Thursday, 23 October 2008

** பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக வைகோ கண்ணப்பன் கைது.

நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டார்.
_
ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையில்,புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான்.

இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிபதி முன்பு வைகோவை போலீஸார் ஆஜர்படுத்தினர். வைகோவை நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து வைகோ புழல் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதேபோல மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பனைக் கைது செய்ய சென்னையிலிருந்து போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்தது.அந்த போலீஸ் தனிப்படை பொள்ளாச்சி அருகே உள்ள ஆலம்பாளையம் என்ற இடத்தில் தங்கியிருந்த கண்ணப்பனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.அப்போது கண்ணப்பன் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறினார். இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.கண்ணப்பனை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னதாக வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: