Sunday, 12 October 2008

*** போராட்டம் பற்றிய புரிதலோடு பிரவாகம் எடுக்கும் புத்தெழுச்சி.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் பொங்கி எழுந்திருக்கின்றமை தென்னிலங்கைச் சிங்களத்துக்குப் பேரதிர்ச்சி தரும் செய்தியாகும்.இந்த எழுச்சியின் பின்னால் உள்ள பல விடயங்கள் சிந்தனைக்கும் ஆழமான ஆராய்வுக்கும் உரியவை.இதனை வெறும் அரசியல் உணர்வெழுச்சியாகவோ இனவாதக் கிளர்ச்சியாகவோ இனங்காண முடியாது.

இது, இனப் பற்றுணர்வோடு, இனமானத்தின் அடிப் படையில் எழுந்த தமிழின எழுச்சி.ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் அடிப்ப டைகளையும் அர்த்த பரிமாணங்களையும் தமிழகம் நன்கு புரிந்து, உணர்ந்து, உள்வாங்கிக் கொண்டதன் விளைவாகவே இந்தப் புதிய பேரெழுச்சி ஏற்பட்டிருக்கின்றது.

இது திடீரென, சடுதியாக ஏற்பட்ட ஒரு மாற்றமல்ல. ஈழத் தமிழர்களுக்கு -அவர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்துக்கு-ஆதரவாக, ‘நீறு பூத்த நெருப்புப் போல’ தமிழகத்தில் கனன்று கொண்டிருந்த உணர்ச்சிப் பிரவாகத்தை, சிங்களத்தின் திமிர்த்தனமான செயற் பாடுகளும், நடவடிக்கைகளும், பிரகடனங்களும் காற் றாக ஊதி,பற்றிப் பிடித்து பெரும் உணர்வெழுச்சியாக விளாசி எரிய வைத்திருக்கின்றன.

சிங்களத்தின் இனப் பாகுபாட்டுச் செயற்பாடுகள், இனப்படுகொலை நடவடிக்கைகள் மற்றும் அரச பயங்கரவாதம் போன்ற நடவடிக்கைகளினால் ஈழத் தமிழர்கள் சொல்லொணா துன்ப துயரங்களை அனுப வித்து வருகின்றனர் என்ற செய்தி மட்டுமே இதுவரை தமிழக ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்தன. தமிழக ஊடகங்கள் ஈழத்தில் இடம்பெறும் ‘இனப் பாகுபாடு’, ‘இனப்படுகொலை’, ‘அரச பயங்கரவாதம்’ ஆகியவை பற்றியே அதிகம் கருத்து வெளியிட்டு வந்தன. அதாவது ஈழத் தமிழருக்கு தென்னிலங்கைச் சிங்கள அரசினால் இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தே தமிழகம் இதுவரை சிரத்தையும் கவலையும் கொண்டிருந்தது.

அதன் அடிப்படையில்-இனமான ரீதியில்-தமிழகத்தில் அவ்வவ்போது உணர்ச்சிக் கருத்துகள் வெளிப்படுத்தப் பட்டு வந்தன.ஆனால் தென்னிலங்கைச் சிங்களத்தின் இந்த இன அடக்குமுறைக்கு எதிரான தமிழர்களின் போராட்டத் தின் நியாயம் குறித்து-அதன் தாற்பரியம்பற்றி- அப்பாதை யைத் தேர்தெடுப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற ஈழத் தமிழரின் கட்டாயம் சம்பந்தமாக- தமிழ கத்தில் இதுவரை சரியான புரிதல் இருக்கவில்லை.அதனால்தான், ஈழத் தமிழர்களின் பேரவலம் குறித்து அதிகம் சிரத்தை கொண்ட-கூடிய கவனம் காட்டிய- தமிழகத் தலைமைகள் சில, ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தை ‘பிரிவினை’ ஆகவும், அதன் வடிவத்தை "வெறும் பயங்கரவாதம்" ஆகவும் விமர்சித்து வந்தன.

ஆனால் அந்நிலைமையில் இப்போது பெரும் மாற் றம் ஏற்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.இதுவரை தென்னிலங்கைச் சிங்களத்தினால் மேற் கொள்ளப்படும் ‘இனப் படுகொலை நடவடிக்கைகள்’ உட்பட்ட ‘அரச பயங்கரவாதம்’ பற்றி மட்டும் பேசிவந்த தமிழக அரசியல் தலைமைகள், இப்போது அதனையும் தாண்டி, ‘ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம்’ குறித்தும் பேசத் தலைப்பட்டிருக்கின்றமை புதிய சிந்தனை விரிவாக்கமாகும்.இதுவரை வெறும் தமிழின உணர்ச்சிக் கொந்தளிப் பில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த அரசியல் ஆதரவு அலை இப்போது தமிழரின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உள்வாங்கி, அதனை நன்கு உணர்ந்த அடிப்படையில் விஸ்தரித்து வியாபிக்கின்றது.இதுவொரு நல்ல திருப்புமுனையாகும்.

சில அரசியல் சக்திகளின் தவறான வழிகாட்டலினால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி நிலைப்பாடு தொண்ணூறுகளின் முற்பகுதியில் மழுங் கடிக் கப்பட்டபோதும், நிலைமை சீரடைந்து, தமிழகம் உண்மையைப் புரிந்துகொண்டு, ஈழத் தமிழர்களின் இனமானப் போராட்டத்துக்கு நீதி, நியாயத்தின் அடிப் படையில் நிச்சயம் ஆதரவு தரும் என்று முழு நம்பிக்கை யோடும்-அளவுக்கு அதிகமான பொறுமையோடு- நட்புறவுக்கான கரங்களை அகலத் திறந்தபடி காத்தி ருந்த ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகளுக்குக் காலம் ஈட்டிக் கொடுத்த முழு வெற்றியாகத் தமிழகத் தின் இந்த உணர்வெழுச்சியை நாம் கொள்ளலாம்.ஈழத் தமிழர்களை யுத்த ரீதியாக அடக்கி, அவர்களின் ஆயுத, இராணுவ வலுவையும், பலத்தையும் அடியோடு சிதைத்து, சிங்களப் பேரினவாதத்தின் காலில் தமிழினம் விழுந்து அடிமைப்பட வேண்டும் என்ற தங்களின் ஒரே நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்தும் பேரினவாதம் செருக்கோடு-திமிரோடு-தென்னிலங்கை நடந்து கொண்டமையும், தமது பேரினவாத மேலாதிக்கத்தைப் பறைசாற்றிப் பிரகடனப்படுத்தும் திருப்தியோடு மமதை அறிக்கைகளையும் உரைகளையும் சிங்களத் தலைமைகள் தலைக்கனத்தோடு வெளியிட்டு வந்த மையும் தமிழகத்தில் தற்போதைய உணர்வெழுச்சி யைக் கிளறித் தூண்டிவிடக் காரணம் என்பதையும் மறைத்து விட முடியாது.எது, எப்படியென்றாலும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பெரும் உத்வேகமும் உந்துசக்தியும் அளிக்கும் ஊக்கியாக வந்து அமைந்திருக்கிறது தமிழகத் தின் உணர்வெழுச்சி, தமிழரின் நியாயத்துக்கான உரிமைப் போராட்டம் விஸ்வரூபம் கொள்ள கால்கோள் இட்டிருக்கிறது என்பது இனித்தான்-போகப் போகத் தான்-தென்னிலங்கைச் சிங்களத்துக்குப் புரியப் போகின்றது. அப்போதுதான் அதன் தாக்கத்தை அது உணர்ந்து கொள்ளும்.
uthayan.com
*****

No comments: