இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை இருபது வீதத்துக்கும் குறைவாக இருக்கலாம். இந்த சிறிய இலங்கைத் தீவில் பெரும்பான்மை இனமாக சிங்கள இனம் இருக்கலாம். அதற்காகப் பேரினவாதத் திமிரோடும் மேலாண்மைச் சிந்தனையோடும் சிறுபான்மையினரான தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி ஆள பௌத்த - சிங்கள மேலாதிக்கம் சிந்திக்குமானால் ஈழத் தமிழினத்துக்காக உலகத் தமிழ் உறவுகள் அனைத்தும் கொதித்தெழுந்து ஆர்ப்பரிக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
‘தானாடாவிட்டாலும் சதையாடும்’ என்ற வாக்குக்கு இணங்க தமிழக உறவுகள் ஈழத் தமிழருக்காக சீறி எழுந்து வெளிப்படுத்திவரும் சீற்றம் புதுடில்லியையும், அதன் மூலம் கொழும்பையும் ஓர் உலுப்பு உலுப்பியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
இதே சீற்றத்தையும், ஆவேசத்தையும் பிற புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும் ஒன்றுபட்டு வெளிப்படுத்த வேண்டிய வேளை வந்துவிட்டது. அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
தமிழகத்தின் எழுச்சி காரணமாக புதுடில்லி விரும்பியோ, விரும்பாமலோ, தமிழகத்தின் கருத்து நிலைப்பாட்டை உள்வாங்கி, அதற்கு இயைந்து, நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதி வழித் தீர்வுக்கான எத்தனங்கள் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மீது இந்தியா பகிரங்க அழுத்தம் பிரயோகிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.
இது தொடர்பான இந்தியாவின் கருத்து நிலைப்பாடு பகிரங்கமாகவும், பட்டவர்த்தனமாகவும், வெளிவெளியாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதே கருத்தை முன்னர் தனித்தனியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகள் அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கின்றன.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் பிராந்திய வல்லாதிக்க நாடான இந்தியாவின் கருத்து நிலைப்பாட்டையும் உள்வாங்கிச் செயற்பட வேண்டும் என்றும் அவை கருத்து வெளியிட்டு வந்திருக்கின்றன.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிகளில் இந்த தசாப்தத்தின் முற்பாதியில் அனுசரணைத் தரப்பாகச் செயற்பட்டு வந்த நோர்வேயும் கூட இந்தியாவுடன் இணங்கி, நடவடிக்கைகளை எடுப்பது குறித்து வலியுறுத்தி வந்திருப்பதும் மறக்கற்பாலது.
இத்தகைய நிலையில் இப்போது இலங்கையில் அமைதி நிலைமையை ஏற்படுத்துவதற்கு வலியுறுத்தித் தனது கருத்து நிலைப்பாட்டை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் புதுடில்லி வெளியிடும் சூழ்நிலை வந்திருக்கின்றது.
ஆகவே, அமைதி நிலையை ஏற்படுத்துவதற்காக இந்தியா வலியுறுத்தும் விவகாரங்களை அதற்கான இந்தியாவின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை - சர்வதேசம் இந்தச் சந்தர்ப்பத்தில் தன் பங்குக்கு வரவேற்று, ஊக்கப்படுத்தி, உற்சாகமளிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.
சர்வதேச பொலிஸ் காரனான அமெரிக்கா, பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அனுசரணைப் பணி வகித்த நோர்வே, அளவுக்கு மீறிய தன்னுடைய பொருளாதார உதவிகளை இலங்கைக்கு அள்ளிக்கொட்டி, போரியல் போக்கில் அது செல்வதற்கு உதவியளித்து அப்பாதையில் அதனை நெட்டித் தள்ளிய ஜப்பான் போன்றவை எல்லாம் இவ்விடயத்தில் இந்தியாவின் தற்போதைய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் சிலாகித்துப் பகிரங்கமாக வரவேற்கும் கடமையிலும் பொறுப்பிலும் உள்ளன.
இந்த விடயத்தில் அவை மௌனம் சாதிக்குமானால் அது, போரியல் தீவிரத்தில் வெறி கொண்டலையும் கொழும்பு அரசின் போக்குக்கு சர்வதேசம் வழங்கும் அங்கீகாரமாக அர்த்தப்படுத்தப்பட்டு விடலாம்.
எனவே, இலங்கை விடயத்தை ஒட்டி கொழும்பு அரசுக்கு இந்தியா தற்போது கொடுக்கும் அழுத்தத்தை சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றும் வெளிப்படையாகவே வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்கத்தக்க விதத்தில் அந்தந்த நாடுகளை வலியுறுத்தி வற்புறுத்தும் பொறுப்பு அந்தந்த நாடுகளில் வதியும் புலம் பெயர் தமிழர்களையும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் தரப்புகளையும் சார்ந்திருக்கின்றது. அவர்கள் விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய விவகாரம் இது.
யுத்தத்தை நிறுத்தி, அப்பாவி மக்களின் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் அமைதித் தீர்வு முயற்சிகளை ஆரம்பிக்கும்படி கொழும்புக்கு, இப்போது புதுடில்லி கொடுக்கும் அழுத்தத்துக்கு, ஆதரவான உணர்வெழுச்சிப் போராட்டங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் தேசங்களிலும் நடத்தப்படுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
*****








No comments:
Post a Comment