ஈழத் தமிழர் பிரச்சினையில் அ. தி. மு.க.வும் ம. தி. மு. க.வும் தனிமைப்பட்டு விட்டன என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எந்த பொதுப் பிரச்சினைகளிலும் கூட ஒன்று சேர மறுத்து, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்று செயல்படுவது மிகவும் வேதனையும் வெட்கமும் அடைய வேண்டிய ஒன்றாகும். முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முயற்சி எடுத்துள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும் இன உணர்வும் உள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வர்.ஆனால் அ. தி. மு. க.வும் ம. தி. மு.க.வும் முதலமைச்சர் கருணாநிதி கூட்டவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று அவசர அவசரமாக அறிவித்து இருப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட பந்தலிலே பாகற்காய், ஒப்பாரி பாடுவது போல் அரசியல் கூட்டணி லாபம் பார்க்க முனைவதன் மூலம் சிங்கள பேரினவாதிகளுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தமிழினம் ஒன்றுபட விரும்புவோருக்கு ஆறாத மனப்புண்ணையும் ஏற்படுத்தி விட்டனர்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை, ஈழத்தில் விடிவு, விடியல் சம்பந்தமாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை எடுத்து வைப்பதுதானே சரியான பொறுப்பான அணுகுமுறையாக இருக்க முடியும்? ஆக்க பூர்வமான பிரச்சினையில் ஏதாவது ஒரு திருப்பத்தை உருவாக்க முடியும் என்றால் அது தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியால் தான் முடியும் என்பது உலகறிந்த உண்மை. ஜெயலலிதாவின் நிலைப்பாட்டினையே 19 மாதம் ஈழத் தமிழருக்காகவே சிறையில் இருந்தேன் என்று கூறும் சகோதரர் வைகோவும் அதேநிலை எடுக்கிறார் என்றால் இதை விட விசித்திர அரசியல் கேலிக் கூத்து வேறு உண்டா? உலக தமிழர்களுக்கு உண்மை விளங்காமற் போகாது. ம. தி. மு. க., அ. தி. மு. க. எடுக்கும் இந்த முடிவை கண்டு அவர்கள் என்ன நினைப்பார்கள்? விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா. நடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களும் ஒட்டுமொத்தமாக செயல்படும் போக்கிற்கு மகிழ்ச்சியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அவர் இவர்களின் நிலை கண்டு என்ன நினைப்பார். தமிழர்களை பாதுகாக்கும் அரண் விடுதலைப் புலிகள் அமைப்புதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்த யதார்த்தத்தையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுத்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா? தி. மு.க.வுக்கு எதிராக இருக்கும் சில அரசியல் கட்சிகள் கூட அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முன்வந்துள்ளன. இந்த நிலையில் அ. தி. மு. க.வும் ம. தி.மு. க.வும் முக்கியமான ஈழத் தமிழர் பிரச்சினையில் தனிமைப்பட்டு போய் விட்டன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pathivu.com
*****








No comments:
Post a Comment