Sunday, 12 October 2008

** கருணாநிதி சர்வகட்சி மாநாட்டை நடத்தும் நாளை மறுதினம் இலங்கைத் தமிழருக்காக ஜெயலலிதா எம்.ஜி.ஆர். சமாதி முன் உண்ணாவிரதம்.

இலங்கைத்தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளநிலையில் அக்கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அதேநாளில் சென்னையில் எம்.ஜி.ஆர்.சமாதிக்கு முன்னால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கப்போவதாக அவரின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதீய ஜனதாவின் சிரேஷ்ட தலைவர் அத்வானி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உட்பட முக்கியமான இந்திய தேசியக்கட்சிகளின் தலைவர்களை தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாகவும் அவர்களிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பேசுவது தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் கலந்தாராயப்படுமென தெரிகிறது.

இலங்கைத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை மகஜராக தயாரித்து அவற்றை தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் கையளித்து ஆதரவு கோரவும் திட்டமிடப்படுகிறது.

இதேவேளை, அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில் அன்றையதினம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி. இராமச்சந்திரனின் சமாதி முன் போராட்டத்தை நடத்த அவர் தீர்மானித்திருக்கிறார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க.வின் நேச அணிக்கட்சிகளான ம.தி.மு.க.உட்பட கட்சிகளின் தலைவர்களும் கட்சியின் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.
*****

No comments: