Friday, 11 January 2008

3-விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு உலகத்தரம் வாய்ந்தது: கொழும்பு ஊடகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரகத் தகவல்கள் மிகவும் துல்லியமானவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டின் முதல் 10 நாட்களில் கொழும்பில் நடைபெற்ற மூன்று பாரிய சம்பவங்கள் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்கலாம் என புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. தற்போது சிறிலங்காவில் அதிகளவான புலனாய்வுதுறை அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களம்,
பயங்கரவாத விசாரணைப் பிரிவு,
படைத்துறை புலனாய்வுப் பணியகம்,
தேசிய புலனாய்வுத் திணைக்களம்,
சிறப்பு விசாரணைப் பிரிவு,
கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவு,
வான்படையினரின் புலனாய்வுப் பிரிவு,
சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவு
ஆகியன இயங்கி வருகின்றன. இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சூள செனிவிரட்ன அதன் தலைவராக கடமையாற்றி வருகின்றார். அவருடன் பிரிகேடியர் கபில ஹெந்தவிதான தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இந்த இரு அதிகாரிகளின் தலைமையிலேயே எல்லாப் புலனாய்வு அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. எனினும் இந்த அமைப்புக்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்கள் இருப்பதில்லை. குறிப்பாக அவர்கள் தகவல்களைக் கூட பரிமாறுவதில்லை. எனவே தான் முக்கிய விசாரணைகளில் கூட அவர்களால் செயற்திறனுடன் பணியாற்ற முடிவதில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த விவகாரத்தை கையாள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. நாட்டின் முழுப் பாதுகாப்புக்கு தேசிய புலனாய்வு அமைப்பே தற்போது பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் சில அரசியல் தலைவர்களும், படை உயர் அதிகாரிகளும் தமது பதவிகளை தக்கவைப்பதற்காக இந்தப் புலானாய்வு அமைப்புக்களை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் உயர் படை அதிகாரிகளின் தகவல் பரிமாற்றங்களையும் ஒட்டுக்கேட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரக தகவல்கள் மிகவும் துல்லியமானவை. பெருமளவிலான சிங்கள மக்களும், அரச படையினரும் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்புக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஒரு பிரதான புலனாய்வு அமைப்பே உள்நாட்டு புலனாய்வு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றது.
உதாரணமாக
இஸ்ரேலின் "மொசாட்", அமைப்பு,
இந்தியாவின் "றோ" அமைப்பு,
அமரிக்காவின் "மத்திய புலனாய்வு அமைப்பு",
ரஷ்யாவின் "கேஜிபி", பாகிஸ்தானின் "உள்ளக புலனாய்வு அமைப்பு"
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சீனாவின் போரியல் மேதையான சன் சூவும் புலனாய்வுத் தகவல்களின் முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். "புலனாய்வுத் தகவல்கள் போரில் முக்கியமானவை, ஏனெனில் முழுப் படையினரின் நகர்வுகளும் அதில் தான் தங்கியுள்ளது. போரியல் உத்திகளுக்கு அவை முக்கியமானவை. மிகவும் நுண்ணிய அறிவு படைத்த தரமிக்கத் தலைவர்களே புலனாய்வுத்துறையிலும், அதன் தரத்திலும் மேலோங்க முடியும், அவர்களே பாரிய வெற்றிகளைப் பெறுவார்கள்" என சன் சூ தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jaalavan@gmail.com

No comments: