Saturday, 11 October 2008

** சிவிலியன் இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் காரணமாக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ இழக்க நேரிடலாம்:பி. ராமன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிங்களவாதக் கொள்கைகளே தமிழக கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தீவிரமடையக் காரணம் என முன்னாள் ரோ அதிகாரி ராமன் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமை, தமிழர் பிரதேசங்களில் நடத்தப்படும் வான் தாக்குதல்கள் மற்றும் இராணுவத் தளபதியின் அண்மைய செவ்வி உள்ளிட்ட காரணிகள் தமிழகத்தில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானம் எட்டப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்தவின் உறுதி மொழியை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் காரணமாக ஆளும் காங்கிரஸ் கூட்டணியினால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட முடியாத ஓர் தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறத்தில், இராணுவ ரீதியான ஆதரவு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படாதென இந்திய மத்திய அரசாங்கம் தமிழக கட்சிகளுக்கு உறுதி மொழி வழங்கியுள்ளமை நோக்கப்பட வேண்டியதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் நேரடியாக ஆதரவு வழங்கத் தொடங்கினால் மீண்டும் பாரிய யுத்தம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வான் படையினர் மேற்கொள்ளும் கண் மூடித் தனமான வான் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமன் வலியுறுத்தியுள்ளார். சிவிலியன் இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் காரணமாக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ இழக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
*****

for contact: jaalavan@gmail.com

No comments: