இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் நம் சகோதர, சகோதரிகள். செஞ்சோலையில் நம் தமிழ்க் குழந்தைகளைப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவி செய்யக்கூடாது என்று தமிழர்கள் நாம் வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகத் தமிழர்கள் மீதான கன்னட வெறியர்களின் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரைத்துறையின் பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து மாபெரும் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வு நடத்தினர்.
இந்நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
(சத்யராஜின் உரையில் இடம்பெற்றுள்ள சொற்கள் செய்திக்குரிய அளவில் இடம்பெறக் கூடாது என்றாலும் தமிழின உணர்வு நலன் கருதி அப்படியே வெளியிடுகிறோம். (ஆ-ர்)
உங்களை சிரிக்க வைப்பதற்காக உங்களிடம் கைதட்டல் வாங்குவதற்காக சில ஐயிட்டங்களை அள்ளி வீசுவேன். இப்ப அதெல்லாம் எதுவும் செய்யப்போறதுல்ல.
ஏன்னா என்னைப் பொறுத்தவரை இது தமிழனோட உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிற கூட்டம். பொதுவாக சில மேடைகளில் சில பேர் பெயரைச் சொன்னால் கைதட்டல் வாங்கலாம்.
யாருடைய பேரைச் சொன்னா நீங்க கைதட்டுவீங்களோ அவங்களோட பேரையெல்லாம் சொல்லி கை தட்டல் வாங்கலாம்.
(ஆவேசமாக) ஆனால் அப்படி அவங்க பேரைச் சொல்லி நான் கைதட்டல் வாங்கறதுக்குப் பதிலா நான் நாக்கைப் பிடுங்கிகிட்டுச் சாவேன்யா இங்க வந்தது வித்தை காட்டுறதுகில்ல..
கர்நாடகத்துல தமிழனை கன்னடன் அடிக்கிறான். அதுக்கு கண்டனம் தெரிவிக்க வந்திருக்கோம்.
ஒவ்வொரு நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுக்காக வரலைய்யா.
அதிகமா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதிகமா கைதட்டுவ...
அதைவிட கம்மியா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதைவிட கம்மியா கைதட்டுவ..
அப்படி அவங்க பேற சொல்லி கை தட்டல் வாங்குறதைவிட நாக்கைப் புடுங்கிட்டுச் சாவான்யா இந்தத் தமிழன்.
உலகில் வாழும் 10 கோடி தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு இது.
மானமுள்ள தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு.
பொதுவா நான் என்னை மனுசன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்..
ஆனா இன்னையிலிருந்து நான் மனுசன் இல்லை... தமிழன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்.
அப்ப உங்க எல்லாத்துக்கும் ஒரு சந்தேகம் வரும். அப்ப மனுசன் தமிழன் இல்லையா? அப்படின்னு ஒரு சந்தேகம் வரும்.
அப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்யா... தமிழன் மனுசன் இல்லை.... மரம். அப்படின்னுதான் நினைச்சுகிட்டு இருக்காங்க.
தமிழன் ஒரு மனுசனா இல்லாம மரமா இருந்தா என்ன என்ன நடக்கும்?
ஒரு நாய் காலை தூக்கிட்டு வந்து அங்கு சிறுநீர் கழிக்கும். அதை அந்த மரம் சகிச்சுக்கும்.
அந்த வழியா போற ஒருத்தன் அந்த மரத்தை வெட்டிட்டுப் போயி அந்த மரத்துல கட்டில் செய்து கால் மேல கால் போட்டு ஆட்டிகிட்டு இருப்பான்.
அப்புறம் மேசை நாற்காலி செய்து அது மேலயே உட்கார்ந்துக்குவான்.
இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு நாம மரமா வாழ்ந்திகிட்டு இருந்தா நமக்கு மரியாதையே இல்லாம போயிடும்.
மரமா வாழுற தமிழனை மனுசா வாழு-தமிழனா வாழுன்னு சொல்றேன்.
ஏன்னா எந்த மேடையில் எதைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுன்னு எனக்கும் தெரியும்.
கர்நாடகத்தில நம்ம சகோதரனை அடிக்கிறான். அதனால் அது சம்பந்தமா மட்டும்தான் நான் பேசுவேன்.
காந்தி சொல்லியிருக்கார்.. கண்ணுக்கு கண் என்று ஆரம்பிச்சா உலகத்தில இருக்கிற 600 கோடி பேரும் கண்பார்வையற்றவர்களாகத்தான் இருக்கனும். அதனால பழிவாங்குற உணர்ச்சி இருக்கக் கூடாதுன்னு காந்தி சொன்னாரு.
ஆனால் இப்ப அது சரிப்பட்டு வராதுங்க..
ஏன்னா தமிழனோட கண்ணை மகராட்டிரத்துல பால்தாக்கரேன்னு ஒரு ஆள் சிவசேனானு ஆரம்பிச்சு பிடுங்க ஆரம்பிச்சான்...
மலேசியாவுல தமிழன் கண்ணை பிடுங்கறான்...
நம்ம ஈழத்தில் தமிழன் கண்ணை பிடுங்கறான்...
இப்ப கர்நாடகவிலேயும் தமிழனோட கண்ணை பிடுங்கறான்...
கண்ணுக்கு கண் கூடாதுக்கு காந்தி சொன்னதை நாம கடைப்பிடிச்சா இந்த உலகத்துல இருக்கிற 600 கோடி பேரில் 10 கோடி தமிழன் மட்டும் குருடனா இருப்பான்...
மீதி 590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. மறந்துடாதீங்க...
590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. 10 கோடி தமிழன் மட்டும் தான் குருடனா சுத்திகிட்டு இருப்பான்.
ஏற்கெனவே தமிழன் கருத்துக் குருடனாகவும்- சிந்தனைக் குருடனாகவும் சுத்திகிட்டு இருக்கான்.
அவனுக்கு கண்ணும் குருடாகிப் போச்சுன்னா அவனுக்கு வாழ்க்கை மயிர் மாதிரி இருக்கும்... ஞாபகம் வச்சுக்க...
இது இன்னைக்கு நேத்தைக்கு நடக்கிற பிரச்சனை இல்லீங்க...
கர்நாடக முதல்வராக குண்டுராவ் இருந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விருந்துக்குச் சென்றார்.
விருந்தில் நன்றாக சாப்பிட்ட எம்.ஜி.ஆர்., கடைசியில் ஒரு தம்ளர் நீரை அருந்த மறுத்துவிட்டார்
அங்க என் தமிழன் நீரில்லாமல் சாகிறான் என்று நீர் அருந்த மறுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் தமிழர்களுக்காகவே வாழ்ந்தவர்.
எல்லா வகையிலும் கன்னடர்களுக்கு நம்மீது எரிச்சல்.
சாய்குமார் என்ற பிரபல ஒரு கன்னட நடிகர் தனக்குப் பிடித்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று ஒரு பேட்டியிலே கூறியபோது,
ஏன் கன்னட நடிகர் ராஜ்குமாரை பிடித்த நடிகர்னு சொல்லுன்னு சொல்லி அடித்து உதைத்தது.
இதுக்குப் பேர்தான் கன்னட வெறிங்கிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டூழியத்தைப் பார்த்து நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். ஆனால் பல வீரப்பன்களை நீங்கள் இப்போது உருவாக்கிவிடாதீர்கள். அது உங்க கையில்தான் இருக்கிறது.
"நாம் எடுக்கும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்" என்று மாசேதுங் சொல்லியிருக்காரு..
நாங்கள் ஆயுதத்தை எடுக்க விரும்பவில்லை. ஆயுதத்தை எடுக்கக்கூடிய சூழ்நிலையை தயவு செய்து உருவாக்கி விடாதீங்க.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் கர்நாடகவுக்கு எதுவித நட்டமும் இல்லை.
நம்ம நீரை நாமே பயன்படுத்துகிறோம்...
என் பொண்டாட்டி கூட நான் படுக்கிறேன். உனக்கு ஏண்டா வேகுது?
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் உனக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை. நீ எதையாச்சும் சொல்லி அரசியல் பண்ணுவதற்காக பேசுகிறீர்கள்.
வாட்டாள் நாகராஜூன்னு ஒரு பெரிய காமெடியன் இருக்கான். நல்லவேளை அவன் சினிமாவில நடிக்கலை. நம்ம வடிவேலு எல்லாம் கிட்டயே வரமுடியாது.
அந்த வட்டாள் நாகாராஜூ சொல்றாரு, ஈரோடு எல்லாம் கர்நாடகத்துக்கு வந்து சேரனுமாம்.
ஈரோடு- கிருட்டிணகிரி- இந்த சென்னை- கடற்கரை எல்லாம் கர்நாடகத்துக்கு போய் சேரணும். நாம வாயில்ல விரலை வெச்சிகிட்டுப் போகனும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு-
இதையே பேசிகிட்டு இருக்காதே.. நீ கே.பு. ஆகிடுவ...
வந்தாரை வாழ வைக்கவும் தெரியனும்--
வாலை ஆட்டுனா ஒட்ட நறுக்கவும் தெரியனும்யா....
அவன் தாண்டா தமிழன்...
சும்மா வந்தாரை வாழவைப்பேன்னு சொல்லிகிட்டே இருந்தா உம்மேல குதிரை ஏறிட்டுத்தான் இருப்பான்.
நீ குனிஞ்சா ஏறத்தான் செய்வான்.. குனியாம- நிமிர்ந்து நில்லு!
ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினைகள் வரும்போது ஒரு சங்கத்தினர் போராடினால் மற்றவர்கள் தார்மீக ஆதரவு தரலாம்.
ஆனால் ஒரு தமிழன் தாக்கப்படும்போது தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
எங்க இருந்துமே தமிழனுக்கு தண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்றான்யா...
காவிரியிலிருந்து வரக்கூடாது
கிருஷ்ணாவிலிருந்து வரக்கூடாது...
முல்லைப் பெரியாறு இருந்து வரக்கூடாதுன்னு சொல்றான்..
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவே கூடாதுங்கறான்..
எனக்கு மனுசனா வாழனும்தான் ஆசை.
தமிழன் - தமிழன்னு சொல்லி பிரிவினையை பேச எனக்கு ஆசையே இல்லை...
ஆனா பிரிவினை பேச வேண்டிய சூழ்நிலையை- தமிழன்னு மார் தட்டிக்க வேண்டிய சூழ்நிலையை நீதான் கொண்டுவந்திருக்க...
தமிழர்களே உங்களுக்கு அனைத்துக்கும் ஒரு தமிழன் இருக்கிறான்.
மத்தவங்கள தூக்கி வெச்சுக்கிட்டு ஆட வேண்டிய அவசியமே இல்லை.
அய்யா.. நீ சாமி கும்பிட ஆசைப்பட்டா கூட உனக்குத் தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான்...
பழனி முருகன் இருக்கான்...
வடபழனி முருகன் இருக்கான்
திருச்செந்தூர் முருகன் இருக்கான்...
போய் முருகனைக் கும்பிடு...
மதுரை வீரனைக் கும்பிடு
சுடலை மட சாமியைக் கும்பிடு...
உனக்குத் தமிழ்க் கடவுள் 1008 சாமி இருக்கான்யா....
வட நாட்டு சாமி இராமர் சாமியில்ல... இராகவேந்திரர் தேவையில்ல... கேரளா அய்யன் உனக்குத் தேவையில்லை..
முருகன் போதும் உனக்கு.
அந்த அளவுக்கு தமிழனை உணர்ச்சிவசப்பட்டு பேச வைக்கிறாங்க... இது என்ன இந்தியா? கர்நாடகத்துல என்ன வேண்டுமானாலும் செய்வீன்ன நீ இந்தியன் கிடையாதா?.தமிழா! தமிழா! விழித்துக் கொள்!
ஒவ்வொரு விடயத்திலும் தமிழனுக்குத் தீங்கு நடந்தா குரல் கொடு!
இங்க மட்டுமல்ல இலங்கையில் நம்ம தமிழர்கள் தாக்கப்படுகிறார்களா? குரல் கொடுய்யா..
இலங்கையில் இருக்கிற தமிழன் உன் சகோதரன் யா...உன் சகோதரி..
அந்த உணர்ச்சி உனக்கு வேண்டாமா?
இலங்கையில செஞ்சோலைங்கிற பள்ளிக்கூடத்து மேல இலங்கை இராணுவம் குண்டுபோட்டு 60 தமிழ்க் குழந்தைகள் சாகுறாங்க...
அந்த இலங்கை இராணுவத்துக்கு நம்ம இந்திய அரசாங்கம் உதவி செய்யலாமா?
செய்யக்கூடாதுன்னு சொல்லு... சொல்றா....செய்யக்கூடாதுன்னு....
தமிழன் எந்த மூலையிலும் நசுக்கக் கூடாது.. தமிழா நீ குனியாதே...உன் மேல எவனும் குதிரையேற அனுமதிக்காதே... நீ முட்டா...ஆயிடுவ.. என்றார் சத்யராஜ்.
நன்றி புதினம்.
jaalavan@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment