புலிகள் பிரதேசத்தின் மத்தியப் பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் நுழைந்திருப்பதானது மிக மோசமான இரத்தப் பிரவாகத்தைத் தோற்றுவித்துள்ளது. 25 வருடகால மோதல்களில் புதிய கட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால் மரபு ரீதியான இராணுவ வெற்றியானது போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று சொல்ல முடியாது. சர்வதேச ஊடகமான ரொய்ட்டர் நிறுவனத்தின் செய்தியாளர் பிரைசன் ஹல் என்பவர் இலங்கையின் இன்றைய போர் நிலைமை குறித்து எழுதியுள்ள விமர்சனக் கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:
விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிக்குள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக இலங்கை ராணுவம் முன்னேறி இருப்பதுடன் இப்போது கிளிநொச்சியின் மீது ஆட்லறித் தாக்குதல் நடத்தக் கூடிய தூரத்தில் இருக்கின்றது. இராணுவத்தின் முன்னேற்றம் குறித்து சில விமர்சகர்கள் எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்கள். 1999 இல் நடந்தது போல் இது திருப்பு முனையாக அமைந்துவிடக்கூடும் என்பது அவர்களின் கருத்து. அப்பொழுது புலிகள் பிரதேசத்தின் மிக ஆழமான பகுதிக்குள் ஊடுருவி சென்ற ராணுவம் திருப்பித் தாக்கப்பட்டு சில தினங்களுக்குள் துரத்தியடிக்கப்பட்டதை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.
இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது
இந்தமுறை இராணுவத்தின் கை ஓங்கியுள்ளதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். புலிகளின் கடற்படை வளங்களை ஆட்டிலறி மற்றும் இராணுவ விமானப்படைத் தாக்குதல்களால் தகர்த்துக் கொண்டு நான்கு முனைகளில் முன்னேறி போராளிகளைச் சுற்றிவளைக்கும் நிலையில் அவர்கள் உள்ளனர் என்றாலும் முன்னே உள்ள பாதையை அவ்வளவு இலகுவானதாகக் கருதமுடியாது. லண்டனிலுள்ள யூரோஸியக் குழுவின் ஆய்வாளரான மரீயா கூசிஸ்ரோ இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில் அரச படைகள் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். வருட முடிவுக்குள் அவர்களைத் தோற்கடித்துவிட முடியும் என்ற காலக்கெடுவை நிலைநாட்ட முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றார். 1983 ஆம் ஆண்டு முதல் தமிழருக்கான தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளிகளை 2009 ஆம் ஆண்டளவில் துடைத்தொழிக்கப் போவதாக அரசு உறுதிசெய்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்தவாரம் இராணுவம் புலிகளின் வெளிப்புறப் பகுதிகளைக் கைப்பற்றியதையடுத்து புலிகள் தமது எதிர்ப்புக்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். முன்னரங்க தற்காப்பு அரண்களிலிருந்து புலிகள் தமது எதிர்ப்புக்களை வலுப்படுத்தியிருக்கிறார்கள்.
பயங்கரமான கட்டம்
புலிகளின் வெளிக்கள நிலைகளை இராணுவம் அண்மித்து கிளிநொச்சிக்குள் நுழைந்திருப்பதானது, பிரிவினைப் போராட்டத்தின் மிகப் பயங்கரமான கட்டத்துக்குள் நாம் வந்துள்ளோம் என்று கொழும்பிலிருந்து ஜோன்ஸ் பாதுகாப்பு வார இதழுக்கு எழுதும் இக்பால் அத்தாஸ் கூறியிருக்கின்றார். புலிகள் இனிமேலும் தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. தொடர்ந்தும் பின்வாங்க முடியாது. ஏனென்றால் இராணுவம் அவர்களின் கதவருகில் வந்து விட்டது என்றார் அவர். புலிகள் தரப்பில் கருத்து எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் தமிழ்நெற் இணையத்தில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தில் இராணுவத்தை பல தடவைகள் திருப்பித் துரத்தி அடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தினசரி கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. போர்க்களங்களுக்கு ஊடகவியாளர்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமையால் இறப்புகளின் சரியான விவரங்களை அறிந்துகொள்வது கடினமாகவுள்ளது. இரு தரப்பிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இறப்புக்களின் எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு பார்த்தால் 1999 இற்குப் பிறகு இதுவே மிக மோசமான மோதல் என்று கூறவேண்டும் என்று தெரிவித்தார் அடையாளம் வெளியிட விரும்பாத உயர் இராணுவ அதிகாரி ஒருவர். இந்தப் போரில் புலிகள்வசம் உள்ள பிரதேசங்ளை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றினாலும் கூட அரசாங்கம் அரசியல் சமரசத் தீர்வொன்றை புலிகளுடனும் தமிழ் பொதுமக்களுடனும் செய்து கொள்ளும்வரை அதனால் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்று சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசியல் தீர்வு வேண்டும்
புலிகளை பலவீனமாக்கி பேச்சுவார்த்தை மேசைக்குப் போகச் செய்வதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். ஆனால் எமக்கொரு அரசியல் தீர்வுவே தேவைப்படுகின்றது என்று கூறினார் கொழும்பில் சி.ரி. கெப்பிட்டல் என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் சன்னா அமரதுங்க. கிழக்கைப் போல வடக்கை மீளவும் கைப்பற்றியதன் பின்னர் அப்பகுதியைப் மாகாண சபையைத் தோற்று வித்து அபிவிருத்தி செய்யப்போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிவருகின்றார். இவ்வாறான திட்டமெதையும் புலிகள் உடனடியாகவே நிராகரித்து விட்டார்கள்.
இந்த விளையாட்டு இலகுவில் முடிவுபெறாது
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கென ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியிருப்பதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். வடக்கு மீட்கப்பட்டதும் மேலும் நிதி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியை அரசு கைப்பற்றினாலும் அது வெறும் அடையாள வெற்றியாகவே இருக்கப்போகின்றது. இலங்கையின் முதலீட்டுச்சந்தையும் உல்லாசப் பயணத்துறையும் சிறிதளவே பயன்பெறப் போகின்றன என்றார் பணிப்பாளர் அமரதுங்க. அரசின் இராணுவ வெற்றி போராளிகளை மீண்டும் காட்டுக்குள் பின்வாங்கி பழையபடி தலைநகரிலும் ஏனைய இடங்களிலும் தற்கொலை தாக்குதல்களிலும் வேறு செயற்பாடுகளிலும் ஈடுபடும்படி செய்துவிடக் கூடும் என்று கருதுவதாக கூசில்ரோ அம்மையார் தெரி வித்தார். இந்த விளையாட்டு இலகுவில் முடிவுபெறாது என்றார் அவர்.
Uthayan.com
*****








No comments:
Post a Comment