Monday, 13 October 2008

*** நாளைய கூட்டத்திற்கு பூசல்களை மறந்து தமிழ் உணர்வுடன் சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - திருமாவளவன்

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக நாளை 14 ஆம் திகதி முதல்வர் கூட்டவுள்ள சர்வ கட்சிக் கூட்டத்தில் அ. தி. மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று பங்கேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 14 ஆம் திகதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதென அறிவித்துள்ளது போற்றுதலுக்குரியதாகும். இக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதும் இதனைக் கண்துடைப்பு நாடகமென விமர்சிப்பதும் துளியளவும் ஈழத் தமிழர்களுக்கு பயனளிப்பதாக அமையாது.
எனவே, ஈழத் தமிழர் நலன்கருதியேனும் கட்சி அரசியல் நலன்களை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு குரலெழுப்ப முன்வர வேண்டுமென அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மனிதநேய அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஈழத் தமிழினத்தை பாதுகாக்கும் உணர்வோடு த. வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்க கூட்டமைப்பு எதிர்வரும் 17 ஆம் திகதியன்று தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்பு அறப்போர் நடத்த அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

வணிகப் பெருமக்களின் தமிழ்மான உணர்வை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வரவேற்றுப் பாராட்டுகிறது. இந்தியப் பேரரசை தலையிட வைத்து இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட வணிகர்களின் இந்த கடையடைப்பு அறப்போரை ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒத்துழைத்து வெற்றி பெற வைப்பது மிக மிக இன்றியமையாததென விடுதலை சிறுத்தைகள் உணர்கிறது.
pathivu.com
*****

No comments: