Saturday 3 January 2009

** ஆட்சியின் வழியில் படைகள்

உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவரின் சடலத்தை, அரச படைகளைச் சேர்ந்தோர் என்று கூறப்படும் அணியினர் கேவலமாகக் கையாண்டனர் என்று வெளியான தகவல் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. எனினும் ஊடகங்களில் இவ்விடயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது.மேற்படி அநாகரிகமான செயற்பாட்டை கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோப் படமாக யாரோ ஒருவர் எடுத்துள்ளமையை அடுத்து, அந்தப் படம் இப்போது பல தரப்புகளுக்கும் அனுப்பப்பட்டு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. இந்த விவகாரம் குறித்து, தலையிட்டு, விசாரித்து உண்மையை அம்பலப்படுத்தும்படி ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஐ.நா. பொதுச் செயலாளரைக் கோரியிருக்கின்றது.


ஆனால், இவ்விடயத்தில் ஐ.நா.தலையிடுமா என்பது கேள்வியே.வன்னிப் பெருநிலப்பரப்பு மீது கொடூர யுத்தத்தை இலங்கை அரசு தொடுத்திருக்கின்றது. இதனால் அங்கு மனிதப் பேரவல நெருக்கடிஎழுந்துள்ளது. யுத்தக் கொடூரத்தால் வீடு,வாசல்களை விட்டு வெளியேறி மரநிழல்களிலும், காடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ள பல லட்சம் மக்கள் பேரிடர்களை அனுபவிக்கின்றார்கள். போதாக்குறைக்கு பெரு மழையும், வெள்ளமும் சேர்ந்து அவர்களை சொல்லொணாத் துன்ப,துயரத்துக்குள் ஆழத்தி நிற்கின்றன.


இச்சமயத்தில் அவர்களுக்கு ஆபத்பாந்தவர்களாக உதவி வழங்கக்கூடிய தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தோரையும், ஐ.நா. முகவர்களையும் அங்கிருந்து வெளியேற்றி விட்டது இலங்கை அரசு.இலங்கை வரலாற்றில் மிக மோசமான மனிதப் பேரவலத்தைச் சந்திக்கும் கொடூரம் வன்னி மக்களுக்கு இப்படி நேர்ந்திருக்கையில், அவர்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் ஐ.நா. வெறுமனே பார்த்திருக்கின்றது.அப்படிப்பட்ட ஐ.நா., மேற்படி விடுதலைப் புலிகளின் பெண் போராளியின் சடலம் கேவலமான முறையில் கையாளப்பட்ட அநாகரிகம் குறித்து ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பது அபத்தமாகும்.


மேற்படி சம்பவத்தை அம்பலப்படுத்தும் வீடியோ பதிவு குறித்து அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் -உண்மையில் தவறிழைக்கப்பட்டிருக்குமானால் அதை இழைத்தோர் இராணுவ நீதிமன்றத் தண்டனைக்கு உள்ளாவர் எனவும் -அரசின் சார்பில் பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல உறுதியளித்திருக்கின்றார்.தமிழர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பில் இழைக்கப்படும் கொடூரங்கள், குற்றங்கள் தொடர்பில் இந்த அரசு - குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு - எடுத்தவை எனக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து ஈழத் தமிழர்களுக்குத் திருப்தி ஏதும் இல்லை என்ற பின்னணியில் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இப்போது அளித்துள்ள உறுதி மொழியும் தமிழர்களைப் பொறுத்தவரை சிரத்தைக்கோ, கருத்துக்கோ எடுக்கத்தக்க விடயமே அல்ல என்பதே உண்மை.எனினும், உயிரிழந்த எதிரியின் - அல்லது புலிகளின் - சடலங்கள் சம்பந்தமாக கொழும்பு அரசும், அதன் அதிகாரிகளும் இதுவரை எடுத்து வந்த நடவடிக்கைகளும், செயற்பாடுகளும், மேற்படி வீடியோப் படத்தில் பெண் புலி ஒருவரின் சடலம் தொடர்பில் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்று கூறப்படும் அரச படையினர் விடயத்தில் அவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உத்தரவிடுவதற்கான தார்மீக அதிகாரத்தை அரசுத் தலைமைக்கு இல்லாமல் செய்துவிட்டன என்பதே நியாயமாகும்.போரில் உயிரிழந்தவர் எதிரி என்றாலும் அவரின் சடலமும், அச்சடலம் நீங்காத்துயில் கொள்ளும் சமாதியும் மரியாதைக்குரியவை.


எதிரியானாலும் உயிரிழந்த பின் இந்த மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதே மனித நாகரிகப் பண்பியல்பாகும். சட்டமும் அதுவே. நீதியும் அதுவே. மனித நாகரிக வழக்காறும் அதுவே.ஆனால் அந்த நாகரிக அடிப்படையையே தொலைத்து அநாகரிகமாக நடந்துவரும் ஓர் அரசுக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும், மேற்படி வீடியோப் படத்தில் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் படையினர் தொடர்பில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையோ இராணுவ நீதிமன்ற நடவடிக்கையோ எடுக்க அருகதை ஏதும் இல்லை என்பதுதான் நிஜம்.


யுத்தங்களில் கொல்லப்பட்ட எதிரிகளின் சடலங்கள் புதைக்கப்பட்ட சமாதிகளைப் போற்றிப் பாதுகாத்து, மரியாதை செய்வது உலக வழக்கு; நியதி; நடைமுறை.ஆனால், இவ்வுலக வாழ்வைத் துறந்து மீளாத் துயில் கொள்ளும் புலிகளைக் கூட அப்படித் துயில் கொள்ள விடாது கோரத்தாண்டவம் ஆடியது - ஆடி வருகிறது - சிங்களம்.தான் கைப்பற்றிய பிரதேசங்களில் இருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை - போராளிகளின் சமாதிகளை - வித்துடல் புதைக்கப்பட்டு நடு கற்கள் நாட்டப்பட்ட பகுதிகளை - அப்பிரதேசம் கைப்பற்றப்பட்டவுடனேயே புல்டோஸர் கொண்டு சிதைத்து அழிக்கும் - மனித நாகரிகத்துக்கே கேவலமான இழிசெயலை - காட்டுமிராண்டித்தனத்தை - மோசமான நடவடிக்கையை - தொடர்ந்து செய்து வந்திருக்கின்றது கொழும்பு அரசு.


‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ என்பது போல, பல்லாயிரக்கணக்கில் புலிகளின் சமாதிகளை புல்டோஸர் கொண்டு இடித்து, அழித்து, கிளறி, சின்னாபின்னமாக்கி, நாசமாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நாட்டின் தேசியக் கொள்கையாகக் கருதி அரசு முன்னெடுத்து வருகையில் - அதே வழியில் ஒரு பெண் போராளியின் சடலத்தில் அதே காட்டுமிராண்டித்தனத்தை இந்தப் படையினர் செய்திருக்கின்றார்கள் போலும்!
__________
Uthayan.com

No comments: