Monday, 13 October 2008

தமிழக தலைவர்களுக்கு நிலைமையை விளக்குவதில் கூட்டமைப்பினர் மும்முரம்.

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை தமிழக அரசியலில் சூடுபிடித்திருக்கும் தற்போதைய சூழலில், அங்குள்ள பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் அவல நிலை குறித்தும் கள நிலைமைகள் பற்றியும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர் என சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காகக் கூட்டியுள்ள சர்வகட்சி மாநாடு நாளை சென்னையில் நடைபெற இருக்கையில் அங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் காத்திரமான முடிவு ஒன்று எடுக்கப்படுவதற்கான தூண்டுதல் செயற்பாடாக அந்த மாநாட்டில் பங்குபற்றும் கட்சிகளின் தலைவர்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்து விளக்கமளிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வார இறுதியில் சென்னையிலிருந்து கொழும்பு வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா, வார இறுதியில் கொழும்பு வந்த கையோடே சென்னை திரும்பிவிட்டார்.அவரும் சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் தங்களுக்குள் இணைந்தும், தனித்தனியாகப் பிரிந்தும் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து விளக்கமளிக்கும் நடவடிக்கையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நாடாளுமன்றக்குழு அங்கத்தவராக ஜெனிவாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனும் ஜெனிவாவில் இருந்து சென்னை திரும்பி, மேற்படி விளக்கமளிக்கும் நடவடிக்கையில் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள தெரிவித்தன.
uthayan.com
*****

No comments: