இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் நாம் கொண்ட நம்பிக்கை வீண போகவில்லை. அதே நேரத்தில் அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகள் நமக்கு முழு மன நிறைவைத் தரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை தமிழர்களை காக்கவும் அவர்தம் உரிமைகளை அறவழியில், அமைதி வழியில், அரசியல்ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகின்ற வழிமுறைகளை பின்பற்றி திமுக முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கு ஒத்து வருகின்ற கட்சிகள், இலங்கை தமிழர்பால் பரிவு கொண்ட இயக்கங்கள், அவற்றின் தலைவர்கள், முன்னோடிகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு, அவர்களும் ஈடுபாடு கொண்டு நடத்திய பல போராட்டங்களையும் செய்த தியாகங்களையும் உலகம் முழுதும் இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் தமிழர் தம் தூய நெஞ்சங்கள் அறியும்.
படுகொலைகளாலும், பட்டினியாலும் அங்கு தமிழ் மக்கள் மாண்டு மடிந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவம் பொழிகின்ற குண்டுகளால் தினம் தினம் அழிகின்றது தமிழ் இனம். அந்த அழிவிலிருந்து நம் இனத்தை மீட்க நாமெல்லாம் ஒன்று கூடி இந்தியப் பேரரசின் உதவியை நாடி நிற்கின்றோம்.
இந்திய துணை கண்டத்தில் இப்படி உதவி கேட்டு ஓலமிடும் அனாதை கூட்டமாக ஒரு காலத்தில் இலங்கையையே ஆண்ட பரம்பரையாய் விளங்கிய அந்த தமிழ் இனம் இன்று தவியாய் தவித்து நிற்கிறது. அந்த தவிப்பை போக்க ஈழத் தமிழ் இனத்தில் இளஞ்சிறார், குழந்தைகள் எனும் புல் பூண்டுகளை கூட அழித்து விடத்துடிக்கும் இனப்படுகொலையை தடுக்க வழி காண வேண்டுமென்பதற்கு தான் கடந்த அக்டோபர் 14ம் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து, அரசின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம்.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்தியப் பேரரசு ஏற்று நடவடிக்கை எடுத்திடும் என்ற நம்பிக்கையோடு உரியவர்களுக்கு அனுப்பி வைத்தோம், நம்பிக்கை வீண் போகவில்லை.
கடந்த 6ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் நான் புது டெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணிகளாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்கிட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பங்களுக்கும் இனி ஆளாகவே கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன்.பிரதமர் மன்மோகன் சிங் நான் உடனடியாக கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்று கூறினார்.
நாம் நம்பிக்கை கொள்கின்ற அளவிற்கு 6ம் தேதி மாலையே பிரதமர் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து, அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரை வரச்சொல்லி, அவரை எச்சரித்து இப்படி தமிழகத்திலே இருந்து அபயக்குரல் வந்திருக்கிறது. கண்டனக்குரல் வந்திருக்கின்றது. தமிழர்கள் தங்களுடைய கவலையைத் தெரிவித்திருக்கின்றார்கள்.நீங்கள் எங்களுடைய கருத்தை அறிந்து ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற அத்தகைய எச்சரிக்கையை இந்திய அரசு அவர்களுக்குச் செய்தது.
இதைத் தொடர்ந்து 14ம் தேதி நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்ட தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தோம்.இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 16ம் தேதி இரவு வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நிலவும் சூழ்நிலை இந்தியாவில் உள்ள எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. தாங்கள் உருவாக்காத சூழ்நிலையின் பிடியில் அப்பாவி மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை நினைத்துத் தான் நாங்கள் குறிப்பாக கவலைப்படுகிறோம் என்றெல்லாம் சொல்லியிருப்பதை பார்க்கும்போது, அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றி நாம் அனுப்பிய தீர்மானங்களை யெல்லாம் நன்றாகப் பரிசீலித்து அதனையேற்றுக் கொள்ளும் வகையிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் கூடுகிறது.
நமது பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் 18ம் தேதி நேரடியாகவே பேசியிருக்கிறார். அந்த பேச்சின் போது, இலங்கையின் வடக்கு பகுதியில் அப்பாவி தமிழர்கள் இரக்கமற்ற முறையில் தாக்கப்படுவது குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டுமென்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமிழரின் உரிமையும் நலன்களும் பாதிக்கப்படக் கூடாதென்றும் பிரதமர் கண்டிப்புடன் தெரிவித்தார் என்று பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையிலே உள்ள நிலைமைகளை அறிய வெளி உறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கே அனுப்பி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது. தாக்குதல்களில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு, அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார் என்று செய்திகள் வந்துள்ளன.
கடந்த 16ம் தேதி ஐ.நாவால் அனுப்பி வைக்கப்பட்ட 750 டன் உணவுப் பொருட்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் வினியோகிக்க மறுக்கப்பட்ட நிலையில், பிரதமர் பேசிய பேச்சின் விளைவாக - பிரதமர் பேசிய அன்றைய தினமே 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அந்த உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.தொடர்ந்து மத்திய அரசின் வெளி உறவு துறை செயலாளர் சிவசங்கரமேனன் டெல்லியிலே உள்ள இலங்கை தூதுவரை அழைத்து இந்திய அரசின் கண்டனத்தை உடனடியாக இலங்கைக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக மத்திய வெளி உறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 22ம் தேதி நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக வைத்த அறிக்கையில்,"இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவி பொதுமக்கள் படும் இன்னல்களும், இடம் பெயர்வோர் அதிகரித்து வருவது குறித்தும் மத்திய அரசு பெரிதும் கவலை கொண்டுள்ளது.எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நாம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.
இலங்கையிலே உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வு குறித்து நமக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே விரைவில் இந்தியா வரவுள்ளார். இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்தின்படி தமிழ் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலே இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் நல்வாழ்க்கையும் பாதிக்கப்படக் கூடாது. கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக நடைமுறை தொடர இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
பிரதமரும், வெளிவிவகாரத் துறை அமைச்சரும் நமது அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் தீர்மானத்தின் மீது எடுத்து கொண்டுள்ள நடவடிக்கைகளும் நமது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுகின்ற வகையிலும் அமைந்துள்ளதை அறிந்திட முடிகிறது.
ஆனாலும் இதுவே நமக்கு போதுமான முழு மன நிறைவைத் தரக் கூடிய விளைவாகும் என்று எண்ணிட முடியவில்லை.தரப்படும் உறுதி மொழிகள் தவறாமல் நிறைவேற்றப்படவும், இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இனவெறியும் அறவே அகற்றப்பட; தமிழர்கள் இலங்கையை ஆண்ட பரம்பரையினராம் என்ற அந்தப் பெருமையுடன் தமிழ் இனத்திற்கான மதிப்பும் மரியாதையும் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் மக்களுக்குப் போதுமான சமத்துவ நிலையும் உருவாகி, அங்கே மனித நேயம் மலருகிறது, இன ஒற்றுமை ஒளிருகிறது என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டாக வேண்டும்.
எனவே இப்போது படிப்படியாக நிறைவேறி வருகிற தாய்த்தமிழக மக்களின் நீண்ட காலக்கனவு; முழுமையாக நிறைவேறிடவும் இலங்கை தமிழர்க்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும், அமைதியின் சுகந்தம் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திடவும், அடிமை விலங்கு அறுபடவும், ஆதிக்க சக்தி விலகிடவும், அடுக்கடுக்கான முயற்சிகளில் அன்னை தமிழகத்தில் உள்ள நாம் அறவழிச்செயல் முறைகளில் ஈடுபட வேண்டுமல்லவா; அதற்கான உந்து சக்திகளில் ஒன்று தான் நாம் மேற்கொண்ட மனிதச் சங்கிலி.அந்தச் சங்கிலியில் சங்கமமான தமிழ் இன மக்களின் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம். அதில் இணைந்திட்ட நாம்; இலங்கை தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
*****








No comments:
Post a Comment