Monday, 20 October 2008

** வன்னியில் ஆறு முனை முன்னகர்வுகள் முறியடிப்பு: 25 படையினர் பலி! 100 அதிகமானோர் காயம்

வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட பல முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 25 படையினர் கொல்லப்பட்டதோடு,மேலும் 100க்கும் அதிகமான படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னேரிக்குளம் முதல் நாச்சிக்குடா பகுதி வரை, ஆறு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டு வல்வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுடிருந்தனர்.கிபிர் யுத்த வானுர்திகள் குண்டு வீச்சுகள், மிக் 27 மிகையொலி வானூர்திகள் குண்டு வீச்சுக்கள், எம்.ஜ 24 தாக்குதல் உலங்கு வானூர்தியிலிருந்து வெடிகணைத் தாக்குதல்கள், பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதலுடன் கனரக ஆயுதச் சூட்டாதரவுடன் படையினர் பல முனைகளில் முன்னகர்வுகளை ஈடுபட்டனர்.

சிறீலங்காப் படையினர் தனது முழுமையான சுடுதிறனைப் பிரயோகித்து, நிலங்களை ஆக்கிரமிக்கத் திட்டமிட்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இந்த முறியடிப்புச் சமரில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட மிதிவெடி மற்றும் பொறிவெடி கொலை வலையத்தினுள் சிக்குண்டு பலர் படையினர் உயிரிழந்ததோடு, தமது உறுப்புக்களை இழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pathivu.com
****

No comments: