Saturday, 18 October 2008

*** இன்று இறைமை பற்றிப் பேசுவோர் அன்று எடுத்த நடவடிக்கை என்ன?

"இலங்கை அரசு, இலங்கையில் - தன்னுடைய தேசத்தில் - மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை தொடர்பான விடயத்தில் இந்தியா தலையிடுவதற்கு வரையறைகள் - கட்டுப்பாடுகள் - உண்டு. இந்தியாவின் இறைமை, இந்தியாவின் எல்லையுடன் முடிந்துவிடும். அதற்கு அப்பால் இல்லை. இந்தியா இன்னொரு நாட்டின் இறைமையில் தலையிட முடியாது."- இப்படி நியாயம் பிளந்திருக்கிறார் - தத்துவ உபதேசம் செய்திருக்கின்றார் - இந்தியாவின் ஆளுங் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்வி.

ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் மொழி, பண்பாடு, வாழ்வியல் முறைகள், இன சகோதரத்துவம் போன்றவற்றால் உணர்வுபூர்வமாக இறுகப் பிணைக்கப்பட்டவர்கள். வாழும் தேசங்கள் வேறாயினும் வாழ்வியலில் தொப்புள்கொடி உறவாக இணைக்கப்பட்டவர்கள்.ஆகவே, ஒரு சகோதரனுக்கு இன்னல் வருகையில் அவனுக்காக மற்றைய சகோதரன் குரல் எழுப்புவதையும், செயற்பட விரைவதையும் தேசங்கள், இறைமைகள் என்ற வரையறைகளைக் காட்டித் தடுத்துவிட முடியாது.இதுதான் நமது கடந்த கால அனுபவப் பாடமும் கூட. ஆனால் பழைய முன்னுதாரணங்களை மறந்து - அல்லது மறைத்து - இப்போது வேறு விதமாக விளக்கம், வியாக்கியானம் கூறி, நீதி உரைக்க முற்படுகின்றார் காங்கிரஸ் பேச்சாளர்.

அதுவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இத்தகைய கருத்து வருவதுதான் வியப்புக்கும் சிரிப்புக்கும் உரியதாகின்றது.இலங்கையும், இந்தியாவும் வெவ்வேறு நாடுகள் என்பதால் அவற்றின் இறைமைகள் வெவ்வேறு என்பதையும் -அதனடிப்படையில் ஒரு தேசத்தின் இறைமை, மறு தேசத்தின் இறைமை மீது தலையிடும் அதிகாரமோ, வலுவோ கொண்டதல்ல என்ற அடிப்படையையும் - ஏற்று, உணர்ந்து அதன் பிரகாரம்தான் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் அரசுகள் இதுவரை செயற்பட்டு வந்திருக்கின்றன என்பது போல இப்போது தத்துவம் பிளக்கின்றார் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்.

‘தனி இறைமையுள்ள இலங்கைத் தேசம்’ என்று காங்கிரஸ் பேச்சாளர் இப்போது குறிப்பிடும் இலங்கையின் புரட்சிவாதக் குழுக்களுக்கான தமிழர் கிளர்ச்சி அணிகளுக்கு மறைவாக ஆயுதப் பயிற்சி வழங்கி, ஆயுதத் தளபாடங்களைக் கொடுத்து, இலங்கைத் தேசத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்துமாறு எண்பதுகளின் நடுப்பகுதியில் தூண்டிவிட்டபோதும் -தமிழர் தேசம் மீது இலங்கைப் படைகள் மூர்க்கமாகப் போர் தொடுத்துள்ள இன்றைய நிலைமை போன்ற சூழல், 1987 இல் ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கைகளை ஒட்டி எழுந்தபோது அந்த நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்காக இலங்கை மீது கடும் இராஜதந்திர மற்றும் வேறு வகையான அழுத்தங்களைப் பிரயோகித்த போதும் -இறைமையுள்ள இலங்கைத் தேசத்தின் வான் பரப்புக்குள் அத்துமீறித் தனது விமானங்களை நுழையவைத்து பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வானில் இருந்து போடவைத்தபோதும் - அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக எழுந்த இந்திய இராஜதந்திரக் கெடுபிடிகளை மேலும் இறுக்கி, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தமிழர்கள் மீது வல்வந்தமாகத் திணித்தபோதும் -இலங்கையில் இனப்பிரச்சினை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலாக இருந்தபோதும், அப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கூறப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில், இலங்கை ஜனாதிபதிக்கு மாற்றாகத் தமிழர் தரப்பின் பிரதிநிதி ே பால இந்தியா தன்னை அடையாளப் படுத்திக்கொண்டு அதில் கையொப்பமிட்டபோதும் - அந்த ஒப்பந்தத்தின் பெயரால் தன் துருப்புகள் மூலம் இலங்கைக்குள் நுழைந்து, அதை ஆக்கிரமித்து, அங்கு நிலைகொண்டிருந்தபோது, இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸா கட்டளையிட்ட சமயம், அதையும் மீறி, காலம் கடத்தி, இலங்கையில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலைகொண்டிருந்தபோதும் -இந்தியத் தரப்புக்கு - குறிப்பாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு - இலங்கை வேறு தேசம் என்பதும் அங்கு இந்தியாவின் இறைமை செல்லாது என்பதும் தெரிந்திருக்கவேயில்லைப் போலும்.

1987 இல் வடமராட்சி மீதான ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ இராணுவ நடவடிக்கையை அடுத்து அங்கு எழுந்த மோசமான நிலையை விடவும் - 1987 ஜூலை 4 ஆம் திகதி இலங்கை வான் பரப்புக்குள் இந்திய விமானங்கள் அத்துமீறிப் புகுந்து பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் போட்ட சூழ்நிலையை விடவும் - மிக மோசமானதும், பேரவலம் தருகின்றதுமான அனர்த்தச் சூழ்நிலை இப்போது இலங்கை அரசு வன்னிப் பெருநிலப்பரப்பு மீது தொடுத்துள்ள யுத்தத்தால் வன்னியில் எழுந்துள்ளது.அன்றைய நிலையில் இலங்கைத் தேசத்தின் இறைமையை மீறி இந்தியா நடவடிக்கை எடுக்க நேர்ந்ததையும் விட வலுவான காரணங்களும் நியாயங்களும் இப்போது உள்ளன என்பதால், ‘இறைமை’ பூச்சாண்டியைக் காட்டித் தமிழக மக்களின் உரிமையுடன் கூடிய உணர்வெழுச்சியையும், அதனடிப்படையில் அமையும் இந்தியாவின் பொறுப்பையும் தட்டிக்கழிக்க முடியாது என்பதை காங்கிரஸ் கட்சிப் பேச்சாளருக்கு ஈழத் தமிழர் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
*****

No comments: