Saturday 3 January 2009

** தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் பேசவும் - அமெரிக்கா

தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் சிறீலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி நகரை சிறீலங்கா படையினர் கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து விடுவோம் என சிறீலங்கா அரசு கூறிவரும் நிலையில், இந்தியா உட்பட அனைத்துலக நாடுகள் அமைதி காத்து வருகின்றன.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளதால் எழுந்துள்ள இராசரீக கருத்து முரண்பாடுகளின் மத்தியில், ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காது அமெரிக்கா கண்துடைப்புக் கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என சிறீலங்கா அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் காரணமாகவே இந்தியா, நோர்வே உட்பட அனைத்து நாடுகளும் பேச்சுவார்த்தை பற்றி பேசாது மெளனித்து இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி நகரில் இருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கினாலும் போராட்டம் தொடரும் என, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் கிளிநொச்சி நகரில் இருந்து பின்வாங்கும் திட்டத்தை விடுதலைப் புலிகள் ஏற்கனவே தீர்மானித்து விட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
_________
Pathivu.com

No comments: