Saturday, 25 October 2008

தக்க தருணத்தில் பலத்தை நிரூபித்து இழந்த நிலங்களை புலிகள் மீட்பர்! தமிழீழ அரசியல் பொறுப்பாளர் நடேசன் பேட்டி

"விடுதலைப்புலிகளின் பலத்தின் பெரும்பகுதியை தாங்கள் அழித்துவிட்டார்கள் என சிறீலங்கா இராணுவத்தினர் சொல்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. சரியான தருணத்தில் நாங்கள் எமது படைபலத்தை நிரூபித்து இழந்த நிலைகளை மீட்டெடுப்போம்." என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். ‘ரைம்ஸ் நெவ' என்ற தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

"எமது பலத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டதாகவும், கிளிநொச்சி விரைவில் கைப்பற்றப்பட்டுவிடும் என்றும் இராணுவம் சொல்கின்றது. ஆனால், தக்கதருணத்தில் எமது இராணுவ பலத்தை நிரூபித்து தக்க பாடத்தைக் கட்டாயமாக புகட்டுவோம்; இழந்த எமது நிலைகளை மீட்டெடுப்போம்." என்று அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் கூறினார்.

இந்தவிடயத்தில் சிறீலங்கா அரசம் இராணுவமும் கடந்தகாலங்களில் வெளியிட்ட கருத்துகளையும், அதனைத் தொடர்ந்து நிலைமைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"புலிகளை அழித்துவிட்டோம் என்று சிறீலங்கா அரசு கூறிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகள் புதிய பலத்துடன் திருப்பித் தாக்கி இராணுவத்துக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியமை அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்" என்று நடேசன் தெரிவித்தார். "கடந்தகாலக் கருத்துவேறுபாடுகள், பகைமைகள் மறக்கப்படவேண்டும். இந்தியா இனிமேலும் விடுதலைப் புலிகளை எதிரிகளாகக் கருதக்கூடாது" என்றும் நடேசன் கூறினார்.
_
இந்திய அரசுக்கும் கொங்கிரஸ் கட்சியின் தலைவிக்கும் ஏதாவது செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இந்தத் தருணத்தில் இந்தியாவினதும் அந்த நாட்டு மக்களினதும் உண்மை நண்பர்கள் யார் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள நடேசன், தமது அமைப்பின் மீதான தடையை நீக்கி இந்தியா தம்மை அங்கீகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
sankathi
****

No comments: