Friday, 24 October 2008

** இயக்குநர்கள் சீமான், அமீர் கைதாகிறார்கள்!!

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைப்பட கலைஞர்கள் சார்பில் கடந்த 19 -ந் தேதி ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது.இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான், சேரன், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அதன் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.மேலும் இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று மாலைக்குள் இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்பு 3 பேரின் உருவப் பொம்மைகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் திரண்டு எரிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சீமான், அமீர், சேரன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் இயக்குநர் சீமான் மற்றும் அமீரை மட்டும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே குற்றச்சாட்டுக்களுக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளது போலீஸ்.

இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.

பாரதிராஜா கைதாவாரா?அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
******

"எமக்காக உரக்கக் குரல் கொடுத்த எம் உறவுகள் சிறை செல்கிறார்கள்.. தற்போது அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும்..!"

No comments: