தமிழகத்தில் நேற்றுமுன்தினம் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த அதிரடி முடிவு இரு தரப்புகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம்.ஒன்று - இந்திய மத்திய அரசு.மற்றையது - எதிர்பார்க்கப்பட்டபடி கொழும்பு அரசு.-
வன்னியின் மீது தான் தொடுத்துள்ள பெரும் போருக்கும் - இராணுவ நடவடிக்கைக்கும் - இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது செயற்பாடுகளுக்கும் - புதுடில்லியின் முழு ஆதரவு உள்ளது என்று கொழும்பு அரசுத் தலைமை இனிமேல் - முன்னைய மாதிரி அவ்வப்போது - ‘கயிறு திரிக்க’ முடியாது. அத்தகைய கயிறு திரித்தலுக்கு முழு ஆப்பு வைத்திருக்கிறது அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம்.
-
ஒரு சமாளிப்புக்காகவேனும் - ஒரு பேச்சுக்காகவேனும் - மேற்படி விடயங்களில் கொழும்பு அரசின் போக்குக்கு புதுடில்லியின் ஆதரவு, அனுசரணை, ஒத்துழைப்பு, ஆசி என்பன இருக்கின்றன என இனிக் கொழும்பு கூறுமானால் தமிழகம் புதுடில்லிக்கு எதிராகக் கொதித்துப்போய் விடும் என்பது நிச்சயம்.இலங்கைப் படையினருக்கு இந்தியா, இதுவரை உயர்ந்த தரத்திலான இராணுவப் பயிற்சிகளை வழங்கி வந்தது.சத்தம் சந்தடியின்றி ‘ராடர்’ கண்காணிப்புக்கருவி போன்ற ஆயுதத் தளபாட வசதிகளையும் இலங்கைக்குப் புதுடில்லி வழங்கி வருகிறது.
-
வவுனியாவில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் இந்த ‘ராடர்’ தாக்கி அழிக்கப்பட்டதுமே மாற்று ‘ராடர்’ வசதியை விரைந்தடித்துக் கொண்டுசென்று - சில மணி நேரத்துக்குள்ளேயே - வழங்கி உதவியது இந்தியா.பாகிஸ்தான், சீனா போன்ற - தனக்கு உடன்பாடில்லாத - தரப்புகளிடமிருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா, இலங்கைக்கு இலகு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
-இலங்கையுடன் கூட்டுக் கடல் கண்காணிப்பில் ஈடுபட்டு, புலிகளின் ஆயுத சுவீகரிப்பு முயற்சிகளை அடியோடு தடுத்து நிறுத்தும் கைங்கரியத்திலும் இந்தியா முனைப்பாக ஈடுபட்டிருக்கின்றது என்பது பகிரங்கப்படுத்தப்படாத இரகசியம்.அதேசமயம், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்டபடி - ஆட்கடத்தல், காணாமற் போகச் செய்தல், சட்டவிரோதப் படுகொலைகள், கப்பம் அறவிடல், ஊடக அடக்குமுறை போன்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வாய்ப்பளித்தபடி - தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தத்தை ஏவி விட்ட படி - இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதில் தான் தீவிரமாகவும், நேர்மையாகவும் செயற்பட்டு வருவதாக இதுவரை கொழும்பு அரசு சர்வதே சத்துக்குப் படம் போட்டு வந்தது.
-அந்த நிலைப்பாட்டுக்கு மௌனசாட்சியாகவும், தலையாட்டி ஆதரவு வழங்கும் சக்தியாகவும் செயற்பட்டதன் மூலம் கொழும்பின் இந்த அராஜகப் போக்குக்குத் தெரிந்தோ தெரியாமலோ துணைபோனது புதுடில்லி.அந்த விபரீதப் போக்கு இனித் தொடராமல் தடை போட்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது தமிழக அனைத்துக் கட்சிகளின் தீர்மானம்.
-கொழும்பின் இன அழிப்பு அராஜகத்துக்கு இந்தியா இனியும் துணை போகுமானால் இந்திய மக்களவையில் - நாடாளுமன்றில் - அங்கம் வகிக்கும் தமிழக எம்.பிக்கள் நாற்பது பேரும் கூண்டோடு இராஜிநாமாச் செய்வார்கள் என்று தமிழகம் ஒட்டுமொத்தமாகத் தீர்மானித்து விட்டது.ஈழத் தமிழர் தாயகம் மீது கொழும்பு அரசு தொடுத்துள்ள அராஜக யுத்தத்துக்கு முடிவு கட்டவும் -அந்த யுத்தத்தில் சிக்கிப் பேரவலத்தைச் சந்தித்து, அனர்த்தத்துக்குள் மூழ்கியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மருந்துப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் -எதிர்காலத்தில் இலங்கைக்கு எந்த ஆயுத, தளபாட உதவிகள் உட்பட இராணுவ ஒத்தாசைகளும் வழங்கப்பட மாட்டாது என்பதைத் தீர்மானித்துச் செயற்படுத்தவும் -அப்பாவித் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் மோசமான தாக்குதல்களுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் -இந்திய மத்திய அரசுக்கு இரு வார காலக்கெடு விதித்திருக்கின்றது தமிழகம். இந்த எச்சரிக்கையின் விளைவு வெறும் நாற்பது எம்.பிக்களின் இராஜிநாமாவுடன் முடிந்துவிடாது.
-அந்த எம்.பிக்களின் ஆதரவில் தங்கி ஆட்சி நடத்தும் இந்தியாவின் காங்கிரஸ் அரசின் சரிவோடுதான் முடியும். அந்தச் சரிவோடும் விடயம் அடங்கி விடாது. அதன் பின்னர் வரக்கூடிய பொதுத் தேர்தலில் தென்னிந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் காலூன்றவே முடியாது என்ற அவஸ்தையையும் அதற்கு நிச்சயமாக ஏற்படுத்தும்.
-எனவே, இலங்கையில் தமிழர் மீதான யுத்தத்தை நிறுத்துவது உட்படப் பல விடயங்களை நிபந்தனையாக விதித்து தமிழகம் முன்னெடுத்திருக்கும் இந்தக் காய் நகர்த்தல், ஈழத்தமிழர் பிரச்சினையில் புதுடில்லி அரசுக்கும் இலங்கை அரசுக்கும் வைத்திருக்கும் நல்ல ‘செக் - மேட்’ என்றால் மிகையாகாது.
Uthayan.com
******








No comments:
Post a Comment