Monday, 20 October 2008

*** கடுமையாகும் இந்திய அழுத்தம்.

ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி இந்தியாவின் - குறிப்பாக -தமிழகத்தின் - செயல் நடவடிக்கைகள் எதிர்பாராத வகையில் மிக வேகவேகமாகக் கட்டவிழத் தொடங்கிவிட்டன.ஒருபுறம் தமிழகத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் ஒரு முடிவை எடுத்து அறிவிக்க -மறுபுறம் இந்திய அரசு தனது கடும் அழுத்தத்தை அதற்கேயுரிய இராஜதந்திர மொழியில் இலங்கைக்கு - கொழும்பு அரசுக்கு - தெரிவித்து வருகிறது.

முதலில் புதுடில்லியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் பாலித கனேகொடவை, இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் நேரடியாக அழைத்து ஈழத் தமிழரின் அவல நிலைமை தொடர்பான இந்தியாவின் கவலையையும் சிரத்தையையும் எடுத்துரைத்தார்.அடுத்து இது தொடர்பான தமது அரசின் ஆழ்ந்த வருத்தத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கமாக வெளியிட்டார்.

அடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இவ்விடயத்தை ஒட்டிய பாரதத்தின் கவலையைப் பகிரங்க அறிக்கை மூலமும்,பேச்சு மூலமும் தெளிவுபடுத்தினார்.அதைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன், புதுடில்லிக்கான கொழும்பின் தூதுவர் ஸி.எஸ். ஜெயசிங்கவை அழைத்து இந்தியாவின் சீற்றத்தை நாசூக்கான இராஜதந்திர வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் கடந்த சனியன்று தம்முடன் தொலைபேசியில் உரையாடிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகவே இலங்கை விவகாரத்தை ஒட்டிய இந்தியாவின் நிலைப்பாட்டை இறுக்கமாக எடுத்துரைத்தார் என்று கூறப்படுகின்றது.

இவையெல்லாம் ஒரு பத்துநாட்களுக்குள் அடுத்தடுத்து அரங்கேறிய - கட்டவிழ்ந்த - இராஜதந்திர நடவடிக்கைகளாகும்.இலங்கை இனப்பிரச்சினையை அடக்குவதற்குத் தான் கையில் எடுத்திருக்கும் தீவிர யுத்தம் என்ற இராணுவ வெறிப் போக்கை அயல் வல்லாதிக்க நாடான இந்தியா உட்பட எந்த உலக நாடும் தடுக்க முடியாது - தட்டிக் கேட்க முடியாது - என்ற மமதையோடு, திமிர்த்தனமாக நடந்துகொண்ட மஹிந்த அரசுக்குச் சரியான பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது என்பதே சென்னை மற்றும் புதுடில்லி செய்தி வட்டாரங்களின் தகவலாகும்.

இப்போதைய நிலையை ஒட்டி இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எவையாக இருக்கும் என்ற ஊகத்தை சில ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். அவற்றில் ஒன்று மிக முக்கியமானது. 1987 இல், இன்றைய மஹிந்தர் அரசு போன்று துள்ளிக் குதித்து நின்ற அப்போதைய ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசை வழிக்குக் கொண்டு வருவதற்காக இலங்கையின் வான் பரப்புக்குள் அத்துமீறி தனது விமானங்களை அனுப்பி, தமிழர் தாயகம் மீது அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதிகளைப் போடப் பண்ணியது இந்தியா. அதன் மூலம் கொழும்பின் ‘கொழுப்பை’ அடக்கி, தன் விருப்பப் பாதைக்கு இலங்கை அரசை இந்தியா வரப் பண்ணியது என்பது தெரிந்ததே.

இன்றைய நிலையில், தமிழகத்தின் நெருக்கடி முற்றி, தனது அரசின் இருப்புக்கே ஆபத்து வந்திருப்பதால், தனது அரசைக் காபந்து பண்ணுவதற்காகவேனும் இவ்விவகாரத்தில் இதேபோன்ற கடும் நடவடிக்கையை எடுக்க மன்மோகன் அரசு தயங்காது என்று கூறப்படுகின்றது. இலங்கை அரசு தமிழர் தாயகம் மீது தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தால் தமிழர்கள் பேரழிவுகளையும் பெரும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றமையைத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டிவரும் பாரத தரப்பு, கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சுகளை இலங்கை விமானப்படை தமிழர் தாயகம் மீது நடத்துவதும் பேரழிவுகளுக்குக் காரணம் என்றும் கருதுகின்றது.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிரச்சினையை - பயங்கரவாதச் சிக்கலை - எதிர்கொண்டு வரும் இந்தியா, அங்கு கூடத் தனது வலிமையான விமானப் படையின் கைவரிசையைக் காட்டுவதில்லை.ஆனால் ஈழத் தமிழர் தாயகத்தைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டு அதன் மீது விமானக் குண்டுவீச்சுகளை மழைபோலப் பொழிகிறது இலங்கை.இன்றைய நிலையில் தனது சொந்த நாட்டின் மீதே விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தும் ஒரே நாடும் அரசும் இலங்கைதான். இதேபோல முன்னர் சதாமின் ஈராக் அரசு, ஈராக்கின் வடக்கில் குர்திஷ் போராளிகள் செயற்பட்ட பிரதேசங்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியபோது அதைத் தடுக்க அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள் கடும் நடவடிக்கை ஒன்றை எடுத்தன.அது, ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதன் வடபகுதிப் பிரதேசம் என்றாலும், அதன் மீது ஈராக் விமானங்கள் கூட பறக்கக்கூடாது என்று ‘விமானப் பறப்புக்குத் தடை விதிக்கப்பட்ட பிரதேசமாக’ அதை அறிவித்தது அமெரிக்கா. மீறி ஈராக் விமானங்கள் பறந்தால் சுடப்படும் என அமெரிக்கா எச்சரித்து, ஈராக்கின் விமானக்குண்டு வீச்சால் ஈராக்கின் குர்திஷ் மக்களுக்கு ஏற்படக் கூடிய பேராபத்தை இப்படித் தடுத்தது.இலங்கைக்குப் பக்கத்தில் வலுவான விமானப் படையையும், வான் வழிப் பாதுகாப்புப் பொறிமுறையையும் கொண்டுள்ள இந்தியா,ஈழத் தமிழர்கள் மீதான விமானக் குண்டுவீச்சுப் பேரழிவைத் தடுப்பதற்காக அத்தகைய ஓர் எல்லை வரை சென்று தடை அறிவிப்புச் செய்யலாம் என்ற ஊகங்கள் கசியத் தொடங்கியுள்ளன. அந்த நிலையில்தான் இப்போது இந்தியாவின் கவலையை - சிரத்தையை - கவனத்தில் எடுத்து, நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்ற பாவனையிலான நடிப்பை ஆரம்பித்திருக்கிறது கொழும்பு.
*****

No comments: