Thursday 8 January 2009

** வன்முறைக் கலாசாரம் மூலம் ஊடகக் குரல்வளை நசிப்பு

இலங்கையில் ஊடக சுதந்திரம் எத்தகைய மிக மோசமான கட்டத்தில் இருக்கின்றது என்பதற்கு நேற்று விடிகாலை 2 மணியளவில் பன்னிப்பிட்டியவில் நடந்தேறிய கோரம் - கொடூரம் - நல்லதோர் சாட்சியாக அமைந்திருக்கின்றது. தலைநகரில் - அதுவும் இலங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த - மூன்று மொழியிலுமான - தொலைக்காட்சி ஊடகமான ‘சிரச’, ‘எம்.ரி.வி.’, ‘சக்தி’ தொலைக்காட்சிச் சேவைக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து தென்னிலங்கை மாத்திரமல்லாமல், ஊடக சுதந்திரத்தில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருமே அதிர்ச்சியில் உறைந்து போகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அதிகம் மக்கள் வரவேற்புப் பெற்ற ‘சக்தி’ தொலைக்காட்சி சேவைக்கே இந்தக் கதி என்றால் இலங்கையில் ஏனைய ஊடகங்களின் ஆபத்து நிலைமை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது.தலைநகரில் - பன்னிப்பிட்டியவில் - இருபது பேர் கொண்ட குண்டர் குழு ஒன்று முகமூடி அணிந்தபடி இயந்திரத் துப்பாக்கிகள், கிரனேட்டுகள் சகிதம், தொலைக்காட்சிச் சேவை நிலையத்தின் கலையகம் மற்றும் அலுவலகத்துக்குள் புகுந்து, கண்மண் தெரியாமல் சுட்டு, அங்கிருந்த பெறுமதியான தொழில்நுட்பக் கருவிகளைத் தேடித் தேடி நாசமாக்கி, நெருப்பிட்டு அழித்து சுமார் இருபது நிமிட நேரம் கோர வெறியாட்டம் நடத்திவிட்டு, கிரனேட்டை அங்கு வெடிக்க வைத்த பின்னர் சாவகாசமாக வெளியேறியிருக்கின்றது.

இருபது பேர், சுமார் இருபது நிமிட நேரம், புகழும் செல்வாக்கும் பெற்ற தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்து கோரத் தாண்டவம் ஆடிவிட்டு, இப்படி வெகு சாவகாசமாகத் தப்பிச்செல்ல இயலுமானால் -இத்தகைய கொடூரத்தின் பின்னணியில் பச்சைக்கொடி காட்டி, இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த தரப்பின் - சூத்திரதாரிகளின் - கையை அடையாளம் காண்பது நாட்டு மக்களுக்கு அப்படி ஒன்றும் புரியாத காரியம் அல்ல.கிளிநொச்சி மீட்பு போன்ற வெற்றிப் பூரிப்பின் பின்னணியில், ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் பற்றிய உண்மைச் சொரூபம் மக்களின் மனதில் படாமல் அடிபட்டுப் போய்விடும் என்ற நினைப்போடு இந்தக் கொடூரம் புரியப்பட்டிருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி - சர்வதேச ஊடக சுதந்திர தினத்துக்கு முதல் நாள் - முன்னிரவு வேளை முகமூடி அணிந்த ஐந்து, ஆறு ஆயுததாரிகள் யாழ்ப்பாணம் உதயன் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மாதிரி - பின்னர் கொழும்பில் ‘த சண்டே லீடர்’ அச்சகத்துக்குள் புகுந்து அதன் அச்சு இயந்திரங்களைத் தீயிட்டுக் கொளுத்தியமை போல -யாழ்ப்பாணத்தில் உதயனின் களஞ்சியம் தீயிட்டு எரிக்கப்பட்டமை போல -இப்போது பன்னிப்பிட்டியவில் ‘சக்தி’ அலுவலகம் மீது கோரக் கைவரிசையைக் காட்டியிருக்கின்றது அராஜகக் கும்பல்.இருபதுக்கு மேற்பட்ட குண்டர் குழுவினர் வந்து, சுமார் இருபது நிமிட நேரத்துக்கு மேல் ‘சக்தி’ தொலைக்காட்சிக் கலையகத்துக்குள் நிலையெடுத்து, அட்டகாசம் பண்ணிய போதிலும், ‘உதயன்’ அலுவலகத் தாக்குதல் போன்று இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் போனமை தெய்வாதீன அதிஷ்டமே.

இந்த ஆட்சிப் பீடத்தின் கீழ் ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெரும் பயங்கரவாதத்தின் மற்றோர் அங்கமே நேற்று பன்னிப்பிட்டியவில் அரங்கேறியிருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.இத்தகைய இழிசெயல் தாக்குதல்கள் தொடர்கதையாகத் தொடர்கின்ற போதிலும், இவற்றுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் எவரும் கைது செய்யப்படுவதில்லை; சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை என்பதே இங்கு உண்மையான யதார்த்தப் புறநிலையாகும்.

இப்போதும் கூட - கூட்டமாக இருபது பேர் வந்து இந்த அராஜகத்தைப் புரிந்துள்ள நிலையில் கூட - வழமை போன்று - இத்தகைய கொடூரக் குற்றச்செயல் குறித்து யாரும் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ போவதில்லை என்பதை இப்போதே உறுதியாகக் கூறிவிட முடியும்.விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் தலைநகரில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு சீருடைத் தரப்பு குவிக்கப்பட்டிருக்கின்றது. வாகன நகர்வுகள் நுணுக்கமாக அவதானிக்கப்படுகின்றன. சந்திக்குச் சந்தி வாகன மறிப்பும், சோதனைகளும் தொடர்கின்றன. கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக்கொண்டு பாதுகாப்புத் தரப்பு தலைநகரைக் கண்காணித்துக் கொண்டிருக்கத் தக்கதாகத்தான் இருபது பேர் கொண்ட குழு ஒன்று, சிவிலுடையில், முகமூடியணிந்து, இயந்திரத் துப்பாக்கிகளுடன் விடிகாலை வேளை வாகனத்தில் பயணித்து, சக்தி தொலைக்காட்சி நிலையத்துக்குள் கோரத் தாண்டவம் ஆடி, பெரு நாசத்தையும், நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி விட்டு சாவகாசமாகத் திரும்பிச் சென்றிருக்கின்றது.இதிலிருந்து இந்த அராஜகத்தின் பின்புலத்தில் அதிகாரத்தின் அரூபக் கரங்கள் தொடர்புபட்டிருப்பதை நாம் இலகுவாக ஊகித்துக் கொள்ளமுடியும்.

அச்சுறுத்தல்கள் மூலம் அரசியல்வாதிகளை அணி தாவ வைத்துத் தமது காலடியில் விழச் செய்திருக்கும் அதிகாரத் தரப்பு, ஊடகங்களையும் தனக்குச் சாதகமாக வளைத்துப் போட சாம, பேத, தான, தண்ட வழிவகைகளை நாடுகின்றது என்பது வெளிப்படை. அதில் தண்ட வழிமுறையே ‘சக்தி’ தொலைக்காட்சி மீது இப்போது ஏவி விடப்பட்டிருக்கின்றது.
_________
Uthayan.com

No comments: