சிறிலங்கா அரசைக் கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகத்தினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.10.08) இராமேஸ்வரத்தில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளனர்.ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிறிலங்காவைக் கண்டித்து தமிழ்த் திரையுலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கறுப்புப் பட்டி அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழ்த் திரையுலகம் சார்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கின்றது. அதில் நடிகர்- நடிகைகள் உட்பட திரையுலத்தைச் சேர்ந்த அனைத்துப்பிரிவினரும் கலந்துகொள்கின்றனர்.
இதுபற்றிய ஆலோசனைக்கூட்டம், சென்னை பிலிம் சேம்பர் கருத்தரங்கு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
அதில் திரைப்பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் தலைமை தாங்கினார். பிலிம் சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் இயக்குநர்கள் சங்க தலைவரான இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:
- தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், சிங்கள இராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புக்கள் ஒருசேர நின்று குரல் கொடுத்து வருகின்றன. அவர்களுடன் கலையுலகமும் சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், சிங்கள இராணுவத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
- சிங்கள இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில், திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் ஒருங்கிணைந்து, உரத்த குரலில் எங்களின் கண்டனத்தை தெரிவிக்க முடிவு செய்து இருக்கின்றோம்.
- முதல்கட்டமாக, தமிழர் பகுதியில் குண்டு வீச்சு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அறிவித்து அமைதி திரும்ப உதவ வேண்டும்.
- உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு நேரடியாக உதவ வேண்டும்.
- ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு கொடுத்து வரும் இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
- தமிழக மீனவர்கள் கடல் எல்லை பகுதியில் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
- இந்தியா-சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவல் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.
- முறையாக ஒரு தூதுக்குழு அமைத்து, இலங்கையில் நடக்கும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
- சிறிலங்கா அரசுக்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வருகின்ற 18, 19, 20 ஆகிய நாட்களில் தமிழ் திரையுலகத்தின் எல்லா வேலைகளும் நிறுத்தப்படும். படப்பிடிப்பு உட்பட திரைப்பட தயாரிப்பு தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறாது.
தமிழ்த் திரையுலத்தைச் சேர்ந்த அனைத்துப்பிரிவினரும் வருகிற 18 ஆம் நாள் சென்னையில் இருந்து தனி தொடருந்திலும் பேருந்துகளிலும் புறப்பட்டு இராமேஸ்வரம் செல்கின்றோம்.
19 ஆம் நாள் இராமேஸ்வரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெறும்.
இராமேஸ்வரம் கடலோரத்தில் நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில், திரையுலகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கும். அந்த குரல், சிறிலங்காவுக்கு எட்ட வேண்டும். மத்திய அரசுக்கும் எட்ட வேண்டும் என்றார் பாரதிராஜா.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் அன்பாலயா பிரபாகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன் உள்பட ஏராளமான பட அதிபர்கள், விக்ரமன், செல்வமணி, வி.சேகர், மனோஜ்குமார், தங்கர்பச்சான் உள்பட பல இயக்குநர்கள், ஆனந்தா சுரேஷ், வித்யாசாகர், பாலசுந்தரம், அனந்து மற்றும் ஏராளமான விநியோகஸ்தர்கள், அபிராமி இராமநாதன், பன்னீர்செல்வம் உள்பட பல திரையரங்க அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த உமாசங்கர்பாபு, ஹகில்டு தலைவர் ருக்மாங்கதன், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பிறைசூடன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
puthinam.com
*****








No comments:
Post a Comment