Saturday 3 January 2009

** வன்னியில் நடாத்தப்படும் கொடூர வான் தாக்குதலை நிறுத்த, வன்னித் தமிழர் பேரவை ஐ.நா. செயலரிடம் கோரிக்கை

வன்னியில் நடாத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதலை நிறுத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காசா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை, வன்னியில் நடாத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீதும் கொண்டுவர விளைகின்றோம்.

இரவு பகல் பாராது தினமும் பொது மக்கள் இலக்குகள் மீது சிறீலங்கா குண்டவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. சிறீலங்கா வான்படையின் புள்ளிவபரப்படி 2007ம் அண்டில் 900 தாக்குதல்களும், 2008ம் ஆண்டில் இதேபோன்ற 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத் தாக்குதல்கள் மாபெரும் உயிர் அழிவை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை சிறீலங்கா அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதல்களாகவே செய்கின்றது.

இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும், யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.
அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே சிறிலங்கா கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது.

2008-12-31, 2009-01-01, 2009-01-02 நாட்களில் இடம்பெற்ற இழப்புக்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31ம் திகதி நாலு பொது மக்கள் கொல்லப்பட்டு 19 பேர் படுகாயம் அடைந்தனர். 01ம் திகதி ஆறு பொது மக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயம் அடைந்தனர். 02ம் திகதி ஏழு பொது மக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இத்தகைய மனிதப் படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை மேன்மைதங்கிய தங்களால் எடுக்கப்படும் என்று நம்புகின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
__________
Sankathi.com

No comments: