாம் துறந்து மனித சங்கிலிப் போராட் டத்தில் இணைந்து, ஈழத்தமிழர்களுக்கான தாங்களின் ஆதரவு எழுச் சியை ஒன்றுபட்டு வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு தமிழகத்தில் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை எட்டியிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சியை ‘அன்ரி கிளைமாக்ஸ்’ என்ற எதிர் நிலைக்குத் தள்ளிக் கெடுத்துவிட இயலக்கூடாது எனத் தீவிர, ஈழத்தமிழர் ஆதரவுப் போக் குடைய சக்திகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் கட்சிகளிடையே நிலவும் அரசியல் போட்டா போட்டிகளுக்கு ஈழத்தமிழர் விவகாரத்தையும் தளமாக்க முயலாதீர்கள் என்பதுதான் தமிழகக் கட்சி களுக்கு ஈழத் தமிழர்கள் விடுக்கும் பணிவான வேண்டு கோள் ஆகும். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியா நேரடியாக ஆதரவளிக்காமல் பின்னடிப்பதற்கு இந்தியத்தரப்பில் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப் பட்டாலும் அதில் பிரதானமானது ஒன்று.இலங்கையில் பிரிவினைக்கு இடமளிப்பதால் அது இந்தியாவிலும்-குறிப்பாகத் தென்னிந்தியாவிலும்- பிரிவினைக் கோரிக்கைக்கு வலுச்சேர்த்துவிடும் என்பதே புதுடில்லியின் பிரதான அம்சமாகும். இது வெளிப்படையான விவகாரமுமாகும்.

அப்படி இருக்கையில் - ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவும் உத்வேகமும் அளிக்கின்றோம் என்று கூறிக் கொண்டு - அந்த விவகாரத்தை ஒட்டி, இந்தியாவிலும் ‘தமிழ் நாடு’ தனிநாடாகும் என்று எச்சரிக்கை விடுத்து, அங்கும் பிரிவினைப் போக்கில் குரல் எழுப்புவது அல்லது பேசுவது, உண்மையில் ஈழத்தமிழருக்கு ஆதரவளிக் கும் செயற்பாடே அல்ல. அது, தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போடுவது போல, ஈழத்தமிழரின் விடுதலைப் போராட் டத் துக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதாக நினைத்துக் கொண்டு, அதற்கு வேட்டு வைக்கும் செயலாகவே அமைந் துவிடும். ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தின் நியா யத்தைப் புதுடில்லி நிராகரித்தும் புறம் ஒதுக்கவே அது வழி செய்யும்.

ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்வதாக நினைத் துக் கொண்டு, அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய போக்கை தீவிர ஈழ ஆதரவுசக்திகள் கைவிட வேண்டும். களப்புறச் சூழ்நிலைகள் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு தந்திரோபாய உத்தி யோடு நடந்து கொள்ள அவை முன்வர வேண்டும்.வெறும் அரசியல் உணர்ச்சிக் கோஷங்களைக் கை விட்டு அவற்றைப் பயனுள்ள வடிவங்களில் ஈழத் தமிழருக்கு ஆதரவான வலுவாக மாற்ற அவை எத்தனிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையும் அவசியமுமாகும்.ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழகத்தின் ஐக்கியமும் ஒன்றுபட்ட எழுச்சியுமே ஈழத்தமிழருக்கு விடிவைத் தேடித்தரும்.
*****

எவரை எவர் வெல்லுவாரோ?

____________<<விதுரன்>>
வன்னிப்போர் நிறுத்தப்படாது. அதனை நிறுத்த இலங்கை அரசு தயாரில்லையென்பதுடன் அதனை நிறுத்துமாறு கோர இந்திய அரசும் தயாரில்லை. தமிழகத்திலிருந்து வரும் பாரிய அழுத்தங்களை விட இலங்கை அரசுடன் நட்புறவைப் பேணவே இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டுவதால், வன்னிப் போரை தொடருமாறு இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆசி கூறியுள்ளது. அதை விட இலங்கைப் படையினருக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கவும் தமிழகத்திலிருந்து வரும் அழுத் தங்களால் இலங்கை அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுதைத் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசு தயாராகிவிட்டது.

வன்னிப்போரில் மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாக்கி வருவதாக இலங்கை அரசு கூறுவதை இந்திய அரசும் கூறமுற்படுகிறது.
வன்னியில் மக்களுக்கு எதுவித இழப்புகளும் ஏற்படாதவாறு யுத்தத்தை தொடருமாறு இந்திய அரசு ஆலோசனை கூறியுள்ளது. புலிகளுக்கெதிரான போர் பயங்க ரவாதத்திற்கெதிரான போரெனச் சித்தரிக்க முயலும் இந்திய அரசுக்கு, ஈழத்தமிழர் மீதான அக்கறையையும் அதனால் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் உணர்வலைகளையும் விட இலங்கை அரசின் நட்பை (பிடியை) இழந்து விடக் கூடாதென்பதில் அதிகளவு அக்கறையுள்ளது.

இலங்கையில் போரை நிறுத்து வதற்கு தமிழக முதலமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சிகளும் வழங்கிய இருவார கால அவகாசத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. இலங்கையில் புலிகளுக்கெதிரான போர் தொடர வேண்டுமென்றும் அந்த நாட்டுக்குத் தேவையான போர்த் தளபாடங்கள் தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். அதேநேரம் இலங்கைப் படையினருக்கு இந்தியப் படையினர் நேரடியாக வழங்கும் உதவிகளை நிறுத்தவும் இந்தியா மறுத்துள்ளது.

சார்க் மாநாட்டுக்கு முன்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.சிங் ஆகியோர் கொழும்புக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். சார்க் மாநாட்டுக்காக கொழும்புக்கு வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக் குறித்து ஆராயவே அவர்கள் இங்கு வருகை தந்ததாக வெளியில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இலங்கை வந்த இந்தக் குழுவோ, புலிகளுடனான போரில் இலங்கைக்கு எப்படி இந்தியாவால் உதவ முடியுமென்பது குறித்து ஆராயவே வந்திருந்தது. கொழும்பில் உயர் மட்டச் சந் திப்புகளை நடத்திய இந்தக் குழு, இலங்கையின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து விவாதித்தது. புலிகளுடனான போரில் மற்ற நாடுகளின் உதவியை நாடாவிட்டால் இலங்கையின் பாது காப்புத் தேவைகளை தாங்கள் முழுமையாக நிறைவேற்றுவதாக இந்தியா உறுதியளித்தது.

ஆனால் இந்தப் போருக்கு பாகிஸ்தான், சீனா, ஈரான் போன்ற நாடுகள் மிகத் தாராளமாக இராணுவ உதவிகளை வழங்கிவந்தன. பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் வீதம் இலங்கைப் படையினருக்குத் தேவையான போர்த் தளபாடங்களை அனுப்புவதாக எது வித நிபந்தனையுமின்றி பாகிஸ்தான் உறுதியளித்தது.

அது போன்ற உறுதி மொழிகளை சீனாவும் ஈரானும் வழங் கியிருந்தன. புலிகளுக்கெதிரான போரில் தங் கள் கை நன்கு ஓங்கியிருப்பதால் இந்தப் போரில் இந்தியாவின் நிபந்தனையுடனான உதவிகளைப் பெறுவதை விட பாகிஸ்தான், சீனா, ஈரானிடமிருந்து நிபந்தனையற்ற உதவிகளைப் பெறுவதையே இலங்கை அரசு விரும்பியதுடன் இந்தியக் குழுவினரின் நிபந்தனை களை ஏற்கவும் இலங்கை அரசு மறுத்து விட்டது.


புலிகளுக்கெதிரான போரைச் சாட்டாக வைத்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடு கள் இலங்கையில் ஆதிக்கம் செலுத் துவதை விரும்பாத இந்தியா, இந்தப் போரை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கைக்கு ஆயுதங் களையும் வழங்கி அதன் மூலம் இலங்கையில் சீனா மற்றும் பாகிஸ் தான் போன்ற நாடுகள் செல்வாக்குச் செலுத்துவதையும் தடுத்து விடலாமென முற்பட்டது. எனினும் இந்தியாவின் இந்த எண்ணத்திற்கு இடமளிக்க இலங்கை மறுத்துவிட்டது.


இதனால் ஏமாற்றமடைந்த இந்தி யாவுக்கு தற்போதைய நிலைமை வாய்ப்பாகிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் இந்திய அரசுக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைப் அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த முற்படுகிறது. இலங்கை போரை பயன்படுத்தி அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வரமுடியாதிருந்த இந்தியாவுக்கு, தற்போது அதே போரைப் பயன் படுத்தி இலங்கை அரசை தனது பிடிக்குள் வைத்திருக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இதனால் இலங்கையை பகைக்காதும் இலங்கையில் நடைபெறும் போரைப் பயன்படுத்தியும் நகர்த்த இந்தியா முற்படுகிறது. ஈழப்போரில் விடுதலை புலிகளை ஆதரிக்க முடியாததொரு நிலை இந்திய அரசுக்குள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றதால், காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய அரசால் புலிகளுக்கு ஆதரவு வழங்க முடியாது. அதேநேரம் இந்தப் போர் மூலம் புலிகளை மிகவும் பலவீனப்படுத்தி அவர்களை தங்கள் காலடியில் விழவைக்க வேண்டுமென்பதும் காங்கிரசுக்கு விசுவாசமான இந்திய கொள்கை வகுப்பாளர்களது எண்ணம்.
அதுவும், இலங்கை அரசை தங்கள் பிடிக்குள் வைத்துக் கொண்டே இவற்றையெல்லாம் செய்ய வேண்டு மென்பதும் அவர்களது நீண்ட நாள் விருப்பம். ஆனாலும் புலிகள் எப்படி தங்களுக்கு பகையாளிகளோ அதுபோல் இலங்கை அரசும் தங் களை ஒரு பொருட்டாக மதிக்காது இந்தப்போரில் புலிகளைத் தோற் கடிப்பதையும் இந்திய அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
-
புலிகளே இன்று களத்தில் நின்று போராடுகிறார்கள். புலி களையே ஈழத்தமிழ் மக்கள் ஏகப் பிரதிநிதிகளாக்கியுள்ளனர். புலிகளுக்கு மாற்றாக ஈழத் தமி ழர்களின் ஆதரவைப் பெற்ற அமைப் புகள் எதுவுமில்லை. இதனால் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இலங் கையில் தங்களுக்குச் சார்பான அமைப்புக்களை உருவாக்கி அதன் மூலம் ஈழத்தமிழர்களிடையே செல்வாக்குச் செலுத்தி அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் முடியாத நிலையில் இந்திய மத்திய அரசு இருக்கும் போதுதான் தற்போது ஈழத் தமிழர் விடயத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்த இந்திய அரசு முயல்கிறது.

இந்திய மத்திய அரசு விரும்பாத புலிகள் இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவதை எந்தளவுக்கு இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அந்தளவுக்கு தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத இலங்கை அரசு இந்த யுத்தத்தில் வெற்றிபெறுவதையும் இந்தியாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், புலிகள் மீது எந்தவிதத்திலும் செல்வாக்குச் செலுத்தவோ அல்லது அழுத்தம் கொடுத்து அடிபணியவோ வைக்க முடியாதென்ற நிலையில் இலங்கை அரசை ராஜதந்திர ரீதியில் அல்லது இராணுவ ரீதியில் மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து அடிபணிய வைத்துவிட்டு அதன் மூலம் புலி களைத் தோற்கடித்து மீண்டும் இலங்கை விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்த இந்திய அரசு முற்பட்டு வந்தது. இதனொரு கட்டமாகவே, இலங்கையின் பாதுகாப்புக்குத் தேவையான உதவிகளுக்கு வேறு நாடு களை நாடாவிட்டால் இலங்கையின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை வழங்கத் தாங்கள் தயாரென இந்தியா கொழும்புக்கு வந்து வற்புறுத்தியது மட்டுமல்லாது மிரட்டி விட்டும் சென்றது.

இதனால் கடும் சீற்றமும் எரிச் சலுமடைந்த இலங்கை அரசு, ?சார்க்? மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் வந்தபோது அவரது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு பாடம்படிப்பித்தது.
அவரை நீண்ட தூரம் நடக்கவைத்து தனது எதிர்ப்பை இந்த விதத்தில் காட்டிக் கொண்டது. இதனை அவர் மட்டுமல்லாது இந்திய அரசும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா அல்லது புரிந்தும் புரியாதது போலிருக்கிறார்களா எனத் தெரியாத நிலையில் , ஈழத் தமிழருக்காக தமிழகம் கொதித்தெழுந்திருப்பது இலங்கை விடயத்தில் தனது பிடியை இறுக்க இந்தியாவுக்கு மீண்டுமொரு முறை வாய்ப்பையேற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழருக்காக தமிழ கத்தில் எதிர்க்கட்சிகள் கிளர்ந் தெழுந்திருந்தால் தமிழக அரசுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி மத்திய அரசின் உதவியை நாடாது இந்தப் போராட்டத்திற்கு இலங்கை அரசால் முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் தமிழகத்தின் ஆளும் கட்சியே இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவதால் இலங்கை அரசால் தமிழக அரசுடன் தொடர்புகளைப் பேணமுடியாது போய்விட்டது.


இந்திய மத்திய அரசிடம் செல்வதை விட வேறு வழியில்லை. இதனால் இந்திய மத்திய அரசினூடாக தமிழக அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து நிலைமையை தணிக்க வேண்டிய நிலைமை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய இந்தப் பிரச்சினையால் தி.மு.க.எம்.பிக்களும் ஏனைய தமிழக எம்.பிக்களும் (காங்கிரஸ் தவிர்ந்த) ராஜிநாமா செய்து அதன் மூலம் இந்திய மத்திய அரசு கவிழ்ந்துவிடக் கூடாதென்ற அச்சமும் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.


ஆரம்பத்தில் ஈழத்தமிழருக்காக குரல்கொடுத்து அவர்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமெனக் கோஷமெழுப்பிய அ.தி.மு.க.பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதாவின் மனதை சில ஆலோசகர் மாற்றிவிடவே அவர் தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாக நினைத்து ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார். இலங்கையில் இரு வாரத்திற்குள் போர் நிறுத்தப்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜிநாமா செய்து விடுவார்களென, முதல்வர் கருணாநிதி சர்வகட்சித் தீர்மானத்தை வெளியிட்ட பின்னரே ஜெயலலிதாவின் போக்கில் மாற்றமேற்பட்டது.


எப்படியாவது தமிழக எம்.பிக்கள் அனைவரும் ராஜிநாமா செய்தால் மத்திய அரசு நிச்சயம் கவிழும், அதன் மூலம் அடுத்த தேர்தலில் (2009 மார்ச்) காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்குமிடையில் கூட்டணி ஏற்படாது, இதனைப் பயன்படுத்தி காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து விடலாமென ஜெயலலிதா கணக்குப் போடுகிறார். அதேநேரம் தி.மு.க மற்றும் தமிழக எம்.பிக்கள் ராஜிநாமா செய்து அதனால் மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் பிரசாரமே ஈழத்தமிழர் விவகாரமாகத்தான் இருக்கும்.


தற்போதைய நிலையில் ஈழத்தமிழர் விவகாரத்தை கருணாநிதி அரசியலுக்கு பயன்படுத்துகிறாரோ இல்லையோ தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள உணர்வலையை இனிக் கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டது. ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தெறியவும் இலங்கையில் தமிழீழம் மலர்வதுடன் இந்தியாவில் தனித் தமிழ்நாடு உருவாகுமெனக் குரல்கொடுக்கவும் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை தாக்கு மளவுக்கு நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.


தமிழகத்தையே ஆட்டிப்படைப்பது அரசியலும் சினிமாவும் தான். இந்த இரண்டும் இன்று ஒன்றுடன் ஒன்று இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்தை உச்ச நிலைக்குக் கொண்டு சென்று விட்டதால் இனி ஈழத்தமிழர் போரா ட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் எவருமே குளிர்காய முடியாது.


இந்த நிலையில் வன்னியில் போரைத் தீவிரப்படுத்தும் இலங்கை அரசு தமிழக உணர்வலைகளை இந்திய மத்திய அரசினூடாக அடக்கிவிட முனைகிறது. அதற்காக இலங்கையிலும் தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கெதிரான உணர்வும் ஈழப்போராட்டத்திற்கு கடும் எதிர்ப்புமிருப்பதுபோல் காண் பிக்க முற்படுகின்றது. இதனொரு கட்டமாக யாழ்.குடாநாட்டில் கடந்த வியாழக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை பெரும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதேநேரம் இந்தியாவின் முக்கிய தலைவர்களை இலங்கைக்கு அழை த்து நிலைமைகள் குறித்து சகல தரப் பினர் மூலமும் விளக்க இலங்கை அரசு பெரிதும் முற்பட்டது.


கடந்த 19ஆம் திகதி இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந் திய வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டி ருந்தார்.
இந்தியாவிலிருந்து எவரையாவது இங்கு வரவழைத்து அவருக்கு ?குழையடித்து? விடலாமென்றும் இந்தியாவுக்கு எவரையும் அனுப் பக்கூடாதெனவும் இலங்கை தரப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவோ, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையை மடக்க முனைகிறது. முதலில் உங்கள் பிரதிநிதிகளை அனுப்புங்கள். பின்னர் நாங்கள் எவரையாவது அனுப்புகிறோமெனக் கூறிவிட்டது.


தற்போதைய நிலையில் இந்திய அரசை திருப்திப் படுத்தியே காரியம் சாதிக்க வேண்டுமென்பதால் இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ தலைமையில் புதுடில்லி சென்றுள்ளது.



அங்கு இந்திய அரசு இலங்கை மீதான பிடியை இறுக்க முயலுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழக நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இந்திய அரசை சமாளித்து விட்டு வரவே இலங்கை தரப்பும் முற்படும். கடும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா பாதகமான சில முடிவுகளை எடுத்துவிடலாமென்ற அச்சமும் இலங்கைத் தரப்பில் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இலங் கையை மடக்க இந்தியாவும், தமி ழக அரசையும் இந்தியாவையும் மட க்க இலங்கை அரசும் காய்களை நகர்த்தி வருகையில் தமிழகக் கட்சிகள் விதித்த, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற காலக்கெடு முடியப்போகிறது.


அடுத்த ஓரிரு மாதங்களில் பொதுத் தேர்தலென்பதால் காங்கிரஸ் அரசு தனது கூட்டணிக் கட்சியின் மிரட்டலை அவ்வளவாகப் பொருட் படுத்தவில்லை. கருணாநிதி சொல் வது போல் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் இலங்கையில் போரை நிறுத்த இந்தியா முன் வரவில்லையென்பதுடன், இலங் கைப் படையினருக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் கருணாநிதி எடுக்கப்போகும் அடுத்த முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
-
வன்னிப் போர்


இது இவ்வாறிருக்க வன்னியில் போர் தீவிரமடைந்துள்ளது. கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முயற்சியை படையினர் தீவிரப்ப டுத்தியுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட் டுள்ள உணர்வலைகள் மூலம் இந்திய மத்திய அரசு எதாவது முடிவை எடுத்துவிட முன்னர் கிளிநொச்சியை கைப்பற்றிவிட வேண்டுமென்று இலங்கைஅரசு அவசரப்படுகிறது. ஆனால், வன்னிக் களமுனையில் புலிகளின் எதிர்த் தாக்குதலும் மோசமான காலநிலையும் அங்கு படைநகர்வைப் பெரிதும் பாதித்து வருகிறது.


வன்னியில் பெய்துவரும் கடும் மழை படையினருக்கான விநியோகங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரம் குடாநாட்டுக்கான கடல் வழிவிநியோகத்திற்கும் புலிகளால் பலத்த அச்சுறுத்தலேற்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு தெற்கேயும் தென்மேற்கேயும் கடும் சமர் நடை பெறும் பகுதிகள் பெரும் வயல் வெளிகளென்பதால் கடும் மழையால் படையினரின் யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் மட்டுமல்லாது விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் சாதாரண வாகனங்கள் கூட பயணம் செய்ய முடியாத நிலைமையேற்பட்டுள்ளது.


முன்னேற முயலும் படையினர் பதுங்குழிகளையோ, காப்பரண்க ளையோ அகழிகளையோ அமைத்து பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. அனைத்துப் பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

முன் னேற முயலும் படையினர் வயல் வெளிகளுக்குள் கால் புதைய அடு த்த அடிவைக்க முடியாது பலத்த சிர மங்களை எதிர்நோக்குகின்றனர். மன்னார் - பூநகரி வீதியில் (ஏ-32) நாச்சிக்குடா முதல் அதன் கிழக்கே ஏ -9 வீதி வரை பாரிய மண் அணைகளை அமைத்து படையினரின் பாரிய முன்னகர்வு முயற்சிகளையெல்லாம் முறியடித்து வந்த புலிகள், தற்போது அடை மழை பெய்கையில் அந்தப் பாரிய மண் அணையை குறிப்பிட்ட பகுதியில் உடைத்துக் கொண்டு முன்னேற படையினரை அனுமதித்துள்ளனர். நாச்சிக்குடாவிலிருந்து ஏ-9 வீதிப் பக்கமாக, வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்குமிடையிலுள்ள மண் அணையை உடைத்துக் கொண்டு முன்னேறிய படையினர் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னேறி மணியர்குளம் பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.
-
நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையி லேயே படையினர் இந்த மண் அணையை உடைத்துள்ளனர். இதன் மூலம் படையினர் கிளி நொச்சியிலிருந்து தென்மேற்கே 15 முதல் 20 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளனர். அதே நேரம் அக்கராயன்குளத்திற்கும் ஏ- 9 வீதியில் தெருமுறிகண்டிக்குமிடையிலான மண் அணையை புலிகள் பாதுகாத்து வருகின்றனர்.
-
இந்த மண் அணையை உடைக்க படையினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மண் அணையை உடைத்தால் படையினர் கிளிநொச்சியிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்கும் குறைவான தூரத்திலேயே நிற்பர். படையினரை அடை மழைக்குள் ளும் சேறு மற்றும் சகதிக்குள்ளும் இழுத்துத் தாக்குவதே புலிகளின் திட்டமாகும். இதனால் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தி த்து வருகின்றனர். கடந்த இருவாரத் தில் இந்த மோதல்களில் அதிக எண்ணிக்கையான படையினர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கா னோர் படுகாயமடைந்துமுள்ளனர்.
-
இதுதொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையமும் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது வன்னிப் போர்முனை இழப்புக்களை வெளியிடுவதை படைத்தரப்பு நிறுத் தியுள்ளது. இழப்புக்கள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியதே இதற்குக் காரணமாகும். இதனால் தங்களுக்கேற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை மட்டு மல்லாது புலிகளுக்கேற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்களையும் வெளியிட முடியாதளவிற்கு, இதுவரை புலிகளின் இழப்புக்கள் குறித்து படையினர் வெளியிட்டுவந்த தகவல்கள் மிக அதிகளவில் மிகைப்படுத்தப்பட்டு வந்துள்ளது தெளிவாகிறது.
-
இதேநேரம் நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரை (நாச்சிக்குடா - வன்னேரி - அக்கராயன்-புத்துவெட்டுவான்) தாங்கள் நடத்திய கடும் பதில் தாக்குதலில் 47 படையினர் கொல்லப்பட்டும் 87 பேர் காயமடைந்துமுள்ளதாக புலிகள் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர். மண் அணைகளைத் தாண்டி பரந்த வயல்வெளிகளுக்குள் கொட்டும் மழையில் இரவு - பகலாக திறந்த வெளியில் நிற்கும் படையினரை புலிகள் இலகுவாக இலக்கு வைக் கும் நிலைமையேற்பட்டுள்ளது. தற் போதைய கால நிலையை பயன்படுத்தி புலிகள் எவ்வேளை யிலும் தங்கள் மீது பாரிய தாக்குதலை ஆரம்பிக்கலாம், கரும்புலிகள் பாயலாமென்ற எண்ணம் படையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
-
மழைபெய்வதற்கு முன் மண் அணையை உடைத்துக் கொண்டும் வயல்வெளிகளைத் தாண்டியும் கிளிநொச்சிக்குச் சென்றிருக்கலாமென்று படையினர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அந்தளவிற்கு அப்போது தங்கள் வசம் சகல வசதிகளுமிருந்ததாக கருதும் படையினர், தற்போது புலிகள் அடைமழைக்குள் தங்களை முன்னேற விட்டு வலிந்து இழுத்துத் தாக்கத் தொடங்கியுள்ளதை உணர்கின்றனர்.
-
இதனால் அடுத்து வரும் நாட்களில் களநிலை மோசமடையப் போகிறது. மழை கொட்டுவதால், தற்போது கடும் சமர் நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள நான்கிற்கும் மேற்பட்ட பாரிய குளங்கள் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்தால் பரந்துவிரிந்த வயல்வெளிகளில் நிற்கும் படையினரால் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள முடியாது போகலாம். விரைந்து
முன்னேறிச் செல்லக்கூடிய மார்க்கமுமில்லை. முன்னேறிச் சென்றுள்ள படையினருக்கு விநியோகங்களைக்கூட மேற் கொள்ள முடியாதிருப்பதால் வன்னிக் களமுனை மிகவும் மோசமடைந்துள்ளது. கனரக ஆயு தங்களைக்கூட பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இந்தக் களமுனையில் நிறைந்த அனுபவமுள்ளதாலும் முன்னேறும் படையினரை தூர இருந்தே எதிர்கொள்வதாலும் நிலை மைக்கேற்ப தங்கள் விநியோகப் பாதைகளை அமைத்திருப்பதாலும் புலிகள் இந்தக் களமுனையில் தாக்குப்பிடிக்கின்றனர்.
வடக்கில் கடும் மழை பெய்து வருகையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் புலிகள் இரு விநி யோகக் கப்பல்கள் மீது கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர். எங்கிருந்து வந்து இந்தக் கரும்புலித் தாக்குதல் நடைபெற்றதென அறிய முடியாதநிலையேற்பட்டுள்ளது.
-
வடமராட்சி கிழக்கில் தங்கள் கட்டு ப்பாட்டுப் பகுதியிலிருந்து புலிகளின் மிதவைப் படகுகள் வந்திருந்தால் மணற்காடு பகுதியிலுள்ள கடற்படை முகாமின் ராடரில் அவை தென் பட்டிருக்கும். ஆனால், அந்த ராடரில் எதுவுமே தெரியாததால் கடற் கரும்புலிகள் வலிவடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஊடுருவி அங்கிருந்து சிறிய படகுகளில் (கட்டுமரம் போன்றவை) வந்து இந்தத் தாக்குதலை நடத்தினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விநியோகக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதல் மூலம் புலிகள் ஒரு செய்தியைக் கூறியுள்ளதாகவே கருதப்படுகிறது.
-
வடக்கில் அடை மழை பெய்கையில் கடல் வழி விநியோகத்திற்கு புலிகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பார்களென அஞ்சப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டிய நிலை கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது. கடற்புலிகள் தங்கள் நீரடி நீச்சல் பிரிவின் நடவடிக்கைகளை அதிகரித்து வருகையில் தற்போதைய காலநிலையில் இவ்வாறான தாக்குதலை தடுக்க வேண்டிய நிலை கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
*****

Saturday 25 October 2008

தக்க தருணத்தில் பலத்தை நிரூபித்து இழந்த நிலங்களை புலிகள் மீட்பர்! தமிழீழ அரசியல் பொறுப்பாளர் நடேசன் பேட்டி

"விடுதலைப்புலிகளின் பலத்தின் பெரும்பகுதியை தாங்கள் அழித்துவிட்டார்கள் என சிறீலங்கா இராணுவத்தினர் சொல்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. சரியான தருணத்தில் நாங்கள் எமது படைபலத்தை நிரூபித்து இழந்த நிலைகளை மீட்டெடுப்போம்." என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். ‘ரைம்ஸ் நெவ' என்ற தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

"எமது பலத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டதாகவும், கிளிநொச்சி விரைவில் கைப்பற்றப்பட்டுவிடும் என்றும் இராணுவம் சொல்கின்றது. ஆனால், தக்கதருணத்தில் எமது இராணுவ பலத்தை நிரூபித்து தக்க பாடத்தைக் கட்டாயமாக புகட்டுவோம்; இழந்த எமது நிலைகளை மீட்டெடுப்போம்." என்று அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் கூறினார்.

இந்தவிடயத்தில் சிறீலங்கா அரசம் இராணுவமும் கடந்தகாலங்களில் வெளியிட்ட கருத்துகளையும், அதனைத் தொடர்ந்து நிலைமைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"புலிகளை அழித்துவிட்டோம் என்று சிறீலங்கா அரசு கூறிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகள் புதிய பலத்துடன் திருப்பித் தாக்கி இராணுவத்துக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியமை அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்" என்று நடேசன் தெரிவித்தார். "கடந்தகாலக் கருத்துவேறுபாடுகள், பகைமைகள் மறக்கப்படவேண்டும். இந்தியா இனிமேலும் விடுதலைப் புலிகளை எதிரிகளாகக் கருதக்கூடாது" என்றும் நடேசன் கூறினார்.
_
இந்திய அரசுக்கும் கொங்கிரஸ் கட்சியின் தலைவிக்கும் ஏதாவது செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இந்தத் தருணத்தில் இந்தியாவினதும் அந்த நாட்டு மக்களினதும் உண்மை நண்பர்கள் யார் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள நடேசன், தமது அமைப்பின் மீதான தடையை நீக்கி இந்தியா தம்மை அங்கீகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
sankathi
****

*** அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகள் நமக்கு முழு மன நிறைவைத் தரவில்லை - கருணாநிதி

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் நாம் கொண்ட நம்பிக்கை வீண போகவில்லை. அதே நேரத்தில் அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகள் நமக்கு முழு மன நிறைவைத் தரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை தமிழர்களை காக்கவும் அவர்தம் உரிமைகளை அறவழியில், அமைதி வழியில், அரசியல்ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகின்ற வழிமுறைகளை பின்பற்றி திமுக முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கு ஒத்து வருகின்ற கட்சிகள், இலங்கை தமிழர்பால் பரிவு கொண்ட இயக்கங்கள், அவற்றின் தலைவர்கள், முன்னோடிகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு, அவர்களும் ஈடுபாடு கொண்டு நடத்திய பல போராட்டங்களையும் செய்த தியாகங்களையும் உலகம் முழுதும் இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் தமிழர் தம் தூய நெஞ்சங்கள் அறியும்.

படுகொலைகளாலும், பட்டினியாலும் அங்கு தமிழ் மக்கள் மாண்டு மடிந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவம் பொழிகின்ற குண்டுகளால் தினம் தினம் அழிகின்றது தமிழ் இனம். அந்த அழிவிலிருந்து நம் இனத்தை மீட்க நாமெல்லாம் ஒன்று கூடி இந்தியப் பேரரசின் உதவியை நாடி நிற்கின்றோம்.

இந்திய துணை கண்டத்தில் இப்படி உதவி கேட்டு ஓலமிடும் அனாதை கூட்டமாக ஒரு காலத்தில் இலங்கையையே ஆண்ட பரம்பரையாய் விளங்கிய அந்த தமிழ் இனம் இன்று தவியாய் தவித்து நிற்கிறது. அந்த தவிப்பை போக்க ஈழத் தமிழ் இனத்தில் இளஞ்சிறார், குழந்தைகள் எனும் புல் பூண்டுகளை கூட அழித்து விடத்துடிக்கும் இனப்படுகொலையை தடுக்க வழி காண வேண்டுமென்பதற்கு தான் கடந்த அக்டோபர் 14ம் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து, அரசின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம்.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்தியப் பேரரசு ஏற்று நடவடிக்கை எடுத்திடும் என்ற நம்பிக்கையோடு உரியவர்களுக்கு அனுப்பி வைத்தோம், நம்பிக்கை வீண் போகவில்லை.

கடந்த 6ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் நான் புது டெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணிகளாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்கிட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பங்களுக்கும் இனி ஆளாகவே கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன்.பிரதமர் மன்மோகன் சிங் நான் உடனடியாக கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்று கூறினார்.

நாம் நம்பிக்கை கொள்கின்ற அளவிற்கு 6ம் தேதி மாலையே பிரதமர் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து, அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரை வரச்சொல்லி, அவரை எச்சரித்து இப்படி தமிழகத்திலே இருந்து அபயக்குரல் வந்திருக்கிறது. கண்டனக்குரல் வந்திருக்கின்றது. தமிழர்கள் தங்களுடைய கவலையைத் தெரிவித்திருக்கின்றார்கள்.நீங்கள் எங்களுடைய கருத்தை அறிந்து ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற அத்தகைய எச்சரிக்கையை இந்திய அரசு அவர்களுக்குச் செய்தது.

இதைத் தொடர்ந்து 14ம் தேதி நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்ட தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தோம்.இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 16ம் தேதி இரவு வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நிலவும் சூழ்நிலை இந்தியாவில் உள்ள எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாக கவலைப்படுகிறோம் என்றெல்லாம் சொல்லியிருப்பதை பார்க்கும்போது, அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றி நாம் அனுப்பிய தீர்மானங்களை யெல்லாம் நன்றாகப் பரிசீலித்து அதனையேற்றுக் கொள்ளும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் கூடுகிறது.

நமது பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் 18ம் தேதி நேரடியாகவே பேசியிருக்கிறார். அந்த பேச்சின் போது, இலங்கையின் வடக்கு பகுதியில் அப்பாவி தமிழர்கள் இரக்கமற்ற முறையில் தாக்கப்படுவது குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டுமென்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமிழரின் உரிமையும் நலன்களும் பாதிக்கப்படக் கூடாதென்றும் பிரதமர் கண்டிப்புடன் தெரிவித்தார் என்று பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையிலே உள்ள நிலைமைகளை அறிய வெளி உறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கே அனுப்பி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது. தாக்குதல்களில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு, அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார் என்று செய்திகள் வந்துள்ளன.

கடந்த 16ம் தேதி ஐ.நாவால் அனுப்பி வைக்கப்பட்ட 750 டன் உணவுப் பொருட்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் வினியோகிக்க மறுக்கப்பட்ட நிலையில், பிரதமர் பேசிய பேச்சின் விளைவாக - பிரதமர் பேசிய அன்றைய தினமே 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அந்த உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.தொடர்ந்து மத்திய அரசின் வெளி உறவு துறை செயலாளர் சிவசங்கரமேனன் டெல்லியிலே உள்ள இலங்கை தூதுவரை அழைத்து இந்திய அரசின் கண்டனத்தை உடனடியாக இலங்கைக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக மத்திய வெளி உறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 22ம் தேதி நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக வைத்த அறிக்கையில்,"இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவி பொதுமக்கள் படும் இன்னல்களும், இடம் பெயர்வோர் அதிகரித்து வருவது குறித்தும் மத்திய அரசு பெரிதும் கவலை கொண்டுள்ளது.எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நாம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.

இலங்கையிலே உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வு குறித்து நமக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே விரைவில் இந்தியா வரவுள்ளார். இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்தின்படி தமிழ் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலே இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் நல்வாழ்க்கையும் பாதிக்கப்படக் கூடாது. கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக நடைமுறை தொடர இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

பிரதமரும், வெளிவிவகாரத் துறை அமைச்சரும் நமது அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானத்தின் மீது எடுத்து கொண்டுள்ள நடவடிக்கைகளும் நமது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுகின்ற வகையிலும் அமைந்துள்ளதை அறிந்திட முடிகிறது.

ஆனாலும் இதுவே நமக்கு போதுமான முழு மன நிறைவைத் தரக் கூடிய விளைவாகும் என்று எண்ணிட முடியவில்லை.தரப்படும் உறுதி மொழிகள் தவறாமல் நிறைவேற்றப்படவும், இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இனவெறியும் அறவே அகற்றப்பட; தமிழர்கள் இலங்கையை ஆண்ட பரம்பரையினராம் என்ற அந்தப் பெருமையுடன் தமிழ் இனத்திற்கான மதிப்பும் மரியாதையும் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் மக்களுக்குப் போதுமான சமத்துவ நிலையும் உருவாகி, அங்கே மனித நேயம் மலருகிறது, இன ஒற்றுமை ஒளிருகிறது என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டாக வேண்டும்.

எனவே இப்போது படிப்படியாக நிறைவேறி வருகிற தாய்த்தமிழக மக்களின் நீண்ட காலக்கனவு; முழுமையாக நிறைவேறிடவும் இலங்கை தமிழர்க்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும், அமைதியின் சுகந்தம் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திடவும், அடிமை விலங்கு அறுபடவும், ஆதிக்க சக்தி விலகிடவும், அடுக்கடுக்கான முயற்சிகளில் அன்னை தமிழகத்தில் உள்ள நாம் அறவழிச்செயல் முறைகளில் ஈடுபட வேண்டுமல்லவா; அதற்கான உந்து சக்திகளில் ஒன்று தான் நாம் மேற்கொண்ட மனிதச் சங்கிலி.அந்தச் சங்கிலியில் சங்கமமான தமிழ் இன மக்களின் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம். அதில் இணைந்திட்ட நாம்; இலங்கை தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
*****

*** வலிந்த தாக்குதல் அச்சத்தில் சிறீலங்காப் படையினர் - தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவிப்பு

கிளிநொச்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிறீலங்காப் படையினர் இப்போது இரவு பகலாக அச்சத்துடன் காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது. எப்போதும் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தங்கள் மீது மேற்கொள்ளலாம் கரும்புலிகள் திடீரென பாயலாம் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும் தற்போது படையினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் விசுவமடுவில் நடைபெற்ற அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வியூகத்தினுள் புகுந்து எல்லாளன் படை நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த 21 சிறப்புக் கரும்புலிகளின் ஓராண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தளபதிகளில் சிலர் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளின் போது தோல்வியுற்று பின்வாங்கியவர்கள். இவர்களுக்கு இந்த அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியின் மேற்குப்பகுதிகளில் படைநடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் படையினர் தற்போது குழம்பிய நிலையிலுள்ளனர். படைத்தரப்பினர் நினைத்தது போல் ஒரு காலவரையறைக்குள் வன்னியை ஆக்கிரமிக்கும் நிகழச்சி நிரல் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்தாக்குதல்களால் முடியதாது போயுள்ளது. தங்களது இயலாமை காரணமாகவே மக்கள் வாழ்விடங்களின் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை இடம்பெயரச்செய்து வருகின்றார்கள். இன்று மக்கள் இடம்பெயர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்த வருகின்றார்கள்.

வியட்நாம் விடுதலையடையும் இறுதித் தருணத்திலும் அங்குள்ள மக்கள் இவ்வாறானதோர் துயரத்தை அனுபவித்தமையினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்பிக்கையும் விடுதலை மீதான பற்றுறுதியுமே எங்கள் விடுதலையை விரைவாக்கும் எனவும் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வு விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடுக்கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் திரு. ஞானம் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரேற்றப்;பட்டு, தேசியக்கொடியேற்றப்பட்டு வீரச்சாவடைந்த 21 கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர் மாலைகள் சூட்டப்பட்டு பொது மக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. வன்னியில் மேலும் பல பகுதிகளிலும் இக் கரும்புலிகளுக்கு நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
sankathi.com
****

** நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரையான முன்னகர்வுகள் முறியடிப்பு: 47 படையினர் பலி! 87 படையினர் காயம்

வன்னிக் களமுனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரையிலான நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன், மற்றம் புத்துவெட்டுவான் முன்னரங்க நிலைகள் இடையே மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

சிறீலங்காப் படையினரின் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் கனரக ஆயுத சூட்டாதரவுடன் இந்த முன்னகர்வுகள் இடம்பெற்றுள்ளன.இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் எதிர்ச் சமராடி படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போது படையினர் தரப்பில் 47 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 87 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.வன்னிப் பகுதியில் கன மழை ஆரம்பித்துள்ள நிலையில், படையினரின் முன்னகர்வுகளுக்கு மழை பெரும் தடையாக உள்ளது. அடை மழை பெய்வதற்கு முன்னர் கிளிநொச்சியை ஆக்கிமிக்க வேண்டும் என்ற இலக்குடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல்களால் படையினரின் முன்னகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில் படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புகளை மூடிமறைப்பதற்காக இனிவரும் காலங்களில் போர் முனைச் செய்திகளை சிறீலங்காப் படையினர் வெளியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
pathivu.com
****

Friday 24 October 2008

** கொட்டும் மழையில் நடந்த பிரமாண்ட மனித சங்கிலி!


பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர்.மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படுத்தாமல் பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திரண்டு மழையையே அதிர வைத்தனர்.இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ள சிங்காரவேலர் மாளிகை அருகே முதல்வர் கருணாநிதி பிரமாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பல்லாயிரணக்கானோர் மனித சங்கிலிகளாக அணிவகுத்து நிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதியிலும் நிற்க வேண்டியவர்கள் பட்டியலை ஏற்கனவே திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப மனித சங்கிலியில் அனைவரும் பங்கேற்றனர்.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது.



கருணாநிதி கார் மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையிட்டார்.மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொண்டார்.அண்ணா சிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோரும் பங்கேற்றனர்.கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென் சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மனித சங்கிலி அணிவகுப்புக்கு பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அணிவகுப்பிலும் கலந்து கொண்டன.தயாநிதி மாறன்..அண்ணா சிலை அருகே முன்னாள் மத்திய அமைச்சர் தயாநித மாறன் கொட்டும் மழையில் மனித சங்கிலியில் கலந்து கொண்டார்.

மனித சங்கிலியை தொடங்கி வைத்து காரில் இருந்தபடி பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, தயாநிதி மாறன் இருந்த இடம் வந்தபோது காரை நிறுத்தி, அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேனாம்பேட்டை பகுதியில், மனித சங்கிலியில் கலந்து கொண்டார். அவருடன் பெரும்திரளான பாமகவினர் கலந்து கொண்டனர்.

கிண்டியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் கிண்டி ஹால்டா பகுதியில் கொட்டும் மழையில் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.



எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.பலத்த மழை பெய்த போதிலும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று அமைத்த இந்த மனித சங்கிலி சென்னை முதல் செங்கல்பட்டு வரை நீண்டிருந்தது.
*****

** இயக்குநர்கள் சீமான், அமீர் கைதாகிறார்கள்!!

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைப்பட கலைஞர்கள் சார்பில் கடந்த 19 -ந் தேதி ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது.இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான், சேரன், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அதன் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.மேலும் இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று மாலைக்குள் இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்பு 3 பேரின் உருவப் பொம்மைகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் திரண்டு எரிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சீமான், அமீர், சேரன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் இயக்குநர் சீமான் மற்றும் அமீரை மட்டும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே குற்றச்சாட்டுக்களுக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளது போலீஸ்.

இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.

பாரதிராஜா கைதாவாரா?அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
******

"எமக்காக உரக்கக் குரல் கொடுத்த எம் உறவுகள் சிறை செல்கிறார்கள்.. தற்போது அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும்..!"

Thursday 23 October 2008

மனிதச் சங்கிலிக்கு அழைப்பு! சீமான், அமீருக்கு ஆதரவு - சத்யராஜ்

சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.பிரபு சாலமன் இயக்கிய லாடம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பாடலை வெளியிட்டார். விழாவில் அவர் கூறியதாவது:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை தான் நான் வரவேற்கிறேன்.அவர் சொன்னது போல் இப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்.

இயக்குனர் அமீர், சீமானுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அவர்கள் பேசியது சரியா, தவறா என்பதை விடுங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தருணம் இதுவல்ல.இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு தனிப்பட்ட முறையில் இது போன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை. திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் தான் எனக்கு உதவி செய்தன.

ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் அப்படி பேசி உள்ளனர். அவர்கள் தொடர்ந்து பேசட்டும். நாம் அவர்களுக்கு ஆதரவாக பின்னால் நிற்க வேண்டும், என்றார் சத்யராஜ்.
****

** ஈழத் தமிழர் விடுதலைக்காக ரயில் மறியல்-திருமாவளவன் உள்ளிட்ட 2500 பேர் வரையில் கைது!

இலங்கைத் தமிழர் மீதான இனப் படுகொலையை கண்டித்தும், அந்நாட்டுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.


ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் செய்தனர். சென்னையில் திருமாவளவன் தலைமையில் ரயில் மறியல் நடந்தது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்திருந்ததை அடுத்து சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவரை ரயில் நிலையத்தில் நுழையாமல் தடுக்க பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதையறிந்த திருமாவளவன் மறியல் நடக்கும் இடத்தை மாற்றினார்.



பேசின் பாலம் ரயில் நிலையம் அருகே தனது தொண்டர்கள் 250க்கும் மேற்பட்டோருடன் ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையறியாத போலீஸார் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் திருமாவளவன் மறியல் செய்ய வருவார் என்று காத்திருந்தனர். இதனால் பேசின் பாலம் ரயில் தண்டவாளத்தில் சுமார் ஒரு மணி நேரம் மறியல் போராட்டத்தை திருமாவளவன் நடத்தினார்.
இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும், அந்நாட்டுக்கு வழங்கி வரும் உதவியை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.இதனால் டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் உள்பட 5 ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் சில ரயில்கள் புறப்படாமல் தாமதமாயின.இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் பேசின் பாலம் ரயில் நிலைய பகுதிக்கு விரைந்து சென்று திருமாவளவன் உள்பட மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை கைது செய்து கொண்டு சென்றனர்.

அதே போல திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, நெல்லை, கோவை, மதுரை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் சுமார் 2500 பேர் கைது செய்யப்பட்டனர்.



திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர், எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து அதிரடி போராட்டத்தில் இறங்கினர்.மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.பொன்மலை டவுன் ரயில் நிலையத்துக்கு இடையே அரியமங்கலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தை மாநில மாணவர் சங்க பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் 50 பேர் திடீரென ரயிலில் ஏறி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.இதனால் ரயில் உடன் நிறுத்தப்பட்டது. உடனை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அபாய சங்கிலியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இழுத்து நிறுத்தியது தெரிய வந்தது.இதையடுத்து பிரபாகரன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். 23 நிமிடத்துக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

கோவையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன் மறியலில் கலந்து கொண்டனர்.அதே போல திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, மதுரை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாநிலம் முழுவதும் சுமார் 2500 பேர் கைது செய்யப்பட்டனர்.
*****

** ஈழத் தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை.வைகோ உறுதி

ஈழத் தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் உறுதியாக இருக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பிரிவினைவாதத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை கைது செய்யப்பட்டார்.அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று வைகோவை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.பின்னர் அவர் போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றப்பட்டார்.

அப்போது திரண்டிருந்த செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினையிலிருந்து தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.இலங்கை ராணுவத்திற்கு ரேடார்கள், ஆயுதங்களை வழங்கி, இலங்கைத் தமிழர்களைக் கொல்லும் போக்குக்கு பிரதமர் மன்மோகன் சிங் துணை போகிறார் என்று நான் கூறியதையும் இப்போது மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.இலங்கை படைகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து, உளவுத் தகவல்களைக் கொடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்து வருகிறது மன்மோகன் சிங் அரசு என்றார் வைகோ.
*****

** பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக வைகோ கண்ணப்பன் கைது.

நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டார்.
_
ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையில்,புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான்.

இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிபதி முன்பு வைகோவை போலீஸார் ஆஜர்படுத்தினர். வைகோவை நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து வைகோ புழல் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதேபோல மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பனைக் கைது செய்ய சென்னையிலிருந்து போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்தது.அந்த போலீஸ் தனிப்படை பொள்ளாச்சி அருகே உள்ள ஆலம்பாளையம் என்ற இடத்தில் தங்கியிருந்த கண்ணப்பனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.அப்போது கண்ணப்பன் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறினார். இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.கண்ணப்பனை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னதாக வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Wednesday 22 October 2008

** காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வழங்கல் கப்பல் ஒன்று மூழ்கடிப்பு: மற்றொரு கப்பல் கடுமையாகச் சேதம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினருக்கான இரு வழங்கல் கப்பல்கள் மீதே கடற்கரும்புலிகளால் தாக்குதல் தொடுதுள்ளது என தமிழீழவிடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரிந்து நின்ற எம்.பி. நிமலவா என்ற கப்பல் மீதுகடற்கரும்புதில் தாக்குதலில் கப்பல்முற்றாகத் தீப்பிடித்து எரிந்து கடலினுள் மூழ்கியுள்ளன.இதேபோன்று எம்.பி. ருகுண என்ற வழங்கல் கப்பல் மீது நடத்தப்பட்டகரும்புலித் தாக்குதலில் கப்பல் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியதையடுத்து தரித்து நின்ற கப்பலை கப்பலை துறைமுகம் நோக்கி கடற்படையினரால் கட்டியிழுக்கப்பட்டுள்ளது.இன்றைய தாக்குதலை கடற்புலிகளின் மகளிர் அணியின் துணைத் தளபதி லெப்.கேணல் இலக்கியா மற்றும் கடற்புலிகளின் கொமாண்டோ அணியைச் சேர்ந்த லெப்.கேணல் குபேரன் ஆகிய இரு கரும்புலி மாவீரர்கள் வீரகாவியமாகியுள்ளனர்.

இத்தாக்குதலை கடற்கரும்புலி மகளிர் அணியின் துணைத் தளபதி லெப்.கேணல் இலக்கியா வழிநடத்தியதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.யாழ் குடாநாட்டில் உள்ள படையினருக்குத் தேவையான படைத்துறைத் தளபாடங்களைக் கொழும்பிலிருந்து காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு இக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
pathivu.com
*****

** மனித சங்கிலி பற்றி அவதூறு கிளப்புவோர் மீது கருனாநிதியின் காட்டமான அறிக்கை

இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது.

எழுபது ஆண்டு காலமாக இலங்கை வாழ் ஈழத் தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன் உயிரையும் கூட அர்ப்பணிப்பவர்களாக, இன்னும் சொல்லப்போனால் கற்பெனும்மான உணர்வையும் கொள்ளை கொடுப்பவர்களாக கணவன் முன்னிலையில் அவன் கட்டிய மனைவி கற்பிழந்தாள், அண்ணனோ தம்பியோ கண்ணெதிரே பார்த்துக் கொண்டு அலற அலற அவர்களின் அருமைச் சகோதரி, அக்காளோ, தங்கையோ அம்மாவோ, அதனினும் கொடுமையாக முதிர்ந்த வயதுத் தாய்க்குலமும் சிங்கள முள்ளம் பன்றிகளின் முரட்டுப் பற்களுக்கிடையே சிக்கி ரத்தம் சிந்தும் கோரம்! கோரம்!.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல் தவழும் தளிர்கள் தாங்கள் நகர்ந்திடும் தாழ்வாரத்திலேயே மரணம் வெடிகுண்டு வடிவத்திலே வெடித்துச் சிதறி அந்தச் சிசுக்களின் உயிரைச் சூறையாடப் போகிறது என்பதை நினைத்து அதிர்ந்திடுவதற்கும் நேரமின்றித் தமது ஆவி பறி கொடுக்கும் அன்னையர்கள்.

இது தான் இன்றைய இலங்கை. இலங்கையின் நகரங்கள், கிராமங்கள், ஏழையர் காலனிகள், ஏன் செல்வச் சீமான்களின் தோட்டம் துரவுகளில் கூட அய்யோ என்ற ஓலம், குய்யோ முறையோ எனும் கூச்சல்.
இதனை இருபது கல் தொலைவுக்கு அப்பால் இங்குள்ள தமிழன் அலைமோதும் கடலோரம் நின்று காதால் கேட்கவும் கண்ணால் பார்க்கவும் ஒரு பயங்கரமான நிலைமை.

மேட்டில் விளையாடிய குழந்தை, நூறு அடி ஆழக்குழியில், இரு நூறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதென்றால் அதைப் பார்ப்பவர்களுக்கு பரிதாப உணர்ச்சி மட்டும் பறந்தோடி வந்தால் போதுமா?. அவர்கள் எத்துணை அதிர்ச்சி கொண்டு இயந்திரங்களை பயன்படுத்தி அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வரத்துடியாய்த் துடிக்கிறார்கள்.

உரக் கிணற்றில் ஒரு குழந்தை விழுந்த செய்தி உலகத்தார் அனுதாபத்தையே பெற்று விடும்போது; பழந்தமிழன் வாழ்ந்த பகுதி, ஆண்ட பகுதி, நமது கரிகாலனும், ராஜராஜனும், ராஜேந்திரச் சோழனும் கடல் கடந்தும் களம் கண்டு போரிட்டு; கடாரத்தில் ஏற்றினார்களே புலிக்கொடி; அது தமிழர் புவியாண்ட கொடி அல்லவா!.

அந்தக் கொடி நிழலில் வாழ்ந்தோர், ஆண்டோர் இன்று இலங்கையிலே தாழ்ந்தோர், மாண்டோர் என்ற கணக்கில் அல்லவா வருகின்றனர்!.
அந்தோ தமிழர்களே உங்களுக்காக குரல் கொடுக்கவும் முடியாமல் இங்குள்ள தமிழன் குறுக்கே நிற்கின்றானே!.

அங்கே போர் நின்று விடுமோ? அமைதி திரும்பி விடுமோ? கள்ளிக்காடு சூழ அவதியுறும் இலங்கைத் தமிழன் ஆறுதல் பெற அங்கே முல்லைப் பூ பூத்து விடுமோ என்று முட்டிக்கொண்டு அழவும் முடியாமல், மோதிக்கொண்டு கதறவும் முடியாமல்,

அய்யோ! இலங்கைத் தமிழ் இனம் காப்பாற்றப்பட்டு விடும் போலிருக்கிறதே என்று; "தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா'' என்ற பாடலை மறந்து விட்டு அல்லது மாற்றிப்பாட முனைந்து "தமிழன் என்று சொல்லடா; தழை இலைகளை மெல்லடா'' என்றல்லவா பாடிட விரும்புகிறான் துரோகத் தமிழன்!.

அவனுக்கு மாறாக அந்தச்சிறு அடங்காப் பிடாரி கூட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகின்ற முறையிலே அலைமோதும் கடலென ஆர்ப்பரிக்கும் தமிழர் கூட்டம் கடந்த 21ம் நாள் மழை பொழிந்தாலும் கவலையில்லை; எங்கள் தமிழரை இலங்கையில் காத்திட இங்குள்ளோர் அணி திரள்வோம் என்று ஆடவர், பெண்டிர், மாணவர், தொழிலாளர் அனைவரும் ஒன்று திரண்டனரே.
இருந்தாலும் மழை காரணமாக இரண்டு நாள் ஒத்தி வைத்து "மனிதச் சங்கிலி'' 24ம் நாள் பிற்பகல் என்று அறிவித்ததால் மேலும் நாலு மடங்கு மக்களன்றோ தமிழ் முரசொலித்து வர இருக்கின்றார்கள், வரிசை வகுத்திட இருக்கின்றார்கள்!.

"பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ'' என்ற கலிங்கத்துப் பரணி பாடலை நினைவூட்ட நிரம்பி வழியப்போகும் கூட்டம்!

என் அழைப்புக்கே எள் போட்டால் அந்த எள் விழ இடமின்றி வந்து நிறைகின்ற உடன்பிறப்புக்காள்!

எல்லாக் கட்சித் தலைவர்களும் தமிழ் உணர்வு ததும்பிட அழைக்கும்போது, மழை- ஏழு கடல் ஒன்றானது போன்ற தோற்றத்தையல்லவா; தமிழர்தம் ஏற்றத்தையல்லவா உணர்வுள்ள உலகத் தமிழர் அனைவரும் காண இருக்கிறார்கள்.

அக்டோபர் 24 - பிற்பகல் 3 மணி!
அலைகடலாய் சங்கமிப்போம்- தன்மானத் தமிழரின் மலைமுகடு இதுவென நிலைநாட்டுவோம்! இந்த அறப்போர் சங்கிலி பற்றி அவதூறு கிளப்பு வோர்- அறிக்கை விடுவோர்- சிங்கள வெறியர்களிடமிருந்து தமிழ் இன மக்களைக் காத்திடும் இந்த முயற்சியைக் காயப்படுத்த முனைவோர்- களங்கப்படுத்த நினைப்போர்- திசை திருப்புவோர்-அக்காள் தங்கைகளுடன் பிறந்தவர்களாக இருக்க முடியாது.

அன்னையர் குலத்துக்கொரு அவமானமெனிலோ; ஆனந்தக் கூத்தாடுபவர்களாயிருக்க வேண்டும்!

அவ்வளவு ஏன்?
அவர்கள் தமிழரல்லாதவர்களாயிருக்க வேண்டும் என்ற இந்த முடிவோடு ஒரு வேளை மழை தொடர்ந்து அதில் நனைய நேரிட்டாலும் நினைவு எல்லாம் என் தமிழ் இனத்தைக் காப்பதில் தான் நிலைத்திருக்கும் என்ற சூளுரையுடன் சென்னைத் தலைநகரில் வங்கக் கடலெனப் பெருகிடுக!

சங்கம் முழங்கிடுக!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று!!


என தமிழக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
pathivu.com
*******

*** இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் அவசியம்!

இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டித் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வெழுச்சி, அதையொட்டித் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலம் காத்திரமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடு போன்றவை எல்லாம் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் திருப்பு முனையையும், புதிய பரிமாணத்தையும் தந்து நிற்கின்றன.

இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை இருபது வீதத்துக்கும் குறைவாக இருக்கலாம். இந்த சிறிய இலங்கைத் தீவில் பெரும்பான்மை இனமாக சிங்கள இனம் இருக்கலாம். அதற்காகப் பேரினவாதத் திமிரோடும் மேலாண்மைச் சிந்தனையோடும் சிறுபான்மையினரான தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி ஆள பௌத்த - சிங்கள மேலாதிக்கம் சிந்திக்குமானால் ஈழத் தமிழினத்துக்காக உலகத் தமிழ் உறவுகள் அனைத்தும் கொதித்தெழுந்து ஆர்ப்பரிக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

‘தானாடாவிட்டாலும் சதையாடும்’ என்ற வாக்குக்கு இணங்க தமிழக உறவுகள் ஈழத் தமிழருக்காக சீறி எழுந்து வெளிப்படுத்திவரும் சீற்றம் புதுடில்லியையும், அதன் மூலம் கொழும்பையும் ஓர் உலுப்பு உலுப்பியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

இதே சீற்றத்தையும், ஆவேசத்தையும் பிற புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும் ஒன்றுபட்டு வெளிப்படுத்த வேண்டிய வேளை வந்துவிட்டது. அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழகத்தின் எழுச்சி காரணமாக புதுடில்லி விரும்பியோ, விரும்பாமலோ, தமிழகத்தின் கருத்து நிலைப்பாட்டை உள்வாங்கி, அதற்கு இயைந்து, நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதி வழித் தீர்வுக்கான எத்தனங்கள் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மீது இந்தியா பகிரங்க அழுத்தம் பிரயோகிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான இந்தியாவின் கருத்து நிலைப்பாடு பகிரங்கமாகவும், பட்டவர்த்தனமாகவும், வெளிவெளியாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதே கருத்தை முன்னர் தனித்தனியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகள் அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் பிராந்திய வல்லாதிக்க நாடான இந்தியாவின் கருத்து நிலைப்பாட்டையும் உள்வாங்கிச் செயற்பட வேண்டும் என்றும் அவை கருத்து வெளியிட்டு வந்திருக்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிகளில் இந்த தசாப்தத்தின் முற்பாதியில் அனுசரணைத் தரப்பாகச் செயற்பட்டு வந்த நோர்வேயும் கூட இந்தியாவுடன் இணங்கி, நடவடிக்கைகளை எடுப்பது குறித்து வலியுறுத்தி வந்திருப்பதும் மறக்கற்பாலது.

இத்தகைய நிலையில் இப்போது இலங்கையில் அமைதி நிலைமையை ஏற்படுத்துவதற்கு வலியுறுத்தித் தனது கருத்து நிலைப்பாட்டை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் புதுடில்லி வெளியிடும் சூழ்நிலை வந்திருக்கின்றது.

ஆகவே, அமைதி நிலையை ஏற்படுத்துவதற்காக இந்தியா வலியுறுத்தும் விவகாரங்களை அதற்கான இந்தியாவின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை - சர்வதேசம் இந்தச் சந்தர்ப்பத்தில் தன் பங்குக்கு வரவேற்று, ஊக்கப்படுத்தி, உற்சாகமளிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.

சர்வதேச பொலிஸ் காரனான அமெரிக்கா, பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அனுசரணைப் பணி வகித்த நோர்வே, அளவுக்கு மீறிய தன்னுடைய பொருளாதார உதவிகளை இலங்கைக்கு அள்ளிக்கொட்டி, போரியல் போக்கில் அது செல்வதற்கு உதவியளித்து அப்பாதையில் அதனை நெட்டித் தள்ளிய ஜப்பான் போன்றவை எல்லாம் இவ்விடயத்தில் இந்தியாவின் தற்போதைய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் சிலாகித்துப் பகிரங்கமாக வரவேற்கும் கடமையிலும் பொறுப்பிலும் உள்ளன.

இந்த விடயத்தில் அவை மௌனம் சாதிக்குமானால் அது, போரியல் தீவிரத்தில் வெறி கொண்டலையும் கொழும்பு அரசின் போக்குக்கு சர்வதேசம் வழங்கும் அங்கீகாரமாக அர்த்தப்படுத்தப்பட்டு விடலாம்.

எனவே, இலங்கை விடயத்தை ஒட்டி கொழும்பு அரசுக்கு இந்தியா தற்போது கொடுக்கும் அழுத்தத்தை சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றும் வெளிப்படையாகவே வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்கத்தக்க விதத்தில் அந்தந்த நாடுகளை வலியுறுத்தி வற்புறுத்தும் பொறுப்பு அந்தந்த நாடுகளில் வதியும் புலம் பெயர் தமிழர்களையும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் தரப்புகளையும் சார்ந்திருக்கின்றது. அவர்கள் விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய விவகாரம் இது.

யுத்தத்தை நிறுத்தி, அப்பாவி மக்களின் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் அமைதித் தீர்வு முயற்சிகளை ஆரம்பிக்கும்படி கொழும்புக்கு, இப்போது புதுடில்லி கொடுக்கும் அழுத்தத்துக்கு, ஆதரவான உணர்வெழுச்சிப் போராட்டங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் தேசங்களிலும் நடத்தப்படுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
*****

Monday 20 October 2008

** வன்னியில் ஆறு முனை முன்னகர்வுகள் முறியடிப்பு: 25 படையினர் பலி! 100 அதிகமானோர் காயம்

வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட பல முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 25 படையினர் கொல்லப்பட்டதோடு,மேலும் 100க்கும் அதிகமான படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னேரிக்குளம் முதல் நாச்சிக்குடா பகுதி வரை, ஆறு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டு வல்வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுடிருந்தனர்.கிபிர் யுத்த வானுர்திகள் குண்டு வீச்சுகள், மிக் 27 மிகையொலி வானூர்திகள் குண்டு வீச்சுக்கள், எம்.ஜ 24 தாக்குதல் உலங்கு வானூர்தியிலிருந்து வெடிகணைத் தாக்குதல்கள், பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதலுடன் கனரக ஆயுதச் சூட்டாதரவுடன் படையினர் பல முனைகளில் முன்னகர்வுகளை ஈடுபட்டனர்.

சிறீலங்காப் படையினர் தனது முழுமையான சுடுதிறனைப் பிரயோகித்து, நிலங்களை ஆக்கிரமிக்கத் திட்டமிட்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இந்த முறியடிப்புச் சமரில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட மிதிவெடி மற்றும் பொறிவெடி கொலை வலையத்தினுள் சிக்குண்டு பலர் படையினர் உயிரிழந்ததோடு, தமது உறுப்புக்களை இழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pathivu.com
****

*** கடுமையாகும் இந்திய அழுத்தம்.

ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி இந்தியாவின் - குறிப்பாக -தமிழகத்தின் - செயல் நடவடிக்கைகள் எதிர்பாராத வகையில் மிக வேகவேகமாகக் கட்டவிழத் தொடங்கிவிட்டன.ஒருபுறம் தமிழகத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் ஒரு முடிவை எடுத்து அறிவிக்க -மறுபுறம் இந்திய அரசு தனது கடும் அழுத்தத்தை அதற்கேயுரிய இராஜதந்திர மொழியில் இலங்கைக்கு - கொழும்பு அரசுக்கு - தெரிவித்து வருகிறது.

முதலில் புதுடில்லியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் பாலித கனேகொடவை, இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் நேரடியாக அழைத்து ஈழத் தமிழரின் அவல நிலைமை தொடர்பான இந்தியாவின் கவலையையும் சிரத்தையையும் எடுத்துரைத்தார்.அடுத்து இது தொடர்பான தமது அரசின் ஆழ்ந்த வருத்தத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கமாக வெளியிட்டார்.

அடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இவ்விடயத்தை ஒட்டிய பாரதத்தின் கவலையைப் பகிரங்க அறிக்கை மூலமும்,பேச்சு மூலமும் தெளிவுபடுத்தினார்.அதைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன், புதுடில்லிக்கான கொழும்பின் தூதுவர் ஸி.எஸ். ஜெயசிங்கவை அழைத்து இந்தியாவின் சீற்றத்தை நாசூக்கான இராஜதந்திர வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் கடந்த சனியன்று தம்முடன் தொலைபேசியில் உரையாடிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகவே இலங்கை விவகாரத்தை ஒட்டிய இந்தியாவின் நிலைப்பாட்டை இறுக்கமாக எடுத்துரைத்தார் என்று கூறப்படுகின்றது.

இவையெல்லாம் ஒரு பத்துநாட்களுக்குள் அடுத்தடுத்து அரங்கேறிய - கட்டவிழ்ந்த - இராஜதந்திர நடவடிக்கைகளாகும்.இலங்கை இனப்பிரச்சினையை அடக்குவதற்குத் தான் கையில் எடுத்திருக்கும் தீவிர யுத்தம் என்ற இராணுவ வெறிப் போக்கை அயல் வல்லாதிக்க நாடான இந்தியா உட்பட எந்த உலக நாடும் தடுக்க முடியாது - தட்டிக் கேட்க முடியாது - என்ற மமதையோடு, திமிர்த்தனமாக நடந்துகொண்ட மஹிந்த அரசுக்குச் சரியான பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது என்பதே சென்னை மற்றும் புதுடில்லி செய்தி வட்டாரங்களின் தகவலாகும்.

இப்போதைய நிலையை ஒட்டி இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எவையாக இருக்கும் என்ற ஊகத்தை சில ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். அவற்றில் ஒன்று மிக முக்கியமானது. 1987 இல், இன்றைய மஹிந்தர் அரசு போன்று துள்ளிக் குதித்து நின்ற அப்போதைய ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசை வழிக்குக் கொண்டு வருவதற்காக இலங்கையின் வான் பரப்புக்குள் அத்துமீறி தனது விமானங்களை அனுப்பி, தமிழர் தாயகம் மீது அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதிகளைப் போடப் பண்ணியது இந்தியா. அதன் மூலம் கொழும்பின் ‘கொழுப்பை’ அடக்கி, தன் விருப்பப் பாதைக்கு இலங்கை அரசை இந்தியா வரப் பண்ணியது என்பது தெரிந்ததே.

இன்றைய நிலையில், தமிழகத்தின் நெருக்கடி முற்றி, தனது அரசின் இருப்புக்கே ஆபத்து வந்திருப்பதால், தனது அரசைக் காபந்து பண்ணுவதற்காகவேனும் இவ்விவகாரத்தில் இதேபோன்ற கடும் நடவடிக்கையை எடுக்க மன்மோகன் அரசு தயங்காது என்று கூறப்படுகின்றது. இலங்கை அரசு தமிழர் தாயகம் மீது தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தால் தமிழர்கள் பேரழிவுகளையும் பெரும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றமையைத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டிவரும் பாரத தரப்பு, கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சுகளை இலங்கை விமானப்படை தமிழர் தாயகம் மீது நடத்துவதும் பேரழிவுகளுக்குக் காரணம் என்றும் கருதுகின்றது.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிரச்சினையை - பயங்கரவாதச் சிக்கலை - எதிர்கொண்டு வரும் இந்தியா, அங்கு கூடத் தனது வலிமையான விமானப் படையின் கைவரிசையைக் காட்டுவதில்லை.ஆனால் ஈழத் தமிழர் தாயகத்தைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டு அதன் மீது விமானக் குண்டுவீச்சுகளை மழைபோலப் பொழிகிறது இலங்கை.இன்றைய நிலையில் தனது சொந்த நாட்டின் மீதே விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தும் ஒரே நாடும் அரசும் இலங்கைதான். இதேபோல முன்னர் சதாமின் ஈராக் அரசு, ஈராக்கின் வடக்கில் குர்திஷ் போராளிகள் செயற்பட்ட பிரதேசங்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியபோது அதைத் தடுக்க அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள் கடும் நடவடிக்கை ஒன்றை எடுத்தன.அது, ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதன் வடபகுதிப் பிரதேசம் என்றாலும், அதன் மீது ஈராக் விமானங்கள் கூட பறக்கக்கூடாது என்று ‘விமானப் பறப்புக்குத் தடை விதிக்கப்பட்ட பிரதேசமாக’ அதை அறிவித்தது அமெரிக்கா. மீறி ஈராக் விமானங்கள் பறந்தால் சுடப்படும் என அமெரிக்கா எச்சரித்து, ஈராக்கின் விமானக்குண்டு வீச்சால் ஈராக்கின் குர்திஷ் மக்களுக்கு ஏற்படக் கூடிய பேராபத்தை இப்படித் தடுத்தது.இலங்கைக்குப் பக்கத்தில் வலுவான விமானப் படையையும், வான் வழிப் பாதுகாப்புப் பொறிமுறையையும் கொண்டுள்ள இந்தியா,ஈழத் தமிழர்கள் மீதான விமானக் குண்டுவீச்சுப் பேரழிவைத் தடுப்பதற்காக அத்தகைய ஓர் எல்லை வரை சென்று தடை அறிவிப்புச் செய்யலாம் என்ற ஊகங்கள் கசியத் தொடங்கியுள்ளன. அந்த நிலையில்தான் இப்போது இந்தியாவின் கவலையை - சிரத்தையை - கவனத்தில் எடுத்து, நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்ற பாவனையிலான நடிப்பை ஆரம்பித்திருக்கிறது கொழும்பு.
*****