Friday, 10 October 2008

*** மறியல் போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது- அ.தி.மு.க. வாழ்த்து



ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை காயிதே மில்லத் கல்லூரி அருகில் இருந்து ம.தி.மு.க. தொண்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் இந்திய அரசின் தமிழக நிர்வாக அலுவலகமான சாஸ்திரி பவன் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவு செய்திருந்தனர்.



இந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் தடையை மீறி போராட்டம் செய்ய ம.தி.மு.க. முடிவு செய்தது. இதனால் காயிதே மில்லத் கல்லூரி அருகில் இன்று அதிகாலையிலேயே பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பிற்பகல் 12:00 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அங்கு சென்றடைந்தார். ஆயிரக்கணக்காக திரண்டிருந்த ம.தி.மு.க. தொண்டர் மத்தியில் வைகோ பேசியதாவது:

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குமுறிக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு இந்திய இராணுவமும் பின்னணியில் இருப்பது வேதனையான விடயம்.கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வந்ததில் இருந்து சிங்கள இராணுவம் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட துடித்தது. இதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை.
ஆனாலும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்கள் நடைமுறையாகிக் கொண்டிருக்கின்றது. இந்திய அரசு ராடர்களை சிறிலங்காவுக்கு கொடுத்து உதவி உள்ளது. சிங்கள இராணுவத்துக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் செயற்படாது என்று நம் பிரதமர் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவை அனைத்தும் மீறப்பட்டுள்ளது.
இலங்கையில் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட குண்டு வீசக் கொல்லப்படுகிறார்கள். காட்டில் பதுங்கி வாழும் தமிழக மக்களுக்கு உணவு, மருந்து போன்றவை கிடைப்பது இல்லை.



கடல் எல்லையில் நமது நாட்டு மீனவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் சுடப்படுகிறார்கள். இந்திய கடல் எல்லைக்குள் வந்து சுடும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்து விட்டது. மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. ஈழத்தில் சாவும் ஒவ்வொரு தமிழனுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். இலங்கையில் 265 இந்திய இராணுவத்தினர் பின்னணியில் இருந்து செயற்படுகிறார்கள்.

இது பற்றி பிரதமருக்கு நான் விரிவாக கடிதம் எழுதினேன். தமிழர்கள் சாவுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எழுதினேன். இதற்கு பிரதமர் எனக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். உங்கள் கடிதம் என் மனதை புண்படுத்தி விட்டது என்று குறிபிட்டுள்ளார்.


இன்னும் சிறிலங்கா இராணுவத்தினர் இந்திய மீனவர்களை தாக்கத்தான் செய்கிறார்கள். கருணாநிதி தந்தி கொடுக்க சொல்கிறார். அனைத்துக்கட்சி கூட்டம் என்கிறார். இது தி.மு.க. நடத்தும் நாடகம். இலங்கை ஒருமைப்பாட்டை காக்க வேண்டும் என்பதற்காக இந்திய ஒருமைப்பாட்டை இழந்து விடாதீர்கள்.
தமிழர்கள் இன்று ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம். நம் காலத்திலேயே தமிழ் ஈழம் மலரும் என்றார் அவர்அ.தி.மு.க. சார்பில் இந்த போராட்டத்தில் அமைப்பு செயலாளர் முத்துசாமி வாழ்த்து தெரிவித்துப் பேசினார். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் உள்பட பலர் வாழ்த்துரையாற்றினர்.

இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. தொண்டர்கள் வைகோ தலைமையில் அணி, அணியாக மறியலுக்கு புறப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோவும் கைது செய்யப்பட்டார். அவர் தொண்டர்களுடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டார்.
puthinam.com
*****
for contact: jaalavan@gmail.com

No comments: