Monday, 6 October 2008

*** கொடுமைகளுக்குக் கூட்டாளியாகி தவறிழைக்கும் கலைஞர் கருணாநிதி

‘குமுதம்’ பத்திரிகையில் பிரபல இலக்கியவாதி ஒருவர் ஒரு முக்கிய கேள்வியை தமிழக முதல்வரைப் பார்த்து எழுப்பியிருந்தார். ‘கலைஞர் கருணாநிதி’ என்ற பெயரில் உள்ளபடி அவரிடம் ‘கலை’ இருக்கிறது. ‘நிதி’யும் தாராளமாக அவரிடம் உள்ளது. ‘கருணை’ மட்டும் எங்குள்ளது? - என்ற சாரப்பட அந்தக் கேள்வி அமைந்தது.

அந்தக் கேள்வியை நியாயப்படுத்தும்படிதான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்னும் - இன்றும் - இத்தகைய பழுத்த அரசியல் அனுபவத்தின் பின்னரும் கூட - நடந்து கொள்கின்றார் என்பதுதான் வேதனை தருகின்றது. தமிழக அரசியலில் இவ்வளவு நீண்ட காலம் தாக்குப்பிடித்து, அதிகாரத்தில் இருந்து வருபவர் அவர். பல வீழ்ச்சிகளுக்குப் பின்னரும் அசாத்திய எழச்சியை வெளிப்படுத்தியவர். மாநில அரசில் மட்டுமல்ல, மத்திய அரசிலும் இன்றும் அதிக செல்வாக்குச் செலுத்தும் அதிகாரம் கொண்டவராக விளங்குபவர்.

உலகில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழுகின்ற தமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவராக விளங்கும் அவர், இந்த நீண்ட அரசியல் பாரம்பரியத்தின் பின்னணியோடு உலகத் தமிழினத்தின் தலைவராகவும் இயல்பாகவே உயர்ந்திருக்க வேண்டியவர்.ஆனால், தான், தனது அரசியல் அதிகாரம், தனது குடும்ப அதிகாரம் என்ற சுயநல அரசியல் சுழலுக்குள் அகப்பட்டு, குறுகிய மனப்பான்மையோடு செயற்பட்டதால் ‘கலை’யில் உயர்ந்து, ‘நிதி’யை அதிகம் தேடிக்கொண்ட அவரால் ‘கருணை’யை வெளிப்படுத்தவே முடியாமல் போய்விட்டது. அதனால் உலகத் தமிழினத் தலைவராக உயரும் அருமையான வாய்ப்பைக் கோட்டை விட்டு, வரலாற்றில் எங்கோ ஒரு மூலையில் பதியப்படும் சாமானியத் தலைவராகி விட்டார் அவர்.

அதுமட்டுமல்ல. உலகத் தமிழினத்துக்காக உலகில் ஒரு நாடு வேண்டிப் போராடும் ஈழத் தமிழினத்துக்கு முதுகில் குத்துபவர் போல செயற்பட்டு - வரலாற்றுத் துரோகம் இழைத்து - தம்மைக் கீழ்மைப்படுத்தியும் கொண்டுவிட்டார் அவர்."ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கும், அங்கு நிகழும் கொடூரச் செயல்கள் அனைத்துக்கும் கூட்டாளியாக இன்றைய இந்திய அரசு செயற்படுகின்றது" - என்று கலைஞர் கருணாநிதியின் அரசியல் எதிரியும் முன்னாள் தமிழக முதல்வரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் சரியானதே. இந்தப் பத்தியில் ஏற்கனவே அதனைப் பலதடவை நாமே வெட்டவெளிச்சமாகக் கோடிகாட்டியும் வந்திருக்கிறோம்.

இத்தகைய செயல்கள் இடம்பெறுவதற்கு இதுவரை இடம் அளித்து - ஒரு வகையில் அவற்றை அங்கீகரிக்கும் விதத்தில் அதீத மௌனம் காத்து - அத்தகைய செயற் போக்குக்கு ஊக்கம் அளித்து வந்த செல்வி ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டை இப்படித் திடீரென சுமத்துவதற்கு அருகதையேயற்றவர் என்பது வேறு விடயம்.ஆனால் இவ்விவகாரத்தில் கலைஞர் கருணாநிதியின் அரசியல் சந்தர்ப்பவாதத்தைப் புட்டுப் புட்டு வைக்கும் விதத்தில் அவர் எழுப்பும் கேள்விகளில் அர்த்தங்கள் நிறையவே உண்டு.

அவ்வாறு இச்சந்தர்ப்பத்தில் செல்வி ஜெயலலிதா இத்தகைய கேள்விகளைஎழுப்புவது கூட அவரின் அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதை ஒருபுறம் புரிந்து கொண்டு ஒதுக்கி வைத்துவிட்டு, அக் கேள்விகளின் நியாயத்தை நோக்குவது இச்சமயத்தில் தவிர்க்கப்பட முடியாத விவகாரமாகின்றது.இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் கொடூரங்களுக்கு அவற்றை வெறுமனே பார்த்திருக்கும் இந்திய அரசு, மௌன சாட்சி மட்டுமல்ல, இந்தக் கொடூரச் செயல்கள் அனைத்துக்கும் கூட்டாளியாகவும் செயல்பட்டிருக்கின்றது என்று குற்ற அம்பு எய்திருக்கின்றார் ஜெயலலிதா."மத்திய அமைச்சர்கள் எனத் தமிழ் நாட்டுப் பிரதிநிதிகள் பத்துப் பேரைக் கொண்ட இந்திய அரசுதான் இத்தகைய பழி பாவத்தில் பங்குபெற்றிருக்கின்றது. தி.மு.கவை மிக இன்றியமையாத அங்கத்துவமாகக் கொண்ட மத்திய கூட்டணி அரசுதான் இந்தக் கொடுமைகளில் கூட்டாளியாக இருக்கிறது.

கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. அறிவித்தால் மத்திய ஆட்சியே கவிழ்ந்துவிடும். ஆனால் ‘தமிழினத் தலைவர்’ என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பேச்சுமூச்சற்றுப் போவார்; வாய்மூடிக்கிடப்பார்" - என்றும் சுட்டிக்காட்டுகின்றார் ஜெயலலிதா.ஈழத் தமிழர் மீது கொடூரப் போரைத் தொடுத்து அவர்களைப் பேரழிவுகளுக்கும், போரழிவுகளுக்கும் உள்ளாக்கிவரும் இலங்கை அரசுக்கு -கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. வழங்கும் ஆதரவில் தப்பிப் பிழைத்து நிற்கும் இந்திய மத்திய அரசு, அந்தப் போரியல் போக்கிற்கான உதவி ஒத்தாசைகளை வழங்குகின்றது என்ற குற்றச்சாட்டு பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதற்கு கலைஞர் கருணாநிதியின் பதில்தான் என்ன? செல்வி ஜெயலலிதா கூறுவது போல தமிழர் நலன் பற்றிய கேள்வி என்றால் கருணாநிதி பேச்சுமூச்சற்று, வாய் மூடிவிடுவாரா? அல்லது வழமைபோல இதற்கும் தமது தமிழ்ச் சொல்லாடல் மூலம் சமாளிப்பு விளக்கங்களைத் தந்து சளாப்புவாரா?எது, எப்படியென்றாலும் தமிழினத்துக்காக நியாயமான நடவடிக்கையை, உரிய காலத்தில் எடுக்கத் தவறிய குற்றத்திலிருந்து தமிழக முதல்வர் கருணாநிதி தப்புவது இயலாத விடயமாகும்.
uthyan.com
*****

for contact: jaalavan@gmail.com

No comments: