Sunday, 19 October 2008

*** சென்னை-டில்லி-கொழும்பு

<பீஷ்மர்>
சென்றவாரம் தான் தமிழக அரசியலின் தளம்பல்களை குறிப்பிட்டிருந்தோம். அது அரசியலை நடத்துவோரதும் அவர்களுக்கு எதிரானவர்களும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றியனவாகும். தமிழக அரசியலில் 1967 இல் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த காலம் முதல் திராவிட இயக்கம் மிக முக்கியமானதாக மாத்திரமல்லாமல் தமிழகத்தின் இன உணர்வு வேர்களுடன் இணைந்த ஒன்றாக விளங்கிவந்துள்ளமையைக் காணலாம்.

திராவிட உணர்வு என்பது தென்னிந்தியா முழுவதிலும் காணப்படும் ஒன்றல்ல. அடிப்படையில் அது தமிழ்நாட்டிற்கே உரியது. கேரளமோ, ஆந்திராவோ, கர்நாடகாவோ ?திராவிட? என்ற இன உணர்வு அரசியலை நடத்துவதில்லை. தமிழ் நாட்டில் இதன் வளர்ச்சி மிக முக்கியமானது. தமிழகத்தை தனித்து நோக்குவதாக இருந்தாலும் இந்தியப் பிரதேசக்கட்சிகளின் உதயத்திற்கு தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் குறிப்பாக அண்ணா அவர்கள் வளர்த்தெடுத்த வழியில் ஒரு விடிவெள்ளியாகவே அமைந்தது.

இவ்வாறு கூறும் போது தமிழகம் தன்னை இந்தியாவின் ஒரு பகுதியாகவே எல்லாக் காலங்களிலும் கருதிவந்துள்ளது, கருதிவருகின்றது. இந்திய ஒருமைப்பாட்டின் வலுவே (பலமே) அது ஒரேவேளையில் ஒருவர் தமிழராகவும் - இந்தியராகவும், வங்காளியராகவும்- இந்தியராகவும், குஜராத்தியராகவும் - இந்தியராகவும் இருக்கலாம். இதனாலேயே கால ஓட்டத்தில் இந்தியத் தேசிய காங்கிரஸ் தொடர்ந்தும் அனைத்து இந்திய முதலிடத்தைப் பெற்றுக் கொண்டு வந்தது. இவ்வாறான அனைத்து இந்தியத் தளம் உள்ள கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிஸுமே ஆகும். இந்த ஒரு நிலைமை காரணமாக காங்கிரஸ் பிரதேசக் கட்சிகளுடன் ஏதாவது ஒன்றுடனோ, இரண்டுடனோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்த நிலைமைக்கு வரவேண்டி இருந்தது.

வரலாற்று ஓட்டத்தின் சுவாரஸ்யமான திசை திருப்பம் காரணமாக தமிழகத்தின் எந்தக் கட்சி அனைத்து இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் என்று பயப்பட்டதோ அந்தக் கட்சியுடன் கூட காங்கிரஸ் ஒப்பந்தம் செய்யவேண்டியதாயிற்று. இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே தான் தி.மு.க.வை முன்னிலைப்படுத்திய காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி தமிழகத்தில் 40 இடங்களை வென்றது. அதாவது, லோக்சபாவில் அ.தி.மு.க.விற்கு பிரதிநிதித்துவம் இல்லை.

அ.தி.மு.க.விற்கு அதன் தமிழக வலுக்காரணமாக இராஜ்யசபை அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலைமைகள் காரணமாக தி.மு.க.விற்கு தமிழகத்தில் ஒரு முன்னிலை கிடைத்தது மாத்திரமல்லாமல் 40 பாராளுமன்ற இடங்களையும் அது பிடித்துக் கொண்டது.

இன்னொரு வகையில் சொன்னால் லோக்சபாவில் அதற்கு மிக மிக முக்கியமான ஒரு இடம். அண்மையில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது மன்மோகன் சிங்கினால் 19 அதிக பட்சவாக்குகளாலேயே வெல்லமுடிந்தது. டில்லி மீது சென்னைக்கு உள்ள தாக்கம் இதனால் நன்கு புரிகின்றது.

இன்னொரு வகையில் சொன்னால் தமிழகத்தின் உணர்வுகளை டில்லி இன்று புறக்கணிக்கவே முடியாது. இந்தப் பின் புலத்திலேயே அண்மையில் வன்னித் தாக்குதல் காரணமாக தமிழகத்தில் ஒரு மனிதாபிமான இன உணர்வு அலை வீசத்தொடங்கிற்று. இலங்கையின் இனக்குழுமப் போராட்டத்திற்கு 30 வருட கால வரலாறு உண்டு எனினும் எல்லா வேளைகளிலும், எல்லாச்சந்தர்ப்பத்திலும் சாதகபதிற்குறி காட்டியதில்லை.

அண்மைக்கால வரலாற்றை நோக்கும் போது இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய பிரக்ஞை உணர்வு இலங்கைத் தமிழ் மக்கள் தமிழக பயணங்களின் போதும், கடலிலே மூழ்கும் போதும், அவர்களின் மீது குண்டுகள் வீழ்ந்து அவர்கள் இடம்பெயருகின்றார்கள் எனும் பொழுதுமே ஏற்படுகின்றது. இதற்குள்ளும் கூட ஒரு இரு நிலைப்பாடுகள் உண்டு.

அது விடுதலைப் புலிகள் பற்றியதாகும். ஒரு புறத்தில் விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியின் கொலைக்கு காரணமானவர்கள் என்கின்ற குற்றச்சாட்டு உண்டு. இந்த வலு கணிசமானது. அதேவேளையில் இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நடாத்த அந்த இயக்கம் ஒன்று மாத்திரமே இருக்கிறது.

மற்றெதுவும் இல்லை. அல்லது வலுவடன் இல்லை என்ற யதார்த்தம் பற்றிய உணர்கை ஆகும். குறிப்பாக தென் தமிழகத்தில் அதாவது திருச்சிக்கு தெற்குப் பக்கத்தில் பிரபாகரன் என்னும் போராளி பற்றிய ஒரு வியப்புணர்வு காணப்படுகிறது. மேலே கூறிய ஒவ்வொன்றும் இணைந்து (கலவையல்லாமல்) ஒரு சேர்வையாக இணைந்துள்ளது. அதாவது இவையாவும் இணைந்து இலங்கைத் தமிழர் பற்றி ஒரு மனிதாபிமான நிலைப்பட்ட இன உணர்வு சார்ந்த அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவருடன் நெருக்கமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் கொடுத்த நிதியுதவியின் தொகை காரணமாக கலைஞர் கொடுக்க நின்ற தொகையை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை என்ற கதை அக்காலத்தில் நிறையவே அடிபட்டது.

எம்.ஜி.ஆர். கட்சிக்குள்ளும் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரின் இந்த உறவு மிக விருப்பமானதாக இருக்கவில்லை என்று அப்பொழுதே பேசப்பட்டது. இதனாலேயே தமிழகத்தின் ஒரே சுவாரஸ்யமான நிலை உண்டு. ஒரு புறத்தில் ராஜீவ் காந்தி கொலை காரணமாக விடுதலைப் புலிகள் பற்றிய மன ஒதுக்க உணர்வு. மற்றயது இலங்கையில் தமிழர் உரிமைப் போராட்டத்தை அவர்களே முன்னின்று நடத்துகிறார்கள் என்பது.

இந்த கருத்து மயக்க நிலை போதாதென்று தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்று சேர்வுகள் விடயத்தை மேலும் சிக்கல்படுத்தி உள்ளன.

வைகோ அ.தி.மு.க.வுடன் இணைந்து ஒன்றாகும். மற்றது டொக்டர்.ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி அண்மையில் சில காலமாக தனது தனித்துவத்தை நிலை நாட்ட விரும்புவதேயாகும். இந்த சூழல் ஏற்பட்டதும் தமிழகத்தில் பெருத்த அரசியல் சுழிஓட்டங்கள் ஏற்படத்தொடங்கியது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகம் பேசவில்லை என்றாலும் இந்தியக் கம்யூனிட்ஸ்ட் கட்சி இலங்கையின் வடக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி குரல்கொடுத்தது. கருணாநிதியும் நாம் சென்றவாரம் கூறியதுபோல விடுதலைப் புலிகளை தாக்கும் உட்கருத்துக்களை கொண்ட வாக்கியத்தில் தொடங்கி இலங்கைத் தமிழ் உரிமை போராட்டத்திற்கு சாதகமான முறையில் பேசி முடித்தார்.

கிளிநொச்சி தாக்குதலால் ஏற்பட்ட அவலங்கள் தமிழகத்தைப் பாதித்தது மாத்திரமல்லாமல் அவை அங்கு பெரும் பிரச்சினையை கிளப்பின. இப்பொழுது சென்னைக்கு டில்லியில் உள்ள பலம் காரணமாக இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பெற்று விடயங்கள் கூறப்பட்டன.

அதேவேளை, இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங்கே பேசவேண்டியநிலை ஏற்பட்டது. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தாங்கள் கூறிய அதேவேளையில் சாதாரண தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதையும் அழுத்திச் சொன்னார்கள். இவை எதனையுமே கொழும்பு எதிர்பார்த்து இருக்கவில்லை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா காலம் முதல் சந்திரிகா பண்டாரயநாயக்கா காலம் வரை நடாத்தப்படாத பயங்கரவாத, பிரிவினைவாத எதிர்ப்பு யுத்தத்தை இப்போதே அரசாங்கம் மேற்கொண்டு கிழக்கிலே வெற்றியையீட்டி வடக்கிலும் தமது பலத்தை காட்டுகின்றது என்ற செய்தி சிங்கள மக்களை பெரிதும் திருப்திப்படுத்திற்று. போரை இறுதிவரை தொடர வேண்டும் என்பதற்கு ஜே.வி.பி., சிஹல உறுமய ஆதரவும் தெரிவித்தன. இந்த வேளையிலே தான் டில்லி மீதான சென்னையின் தாக்கம் வெளிப்படத் தொடங்கிற்று.

இலங்கையின் ஜனாதிபதியை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்து ( வரவழைக்கப்பட்டு அல்ல) 2 மணித்தியால நேரம் பேசியதாக செய்திகள் வெளிவந்தன. இந்தியாவினால் தெரிவிக்கப்படும் பதிற்குறிகளை இந்தியத் தலையீடாக கருதி இச்சந்திப்பு நடைபெறவில்லை என்பது மிகத் துல்லியம்.
இதற்குள் கருணாநிதி தன்வலுவையும் ஆதரவையும் காட்ட நாட்கெடு வைத்து பிரச்சினையின் சூட்டை அதிகரித்தார். இலங்கையில் மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. சிங்கள ஊடகங்கள், சிங்களத்துவ அரசியல் பேச்சாளர்கள் தமிழகத்தைத் தாக்கி ஆனால் புதுடில்லியை அதிகம் கோவிக்காது செய்திகள், கருத்துக்களை வெளியிட்டன.

கிழக்குத் தாக்குதலின் போது ஏற்படாத ஒரு அரசியல் நிலைமை இப்போது ஏற்பட்டு விட்டது. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்பதை தவிர பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியதன் பின்னர் தமிழர் பிரச்சினை தீர்விற்கு என்ன அரசியல் வழிமுறை கையாளப்படும் என்பது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

உண்மையில் இலங்கை அரசாங்க மிகவும் இக்கட்டான ஒரு நிலையிலே தன்னை மாட்டிக் கொண்டது. இந்த நிலையில் கிளிநொச்சி தாக்குதல்கள் பற்றிய செய்திகள் பிரதான தலையங்கமாக வரும் நிலைமை தளர்ந்துவிட்டது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அதற்கு மேலேயே ஒட்டுமொத்தமான தமிழ்த் தரப்பு செய்யவேண்டியவை யாவை என்ற பிரச்சினை முனைப்புடன் கிளம்புகின்றது.

இச்சூழ்நிலையில் ஒன்றை மாத்திரம் மிகவும் வலியுறுத்தி கூறவேண்டியுள்ளது. அதாவது தமிழ்த் தரப்பின் அரசியல் நிலைப்பாடு தெட்டத் தெளிவாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினை இரு யுத்த அணிகளால் தீர்க்கப்பட கூடியதல்ல.

அரசியல் ரீதியாக தீர்க்கப்படவேண்டியதொன்று என்பது தெட்டத்தெளிவாக உள்ளது. அந்த அரசியல் நிலைப்பாடுகளை மிகத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டியது கடமையாகின்றது.
****

No comments: