ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை ஒட்டிய விடயத்தில், காலத்தை இழுத்தடித்துத் தனது காரியத்தைச் சாமர்த்தியமாக நிறைவேற்றும் கொழும்பின் இராஜதந்திரத்துக்கு மீண்டும் ஒரு தடவை பலியாகியிருக்கின்றது புதுடில்லி.இம்முறை அதனோடு சேர்ந்து சென்னையும் கட்டையில் ஏறியிருப்பதுதான் புதிய விடயம்.ஈழத் தமிழர்களுக்கு நியாயம் வேண்டி - அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் - தமிழகத்தில் ‘உரு’க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை - கிளர்ச்சியை - இவ்வளவு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் பண்ணிய கொழும்பின் ‘இராஜதந்திரம்’ வியப்புக்குரியதே.
எனினும், புதுடில்லியிலும் சென்னையிலும் அரசியல் சுயலாபக் கும்பல்களின் ‘வெட்கக்கேடான’ முறையில் அமையும் கையாள்கைகளுக்கு இந்த விவகாரம் உட்பட்டது என்பதால் இப்படியெல்லாம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் இருந்து வந்ததே என்பதும் மறைக்கப்பாலதல்ல.கடந்த முப்பத்தியைந்து ஆண்டுகளாக இலங்கை விவகாரத்தை புதுடில்லியும் சென்னையும் கையாண்டு வருகின்ற முறைமையை விளங்கப்படுத்துவதற்கு சிறிய கதை ஒன்றை ஒரு வாசகர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கருத்தாகக் குறிப்பிட்டிருந்தார்.காது கேட்காத இருவர் வழியில் எதிரெதிரே சந்தித்துக் கொண்டார்களாம். "குளிக்கப் போகின்றீர்களா?" - என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். அதற்கு அவர், "இல்லையில்லை. நான் குளிக்கப் போகிறேன்." - என்று பதிலளித்தாராம். அதற்கு முதலாமவர் "அப்படியா, நான் என்னவோ நீங்கள் குளிக்கப் போகின்றீர்களாக்கும் என்றல்லவா நினைத்தேன்!" எனக் கூறினாராம்.- இவ்வாறு ஒருவர் பேசுவதை மற்றவர் புரியாமல் உரையாடுகின்ற செவிடர்களின் பேச்சுப்போல இருக்கின்றது.
இலங்கை இனப்பிரச்சினை விடயம் தொடர்பான கொழும்பு - புதுடில்லிப் பேச்சுகளும் அதை யொட்டிய இழுபறிகளும்."இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது. அரசியல் தீர்வே ஒரே வழி. அதை முன்வையுங்கள்!" - என்று இந்தியா படித்துப் படித்துக் கூறுவதும் -"ஆமாம். அரசியல் தீர்வே வழி. அதற்கான திட்டத்தை வைப்போம்!" - என்று புதுடில்லிக்குக் கூறியவாறே, அமைதித் தீர்வு எத்தனத்தை அடியோடு கைவிட்டுவிட்டு புலி எதிர்ப்பு யுத்தத்தை முழுக் குரூர - கொடூர - முனைப்பில் கொழும்பு முன்னெடுப்பதும் -"முதலில் புலிகளைச் சம்ஹாரம் செய்தல். பின்னர் தீர்வு பற்றிப் பார்க்கலாம்." - என்று கொழும்பு அரசு தென்னிலங்கைக்குப் பகிரங்கமாகக் கூறியபடி தனது யுத்தத் திட்டத்தை வெளிவெளியாகத் தொடர்வதுமாகக் கட்டவிழும் விடயங்களைப் பார்க்கும்போது கொழும்பு - புதுடில்லிப் பேச்சும், கருத்துப் பரிமாற்றமும், தொடர்பாடல்களும் இரு செவிடர்கள் இடையே நடப்பவை போலத்தான் தோன்றுகின்றன.
பேச்சு மூலமான அமைதித் தீர்வை புதுடில்லி வற்புறுத்துவதும், ‘ஆமாம்’ என்று தலையாட்டியபடி தனது யுத்த முனைப்பைக் கொழும்பு தொடர்வதும், அதைத் தடுக்கத் திராணியில்லாத இப்பிராந்திய வல்லாதிக்க (?) நாடான இந்தியா, அந்தப் போர்முனைப்புப் போக்குக்கு இராணுவ ரீதியிலான உதவிகளை எல்லாம் மறுபக்கத்தில் வாரி வழங்கிக்கொண்டு வாளாவிருப்பதுமாக இடம்பெறுகின்ற சம்பவங்களின் சூட்சுமமும் அதற்குள் புதைந்து கிடக்கும் அர்த்தங்களும் ‘காது கேட்காத செவிடர்கள் போல’ நடிக்கின்ற புதுடில்லி, சென்னை அரசியல் தலைவர்களுக்கு விளங்குகின்றனவோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் இப்பிரச்சினையில் அல்லல்பட்டு, அவலப்படுகின்ற அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் புரியவில்லை என்பதுதான் நிஜம்.இலங்கையில் கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சினைக்காகத் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வெழுச்சியை வெறும் எண்ணூறு தொன் நிவாரணப் பொருட்களை வன்னி மக்களுக்கு இலங்கை அரசு ஊடாக அனுப்புவது என்ற தீர்மானத்தின் மூலம் அடக்கி விடத் தெரிந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தந்திரத்தின் ஆழமும் ஈழத் தமிழர்களுக்குப் புரியவேயில்லை.
ஈழத்தில் போரை நிறுத்தச் செய்வதற்குக் காத்திரமான நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு வார காலத்துக்குள் தமிழக எம்.பிக்கள் அனைவரும் கூண்டோடு இராஜிநாமா என்ற அறிக்கை - அறிவிப்பு - வெளியான பின்னர், அந்தக் காலக்கெடு முடிவடைய இரண்டு நாட்கள் இருக்கையிலேயே, - புதுடில்லி அரசுத் தலைமையின் வெறும் வாய்ச்சொல் செய்தி ஒன்றை வைத்துக் கொண்டே, அந்த முன்னைய அறிவிப்பைக் குப்பையில் தூக்கி எறியும் விதத்தில் ‘இராஜிநாமா அறிவிப்பு நாடகத்தின்’ வாபஸ் கட்டம் அரங்கேறியது எங்ஙனம் என்பதும் ஈழத் தமிழர்களுக்குப் புரியவில்லை.இவ்வாறு புதுடில்லி, சென்னை, கொழும்பு ஆகிய முத்தரப்புகளும் கூட்டுச் சேர்ந்து அரங்கேற்றிய இந்த நாடகத்தை ஒட்டி ஈழத் தமிழர்களுக்குப் பல விடயங்கள் புரியாமல் போனாலும் ஒரேயொரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது.அது - நம் கையே நமக்கு உதவி. பிறரை நம்பிப் புண்ணியமில்லை - என்பதுதான்.
*****








No comments:
Post a Comment