தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி சிறிலங்கா அரசாங்கத்துக்கான இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலைய மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகள் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.அத்துடன் நீதியான அரசியல் தீர்வுக்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், மலையக மக்கள் முன்னணியின் மூத்த உறுப்பினரும் பிரதியமைச்சருமான இராதாகிருஷ்ணன், மேலக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமருகுருபரன் ஆகியோரே இவ்வாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு 51 வீதமான மக்களின் ஆதரவு உள்ளது "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டின் ஞாயிறு பதிப்பான "சண்டே எக்ஸ்பிரஸ்" நடத்திய கருத்துக் கணிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மக்கள் கருத்துக் கணிப்புக்கு இந்திய அரசாங்கம் மதிப்பு கொடுத்து செயற்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் புலிகள் மீதான தடையை நீக்குவதில் இந்தியாவுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது எனவும் அவர் எடுத்துக்கூறினார்.
அத்துடன் புலிகள் மீதான தடையை நீக்குவதில் இந்தியாவுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது எனவும் அவர் எடுத்துக்கூறினார்.
அதேவேளை, குறித்த கருத்துக் கணிப்பு ஈழத்தமிழருக்கான இந்திய மக்களின் ஆதரவு உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ளது என்று பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆகவே, புலிகள் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம் என்பது இந்திய மக்கள்தான், எனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கருத்துக்கணிப்புக்கு மதிப்பு கொடுத்து மக்களின் விருப்பத்தை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கலாநிதி குமருகுருபரன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்பதில் புலிகள் உட்பட சகல தமிழ் மக்களும் விரும்புகின்றனர். என்றும் அவர் எடுத்துக்கூறினார்.
puthinam.com
*****








No comments:
Post a Comment