Tuesday, 30 September 2008

36 - இந்தியாவின் பாணியில் தடுப்பரண்களை அமைத்துள்ள புலிகள்:தரைமார்க்கமாக முன்னேற முடியாமலிருக்கும் இராணுவம் - இந்திய இணையத்தளம்.


விடுதலைப் புலிகள் வன்னிப் போர்முனைகளில் இந்திய இராணுவத்தின் பாணியில் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களினால் இலங்கை இராணுவம் தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வந்தாலும், அவர்களின் இராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப்பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் இராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும் சாதுரியமும் புத்திசாலித்தனமும் ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது.

இந்த நிலையில், புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளன. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய இராணுவமும் கையாளுகிறது என்பதுதான்.

பாகிஸ்தானுடனான போரின்போதுதான் இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. உண்மையில் இது பிரெஞ்சுப் பாணி தடுப்பரண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடுப்பரண் மேற்கு மன்னார் கடலோரப் பகுதியில் உள்ள நாச்சிக்குடா முதல், கிழக்கில் உள்ள அக்கராயன்குளம் வரையிலும் நீண்டு காணப்படுகிறது. "ஸிக் ஸாக்' வடிவிலும் மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாகவும் இந்தத் தடுப்பரண் உள்ளது.

முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் பள்ளம் வரும். இதைத் தொடர்ந்து வருவது தாக்குதல் நடத்தும் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்கக்கூடிய பதுங்கு குழிகள். இந்த மூன்றும் சேர்ந்ததுதான் புலிகளின் தடுப்பரணாகும். இந்தப் பதுங்கு குழிகளுக்குள் இருந்தபடி 360 பாகை கோணத்தில் எந்தப் பக்கம் உள்ள எதிரிகளையும் குறிபார்த்துத் தாக்க முடியுமாம்.

கண்ணிவெடிகளை இயக்குவதில் புலிகள் சாதுரியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடி பொறியிலிருந்து அவ்வளவு எளிதில் இராணுவத்தால் தப்ப முடியாதாம். ஒருவேளை அதற்கு அவர்கள் முயன்றால் பதுங்குகுழிகளிலிருந்து வரும் தாக்குதலையும் சமாளிக்க வேண்டும். கண்ணிவெடியையும் தாண்டி அவர்கள் வந்துவிட்டால் அகழிகள் எனப்படும் பள்ளங்களை அவர்களால் நிச்சயம் தாண்ட முடியாதாம்.

இந்த அகழிகள் 10 அடி ஆழமுடையன. இந்தப் பள்ளத்தை கவச வாகனங்களால் நிச்சயம் தாண்ட முடியாது. இப்படி எதிரிகளால் எளிதில் தங்களது பகுதிகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு அரணை விடுதலைப் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனராம்.
இத்தகைய பாதுகாப்பு அரண்களை இதுவரை இலங்கைப் படையினர் சந்தித்ததில்லையாம். இதில் அவர்களுக்கு அனுபவமும் கிடையாதாம். இதுகுறித்தும் தெரியாதாம்.
மேலும், விடுதலைப் புலிகளிடம் மிகவும் அதி நவீனமான ஆயுதங்கள் ஏராளமாக இருக்கிறதாம். ஆனால், போதிய ஆட்கள் இல்லாததே அவர்களின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilwin.com
******

for contact: jaalavan@gmail.com

Monday, 29 September 2008

** நோர்வேயில் உண்ணாநிலைக் கவனயீர்ப்பு போராட்டம் எழுச்சியுடன் ஆரம்பம்



வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து ஜ.நா.உட்பட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு போரட்டமும் இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கியது.



நோர்வே நாடாளமன்றத்திற்கு முன்பாக இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு போரட்டமும் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை தொடரவுள்ளது.



பெரியவர்கள் பெண்கள் என 20 வரையான தமிழீ உறவுகள் காலை 8.00 மணியிலிருந்து அடையாள உண்ணா நிலையை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, நுற்றுக்கனக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் நோர்வே நாடாளமன்றம் முன்பாக அணி திரண்டுள்ளனர்.
நாளை 10மணி முதல் 15 மணி வரை உண்ணாநிலைப் போராட்டத்துடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அதே இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.


நாளைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவான தமது ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்தவுள்ளனர் என நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
pathivu.com
****
for contact: jaalavan@gmail.com

** சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வுக்கு எதிராக புலிகள் முறியடிப்புத் தாக்குதல்.

வன்னேரிக்குளத்துக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இம் முறியடிப்புத் தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்னியின் மேற்குப்பகுதி களத்தில் வன்னேரிக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் கடுமையான முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
puthinam.com
****

for contact: jaalavan@gmail.com

Sunday, 28 September 2008

36 - தடை தாண்டுவார்களா படையினர்?

<விதுரன்>
வன்னிக்களமுனை அதிர்ந்து கொண்டிருக்கிறது. படையினரின் பாரிய முன்னகர்வு முயற்சிகளுக்கெதிராக விடுதலைப் புலிகளும் கடும் பதில் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு என்றுமில்லாதளவுக்கு உக்கிரச் சமர் நடைபெற்று வருகிறது.

எந்த முனையில் திரும்பினாலும் எதிர்த் தாக்குதல் மிகக் கடுமையாயிருப்பதால் முன்நகர்வுக்கான முனைகளை மாற்ற வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர். இது, அடுத்து வரும் நாட்களில் எந்த முனைகளிலும் படையினர் மிகப்பெரும் எதிர்ப்புக்களைச் சந்திக்கப் போவதைக் காட்டுகிறது. வவுனியா - மன்னார் வீதியிலிருந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் முன் பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டியிருந்த போதும் பின்னர் அந்தக் கடும் எதிர்ப்பைத் தளர்த்தியிருந்தனர். இந்தத் தளர்வைச் சாதகமாகப் பயன்படுத்திய படையினர் இன்று எண்பது கிலோ மீற்றரைத் தாண்டி கிளிநொச்சியின் வாசலுக்கு வந்து விட்டனர்.

ஆனாலும் கிளிநொச்சியை சென்றடைய அடுத்த எட்டுக் கிலோ மீற்றர் தூரத்தை தாண்டுவதில் படையினர் மிகப்பெரும் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கிளிநொச்சி மீதான முதலாவது தாக்குதலை அடுத்த வாரமளவில் தொடங்கப் போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ள போதிலும் அவர்கள் கிளிநொச்சிக்கான தாக்குதலை எப்போதோ தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் கிளிநொச்சியை நெருங்க முடியாது நீண்ட நாட்களாகவே கடும் எதிர்ப்புக்களைச் சந்தித்து வருவதால் இனித்தான் கிளிநொச்சி மீதான தாக்குதலைத் தொடுக்கப்போவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அவர் முயல்கின்றார் என்பது வெளிப்படை. இது படையினரின் இயலாமையை காண்பிக்கின்றதோ என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளது. மன்னார் - பூநகரி வீதியில் (ஏ 32) பூநகரியைக் கைப்பற்றும் அதேநேரம் அந்த வீதிக்குச் சமாந்தரமாகச் சென்ற படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவர் என்பது அரசினதும் படைத் தரப்பினதும் எதிர்பார்ப்பாகும்.

ஆனாலும் ஏ-32 வீதியில் நாச்சிக்குடாவைத் தாண்டிச் செல்ல முடியாது நிற்கும் படையினர் கிளிநொச்சிக்குள்ளும் செல்ல முடியாது நிற்கின்றனர். இதனால், பூநகரி நோக்கிய நகர்வை விட இன்று கிளிநொச்சி நோக்கிய நகர்வுக்கே மிகப்பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
எனவே, கிளிநொச்சிக்கான நகர்வுக்காக படையினர் களமுனைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இந்தப் படை நடவடிக்கைகளுக்காக படையினரின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் படையினருக்குத் தேவையான போர்த்தளபாடங்கள் வன்னிக் களமுனையில் குவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான், இந்தியா, சீனா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டு வழங்கும் மிக நவீன போர்த் தளபாடங்களைப் பயன்படுத்தியும் வன்னிக் களமுனையில் இலக்கை அடைய முடியாதிருப்பது அரசுக்கும் படையினருக்கும் களமுனையில் பின்னடைவுகள் ஏற்பட்டு வருவதையே காட்டுகிறது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் இந்தியா, தனது துருப்புக்களில் நூற்றுக்கணக்கானோரை இலங்கை மண்ணில் ஈழத்தமிழருக்கெதிரான போரில் களமிறக்கியுள்ளது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்கேற்ப இந்தியாவுடன் போட்டி போட்டு, பத்து நாளைக்கு ஒரு தடவை பாகிஸ்தானிலிருந்து ஆயுதக் கப்பல்கள் இலங்கை வருகிறது. இவையெல்லாவற்றையும் மீறி சீன அரசு அனைத்து வகைப் போர்த்தளபாடங்களையும் இலங்கைக்கு அனுப்பி வருவதால், புலிகள் வன்னியில் போரிடுவது இலங்கைப் படையுடனா அல்லது ஆசியாவின் வல்லரசுக்காகப் போட்டியிடும் அனைத்து நாடுகளுடனுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தளவிற்கு இலங்கை அரசிற்கும் படையினருக்கும் உதவிகளுள்ள போதிலும் அவர்களால் இலக்கை அடைய முடியாதுள்ளது. ?ஏ 32? வீதி என்றாலும் சரி ஏ- 9 வீதிக்கு இடையில் என்றாலும் சரி எந்தப் பாதையில் படையினர் முன்னேறினாலும் தற்போது புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்துகின்றனர்.

இதனால் களமுனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது அவர்களைப் பெரிதும் அலைக்கழித்து வருவதுடன், எப்போதும் எந்த வேளையிலும் படையினர் மீது புலிகள் பாரிய தாக்குதல் சமரை அல்லது ஊடறுப்புத் தாக்குதலை தொடுக்கலாமென்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நாச்சிக்குடா விலிருந்து கிழக்கே வன்னேரி ஊடாக அக்கராயன்குளம் வரை பாரிய மண் அணையை எழுப்பி பெரும் தடுப்புச் சுவரை அமைத்து படையினரின் முன்நகர்வைத் தடுத்த புலிகள், அந்த முனையில் மேலும் சில தடவைகள் முன்நகர முயன்ற படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தினர்.

இதையடுத்து நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன் குளத்திற்கும் இடைப்பட்ட 20 கிலோ மீற்றர் தூரத்தினூடாக மேலும் வடக்கே முன்னகரும் முயற்சியைக் கைவிட்ட படையினர், அக்கராயன் குளத்திற்கும் அதற்குக் கிழக்கே ஏ- 9 வீதியிலுள்ள திருமுறிகண்டிக்கும் இடைப்பட்ட சுமார் பத்து கிலோமீற்றர் பகுதியூடாக பாரிய முன்னகர்வு முயற்சியை மேற்கொண்டனர்.
கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான இந்தச் சமர் அப்பகுதியில் பரவி உக்கிரமாக நடைபெற்றது. மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தோல்வியைப் போன்றே, அக்கராயன்குளத்திற்கும் திருமுறிகண்டிக்குமிடையில் மேலும் வடக்கே முன்னகர மேற்கொண்ட முயற்சியும், தோல்வியடைந்தது.
இவ்விரு பகுதிகளையும் ஊடறுத்துச் சென்றால் மட்டுமே பூநகரி நோக்கியும் கிளிநொச்சி நோக்கியும் தொடர்ந்தும் முன்நகர முடியுமென்ற நிலையில் இவை சாத்தியப்படாது போகவே படையினர் தங்கள் நகர்வுப் பாதைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாச்சிக்குடா முதல் திருமுறிகண்டி வரையான எந்தப் பகுதியிலும் ஊடுருவ முடியாதென்பதால் தற்போது அக்கராயன்குளப் பகுதியிலும் அதற்குக் கிழக்கேயும் நிலைகொண்டுள்ள படையினர் ஏ- 9 வீதிக்குச் சென்று விட முனைகின்றனர். இந்த வீதிக்குச் செல்வதன் மூலம் கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்குமிடையிலான விநியோகப் பாதையை மூடி வன்னிக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு பெரும் தடைகளை ஏற்படுத்த படைத்தரப்பு முயல்கிறது. தற்போதைய நிலையில் ஏ- 9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு படையினர் சென்றாலும் அதனால் அவர்களுக்கு உடனடியாகப் பலனேதும் கிடைக்கப் போவதில்லை.

ஏ- 9 வீதியூடாக படையினரால் கிளிநொச்சி நோக்கி முன்நகர முடியாது. புலிகளும் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இதனால், ஏ- 9 வீதிக்கு கிழக்கே சென்று பின்னர் அங்கிருந்து கிளிநொச்சியை நோக்கி நகரலாமெனப் படையினர் கருதினாலும் அங்கும் படையினருக்கு பெரும் சிக்கல் நிலையே ஏற்படும். ஏனெனில், ஏ- 9 வீதிக்கு கிழக்கே முல்லைத்தீவுப் பக்கமாயிருக்கும் இரணைமடுக்குளம் படையினரின் பாரிய முன்நகர்வு முயற்சிக்கு தடையாகிவிடும்.

அக்கராயன்குளத்திற்கு கிழக்கே, அக்கராயன்குளத்தை மையமாக வைத்து ஏ- 9 வீதியிலுள்ள திருமுறிகண்டி வரை எப்படிப் பாதுகாப்பு அரண்களை மிக இறுக்கமாக அமைத்து பாரிய படை நகர்வைத் தடுத்தார்களோ அப்படியே, ஏ- 9 வீதிக்கு கிழக்கே திருமுறிகண்டி முதல் கிழக்கே சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரணை மடுக்குளம் வரை வலுவான பாதுகாப்பு அரண்களை அமைத்து படையினரின் பாரிய முன்நகர்வு முயற்சியை தடுக்க புலிகள் முயல்வர்.

இது படையினருக்கு சாதகமற்ற களமுனையாகவே இருக்கப்போகிறது. ஏ- 9 வீதிக்கு மேற்கே அக்கராயன்குளத்தை மையமாக வைத்து ஏ- 9 வீதிவரை எப்படிப் பாதுகாப்பு அரண்களை அமைத்து படைநகர்வைத் தடுத்தார்களோ அவ்வாறே ஏ- 9 வீதிக்கு கிழக்கே இரணைமடுக்குளத்தை மையமாக வைத்து ஏ- 9 வீதி வரை பாதுகாப்பு அரண்களை அமைத்து படைநகர்வைத் தடுக்க புலிகள் திட்டமிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் கிளிநொச்சி நோக்கிய பாரிய படைநகர்வுகளைத் தடுக்கும் முக்கிய மையங்களாக அக்கராயன்குளமும் இரணைமடுக்குளமும் இருக்கப் போகின்றன.

யாழ்.குடா நாட்டில் கிளாலி - முகமாலை - நாகர்கோவில் அச்சிலிருந்து, ஒடுங்கிய அந்த நிலப்பிரதேசத்தூடாக எப்படிப் படையினரால் முன்நகர முடியாததொரு நிலையுள்ளதோ அதேபோன்றதொரு நிலை தற்போது கிளிநொச்சி மற்றும் பூநகரி நோக்கிய நகர்விலும் படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

அக்கராயன்குளத்தை மையமாக வைத்து ஏ-9 வீதிக்கு மேற்கே எப்படி வலுவான பாதுகாப்பு நிலைகளை அமைத்தார்களோ அப்படி ஏ- 9 வீதிக்கு கிழக்கே இரணைமடுக்குளத்தை மையமாக வைத்து வலுவான பாதுகாப்பு நிலைகளைப் புலிகள் அமைத்தால் இரணைமடுக்குளத்தை சுற்றிச் சென்று கிளிநொச்சி நோக்கிய நகர்வை மேற்கொள்ள வேண்டிய நிலைமை படையினருக்கு ஏற்படும். அது நீண்ட நாள் செல்லும். அக்கராயன்குளத்தை விட மிக கூடிய நீளத்தையும் மிகப்பெரிய அகலத்தையும் கொண்டது இரணைமடுக்குளம். மாரிகாலம் தொடங்கவுள்ள நிலையில் இவ்விரு மிகப்பெரிய குளங்களையும் மையமாக வைத்து அவற்றுக்கு அண்டிய பகுதிகளில் பாரிய படைநகர்வுகளை மேற்கொள்வது சாத்தியமில்லை.

மழைகாலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதி பாரிய படை நகர்வுக்கு சாத்தியமற்றதாயிருக்கையில் பாரிய குளங்களுக்கு சமீபமாயுள்ள பகுதிகள் படை நடவடிக்கைகளுக்கு வாய்ப்பற்றிருக்கும். இதனால் மாரிகாலம் தொடங்க முன்னர் படையினர் வன்னிக்குள் பாரிய படைநகர்வுகளை மேற்கொண்டு இலக்குகளைச் சென்றடைந்து விட வேண்டும். இல்லையேல் அது அவர்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தும் களமுனைகளாகிவிடும்.

இதனைப் படைத் தரப்பும் நன்குணரும். இதனால் தான் அடுத்த வாரம் கிளிநொச்சியை நோக்கி பாரிய தாக்குதலைத் தொடுக்கப் போவதாக இராணுவத் தளபதி கூறியிருக்கலாம். தற்போதைய நிலையில் வன்னிக்களமுனை குறித்த தகவல்களை புலிகள் ஆரவாரமாக வெளியிடுவதில்லை. படைத் தரப்பு தினமும் கூறுவது போல் புலிகள் எதுவும் கூறுவதில்லை.

இது ஏனென்று தெரியாதுள்ளது. ஆனாலும் கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அக்கராயன்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மிகக் கடும் சமர் நடைபெற்றுள்ளது.
இந்தச் சமரில் படைத்தரப்பு பாரிய இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. இது குறித்து விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை அறிவிப்பார்களென எதிர்பார்க்கப்பட்ட போதும் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை.
அதேநேரம், படைத்தரப்பும் இந்தச் சமர்குறித்து உடனடியாக எதுவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. புலிகள் ஏதாவது தெரிவித்தால் அதன் பின்னர் அது குறித்து எதையாவது கூறலாமென படைத்தரப்பு தாமதித்திருக்கலாம்.

எனினும் புலிகள் எதனையும் கூறாது போகவே கடந்த திங்கட்கிழமை படைத்தரப்பு ஒரு சில தகவல்களை வெளியிட்டது. வன்னேரி - அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டதாகவும் 59 புலிகள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் தங்கள் தரப்பில் எட்டுப் படையினர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் படைத் தரப்பு தெரிவித்தது. உடனடியாக வெளிவராது தாமதித்து வந்த இந்த அறிவிப்பு, அங்கு மோசமான விளைவுகள் ஏற்பட்டுள் ளதை சுட்டிக்காட்டுகிறது.

எனினும், தற்போது அங்கு மிகக் கடும் சமர் நடைபெற்று வருகின்ற போதும் புலிகள் இது குறித்து மௌனம் சாதித்தே வருகின்றனர். படையினர் பாரிய கனரக ஆயுதங்களை மிகத் தாராளமாகப் பயன்படுத்துகின்ற போதும் அவர்களால் புலிகளின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாதுள்ளது. புலிகளும் சில கனரக ஆயுதங்களை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் இந்தக் கனரக ஆயுத பாவனைக்குப் பின்னர் படைத் தரப்பு தங்களது சில கனரக ஆயுதங்களை களமுனையிலிருந்து பின்நகர்த்தியுள்ளதகாவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேலாக உக்கிர சமர் நடைபெற்றுள்ளது. படையினர் தங்கள் முன் நகர்வுப் பாதைகளை மாற்றியமைத்துள்ளதால் புலிகளும் தங்கள் தாக்குதலை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வன்னிக்கள முனையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறுப் பகுதியில் படையினரின் முன்நகர்வு முயற்சிகள் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. குறிப்பிட்டளவு தூரம் மட்டுமே படையினரால் நகர முடிந்துள்ளது. மன்னார், வவுனியா,கிளிநொச்சி கள முனைகளில் படையினர் நகர்ந் தது போல் மணலாறு முனையில் படையினரால் நகர்வுகளை மேற்கொள்ள முடிய வில்லை.

அங்கு படைநகர்வை பெரும்பாலும் தடுத்து நிறுத்தியுள்ள புலிகள் மன்னார், வவுனியா களமுனையில் தொடர்ந்தும் நகர அனுமதித்து விட்டுத் தற்போது படையினருக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.
இதனால் கிளிநொச்சியை நோக்கிய நகர்வுக்காக படையினர் புதிய புதிய பாதைகளூடாக நகரவேண்டிய நிலை யேற்பட்டுள்ளது. தற்போது படையினர் திருமுறிகண்டிக்கும் மாங்குளத்திற்குமிடையில் ஏ-9 வீதியில் கொக்காவில் வரை நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகி றது.

அடுத்து அவர்கள் கொக்காவில் பகுதியில் ஏ-9 வீதியைக் கைப்பற்றினாலும் அங்கு அவர்களால் நிலைகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. துணுக்காயையும் மல்லாவியையும் படையினர் கைப்பற்றியுள்ள போதிலும் அங்கிருந்து கிழக்கே நகர்ந்து சென்று அவர்களால் ஏ-9 வீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியவில்லை. துணுக்காய்க்கும் மல்லாவிக்கும் இடையில் நிலைகொண்டுள்ள புலிகள் படையினர் மாங்குளம் சந்தி நோக்கி நகர்வதற்குத் தடையாக இருக்கிறார்கள்.

இதேபோன்றே துணுக்காய் மற்றும் மல்லாவிக்கு வடக்கே முன்னேறிச் சென்ற படையினர் தொட்டம் தொட்டமாகவே நிற்கின்றனர். இடையிடையே புலிகள் நிலைகொண்டிருப்பதால் படையினரின் முன்நகர்வு முயற்சிகளுக்கு பலத்த சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

கொக்காவில் பகுதியில் படையினர் முன்நகர்ந்து ?ஏ9? வீதியைக் கைப்பற்றினாலும் அந்த வீதியில் கொக்காவிலுக்கு வடக்கேயும் தெற்கேயும் புலிகளே நிற்பர் என்பதால் ஏ-9 வீதிக்கு வரும் படையினருக்கு எவ்வேளையிலும் பெரும் ஆபத்தேற்படலாமென்றதொரு சூழ்நிலையே ஏற்படும்.

ஆனால், வன்னிக் களமுனை குறித்து ஆரம்பம் முதல் படையினர் கூறிவருவது போல் பார்த்தால் தற்போது படையினர் யாழ்ப்பாணம் சென்றிருக்க வேண்டும். அங்குள்ள நிலைமைகள் குறித்து அரசும் படைத்தரப்பும் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களையே மேற்கொள்கின்றன என்பதற்கு அண்மையில் கிளிநொச்சிக்கு மேற்கே வலைப்பாடு கடற்பரப்பில் இடம்பெற்ற நீண்ட நேர கடற் சமரே நல்ல உதாரணம். மன்னார் கரையோரத்தை முழுமையாகத் தாங்கள் கைப்பற்றிவிட்டதால் மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையிலான கடற்பரப்பில் கடற் புலிகளின் முகாம்கள் எதுவுமே இல்லை என்றும் கடற்புலிகள் தங்கள் சிறிய ரக படகுகள் அனைத்தையும் முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டார்களென்றும் அரசும் படைத்தரப்பும் கூறிவந்தன.

அதே படையினரே, கடந்த 10ஆம் திகதி வலைப்பாடு கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நான்கு மணிநேரம் உக்கிர சமர் நடைபெற்றதாகக் கூறியது. கடற்புலிகளின் 15 இற்கும் மேற்பட்ட படகுகள் இந்தச் சமரில் ஈடுபட்டதாகவும் பிற்பகல் 3 மணிக்குப் பின் பலத்த இழப்புகளுடன் சேதமடைந்த படகுகளையும் கட்டியிழுத்துக் கொண்டு கடற்புலிகள் கரை திரும்பியதாகக் கூறியிருந்தனர். கரையோரம் முழுவதும் படையினர் வசமென்றும் கடற்புலிகளின் முகாமோ படகுகளோ இல்லையென்றும் கூறிவந்தவர்கள், நான்கு மணிநேரக் கடற்சமர் நடைபெற்றதாகக் கூறியதன் மூலம் இதுவரை மேற்குக் கரையோர நிலைமைகள் தொடர்பாக தாங்கள் கூறிவந்ததெல்லாம் பொய் என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர்.
இல்லையேல் 15 இற்கும் மேற்பட்ட படகுகள் எப்படி நான்கு மணி நேரம் அந்தக் கடலில் சமரிட்டிருக்க முடியும்? சமர் முடிந்ததும் எப்படிக் கரைக்குத் திரும்பியிருக்க முடியும்? இதுவரை காலமும் மேற்குக் கரையோர நிலைமைகள் தொடர்பாக தாங்கள் கூறிவந்ததெல்லாம் பொய் என்பதை இந்தச் சமர் குறித்து அவர்கள் தெரிவித்த செய்திகள் மூலம் அவர்களே உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபோன்றே வன்னி மோதல்கள் குறித்து அரசும் படைத் தரப்பும் கூறும் செய்திகள் உள்ளன.

ஆனால், அங்கு களமுனையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. படையினர் தங்கள் நகர்வுப் பாதைகளை மாற்றுகிறார்களென்றால் அங்கு நிலைமை சாதகமாயில்லை என்பதே அர்த்தமாகும். இல்லையென்றால், கிளிநொச்சியிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் நிற்பதாகக் கூறும் படையினர் கிளிநொச்சி நோக்கிச் செல்லாது ஏன் நகர்வுப் பாதையை மாற்ற வேண்டும் அவர்கள் பலத்த எதிர்ப்புகளைச் சந்திப்பதுடன் அந்த நான்கு கிலோ மீற்றர் தூரத்தை இலகுவாகச் சென்றடைய புலிகள் அனுமதிக்க மாட்டார்களென்பதை படையினர் உணரத் தொடங்கிவிட்டனர் என்பதே அதற்குக் காரணமாகும். இதேநேரம், ஏ-9 பாதையைக் கைப்பற்றி கிளிநொச்சிக்கான விநியோகப் பாதையை மூடிவிட்டால் மக்களை வன்னியிலிருந்து வெளியேற்றி விட முடியுமென அரசு நம்புகிறது.
கொழும்பிலிருந்து வடபகுதி மக்களை வடக்கே விரட்ட முனையும் அரசு, வடக்கிலிருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றி தெற் கிற்கு அனுப்ப முற்படுகிறது. இந்த மக்களின் விடயத்தில் கூட ஒழுங்கான கொள்கையொன்றை வகுக்க முடியாது திணறும் அரசு வெறு மனே தனது அரசியல் நோக்கத்திற்காக இந்த யுத்தத்தை நடத்து கிறது.

இந்த யுத்தத்தின் வெற்றியே இந்த அரசின் வெற்றியாகும். வன்னி யுத்தத்தில் தோல்விச் செய்திகள் வருமானால் இந்த அரசும் ஆட்டம் கண்டு விடும். இதனால் தெற்கில் தங்களது ஆட்சியை இந்த அரசு தொடர வேண்டுமானால் வடக்கில் தொடர்ந்தும் வெற்றிச் செய்திகள் கிடைக்க வேண்டுமென்றதொரு நிலையேற்பட்டுள்ளது.

எனினும், வன்னிக் களமுனை எதிர்பார்த்தது போலில்லை. சில அயல் நாடுகள் அள்ளிக் கொட்டும் ஆயுதங்களை வாங்கிக் குவித்து வன்னிப் போரில் வென்றுவிட அரசு துடிக்கிறது. இது சிங்களவரின் தேசம், தமிழர்கள் சிறுபான்மையினர்.

பேசாமல் கிடைப்பதை பெற வேண்டுமே தவிர வேறெதனையும் உரிமை கோரமுடியாதென இராணுவத் தளபதியும் அரசியல் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. வன்னிப் போர் முனை வெற்றியே இவ் வாறு அவர்களையும் அரசியல் பேச வைக்கிறது.

ஆனால் களமுனையில் மாற்றமேற்படும் போது உண்மையான அரசியல் என்ன என்பதை இராணுவத் தளபதி மட்டுமல்ல ஆளும் தரப்பினரும் அறிவர். அதுவரை அவர்கள் பேசும் அரசியலை அனைத்துத் தமிழர்களும் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
thinakkural.com
*****

for contact: jaalavan@gmail.com

35 - தமிழில் பேச முயல்வதை விட தமிழரோடு பேச முயன்றிருக்கலாம்

கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது பொது அமர்வில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை முக்கிய பல செய்திகளை அவரது அரசின் தீவிர நிலைப்பாட்டுப் போக்கு உட்பட்ட பல விடயங்களை வெளிப்படையாகவே எடுத்தியம்பி நிற்கின்றது. உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நாவில் போய் நின்றுகொண்டு புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துத் தங்களின் போர் வலிமையைக் கைவிட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே புலிகளுடன் பேச்சு, இல்லையேல் யுத்தம்தான் ஒரே மார்க்கம் என்று அவர் அங்கு முழங்கியிருக்கின்றார்.

இது, அமைதி வழித் தீர்வு இனிச் சாத்தியமே இல்லையென்ற போர்ப்பிரகடனமாகக் கருதப்படவேண்டிய அறிவிப்பாகும். இந்தத் திட்டவட்டமான அறிவிப்பின் மூலம், அமைதி முயற்சிக்கான கதவை இறுகச் சாத்தி, வலிமையான போர்ப்பூட்டை அதற்குப் போட்டுப் பூட்டி, தீர்வு என்ற அதன் திறப்பை மீண்டும் கைக்கு எட்டவேமுடியாத பாதாளத்திற்குத் தூக்கி வீசிவிட்டார் இலங்கைத் தீவின் ஜனாதிபதி என்றே கருத நேர்ந்திருக்கின்றது.

கடந்த இரண்டரை தசாப்தகால இலங்கை அரசின் போக்கை குறிப்பாக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை உற்றுநோக்குபவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். அது ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் நியாயமான ஒரு தீர்வு எட்டப்பட்டு அது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படும்வரை தங்களுடைய உரிமைப் போருக்கான ஆயுத பலத்தை எந்த அழுத்தம் கருதியும் விடுதலைப் புலிகள் கைவிடவே மாட்டார்கள் என்ற யதார்த்தம்தான். அந்தக் கொள்கைப் பிடிப்பில் புலிகள் எவ்வளவு பற்றுறுதியும் திடசங்கற்பமும் கொண்டவர்கள் என்பது யாவருக்கும் புரிந்த விடயமே. ஆகவே, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தமது போர்த்திறன்களைத் துறந்தால் மட்டுமே இனி அமைதிப் பேச்சு என்று அறிவிப்பதும் இனிப் பேச்சே இல்லை, இனிப் போர்தான் என்று பிரகடனப்படுத்துவதும் ஒன்றுதான். ஐ.நா. சபையின் கடந்த வருடப் பொது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அங்கு நடந்துகொண்ட தமது செயற்பாடுகள் மூலம் தென்னிலங்கைச் சிங்களத்தை மெய்சிலிர்க்க வைத்தார்.

இலங்கையின் இதற்கு முந்தைய தலைவர்கள் ஐ.நா. பொதுச்சபை அமர்வு போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில், உலக சமூகத் தலைவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலமொழியிலேயே உரை நிகழ்த்துவது வழமையாக இருந்து வந்தது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ கடந்த வருட ஐ.நா. பொதுச்சபை அமர்வில் முற்றுமுழுதாக சிங்களத்தில் தமக்கு நன்கு பரிச்சயமான மொழியில் முழங்கி, சிங்கள மக்களைப் பேருவகையில் ஆழ்த்தினார். ஐ.நா. மன்றத்திலேயே தனிச்சிங்களத்தில் முழங்கி நம் மொழிக்குப் பெருமையை உலக மன்றத்தில் சேர்த்தார் நாட்டின் தலைவர் என்று தென்னிலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்கம் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

சிங்களத்தில் பேசிய தமது அந்தப் பாவனை நடிப்பில் தென்னிலங்கையை அதிகம் மயக்கி வெற்றிகண்ட ஜனாதிபதி மஹிந்தர், அதே தந்திரோபாயத்தைத் தமிழர் மீதும் பிரயோகிக்கத் தீர்மானித்தார் போலும்! இந்தத் தடவை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் தமிழிலும் சில வார்த்தைகள் பேசினால் கடந்த வருடம் தென்னிலங்கைப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை மயக்கியமை போல வடக்குக் கிழக்குத் தமிழர்களையும் மயக்கிவிடமுடியும் என்று ஆட்சித் தலைவர் பகற்கனவு கண்டிருக்கின்றார் போலும். அதனாலேயே சில கருத்துகளை தமிழில் எழுதி, வாசித்துப் பாடமாக்கிச் சென்று அவற்றைத் தமது நீண்ட சிங்கள உரையின் மத்தியில் தமிழில் ஒப்புவித்திருக்கின்றார் அவர். ஆனால் படித்த புத்திசாலிகளை அதிகம் கொண்ட ஈழத்தமிழர் சமூகம், இந்த நடிப்புக் காய்ச்சல் தந்திரோபாயத்திற்கு நசிந்து கொடுக்கவில்லை. அந்த முயற்சிக்கு எடுபடவுமில்லை. தமிழே தெரியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில தமிழ் வாசகங்களைச் சிங்களத்தில் எழுதிப் பாடமாக்கித் தமது நியூயோர்க் உரையில் அவற்றைப் பிரயோகித்ததும், அதற்கு அப்படியே அடிமைப்பட்டு, பரவசப்பட்டு நிற்பதற்குத் தமிழர்கள் தரப்பு ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஐ.நா. உரையில் தமிழில் பேச முயற்சித்திருப்பதை விட, தமிழர் தரப்போடு தாம் பேசுவது குறித்து ஆக்கபூர்வமான பயனுள்ள வகையில் ஒரு கருத்தைக் கூறியிருப்பாராகில் அது இலங்கைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வைக் காண்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கும். ஆனால், அமைதி வழியில் அல்ல, இராணுவ வழியிலேயே தீர்வு என்று விடாப்பிடியாக பிடிவாதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதால், இத்தகைய தமிழ்ப் பேச்சு தந்திரோபாய எத்தனம்தான் அவரிடமிருந்து வெளிப்படமுடியும்.
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?
uthayan.com
*****

for contact: jaalavan@hotmail.com

Saturday, 27 September 2008

34 - ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள்.


நியாயம் வேண்டியும், நீதியான கௌரவமான வாழ்வு வேண்டியும் ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் நடத்தும் போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. இந்த நெருக்கடியான சமயத்தில், களத்திலும் புலத்திலும் தாயக மண்ணிலும், இடம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கின்ற தமிழ் உடன்பிறப்புகளை மனவுறுதி தளராது, நம்பிக்கையும், தைரியமும் ஊட்டி, வழிப்படுத்தி, மனவளப்படுத்தி, திட சிந்தனையோடு வைத்திருப்பது மிக முக்கிய மான விவகாரமாகும். இந்த வரலாற்றுத் திருப்புமுனை வேளையிலே, இந்த மிகமுக்கிய பொறுப்பு, ஊடகங்களின் தோள்களில் பொறிந் திருப்பது மறுக்கமுடியாத உண்மை. களத்திலும் புலத்திலும் நம் தமிழ் உடன்பிறப்புகள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திவரும் ஊடகங்கள் இந்தக் கனதியான பொறுப்பைக் கடமையுணர்வோடு சுமந்து, தம் கடன் பணியாற்றி நிற்பதை பெருமிதத்தோடு இச்சமயத்தில் நாம் நினைவுகூர முடியும்.

அவை, தாயக மண்ணிலிருந்து அல்லது கொழும்பிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகைகளாக இருக்கலாம். இணையத்தளங்களாக இருக்கலாம். இலத்திரனியல் ஊட கங்களாக இருக்கலாம். அல்லது புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து பிரசுரமாகும் அச்சு ஊடகங்களாகவோ, இணையத்தளம், வானொலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களாகவோ இருக்கலாம். அவை அனைத்துமே தமிழரது உரிமைப் போரை முன்னோக்கித் தூக்கி, நெம்பித் தள்ளிவிடுவதில் கரிசனை கொண்டுள்ளவையாகவே விளங்குகின்றன. இவ்விடயத்தில் அவற்றின் பங்குபணியும், செயற்பாங்கும் விதந்து போற்றி மெச்சத்தக்கவை.

அதிலும் குறிப்பாகத் தாயக மண்ணிலும், இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் இருந்து இயங்கும் ஊடகங்களின் சேவை வித்தியாசமானது. களத்தில் தம் மீதான நிர்ப்பந்தங்கள், கட்டுப்பாடுகள், அழுத்தங்கள், நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்கள், அழிவு நாச எத்தனங்கள் போன்றவற்றுக்கு மத்தியிலும் தமது வரலாற்றுக் கடமையை அவை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டியவையாக இருக்கின்றன; கொண்டு செல்கின்றன. ஒருபுறம் தம்மை நோக்கி ஏவிவிடப்படக்கூடிய சட்டம். மறுபுறம் சட்டத்தை மிதித்து சதிராடும் அட்டகாசத் தரப்புகள். இவற்றுக்கு மத்தியில் கத்தியில் நடப்பதுபோல அந்த ஊடகங்கங்கள் ஆற்றும் அளப்பரிய பணி பலருக்கும் புரிவதில்லை.

தமது நிர்வாகத்தின் நோக்கு போக்கு, இலக்கு, கொள்கை ஆகிய சிக்கல்கள் மற்றும் தைரியமோ, திடசங்கற்பமோ இல்லாத முகாமைத்துவம் போன்ற பின்னடைவுகளுக்கு முகம் கொடுத்தபடியே மறுபுறத்தில் தமிழர் தரப்பு நியாயத்தையும் இயன்றளவு முன்நகர்த்தும் இந்த ஊடகங்களின் இரண்டுங்கெட்டான் கஷ்ட நிலைமை பலருக்குப் புரிவதில்லை. அதுவும் புலம்பெயர்ந்த தேசத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, தம் இஷ்டப்படி விமர்சனங்களை வெளியிட்டு அள்ளி வீசியபடி வியாக்கியானம் செய்யும் ஊடகப் பெரியவர்கள் பலருக்குக் களத்தில் உள்ள ஊடகங்களின் சிக்கல்கள் புரிவதில்லை. உண்மையில் எல்லாத் தமிழ் ஊடகர்களையும் அரவணைத்துத் தமிழரின் பொதுநலனுக்கான பொது முயற்சியில் அவர்களின் ஆதரவை அவரவர்களது தளத்திலிருந்து இயன்றவரை திரட்டி எடுப்பதே தமிழர் தரப்பின் ஏக இலக்காகவும் முயற்சியாகவும் இருக்கவேண்டும்.

அதை விடுத்து தத்தமது நெருக்கடிகள், கஷ்டங்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு உத்வேகம் அளிக்கும் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் களநிலை நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளாது எழுந்தமானத்தில் விமர்சிப்பது, அப்படி நெருக்கடிக்குள்ளும் தம்மால் இயன்றளவு ஆதரவைத் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வழங்கிவரும் அத்தரப்பை மேலும் தூரத்தள்ளிவைத்து, அவர்களது ஆதரவையும் நாம் இழக்கவே வழி செய்யும்.

தவிரவும், புலத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தபடி தமிழ்த் தேசியத்துக்கு எழுச்சியூட்டும் ஊடகவியலாளர்களைக் குதர்க்கம் பேசி, தேவையில்லாமல் விமர்சித்து, வித்துவக் காய்ச்சல் விடயங்களை விவகாரமாக்கி, அவர்களைத் தள்ளிவைக்கும் புறந்தள்ளும் ஒருவித நோயும் நம்மவர்களின் சில ஊடகங்களுக்கு இப்போது தொற்றியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எல்லோரும் சேர்ந்து தேர் இழுப்போம் வாரீர்! தேர் இழுக்க வருவோருக்குக் கால்தடம் போட்டு வீழ்த்துவதை விடுத்து, அனைவரும் ஓர் இலக்கைக் குறிவைத்து நமக்குள் இழுபறிப்படுவதை விலக்கி ஒன்றுபட்டு செயற்படுவோம். தோள்கொடுங்கள்.

ஊடக உபத்திரவங்கள் என்று தேவையற்ற ஊசலாட்டங்களைக் கிளறுவதை விடுத்து, ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் உயர்வான பணியை மெச்சிப் பாராட்டி, அவர்களின் சேவையை மேலும் வென்றெடுக்கத் தூண்டுவோம். எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் பற்றிய கன்னாபின்னா என்ற எமது கற்றுக்குட்டி விமர்சனங்களாலும், செயற்பாடுகளினாலும் இதுவரை எம் மத்தியில் எமக்காகச் செயற்பட்ட பலரை நாம் இழந்து எதிர்த்தரப்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறோம். இது தேவைதானா? இது நியாயமானதா? இப்போக்குத் தொடரவேண்டுமா?

இயக்கத்தக்கவர்களின் ஊடகங்களாகத் தம்மை முன்னிறுத்தியபடி,அணைத்துச் சேர்க்கவேண்டிய பலரை ஒதுக்கித் தள்ளுகின்ற கைங்கரியத்தில் சில தரப்புகள் செயற்படுவதும் வேதனையளிக்கிறது. வேண்டாம் இந்த வீண் விபரீதம்!
uthayan.com
*****

for contact: jaalavan@gmail.com

Thursday, 25 September 2008

33-தவறு இழைக்கிறார் கருணாநிதி.

<உதயன்>
எமது சகோதரர்களான ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் ஈவிரக்கமற்ற அரக்கத்தனமான மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு இந்திய அரசு இராணுவ உதவியையும் ஆயுதங்களையும் தாராளமாக வழங்கி வருகின்றது.

எனவே, இதற்குப் பிறகும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கக்கூடாது. உடனடியாகத் தனது மௌனத்தைக் கலைத்து, இலங்கைக்குப் படையை அனுப்பும் மத்திய அரசை அதற்காக எச்சரிக்க வேண்டும். குண்டு மழைக்கு நடுவினிலும், குருதி மழை நடுவினிலும் நின்று தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும். இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் நேரடியாக வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார். தமிழக முதல்வரின் காதில் இந்தக் கோரிக்கை விழுமா என்று கேட்டால், பதில் சந்தேகம்தான்.

ஈழத்தமிழர் விவகாரத்தில் ஏதோவெல்லாம் நடந்தேறுகின்றன. ஆனால், அதில் தமக்கு ஏதும் தொடர்பில்லை என்பதுபோல அதில் பட்டும்படாமலும் ஒதுங்கிக் கிடக்கின்றார் தமிழக முதல்வர். புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டமையை ஒட்டி ஒரு நான்கு வரிக் கண்ணீர் அஞ்சலி எழுதி, அதனால் வந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சி இப்போது துவண்டுவிட்டார் போலும் கலைஞர் கருணாநிதி. இலங்கை விவகாரத்தில் பிடித்த பிள்ளையார் போன்ற அவரது அசையாத மௌனம், பலரையும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்காக நீதி வேண்டிப் போராடும் தமிழகப் பிரமுகர்கள் பலரையும் வியப்புக்குள் ஆழ்த்தி நிற்கின்றது.
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பப்போய் அது, புலிகள் ஆதரவு நிலைப்பாடாக அர்த்தப்பட்டு விட்டால், அது தமக்கும் தமது ஆட்சிக்கும் சிக்கல் எதையும் உருவாக்கிவிடும் என்ற அச்சம் காரணமாக இந்தப் பிரச்சினைகளை எல்லாம் கண்டும் காணாமலும் இருப்பவர்போல நடந்து, ஒதுங்கிவிடுகிறார் அவர் என விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழர்களுக்கு ஒரு தனிநாடு; அது தமிழீழ நாடு! என்று தாம் எதிரணியில் இருந்தபோது எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் முழங்கிய கலைஞர்தான் இன்று இலங்கைத் தமிழர்களுக்குப் பேரவலம் நிகழ்கையில் பெருமௌனம் பேணுகின்றார். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக முன்னர் ஐந்து உறுதிமொழிகளை வழங்கியிருந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழீழம் மலர ஆதரவு, தமிழர்களுக்கு நிலையான உரிமை, நிரந்தரப் பாதுகாப்பு, ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் தருவது நமது கடமை, தமிழினத்தைப் பாதுகாக்க எந்தத் தியாகத்துக்கும் தயார்! என்பவையே அந்த உறுதிமொழிகள். அப்படி சத்தியம் செய்தவர்தான் இன்று ஈழத் தமிழர் பிரச்சினையில் மௌனம் காக்கின்றார் என டாக்டர் ராமதாஸ் சுமத்தும் குற்றத்தில் தவறில்லை.
ஈழத் தமிழரைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இந்தியா நேரடியாகவே உதவுகின்றது என்பது எப்போதோ அம்பலமாகிவிட்டது. அத்தகைய அழிவு நடவடிக்கைக்கு இந்தியா, உதவுவதைத் தடுக்காமல், பார்த்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டே டாக்டர் ராமதாஸ் போன்ற சில தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றன. அது தவறு. இவ்விடயத்தில் அதிலும் விடப்பெரிய குற்றத்தைக் கலைஞர் இழைத்து வருகின்றார் என்பதே உண்மையாகும். இந்தியாவில் இன்று காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சியில் நின்று, நிலைத்து, நீடிக்கின்றது என்றால் அதற்குப் பிரதான காரணகர்த்தர் கலைஞர் கருணாநிதிதான். அவரது தயவில்தான் புதுடில்லியில் காங்கிரஸ் அரசு கோலோச்சுகிறது. அதுவும், தமிழகம் தாண்டி, தென் மூலையில் இருக்கும் இலங்கையின் விவகாரத்தை இப்படித்தான் கையாள வேண்டும் என்று, தனது தயவில் ஆட்சியைக் கொண்டிழுக்கும் புதுடில்லி மத்திய அரசை வழிப்படுத்துகின்ற உரிமையும், தகுதியும், செல்வாக்கும் உடையவராக இன்றைய தமிழக முதல்வர் உள்ளார்.

அந்நிலையில், ஈழத் தமிழருக்கு எதிரான போராட்டத்தில் இந்தியப் படைகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்தும் மத்திய அரசின் செயற்போக்குக்குக் கலைஞரும் பொறுப்பே. அவர் இந்த விடயத்தில் வெறுமையாகப் பார்த்திருந்து வாளாவிருந்து தவறிழைக்கிறார் என்பதிலும் பார்க்க, தவறுக்கு குற்றத்துக்கு நேரடியாகப் பொறுப்பு என்ற அளவில் குற்றவாளியாகிறார் எனக் கூறுவதுதான் பொருத்தமானதாகும். ஆட்சி, அதிகார சொகுசு அவரை ஈழத் தமிழர் பால் நியாயம் செய்ய விடாமல் தவறிழைக்க வழி செய்து நிற்கிறது. அதுதான் உண்மை.
uthayan.com.
for contact: jaalavan@gmail.com

** அமெரிக்காவில் மகிந்தவின் வருகையினை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்டனப் பேரணி




ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.



கனடாவின் ரொறன்ரோ, மொன்றியல் நகரங்களில் இருந்து மட்டும் அறுநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் பேருந்துகளிலும் வானூர்தியிலும் தமது சொந்த வாகனத்திலும் சென்று கண்டனப் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் பங்கேற்பதற்கான வாகன ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக திமிரோடு பேசியும் தமிழ் மண்ணை வல்வளைப்புச் செய்தும் வானில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் எறிகணைத் தாக்குதல் நடத்தியும் 225,000 அதிகமான மக்களை ஏதிலிகளாக்கியும் ஒரு முழு அளவிலான இனப்படுகொலையை நடத்தி வரும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கோர முகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தோலுரித்து உலகுக்குக் காட்ட இக்கண்டனப் பேரணி உதவியுள்ளது.



கண்டனப் பேரணியில்

எங்கள் தலைவர் பிரபாகரன் (Our Leader Prabhakaran)

எங்கள் தாகம் தமிழீழம் (We Want Thamizh Eezham Now)

எங்களுக்கு வேண்டும் சுதந்திரம் (We Want Freedom)
ராஜபக்ச இனப்படுகொலையாளன் (Rajapakse Mass Killer)

என ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் ஆவேசமான முழக்கங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில் மோதி வானை நோக்கி எதிரொலித்தன.
சிறிலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஏராளமான முழக்க அட்டைகளையும் பதாதைகளையும் தமிழ் உணர்வாளர்கள் பேரணியில் தாங்கியிருந்தனர்.



கண்டனப் பேரணி நிகழ்வினை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் ஒலி, ஒளி ஊடகங்கள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்தன.
கண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன், வழக்கறிஞர் நாதன் சிறீதரன், திருமதி உசா சிறீஸ்கந்தராஜா, திருமதி வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

வழக்கறிஞர் வி.உருத்திரகுமார் பேசும் போது,
"தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன நடத்திய ஆயுதப் புரட்சி ஒன்றை மேற்கொண்டு சிங்கள மக்களைப் படுகொலை செய்தபோது சிறிலங்கா அரசு அங்குள்ள ஊர்கள் மீது குண்டு வீசவில்லை, எறிகணைத் தாக்குதலை நடத்தவில்லை, சிங்கள மக்கள் சுற்றி வளைக்கப்படவில்லை, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டில்களில் பூட்டி வைக்கப்படவில்லை.

ஆனால் தமிழர்கள் மீது இன்றைய சிறிலங்கா அரசு காட்டுமிராண்டித்தனமான- கண்மூடித்தனமான வான்-தரை வழியாகத் தாக்குதல்களை நடத்தித் தமிழ் மக்களைக் கொல்கினன்றது.
வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது 6 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை வீசி விட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றது. எனவே, தமிழ் மக்கள் பாதுகாப்போடும் சுதந்திரமாகவும் வாழ உலக நாடுகள் தமிழ் மக்களின் தன்னனாட்சி உரிமையை அங்கீகரிக்க இப்போதாவது முன்வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

வழக்கறிஞர் நாதன் சிறீதரன் பேசும் போது,
"குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்து வாழமுடியாவிட்டால் ஒத்து வாழும்படி முதலில் அறிவுரை செய்கின்றோம் அதற்குப்பின்னரும் அவர்கள் ஒத்துப் போகவில்லை என்றால் மணமுறிவுதான் சரியான வழி என அவர்களைப் பிரிந்து வாழ விட்டுவிடுகிறோம். அதேபோல் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே நாட்டில் ஒத்துவாழ முடியாத நிலை இருக்கிறது. எனவே நாட்டைப் பிரித்து தமிழர்களின் நிலப்பரப்பை தமிழர்களிடமே கொடுத்துவிடுவதுதான் இனச் சிக்கலுக்கு சரியான தீர்வாக இருக்கும்" என வலியுறுத்திக்கூறினார்.

மருத்துவர் எலின் சண்டரும் உரையாற்றினார். மிகச் சொற்பமான சிங்களவர்கள் கண்டனப் பேரணிக்கு எதிராகக் கூடி நின்று கூச்சலிட்டனர். இவர்களில் பெளத்த பிக்குகள் சிலரும் காணப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.
நியூயோர்க் காவல்துறை கண்டனப் பேரணி நடத்துவதற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
ஏராளமான பிறமொழிச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் கண்டனப் பேரணியில் காணப்பட்டார்கள். பலரை நேர்காணல் செய்தனர்.
இதே பூங்காவில் சீனாவுக்கு எதிராகத் திரண்டிருந்த திபெத்தியர்களும் ஈரானிய ஆட்சித்தலைவருக்கு எதிராகத் திரண்டிருந்த யூதர்களும் தமிழர்களின் கண்டனப் பேரணிக்குத் தங்களின் ஆதரவைக் தெரிவித்தனர்.
ஈரானிய - சிறிலங்கா ஆட்சித்தலைவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி இருக்கும் படத்தை அங்கு வந்திருந்த தமிழர்கள் பேரணியில் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இக்கண்டனப் பேரணி பெருவெற்றி என இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்புப் தெரிவித்தது. வேறு இனத்தவர்கள் நடத்திய பேரணிகளை விட தமிழர்கள் நடத்திய பேரணி அளவிலும் உணர்விலும் மேலோங்கி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
எலியாஸ் ஜெயராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதோடு காலமறிந்து கண்டனப் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
puthinam.com
for contact: jaalavan@gmail.com

Tuesday, 23 September 2008

** கிழக்கில் ஆயுதக்குழுக்களிடம் ஆயுதங்களைக் களைய ஆயுததாரி பிள்ளையான் உறுதியளித்துள்ளாராம்(??) - ரொபேட் ஓ பிளாக்.



கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக் குடியில் அமெரிக்காவின் உதவியுடன் திறக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையத் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,


கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத சூழலில் அங்கு முதலீடுகளை மேற்கொள்ள தொழிலதிபர்கள் அச்சமடைகின்றனர். தனியார் முதலீடுகளை மேற்கொள்ள அங்கு பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். சிறீலங்கா அரசாங்கமும், கிழக்கு மாகாணசபை நிர்வாகமும், முதலமைச்சரும் பாதுகாப்படை உறுதி செய்ய வேண்டும்.அங்கு நடைபெறும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அங்கு மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
pathivu.com
for contact: jaalavan@gmail.com

** அமெரிக்காவில் மகிந்தவின் வருகைக்கு எதிராக மாபெரும் கண்டனப் பேரணி

அமெரிக்காவில் மகிந்தவின் வருகைக்கு எதிராக மாபெரும் கண்டனப் பேரணி


Photo:Tamilnaatham.com

for contact: jaalavan@gmail

Monday, 22 September 2008

** வன்னிவேளாங்குள முன்னகர்வுகள் முறியடிப்பு: 15 படையினர் பலி! 18 படையினர் காயம்


வன்னிவேளாங்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 18 படையினர் காயமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பெரும் எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் எறிகணைச் சூட்டாதரவு மற்றும் போராளிகளினது முறியடிப்புத் தாக்குதலுடனும் படையினரின் முன்னகர்வுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக படையினர் முன்னகர்வுகளை கைவிட்டுவிட்டு தமது பழைய நிலைகளுக்குத் திரும்பி ஓட்டமெடுத்துள்ளனர். இதன்போதே படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 18 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
pathivu.com

for contact: jaalavan@gmail.com

Sunday, 21 September 2008

32-மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம்.


விதுரன்

வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது.

வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது மீண்டும் பழைய நிலைகளுக்குத் திரும்புவதா எனச் சிந்திக்க வேண்டிய நிலைக்கு படையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
நாச்சிக்குடா வரை சென்று விட்ட படையினருக்கு பூநகரி நோக்கிச் செல்ல முடியாதிருக்கிறது. வன்னேரி மற்றும் அக்கராயனைச் சமீபித்து விட்ட படையினருக்கு கிளிநொச்சி நோக்கிச் செல்ல முடியாதிருக்கிறது.
வன்னியில் புலிகளின் படைத்தலைமையகங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப் படுத்தும் போது அவர்கள் நிலைகுலைந்து விடுவரெனக் கருதும் படைத்தரப்பு, கிளிநொச்சிக்குள்ளும் முல்லைத்தீவுக்குள்ளும் சென்றுவிட்டால் ஈழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விடுமெனவும் கருதுகிறது.
இதனால்தான், வடபகுதிப் போருக்கான இராணுவக் கட்டளைத் தலைமையகங்களையும் விநியோக மையங்களையும் இலக்கு வைப்பதன் மூலம் வன்னிப் படை நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடப் புலிகளும் திட்டமிடுகின்றனர்.

வன்னிக்குள் படையினரைப் பரந்து விரிந்து அகலக்கால் வைக்கச் செய்து விட்டு புலிகள் தற்போது தங்கள் திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளனர். வன்னிக்குள் நுழைந்துவிட்ட படையினர் தங்கள் இலக்குகளை அடைவதற்குப் பெருமுயற்சி செய்கின்றனர்.
புலிகளின் தாக்குதல்கள் மற்றும் ஆட்பற்றாக்குறை காரணமாக அவர்களது படை நடவடிக்கைகள் இடை நடுவில் நிற்கின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த புலிகள், தங்கள் பகுதிக்குள் முன்னேறிவந்துவிட்ட படையினரைத் தடுத்து நிறுத்தி விட்டு அவர்களது படைத் தலைமையகங்கள் மீதும் விநியோக மையங்கள் மீதும் கடும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.
பாரிய படை நடவடிக்கைகள் நடைபெறும் நேரம் அந்தப் படை நடவடிக்கைகளுக்கான கட்டளைத் தலைமையகங்கள் புலிகளின் பாரிய தாக்குதல்களுக்குள்ளான போதெல்லாம் அந்தப் படை நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன அல்லது பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன.
இது ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாறு. இதனொரு கட்டமாக, யாழ்.குடாவைக் கைப்பற்றுவதற்காக 1995 இல் "ரிவிரச" படை நடவடிக்கையை ஆரம்பிக்க முன் அந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வலிகாமம் பகுதியை மையமாக வைத்து ஒப்பரேசன் லீப் போவேர்ட் (முன்னேற்றப் பாய்ச்சல்) என்ற படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பலாலியிலிருந்து இந்தப் படை நடவடிக்கை ஆரம்பமானது. வலிகாமம் வடக்கிலிருந்து புறப்பட்டு வலி .மேற்கை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை நடவடிக்கைக்காக அளவெட்டிப் பகுதியில் கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டிருந்தது.
முன்னேறிய படையினர் வட்டுக்கோட்டை வரை வந்த போது அளவெட்டி இராணுவக் கட்டளைத் தலைமையகம் மீது புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்து பேரழிவை ஏற்படுத்தினர்.."புக்காரா" விமானமொன்றும் வீழ்த்தப்பட்டது.

முன்னேற்றப் பாய்ச்சலுக்கான படைத்தலைமையகம் அழிக்கப்படவே, வட்டுக்கோட்டை வரை முன்னேறிய படையணிகள் பின் வாங்கின.
ஓரிரு தினங்களில் அந்தப் படை நடவடிக்கையும் கைவிடப்பட்டது. இதுபோன்றே 1997 இல் வன்னிக்குள் ஜெயசிக்குரு படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. "ஏ9' வீதியை கைப்பற்றி வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் தரை வழிப் பாதையை திறக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட காலப் படை நடவடிக்கைக்கு கனகராயன்குளத்தில் கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தப் படைத்தளம் மீது புலிகள் நடத்திய பாரிய தாக்குதலில் அது அழிக்கப்பட, நெடுங்கேணி முதல் வவுனியா வரை அனைத்துப் படைத் தளங்களும் ஒரு சில நாட்களுக்குள் புலிகளிடம் வீழ்ச்சி கண்டது வரலாறு.

குடாநாட்டில் முன்னேற்றப் பாய்ச்சல் படை நடவடிக்கைக்கு ஏற்பட்ட பெருந்தோல்வி, யாழ்.குடாநாட்டை பாதுகாக்க வேண்டுமானால் பலாலி இராணுவத் தலைமையகத்தை வலுப்படுத்தி அதனைப் பாதுகாக்க வேண்டுமென்றதொரு நிலையை ஏற்படுத்த, வலிகாமம் வடக்கை அதி உயர் பாதுகாப்பு வலயமாக்கி பலாலி இராணுவத் தலைமையகத்தை பாதுகாத்து குடாநாட்டையும் படையினர் பாதுகாத்தனர்.

அதேபோன்றே ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரும் தோல்வி, வவுனியாவைப் பாதுகாக்க வேண்டுமானால் வன்னிக்கான வவுனியா இராணுவத் தலைமையகத்தை வலுப்படுத்திப் பாதுகாக்க வேண்டுமென்றதொரு நிலையை ஏற்படுத்த வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் உருவாக்கப்பட்டு வவுனியா பாதுகாக்கப்பட்டது.

வன்னியில் தற்போது நடைபெற்று வரும் பாரிய படை நடவடிக்கைக்கான கட்டளைத் தலைமையகம் மீதே கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். இங்கு படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வன்னிக்குள் படை நடவடிக்கையைத் தொடர்வதா அல்லது வவுனியாவில் இராணுவக் கட்டளைத் தலைமையகத்தை பாதுகாப்பதா என்ற பெரும் பிரச்சினை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

வன்னிப் படை நடவடிக்கைக்காக அனைத்துப் படையணிகளும் புலிகளின் முன்னரங்கக் காவல் நிலைகளை நோக்கி நகர தற்போது வவுனியாவையும் அங்குள்ள இராணுவக் கட்டளைத் தலைமையகத்தையும் பாதுகாக்க முடியாததொரு நிலையேற்பட்டுள்ளது.

வவுனியாவை பாதுகாக்க வேண்டுமானால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அங்கு பெரும் படையணிகளை நகர்த்த வேண்டுமென்றதொரு நிலையேற்றப்பட்டுள்ளது. இது வன்னியில் இடம்பெற்று வரும் பாரிய படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கப் போகிறது.

அண்மையில் திருகோணமலை கடற்படைத் தளம் மற்றும் துறைமுகம் மீதான வான் புலிகளின் தாக்குதல் யாழ்.குடாநாட்டிலுள்ள படையினரின் விநியோக மையத்தை தகர்க்குமொரு முயற்சியாகும். குடாநாட்டிலுள்ள படையினருக்கான அனைத்து கடல் வழி விநியோகங்களும் திருகோணமலையிலிருந்தே மேற்கொள்ளப்படுவதால் இதன் மீதான தாக்குதல் குடாநாட்டுப் படையினருக்கான விநியோகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதேபோன்றே வவுனியா இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதல் வன்னிப் போர்முனையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இவ்விரு தாக்குதலும் வடபகுதியில் இடம்பெறும் படை நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகள் விடுத்த மிகப் பெரும் சவாலாகவே கருதப்படுகிறது. இவ்விரு தாக்குதலிலும் வான் புலிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இனிமேல் வடக்கே இடம்பெறப் போகும் தாக்குதல்களிலும் வான்புலிகள் முக்கிய பங்காற்றவுள்ளதாலேயே வவுனியா கூட்டுப் படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் விமானப் படையினரின் ராடரை புலிகள் இலக்கு வைத்தனர்.

இதன் மூலம் வான் புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக இருப்பவற்றை புலிகள் முடக்கிவிட முனைவது தெளிவாகியுள்ளது. அத்துடன் வன்னிப் போர் முனையில் இனி வான் புலிகளின் நடவடிக்கை தீவிரமடையக் கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் புலிகளின் ஒரு விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக விமானப் படையினர் கூறியுள்ள போதும் அதனை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தங்கள் விமானத்தை விமானப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை புலிகள் முற்றாக மறுத்துள்ளனர். அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலைப் போன்றே இங்கும் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

எனினும் அநுராதபுரத் தாக்குதலில் புலிகளின் பீரங்கிப் படையணி பங்கேற்கவில்லை. ஆனால் இந்தத் தாக்குதலில் புலிகள் தங்கள் பீரங்கிப் படையணியைப் பயன்படுத்தியதால் கரும்புலிக் கொமாண்டோக்களால் கூட்டுப் படைத்தலைமையகத்திற்குள் இலகுவாகப் புக முடிந்தது.
"ஏ-9' வீதியின் கிழக்குப் புறமாக வவுனியா நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்குள்ள கூட்டுப்படைத் தலைமையகத்தினுள் இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தலைமையகமும் அருகருகில் உள்ளன. இரு படைத்தளங்களையும் பிரிக்குமிடத்திற்குச் சமீபமாகத்தான் ?இந்திரா - II? ராடர் நிலையமும் இருந்துள்ளது.

இதனை இலக்கு வைத்தே கரும்புலிகளின் கொமாண்டோ அணி படைத்தளங்களினுள் ஊடுருவியிருந்தது. மணலாறு, பதவியா ஊடாக வவுனியா எல்லையில் ஈரற்பெரியகுளத்திற்கு வந்தே அங்கிருந்து கரும்புலிகள் கூட்டுப் படைத்தளத்தினுள் ஊடுருவியது தெரிய வந்துள்ளது. முதலில் இந்தக் கூட்டுப் படைத் தலைமையகம் மீது புலிகள் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ச்சியாக பெருமளவு ஷெல்கள் படைத்தளத்தின் நாலாபுறமும் வந்து விழ படையினர் அனைவரும் பதுங்கு குழிகளினுள் புகுந்து கொண்டனர்.

இந்த வேளையிலேயே கரும்புலிகளின் அணி படைத்தள பாதுகாப்பு வேலிகளை ஊடறுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தது. கரும்புலிகளின் இலக்கு விமானப் படைத்தளத்திலிருந்த ராடராகும். வான் புலிகளின் பறப்புக்களை கண்காணிப்பதற்காக இது அங்கு பொருத்தப்பட்டிருந்தது.

ராடர் நிலையத்தை இலக்கு வைத்தே கரும்புலிகள் அணி நகர்ந்தது. தங்கள் வசமிருந்த செய்மதித் தொலைபேசி மூலம், வன்னியிலிருந்து புலிகள் ஏவும் ஆட்லறி ஷெல் தாக்குதல் இலக்குகளை அவர்கள் நெறிப்படுத்தியவாறு படைத்தளங்களுக்குள் மேலும் ஊடுருவினர். அவர்கள் சென்ற பகுதிகளில் ஷெல்கள் விழாததால் தளங்களுக்குள் அவர்களால் இலகுவாக ஊடுருவ முடிந்தது. எனினும் புலிகள் ஏவிய ஷெல்கள் எங்கு வீழ்கின்றன எனத் தெரியாததால் படையினர் பதுங்கு குழிகளுக்குள்ளிருந்தனர். இங்கு ஊடுருவிய கரும் புலிகளில் சிலர், ஆட்லறி ஷெல்களை சரியான இலக்கில் ஏவுவதற்கான இடங்களைக் காண்பிக்கக் கூடியவர்கள் (artillerly spotters). இதனால் அவர்கள், படைத்தளத்தினுள் ஊடுருவியதும் அங்குள்ள முக்கிய நிலைகள் மீது எவ்வாறு எந்தத் திசையில் எந்தளவு தூரத்திற்கு ஆட்லறி ஷெல்களை ஏவவேண்டுமென செய்மதித் தொலைபேசி ஊடாக நெறிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம், புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக படையினரும் பதுங்குகுழிகள் மற்றும் காப்பரண்களிலிருந்து கரும்புலிகள் மீது தாக்குதலை நடத்த இருதரப்பிற்குமிடையே கடும் மோதல்களும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் களநிலைமை வாய்ப்பாக இருக்க தங்கள் விமானங்களை கரும்புலிகள் அங்கு வரவழைத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென அங்கு வந்த புலிகளின் விமானமொன்றை விமானப்படையினரின் ராடர் அவதானித்துள்ளது.

அந்த விமானம் அங்கு வந்து தாக்குதலை நடத்திய போது அவர்களது மற்றொரு விமானமும் அங்கு வரவே கூட்டுப் படைத் தளத்திலிருந்தும் வவுனியாவிலுள்ள படை முகாம்களிலிருந்தும் புலிகளின் விமானங்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், அதற்கிடையில் இரு விமானங்களும் நான்கு குண்டுகளை வீசிவிட்டுத் திரும்பிவிட்டன. இவ்வேளையில், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து வந்த விமானப்படை விமானங்கள் வன்னிக்குள் சென்று தாக்குதலை நடத்தியுள்ளன. எவ்-7 விமானத்தின் தாக்குதலால் புலிகளின் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக பின்னர் படைத்தரப்பு அறிவித்தது.

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் அந்த விமானம் தரையிறங்குவதற்கிடையில் எவ்-7 விமானம் அதனை இடைமறித்து, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விமானத்தை தாக்கியதாகக் கூறப்படும் ?எவ்-7? விமானத்தில், தாக்குதல் நடைபெறும் போது அந்தத் தாக்குதலை மிகத் துல்லியமாக ஒளிப்பதிவு சேய்யக்கூடிய நவீன கமராக்கள் இருந்தும் அவை இதனைப் பதிவு செய்யவில்லை. அத்துடன் புலிகளின் தாக்குதலில் விமானப் படைத்தள ராடர் அழிக்கப்படவில்லையென்றால் அந்த ராடர், புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை பதிவு செய்திருக்கும்.
ஆனால், அதுபற்றி படைத்தரப்பு எதுவுமே கூறாததால் விமானங்கள் எதுவும் அழிக்கப்பட்டதற்கான பதிவுகள் அந்த ராடரில் இல்லாததுடன் பின்னர் அந்த ராடர்கள் அழிக்கப்பட்டுமிருக்க வேண்டும்.

இதனால்தான் புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பொய்யென்பதும் விமானப்படையினரின் ராடர் அழிக்கப்பட்டது உண்மையென்பதும் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இவற்றை மறைக்க வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தும் போதும் அவற்றை படையினரால் தாக்கியழிக்க முடியாது போகிறது.இது சாதாரண படையினர் மத்தியிலும் தென்பகுதி மக்கள் மத்தியிலும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புலிகள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.அதேநேரம், கிளிநொச்சி வாசலில் படையினர் நிற்பதாக அரசும் படைத் தரப்பும் கூறிவந்த நேரத்தில் புலிகள் வவுனியா வாசலுக்கு வந்தமை தென் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வான் வழித் தாக்குதலை நடத்தியது மட்டுமன்றி தரை வழித் தாக்குதலையும் கூட்டுப் படைத் தலைமையகத்தினுள் சுமார் இரு மணி நேரங்களுக்கு மேலாக 80 இற்கும் மேற்பட்ட ஆட்லறி ஷெல்களையும் புலிகள் ஏவியது மிகப் பெரும் அதிர்ச்சியாகும். இதைவிட ராடர் நிலையமும் அழிக்கப்பட்டு விட்டதென்ற செய்தியும் வெளியே தெரிய வந்தால் மிகப்பெரும் அவமானமாகி விடும் என்பதாலேயே, இவையேல்லாவற்றையும் மறைப்பதற்காக புலிகளின் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அரசும் படைத்தரப்பும் கூறின.புலிகளிடம் மேலும் சில விமானங்கள் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் அடுத்த முறை விமானத் தாக்குதல் நடைபெற்றால் அதுவேறு விமானங்களெனக் கூறிவிட முடியுமென்பதால் முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் புலிகளின் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அரசும் படைத் தரப்பும் கூறுகின்றன.

எனினும், புலிகளின் விமானங்கள் ராடர் திரையில் தென்பட்டு மூன்று நிமிடங்களுக்குள் அவை வவுனியாவுக்குள் வந்துவிட்டதாக படைத்தரப்பு கூறுவதால் புலிகளின் விமானங்கள் இந்தத் தாக்குதலுக்காக முல்லைத்தீவிலிருந்து வந்தனவா என்பது பெரும் சந்தேகமாகும்.அதேநேரம், முல்லைத்தீவிலிருந்துதான் அவை வந்திருந்தாலும் தாக்குதலின் பின் திரும்பும் போது விமானப் படை விமானங்கள் துரத்தி வந்து தாக்கும் ஆபத்திருப்பதால் தாக்குதலை நடத்திவிட்டு அவை கூடிய தூரத்திற்குப் பறந்து சென்றிருக்க மாட்டா. விரைவில் பாதுகாப்பான ஓரிடத்தில் தரையிறங்கியிருக்குமென்பதால் விமானமொன்றை முல்லைத்தீவு காட்டில் வைத்து அழித்து விட்டதாக படையினரால் சுலபமாக கூறிவிட முடிந்திருக்கிறது.எனினும், அதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவர்களால் காண்பிக்க முடியவில்லை.

இதேநேரம், வன்னியில் புளியங்குளம் பகுதியிலிருந்தே புலிகள் கூட்டுப் படைத்தளம் மீது ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக படையினர் கூறுகின்றனர்.ஆட்லறி மற்றும் மோட்டார் குண்டுகள் செலுத்தும் இடங்களைக் கண்டறிவதற்காக மணலாறு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஆட்லறி, மோட்டார் ராடர் இதனைத் தெரிவித்ததாக படைத்தரப்பு கூறுகிறது.எனினும், புளியங்குளத்தில் தங்கள் ஆட்லறிகள் மீது படையினர் பதில் தாக்குதலை நடத்திவிடுவதைத் தவிர்ப்பதற்காக புலிகள் அங்கு தங்கள் ஆட்லறிகளை தொடர்ந்தும் இடத்திற்கிடம்மாற்றியவாறே கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியதால் படையினரால் புலிகளின் ஆட்லறி நிலைகள் மீது தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது தாக்குதலை நிறுத்த முடியவில்லை.

இதற்கிடையில் தரைவழியால் படைத்தளங்களுக்குள் புகுந்த புலிகள் முடிந்தவரை தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது தாக்குதலை நடத்தி அவற்றுக்குச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.ஊடுருவிச் சென்ற கரும்புலி ஒருவரே ராடர் நிலையம் மீது ஆர்.பி.ஜி. தாக்குதலை நடத்தி அதனை அழித்ததாகவும் தெரியவருகிறது. படைத் தளங்களினுள் கரும்புலி அணிகள் சுமார் இரு மணிநேரம் வரை நின்றுள்ளன.அதிகாலை 3.30 மணியளவில் படைத்தளங்கள் மீது கடும் செல் தாக்குதலை ஆரம்பித்த புலிகள் காலை 6 மணிவரை தொடர்ச்சியாக அங்கு செல் தாக்குதலை நடத்தி, உள்ளே ஊடுருவிய கரும்புலிகள் தாக்குதலை நடத்த வசதிகளை ஏற்படுத்தித் கொடுத்துள்ளனர்.கடைசிக் கரும்புலி இறக்கும்வரை புலிகளின் செல் தாக்குதல் தொடர்ந்துள்ளது. அவரது தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரே புலிகள் தங்கள் செல் தாக்குதலை நிறுத்தியுள்ளனர்.இருமணி நேரத்திற்கும் மேலாக உள்ளே நின்ற புலிகள் எந்தளவு சேதத்தை ஏற்படுத்தியிருப்பரென்பதை ஊகிக்கத் தேவையில்லை.

வன்னிப் படைத்தலைமையகத்திற்கே ஆபத்தென்றால் வன்னிக்குள் முன்நகர்ந்து சென்றிருக்கும் படையினரின் நிலை என்னவாகுமெனச் சிந்திக்கத் தேவையில்லை.அங்கும் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாகும். வவுனியாவை உடனடியாகப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால், அதற்கான படைவலு தற்போது படையினரிடம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கிளிநொச்சி நகர் தங்களின் செல் வீச்சு எல்லைக்குள் வந்துவிட்டதாகக் கூறிவந்த படையினருக்கு வவுனியா கட்டளைத் தலைமையகம் தங்கள் செல் வீச்சு எல்லைக்குள் இருப்பதை புலிகள் காண்பித்துள்ளனர்.வவுனியா படைத்தளம் மீதான வான் தாக்குதலையும் செல் தாக்குதலையும் படையினரால் முறியடிக்க முடியாது போனமை வன்னிச் சமரில் மாற்றங்களேற்படப் போவதை உணர்த்தியுள்ளது. புலிகள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள் என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது.

தருணம் பார்த்து வந்தவர்கள் தற்போது தாக்கத் தொடங்கி விட்டதால் இனி யுத்தமுனையில் மாற்றங்களேற்படுவது சகஜமாகிவிடும்.

Thinakural.com

for contact: jaalavan@gmail.com

Saturday, 20 September 2008

31-யுத்த வெற்றிகளே அரசாங்கத்தின் குறிக்கோள் என்பதால் நாடு அழிவுப்பாதையை நோக்கி நகர்கிறது


சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தொடர்பில் அரசாங்கம் காட்டிய கவலையும் கரிசனையும் ஒரு இனத்தின் பிரச்சினை மீது காட்டப்படாத நிலையினையே காண்கிறோம். இதனை விட சாபக் கேடானதும் வேதனையானதுமானதொரு நிலை இருக்க முடியாது.

முன்னைய எல்லா அரசாங்கங்கள் போலவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறதே தவிர அரசியல் தீர்வு காண்பதில் தாம் உறுதியாயிருப்பதாகவே அரசு தரப்பினர் குறிப்பாகச் சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அண்மையில் கூட" இந்து" நாளிதழுக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம வழங்கிய செவ்வியில் கூட இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். உண்மையில் தனது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக யுத்தத்தை கோரமாக நடத்தி தென்னிலங்கை மக்களுக்கு வெற்றிகளை வெள்ளித் தட்டத்தில் வழங்குவதிலேயே அரசாங்கம் முனைப்பாயிருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்படுகின்றனர். நாடும் அழிவுப் பாதையில்

இதன் பொருட்டு தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்படுவது பற்றியோ அதற்கப்பால் முழு நாடுமே அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்படுவது பற்றியோ அரசாங்கம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இன, மத மக்களினதும் நலன் கருதி நீண்ட காலமாக உழைத்து வந்துள்ள எமக்கு இன்றைய நிலைமைகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டுமெனக் கூறிவந்த எல்லா அரசாங்கங்களும் அதன் தோற்றுவாயான அரச பயங்கரவாதம் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்ததில்லை.

மேலும், அரசியல் தீர்வு தான் பயங்கரவாதத்திற்கான உண்மையான பரிகாரம் என்பதும் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு தான் குட்டிச்சுவராக்கப்பட்டாலும் சரி மிதமிஞ்சிய வளங்களை கொட்டியாவது யுத்தத்தில் வெற்றியீட்டி ஒரு இராணுவத் தீர்வை நோக்கியே அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இன்றைய நிலையில் யுத்த முனைகளை நோக்குமிடத்து விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைப் பொறுத்தவரை அவர்களின் இலகு விமானங்களைத் துரத்தித் தாக்கி அழிப்பதற்கு F 7 போன்ற விமானங்கள் ஏற்றவையாயில்லாத படியால் ரஷ்ய தயாரிப்பான மிக் 29 ரக விமானங்கள் ஏறத்தாழ 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

இடம்பெயர்ந்த 2 1/2 இலட்சம் மக்களின் அவலம்

வடக்கில் குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கடுமையான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 2 1/2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பிரதேசத்தில் அவல வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஐ.நா. முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச/ தேசிய தொண்டர் அமைப்புகள் ஆதரவளித்து வந்த படியால் இடம்பெயர்ந்துள்ளவர்களின் உயிரும் உடலும் ஒட்டியிருப்பதற்காகவேனும் சந்தர்ப்பம் கிட்டியிருந்தது.

ஐ.நா. அடங்கலாக சகல தொண்டர் அமைப்புகளும் கிளிநொச்சியை விட்டு வெளியேறிவிட வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. அதாவது, அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத படியாலேயே அவை வவுனியாவுக்கு நகர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சிலுள்ள இடம்பெயர்ந்த மக்களும் வவுனியாவுக்கு நகர வேண்டும். அங்கே அவர்களை வரவேற்பதற்கு அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அங்கு சகல வசதிகளும் வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ( I C R C ) பணியாளர்கள் தாம் வன்னியை விட்டு வெளியேறப் போவதில்லையெனத் தீர்மானித்து அரசாங்கத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர்.

ஐ.நா. நிவாரணப் பணியாளர் கிளிநொச்சியை விட்டு வெளியேறி விட வேண்டுமென அரசாங்கம் பிறப்பித்திருந்த உத்தரவினை அடுத்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு அறிக்கையினை விடுத்திருந்தார். அதாவது, சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடுவதற்கு மனித நேய அமைப்புகள் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கு மற்றும் சண்டை காரணமாகப் பாதிப்புற்று மனிதாபிமான உதவிகளை வேண்டி நிற்பவர்களை அணுகி உதவுவதற்கும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் அக்கறை கொள்ள வேண்டுமென பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்தோடு சர்வதேச மனிதாபிமானச் சட்டம் அதிலும் குறிப்பாக விகிதாசார விதிமுறை மற்றும் இராணுவ இலக்குகளைத் தெரிவு செய்தல் ஆகிய அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் மூன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல் இலங்கை முகம் கொடுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்திக் கூறியிருந்தார். ஆயுத மோதல்களின் போது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு விடயமாக மக்கள் எங்கே தமக்குப் பாதுகாப்பும் மன அமைதியும் உண்டு என்பதைத் தனித்தனியாகவும் முடிவு செய்வதற்கு இடமுண்டு எனவும் மேற்குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குச் சாட்டையடி கொடுக்கும் விதத்தில் அரசாங்க சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். இவர் அண்மைக் காலம் முதல் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

விஜயசிங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்ப்போம்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் தொடர்பாக அரசாங்க சமாதான செயலகம் வியப்படைந்துள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக நடத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் கவலையடைந்துள்ளார் போல் தெரிகிறது. சாதாரண பொதுமக்களுக்காக அவர் கரிசனை காட்டுவது போல் நடந்து கொள்கிறாராயினும் "விகிதாசார விதிமுறை மற்றும் இராணுவ இலக்குகளைத் தெரிவு செய்தல்' என அவர் கூறியுள்ளதன் மூலம் ஒரு செய்தி அனுப்பப்படுகிறது போல் தெரிகிறது.

இலங்கையில் அண்மைய இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் (சிவிலியன்கள்) யாரும் பலியாக்கப்பட்டதாயில்லை. எனவே, யுத்தம் நடக்கும் வேறு நாடுகளில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் பலியாகும் நிகழ்வுகளால் தூண்டப்பட்டு பயங்கரவாதத்தினை முறியடிக்க முனையும் எல்லா ஆயுதப் படையினரும் ஒரு மாதிரியானவர்களென அவர் தவறாக எடைபோட்டு விட்டார்.

இதன் மூலம் அவர் வேறு நாடுகளுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்கு விளைந்துள்ளார். என்றாலும் கூட எதிர்காலத்தில் அவர் இலங்கை நிலைமைகளை கவனமாக ஆராய்வார் என நம்புகிறோம். அவர் அறிவைப் பெற்றுக் கொண்டால் ஞானம் பிறக்கும். இலங்கைப் படையினரின் தராதரம் அபரிமிதமானது என்பதையும் அவர்கள் இலக்குகளைக் கவனமெடுத்துத் தெரிவு செய்பவர்கள் என்பதையும் அதன் காரணமாக அதையொட்டிய அழிப்புகள் குறைவு அல்லது இல்லை என்பதையும் செயலாளர் நாயகம் அறிந்து கொள்வார்.

தனது அறிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவர் என்பதை செயலாளர் நாயகம் உணராமல் இருக்கக்கூடும். இலங்கை ஆயுதப் படையினர் தம்மீது நெருங்கி வருவதை நிறுத்தி வைப்பதற்கு விடுதலைப் புலிகள் அப்பாவி செயலாளர் நாயகத்தைக் கூட ஆயுதமாய்ப் பயன்படுத்துவர். இவ்வாறாகவே விஜயசிங்க ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சாடியிருந்தார்.

முன்பும் ஐ.நா. அதிகாரிகள் எள்ளி நகையாடப்பட்டனர்.

இவ்வாறாகவே முன்பு இலங்கை வந்து தத்தம் துறைசார் ஆய்வுகளை நடத்தி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. உயர் அதிகாரிகளாகிய சேர் ஜோன் ஹோம்ஸ், அலன் றொக் போன்றோர் இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் எள்ளி நகையாடப்பட்டனர். ஹோம்ஸ் ஒரு பிசாசு என்று கூட பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஹொரணையில் பொதுக் கூட்டமொன்றில் கூறிவைத்தவர்.

அதுமட்டுமல்லாமல் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் இலங்கையில் ஒரு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சிபாரிசு செய்தவராகிய முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மீதும் நெற்றிக்கண் காட்டப்பட்டதாயினும் குற்றம் குற்றமே என அம்மையார் கூறிவைக்கத் தவறவில்லை.

ஒரு கட்டத்தில் காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தான் ஐ.நா. செயலாளருக்குக் கூட பயப்படாதவர் எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே, அமைச்சர்களும் அதிகாரிகளும் மனம் போன போக்கில் கதைப்பதற்கு கிஞ்சித்தும் தயங்காத பழக்கம் குடிகொண்டு விட்டது எனலாம். நிற்க, அரசாங்க சமாதானச் செயலக செயலாளர் நாயகம் விஜயசிங்க விடுத்துள்ள மேற்படி அறிக்கையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. சமாதான செயலகமும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளபடியால் இன்றைய செயலாளர் நாயகம் அது சமாதான செயலகம் என்பதை மறந்து பேசிவருகின்றார் போல் தெரிகிறது.
அப்படியிருந்தும் அவர் எல்லையை மீறிவிட்டார் என்பது அப்பட்டமாய்த் தெரிகிறபடியால் அரசாங்கம் அதனை மறுதலித்துள்ளதுடன், விஜயசிங்கவை ஜனாதிபதி ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்துள்ளார். கிழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை போல் தமிழரை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கே வடக்கிலும் தாம் செயற்பட்டு வருவதாக ராஜபக்ஷ அரசாங்கம் பறைசாற்றி வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்குப் பிரயத்தனம் செய்து வருவது கண்கூடு. கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டாலும் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எட்டப்படும் என்பது முயற்கொம்பு தான். சமாதானம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.
ஆனால், எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு வெற்றி கிட்டக் கூடும். அதுதான் அரசாங்கத்தின் இலக்கு என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒருவர் றொக்கற் விஞ்ஞானியாய் இருக்க வேண்டியதில்லை. இவ்வாறாக அரசாங்கம் அரசியல் இலாபம் பெற்றுத் தனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளக் கூடுமே ஒழிய, நாட்டுக்குப் பின்னடைவு ஒழிய நன்மை எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதே அனைத்து நாட்டு மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்பதையே இலங்கையில் கடந்த 60 வருட கால வரலாறு கூறுகின்றது.

கார்ள் மார்க்ஸ் கூறியதை மறந்து விடக்கூடாது

ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்குமாயின் அந்த இனமும் சுதந்திரமாய் இருக்க முடியாது என்றார் கார்ள் மார்க்ஸ். இது வரட்டு வேதாந்தம் அல்ல. இலங்கையைப் பொறுத்தவரை உண்மையில் சிங்கள இனம் தமிழர் இனத்தை அடக்குகிறது என்றால் அது தவறு. சிங்கள பேரினவாத முதலாளித்துவ வர்க்கத்தினரே தமிழ் இனத்தை அழித்தொழிக்கத் தலைப்பட்டு நிற்கின்றனர். அதற்காகவே 3 தசாப்தங்களாக யுத்தம் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசியமான பெருவாரியான வளங்கள் கரியாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சமாதானமும் சுபிட்சமும் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் பரந்து பட்ட சிங்கள மக்களும் மீட்சியின்றியே வாழ்ந்து வருகின்றனர். நிலைமைகள் மேலும் மோசமடையும் வாய்ப்புகளே காணப்படுகின்றன. எனவே, சிங்கள மக்கள் யுத்த வெற்றிகளை எதிர்பார்த்து ஏமாந்து குதூகலிப்பதை விடுத்து தமது எதிர்காலமும் இருள் மயமாகி வருவதைக் காண்பதற்கு விழித்தெழ வேண்டும்.

இந்திய அரசாங்கம் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

நிற்க இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்திய ஆளும் வர்க்கத்தினர் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நாடகமாடி வந்துள்ளமை நன்கு தெரிந்ததே. அது அண்மையில் மிக துலாம்பரமாக வெளிப்பட்டிருந்தது. இலங்கையில் சமாதானம் நிலவுவது இரு நாடுகளுக்குமே நன்மை பயக்கும். யுத்தம் மூலம் இலங்கையில் சமாதானம் மலரப் போவதில்லை. இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு போகும் நிலைமைகள் தான் தொடரச் செய்யும் என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும். ஆனால், இந்திய அரச தரப்பில் அவ்வாறு காய்கள் நகர்த்தப்படும் என நம்பிக்கை வைப்பதற்கில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. அவ்வாறாகச் செயற்படக் கூடிய சர்வதேச சக்திகள் இருக்கவே செய்கின்றன. எனவே, நாட்டில் இரத்த ஆறுகள் தொடர்ந்தும் பெருக்கெடுத்துக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பினைத் திரட்ட வேண்டும். இவ்வாறாகவே அனைத்து இலங்கை மக்களுக்கும் நன்மை கிட்டும்.

வ.திருநாவுக்கரசு
தினக்குரல்.கொம்

for contact: jaalavan@gmail.com

Thursday, 18 September 2008

** இரண்டு லட்சம் மக்களை காப்பாற்ற அனைத்துலக மட்டத்தில் உரத்து குரல் கொடுங்கள்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்



வன்னிப்பெரு நிலபரப்பில் இடம்பெயர்ந்து மனிதப் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள இரண்டு லட்சம் மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் அனைத்துலக மட்டத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்து.

போரினால் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து மரநிழல்களிலும் கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களின் அனைத்துப் பொருளாதார வசதிகளையும் இழந்து அநாதரவான நிலையில் உள்ள மக்களுக்கு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களே ஓரளவு உதவிபுரிந்து வந்தன.

இந்நிலையில் அந்நிறுவனங்களும் தற்போது அரசாங்கத்தினால் திட்மிட்டு வெளியேற்றப்பட்டமையினால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது ஆதரவின்றி தவிக்கின்றனர்.

இத்தகைய செயலானது அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மீறுவதாகவே அமைந்துள்ளது. இவ்வாறான ஈன இரக்கமற்ற செயற்பாட்டினை மனிதாபிமானமுள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.

இடப்பெயர்வினால் எமது மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசாங்கம் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே, சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதற்கு புலம்பெயர் வாழ் மக்கள் உட்பட சகல தரப்பினரும் அனைத்துலக மட்டத்தில் குரல்கொடுக்க முன்வாருங்கள் என்று அறிக்கையில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
puthinam.com
for contact: jaalavan@gmail.com

** வன்னேரிக்குளம் நோக்கிய முன்னகர்வுகள் முறியடிப்பு: 25 படையினர் பலி! 40 படையினர் காயம்! இரு உடலங்கள் மீட்பு.



வன்னேரிக்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை 10 மணியளவில் வன்னேரிக்குளப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மேற்கொண்ட முன்னகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரது இரு உடலங்களும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெரும் எறிகணை தாக்குதல்கள், கனரக ஆயுதம் பிரயோகம் மற்றும் எம்.ஜ.24 உலங்கு வானூர்த்தி உந்துகணைத் தாக்குதல்களின் சூட்டாதரவுடன் மேற்கொண்டு முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் பிற்பகல் 1 மணி வரை கடுமையாக எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து, படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். இதன்போதே 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை கிளிநொச்சியின் தென்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
pathivu
for contact: jaalavan@gmail.com

Wednesday, 17 September 2008

30-வீரத்தின் சிகரங்கள் -புரட்சிமாறன் -

இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை.
தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள்.
உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும் தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.
இந்த மனோபலம் ஒரு வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்தப்போகும் சக்திகொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும்.
ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலைப் போராட்டச் சக்கரத்தை முன்னோக்கித் தள்ளிவிடுவதுடன், வீரம்மிக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட, தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டிவிடுகின்றது.
தேச பக்தியையும், வீர உணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால் உலகில் எவராலும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

தாய்மை
அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள்.
அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள்.தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களை வளர்த்துவிட்ட அவள் காலத்தின் தேவையறிந்து போராளியாகிப் பின்னர் சாதனைகளின் உச்சத்தைத் தொடுவதற்காகக் கரும்புலியாக மாறிக்கொண்டாள்.

அந்த முகாமில் பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் யாரிற்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்காகவே தனது நேரத்தைச் செலவிடுவாள். யாராவது போராளிகள் கசங்கிய உடையோ அல்லது சற்றேனும் புழுதிபடிந்த உடையை அணிவதோ அவளுக்குப் பிடிக்காது. கசங்கிய உடைகளை அழுத்தி மடித்துக் கொடுத்து அதைப்போட வைத்து அதன் அழகை இரசிப்பதில் தான் அவளது மகிழ்ச்சியிருந்தது.
போராளிகளின் ஆடைகளைத் தோய்த்துக் கொடுக்கக்கூட அவள் தயங்கியதில்லை. அவர்களின் இந்தப் பாசறை ஒருநாள் சிங்களப் படையின் விமானத் தாக்குதலுக்குள்ளாகிறது. உயிர்களுக்குச் சேதமேற்படா விட்டாலும் காயம் ஏற்பட்டு போராளியொருவர் மருத்துவமனையிலிருந்தான். அவர்களின் தங்ககம் விமானத்தாக்குதலால் சிதைந்தது. உடைமைகள் யாவும் சிதறுண்டன.
காயம்பட்ட போராளிக்கு மாற்று உடையில்லை. அந்த விடுதியிலிருந்த எல்லோருக்கும் அதுவே நிலைமை. மலர்விழி மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்க்கிறாள். மாற்றுடையில்லாமல் அவன் அவதிப்படுவது தெரிந்தது. ஆனால், உடனடியாகப் புது உடை வாங்கக்கூடிய வசதி அவளிடம் இருக்கவில்லை.
மலர்விழி முகாம் வருகிறாள். விமானத் தாக்குதலால் சிதறிய விடுதியில் வந்து பார்க்கிறாள். அங்கே கிழிந்தபடி காயப்பட்டவனின் சேட் ஒன்று கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு போனாள். ஊசி நூல் எடுத்து குண்டுச் சிதறலால் ஏற்பட்ட கிழிசல்களைப் பொறுமையாக இருந்து தைத்தாள். பின்னர் அந்த ஆடையைத் தோய்த்து காய்ந்த பின்னர் அழுத்தி மடித்து மருத்துவமனையில் மாற்றுடையை எதிர்பார்த்திருக்கும் அந்தப் போராளியிடம் ஒப்படைத்தாள். அந்தக் கரும்புலி வீராங்கனையின் தாய்மையின் நேசம் எல்லோரையும் வியக்கவைத்தது.
மலர்விழி பல நடவடிக்கைகளுக்காக எதிரியின் முகாமுக்குள் ஊடுருவி வெற்றியுடன் திரும்பி வந்தாள். நடவடிக்கைக்காகச் செல்லும் ஒவ்வொரு தடவையும் வழியனுப்புவோரிடம் அவள் சொல்வது ~தம்பியும் தங்கையும் கவனம் என்பதை மட்டும் தான்.

இவள், வீழ்த்த முடியாத பெருந்தளமாக எதிரி இறுமாந்திருந்த ஆனையிறவுத் தளத்தினுள் மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா ஆகிய கரும்புலிகளோடு இணைந்து அதிரடியான ஊடுருவலொன்றின் மூலம் தாமரைக்குளத்திலிருந்த நான்கு ஆட்லறிகளை வெற்றிகரமாகத் தகர்த்தெறியப் பெருந்துணை புரிந்தாள். தம் பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் தாம் திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரியின் பலம்மிக்க கொமாண்டோ அணியொன்றின் சுற்றிவளைப்பிற்குள்ளாகினர்.
மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த இயக்கச்சிப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து 31-03-2000 அன்று ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள்.

கோடை
1992 ஆம் ஆண்டின் நாட்கள். சுதாகரன் வீட்டுக் கஸ்ரத்தைப் போக்குவதற்காகக் கொழும்பில் கடையொன்றில் வேலைசெய்து கொண்டிருந்தான். தினமும் கடைக்கதவு சாத்தப்பட்ட இரவுப்பொழுதில் கூடவிருப் போருடன் சேர்ந்து பம்பலடித்து நேரத்தைக் கழித்துவிட்டு உறக்கத்துக்குச் செல்வதுதான் வழமை.ஆனால் அன்று மட்டும் எல்லோரும் வானொலியைச் சுற்றியிருந்து எதையோ ஆழமாகக் கேட்டபடியிருந்தார்கள். அன்றைய நாள் பி.பி.சி வானொலியில், பி.பி.சி செய்தியாளர் ஆனந்தி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்துப் பெற்ற நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்திருந்து தலைவரின் எண்ணங்களைச் செவிமடுத்தான். தலைவர் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் அவனை மெய்சிலிர்க்க வைத்தன. அன்றுதான் தமிழர்களுக்கென்றொரு தலைமை இருப்பதும், ஒரு கட்டுக்கோப்பான விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருப்பதையும் அவன் அறிந்துகொண்டான். அவனது நெஞ்சில் புதிய உத்வேகம் உருவானது. தலைவர் மீதும் எமது விடுதலைப்போராட்டம் மீதும் இனம்புரியாத பற்று அவனுள் கருக்கொண்டது. அன்றிலிருந்து அவனுள் மூண்ட விடுதலைத்தீ அவனை 1994 இல் எங்கள் தாயகம் நோக்கி நகர்த்தியது. பதுளையில் இருந்த அம்மாவிடம் 'கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் நான் யாழ்ப்பாணம் போறன்" என்று சொல்லி அம்மாவைச் சமாளித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் வந்து இயக்கத்தில் இணைந்துகொண்டான்.

இந்தச் சுதாகரன் பின்னர் போராளியாகி களங்களிலே துணிச்சல் மிக்க ஒரு படைவீரனாக மாறினான். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம்.
முன்னேறி வரும் சிங்களப் படையை வழிமறித்து மாங்குளத்தில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதித்தன் அந்தச் சண்டைக் களத்தில் 82அஅ எறிகணைச் செலுத்தி ஒன்றுடன் சிங்களப் படைக்கெதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அந்த மோட்டார் அணியில் பொறுப்பாளனும் அவனே. எத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்படினும், முடிவெடுத்துச் செயற்படுவது அவன் கையிலேயே தங்கியிருந்தது.

சண்டை கடுமையானதாயிருந்தது. ஓயாத அலைகள் - 02 என்ற பெருந்தாக்குதலை கிளிநொச்சிப் படைத்தளம் மீது எமது படையணிகள் மேற்கொண்டிருந்ததால், குறிப்பிட்ட அளவு போராளிகள் தான் அன்றைய சண்டையை எதிர்கொண்டனர்.
சண்டையின் ஒரு கட்டத்தில் எமது முன்னணி நிலைகளை ஊடறுத்து படைகள் எமது பகுதியை நோக்கி முன்னேறுகின்றன. தொலைத்தொடர்புக் கருவிமூலம் இராணுவம் நிற்கும் நிலைகளைக் கேட்டறிந்து மோட்டார் மூலம் எறிகணைகளை அவன் வீசிக்கொண்டிருந்தான்.
நீண்ட நேரமாகச் சண்டை தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல எறிகணையை வீசுவதற்கான தூரவீச்சு குறைந்துகொண்டே போனது. இந்தத் தரவின் மூலம் இராணுவம் எங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றதென்பதை ஆதித்தன் அறிந்துகொண்டான். அந்தக் களமுனையில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகிக்கொண்டிருந்தது.
ஆனால் ஆதித்தன் பதட்டப் படாமல் கூடவிருந்த போராளிகளுக்குத் தெம்பூட்டி இடை விடாமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். எறிகணை வீச்சுக்கான தூரம் தொடர்ந்தும் குறைந்தபடியிருந்தது.
இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவனது மோட்டார் நிலை எதிரியால் முற்றுகையிடப்படும் என்று அவனால் கணிப்பிட முடிந்தது. அப்படி முடிவெடுத்தால் எறிகணைகளை எதிரியிடம் இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அந்தநேரம் ஆதித்தன் ஒரு அதிரடி முடிவை எடுத்துக்கொண்டான். கடைசியாக மோட்டாரை அழிப்பதற்கு ஒன்றும், தங்களை அழிப்பதற்கு ஒன்றுமாக இரண்டு எறிகணைகளை வைத்துவிட்டு, ஏனையவற்றை எதிரி முன்னேறும் பகுதி நோக்கி விரைவாக அடித்து முடிப்பதென்பதே அந்த முடிவு.
இப்போது எதிரியின் தாக்குதல் இவர்களை அண்மிக்கின்றது. எதிரியின் துப்பாக்கிச் சன்னங்கள் இவர்களின் நிலையை நோக்கியும் சரமாரியாக வரத்தொடங்கியது. 500அ 400அஇ 300அ என மிகக் கிட்டவாக எறிகணைகள் பறந்து வந்து கொண்டிருந்தன.
கடைசியாக 200அ வீச்செல்லைக்கும் அடிக்கும் கட்டளை கிடைத்தது. இராணுவம் துப்பாக்கிச் சண்டைக்கான வீச்செல்லைக்குள் வந்தாலும் அவர்கள் மோட்டார் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இராணுவம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் கணங்கள் அண்மித்துக் கொண்டிருந்தன.
ஆனால், பதட்டமில்லாமல் ஆதித்தனின் சுடுகுழல் இயங்கிக் கொண்டிருந்தது.இராணுவம் இப்போது இவர்களின் மோட்டார் நிலையைக் குறிவைத்து தாக்கத்தொடங்கியது. இத்தனை நெருக்கடிக்குள்ளும் ஆதித்தன் தான் முடிவெடுத்த நிலை வரும் வரை தாக்குதலைத் தொடர்ந்தான். இராணுவத்தின் முற்றுகை வலைக்குள் மோட்டார் நிலை உள்ளாகிக் கொண்டிருந்தது.
ஆதித்தன் நினைத்தபடி எறிகணைகள் அனைத்தும் சுடப்பட்டு விட்டது. இனி, மோட்டாரை தகர்ப்பதற்கான நேரம். அதைவிட மாற்றுவழிகள் இல்லை. நூற்றுக்கணக்கான எறிகணைகளைச் சுட்டதினால் தணல் போலப் பழுத்துப் போயிருக்கும் அந்த எறிகணைக் குழலைக் கொண்டு செல்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அத்தோடு எதிரியால் அவர்கள் சூழப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள்.
எனவே சுடுகுழலைத் தகர்த்து விட்டு பின்வாங்கு வதென்ற முடிவைத் தவிர மிச்சமாக எதுவுமில்லை. ஆயினும், ஆதித்தன் அப்படிச் செய்யவில்லை. கூட இருந்தோர் எதிர்பார்க்காத முடிவை அவன் எடுத்தான். இயக்கம் ஒரு எறிகணை செலுத்தியைப் பெறுவதற்கு எத்தகைய விலைகளைச் செலுத்துகின்றதென்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால், அந்த எறிகணைச் செலுத்தியை அவன் இழக்க விரும்பவில்லை. வெப்பத்தால் தகதகத்துக் கொண்டிருக்கும் அந்தச் சுடுகுழலை தனது தோளில் வைத்தபடி எதிரிக்கு எதையும் விட்டுவைக்காமல் முற்றுகையை உடைத்து வெளியேறினான் அவன்.
ஆதித்தன் மீண்டு வந்தபோது அவனது சுடுகுழல் பத்திரமாயிருந்தது. அவனது தோள்பட்டை மட்டும் வெந்து போய் பொக்களம் போட்டிருந்தது.இப்படி களங்களில் பல சாதனைகளை நிகழ்த்திய வீரன் பின்னர் கரும்புலியாகி விடுதலைப் போருக்குப் பெரும் பலம் சேர்த்து வீழ்த்த முடியாத பெருங்கோட்டையென எதிரி மார்தட்டிய ஆனையிறவை மீட்கும் சமரொன்றிற்கு வலுச்சேர்த்து 25.12.1999 அன்று பாவப்பட்ட மக்களை மீட்கவந்த இயேசுநாதர் பிறந்ததாகச் சொல்லப்படும் நத்தார் நாளில், அடிமைப்பட்ட தன் இனத்தின் மீட்சிக்காகத் தன்னையே கொடையாக்கினான்.

உபசரிப்பு
இவள் இப்போது தான் இயக்கத்துக்கு வந்திருந்தாள். பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பொறுப்பாளர் எல்லோரையும் ஒன்று கூட்டிக் கதைத்தார். தனது கதையின் ஒரு கட்டத்தில் 'இதுக்குள்ள ஆர் கரும்புலி?" என்ற வினாவைத் தொடுத்தார். கேள்வி முடிந்த சில கணங்களுக்குள் ஒரு சிறிய உருவம் எழுந்துநின்று 'நான்தான்" என்று கூறியது. சுதர்சினியின் தோற்றத்தைப் பார்த்து இவளா கரும்புலியாகப்போகிறாள் என்று நக்கலாகச் சிரித்தார்கள். அவள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாள். கரும்புலிகளின் பயிற்சித் தளத்தில் ஆந்திராவாக அவள் உலாவிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறிய உருவத்துள் நிறைய குறும்புத்தனம் இருந்தது. அந்தக் குறும்புத்தனங்களால் முகாமே கலகலப்பாகவிருக்கும். யாராவது எதற்காவது ஆசைப்பட்டால் போதும் அதை அவர்களுக்குச் செய்துகொடுத்துவிட வேண்டுமென்று துடிப்பவள்.ஒருநாள் மாமரத்தின் கீழ் பயிற்சி நடந்தது. மரத்தில் மாங்காய்கள் இருந்தன. கூட இருந்த போராளி ஒருவர் சொன்னார் 'மாங்காயில கறி வைச்சா நல்லாயிருக்கும்" இந்த வார்த்தைகள் ஆந்திராவுக்கு கேட்டிருந்தது. அன்று பயிற்சி நாள் என்பதால் அவள் பொறுத்துக்கொண்டாள்.
ஓய்வு நாளும் வந்தது. அன்று ஆந்திராவிடமிருந்து அழைப்பு வந்தது. 'இண்டைக்கு மதியம் கட்டாயம் வரட்டாம்" ஆந்திராவின் அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியாது மாங்காய்க்கறி கேட்டவள் இன்னொரு போராளியை அழைத்துக்கொண்டு போனாள். போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாங்காயில் குழம்பு, மாங்காயில் சொதி, மாங்காயில் பொரியல், தட்டுமுழுவதும் மாங்காய்மயம். சென்றவர்களுக்கு விழி பிதுங்கியது. நன்றாக மாட்டி விட்;டார்கள். ஆளையாளைப் பார்த்தபடி மெதுவாக வாயில் வைத்து சுவைத்துப் பார்த்தார்கள். பச்சைப்புளி வாயில் வைக்கவே வயிற்றைக் குமட்டியது. 'ஒண்டும் சொல்லாத பேசாம சாப்பிடுவம் இல்லாட்டி அவள் அழுது கொண்டிருப்பாள்" ஆந்திராவின் அன்பைப் புறக்கணிக்க முடியாமல் கஸ்ரப்பட்டு சாப்பிட்டார்கள். இவர்களின் துன்பத்தை அறியாதவள் இரண்டாவது தடவையும் மாங்காய்க்கறி பரிமாறினாள். ஆந்திராவின் அன்பிலும் குறும்பிலும் சிக்கியவர்கள் இரவு விடுதியில் வாந்தி எடுத்த கதையும் அதன்பின் இருந்தது. இந்தக் குறும்புக்காரி கொக்குத்தொடுவாயில் தன் தோழிகள் பலரை ஒன்றாக இழந்த சோகத்தில் இருந்தாள். அதற்காக எதிரிக்கு பழி தீர்க்கத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் காய்ச்சலாக இருந்தாலென்ன? வேறு வருத்தமென்றாலென்ன? விடாமல் பயிற்சிசெய்தாள். 'என்ர கையால சார்ஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்கவைக்க வேணும்" என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் விரும்பியபடியே 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தை மீட்கும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறித் தளத்தினுள் நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துத்திரும்புகையில் நினைத்ததை சாதித்தவளாய் வீரச்சாவைத்தழுவிக் கொண்டாள்.

உறுதி
சத்தியா. அவள் சின்னப்பிள்ளையல்ல. ஆனால் உருவத்தில் சிறியவள். மிகவும் கலகலப்பானவள். எல்லோரிலும் அன்பானவள். சின்னப் பிரச்சினையென்றாலும் சண்டைபோட்டு தன்கருத்தில் விடாப்பிடியாக நின்றாலும் அவளின் அந்தத் துடிதுடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனாலும் அவளின் சிறிய உருவம் அவளது கரும்புலிப்பணிக்குத் தடையாயிருந்தது. அவளுடன் கூட இருந்த பல கரும்புலிகள் ஆனையிறவிற்கான கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும்போது சத்தியாவின் சந்தர்ப்பம் தட்டுப்பட்டுக்கொண்டே போனது.
ஆனையிறவுக்குச் செல்வதென்றால் ஆனையிறவு உப்பேரியின் தண்ணீரைத் தாண்டவேண்டும். உயரமான போராளிகளிற்கே நெஞ்சளவு தண்ணீர் இருந்தது. ஆயுத வெடிபொருட்களுடன் நகர்வது அவர்களிற்கே சிரமமானதால் சத்தியா செல்வதென்பது சாத்தியம் குறைந்ததென்பதால் அவளை அனுப்ப பொறுப்பாளர் சம்மதிக்கவில்லை.

இப்படி இரண்டு மூன்று தடவை அவளது சந்தர்ப்பம் விலகிப்போக அவள் அழத்தொடங்கி விட்டாள். கூட இருந்த கரும்புலி வீரர்கள் அவளை வலிந்து சண்டைக் கிழுத்துச் சீண்டுவதாக அவளைப் பார்;த்து கேலி செய்வார்கள். அன்புச் சண்டை தொடரும். இந்தப் பகிடிகள் தொடர இன்னொரு நாளில் கூடவிருந்து கிண்டலடித்தவர்களும் உண்மையாகவே பிரியும் போது அவளது அழுகை கனத்ததாக மாறியது. 'நாங்கள் சாகப் போகேல்லை. சாதிக்கப்போறம்" என்று சொல்லி அவளைத் தேற்றிவிட்டுப் போனார்கள்.

காலங்கள் கழிந்து கொண்டிருந்தாலும், சத்தியா 'நானொரு கரும்புலித் தாக்குதலைக் கட்டாயம் செய்து முடிப்பன்." என்ற நம்பிக்கையில் உறுதியாகவிருந்தாள். யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்காக எதிரி மேற்கொண்ட சூரியக்கதிர் நடவடிக்கையை எதிர்கொண்ட போது சண்டைச்சூழலால் மாற்றுடையின்றி போட்டிருந்த உடையுடனேயே நிற்கவேண்டிய சூழல்.
உடுப்பைத் தோய்த்தால் காயவிட முடியாதென்பதால் நெருப்பு மூட்டி அந்தப் புகையில் அரைகுறையாகக் காயவிட்டுப் போட்டிருந்தாள். ஆனால், அதுவும் பின்னர் பயனளிக்கவில்லை. இவர்கள் மூட்டிய நெருப்பின் புகைக்கு எதிரி செல் அடிக்க கடைசியாக எதுவும் செய்ய முடியாமல் கொஞ்ச நாட்கள் குளிக்காமலிருந்ததையும் அடிக்கடி நினைவுகூருவாள். நீண்ட காலம் பொறுமையாக, நிதானமாக, உறுதியாக காத்திருந்த அந்தச் சிறிய உருவத்தையுடைய சத்தியாவிற்கு அவள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கைக்குக் கிட்டியது. அந்தச் சின்ன உருவம் கரும்புலித் தாக்குதலுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. ஆனையிறவுத் தாக்குதலுக்கு இப்போது நீரேரி கடக்காமல் இன்னொரு பாதையால் போகும் அணியுடன் செல்ல அவளிற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சத்தியா மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டுநின்றாள். 'ஆனையிறவுக்குப் போகாட்டி பலாலியில போயெண்டாலும் நான் அடிப்பன்." என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஆனையிறவிலேயே இலக்குக் கிடைத்ததால் அந்த மகிழ்ச்சி.
ஆனையிறவுத்தளம் எப்போதும் அசைக்கப்பட முடியாதென வெள்ளைக்காரர்களும் வந்து சவால் விட்டுச்சென்ற தளம். தேசியத்தலைவரின் மதிநுட்ப திட்டமிடலில் ஆனையிறவுத்தளம் பொசுங்கிக் கொண்டிருந்த காலம். முன்னணியில் சண்டையிடும் போராளிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆட்லறிகளை அவற்றின் இருப்பிடத்தில் வைத்தே அழிக்கும் தலைவரின் சிந்தனையைச் செயலாக்க அவள் புறப்பட்டாள்.
ஆட்லறிகள் உடைக்கப்படும்போது சிங்களத்தின் சூட்டுவலு மட்டுமல்ல, ஆனையிறவுப் படைகளின் மனோபலமும் உடைந்தழியும். தலைவர் நினைத்ததைச் செயலாக்கினாள்.
31.03.2000 அன்று தன் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்க்கப்பட்ட மகிழ்வோடு எங்கள் தேசத்தின் கற்களில் அழியாதபடி தனது பெயரையும் பொறித்துக்கொண்டாள்.
பாதுகாப்பு
அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது.
புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது.
முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன.
எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள்.
அவளொரு சு.P.பு சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது.
அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல்.
வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது.
மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் சு.P.பு உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது.
ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது.
மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் சு.P.பு நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை.
ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. சு.P.புயைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் சு.P.புக்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள்.
உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள்.
இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள்.
நினைவுகள்
கரும்புலி மேஐர் அருளன் தாக்குதலுக்காக விடைபெறும் கடைசி மணித்துளிகள் இந்தக்கணம் வரை அவனுக்கென்றிருந்த எல்லாவற்றையும் மற்றவருக்குப் பிரித்துக் கொடுக்கிறான். 'இது நிவேதண்ணா தந்த லைற்றர் இது நீதண்ணா போட்ட சேட்டு இது ஆசாக்கா தந்த ஓட்டோகிராவ்" என ஒவ்வொன்றாய் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கிறான்.
கடைசியாக அவனது பையிலிருந்து வெளிவருகிறது இரண்டு கற்கள். அந்தக் கற்களிலொன்றில் இந்துவென்றும் மற்றையதில் nஐயராணி என்றும் எழுதப்பட்டிருந்தது. கூட இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அப்படி என்னதான் இந்தக் கற்களில் இருக்கின்றதென்ற ஏக்கம் அவர்களிடம். அவர்களின் பார்வை அவனுக்குப் புரிகிறது. அவன் அதற்கான காரணத்தைச் சொல்லுகிறான்.
இதுவெறும் கற்களல்ல ஆனையிறவுத் தாக்குதலுக்காகச் சென்ற கரும்புலிகள் பயிற்சியின் போது குண்டெறிதலுக்குப் பதிலாக கற்களையே எறிவார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் கற்களைச் சேகரித்து வைத்து விட்டு இலக்கு நோக்கி ஒவ்வொன்றாய் எறிவார்கள். ஒரு மழைநாளில் பயிற்சி வேளைக்கு முடிந்ததால் மிஞ்சிய கற்கள் தானிவை. அவர்கள் எறிந்து விட்டுப்போய் விட்டார்கள். அந்த முகாமை விட்டல்ல இந்தத் தேசத்திலிருந்தும் தான்.
அருளன் முகாம் வருகின்றான். கரும்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தைப் பார்க்கின்றான். எல்லோரது முகங்களும் அவனது மனதில் வந்து போயின. அப்போது தான் அவதானிக்கிறான் இந்துவும் nஐயராணியும் எறிந்த கற்கள் மிச்சமாயிருந்தன. இப்போது அது வெறும் கற்களல்ல கரும்புலிகள் கைபட்ட கற்கள். அவற்றிலிருந்து ஒவ்வொரு கல்லை பத்திரமாக எடுத்த அருளன் அதைப் பத்திரப்படுத்த அந்தக் கரும்புலிகளின்; நினைவுகளை அந்தக் கற்களிலே சுமந்தபடி பேணி வந்தான்;.
கரும்புலிகளுக்குப் பயிற்சி ஆசிரியனாக இருந்த அவன் கரும்புலிகளின் உணர்வைத் தாங்கியபடி தான் கரும்புலி ஆகவேண்டுமென்று அடிக்கடி தலைவருக்குக் கடிதம் போட்டு விடாப்பிடியாக நின்று கரும்புலியாய் மாறினான்.
அருளனின் வயிற்றில் களத்திலே தாங்கிய விழுப்புண்ணின் வலியிருந்தது. அவனால் சாதாரண நேரங்களில் நிமிர்ந்து நிற்பதே சிரமமானது. ஆனாலும் அவன் பயிற்சி ஆசிரியன் என்பதால் பயிற்சித் திடலில் தனது உடலின் வலியைக் காட்டமாட்டான். பயிற்சித் திடலில் நிமிர்ந்த தோற்றத்தோடு எடுப்பான அருளனையே உங்களால் காணமுடியும். பயிற்சி முடிந்ததும் தனது விடுதியில் வந்து அப்படியே படுத்துவிடுவான். சிறிய ஓய்வின்பின்தான் அவனால் திரும்ப இயங்கமுடியும்.
அந்த வீரன் இன்று தான் சுமந்த நினைவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டுதான் பயிற்சி கொடுத்துப்போன வீரர்களைத் தொடர்ந்து கையசைத்துவிட்டு விடைபெற்ற அவன் ஓயாத அலைகள் மூன்றிற்காய் எங்கள் தேசம் கொடுத்த விலைகளில் ஓர் விலையாய் காற்றோடு கலந்து கொண்டான்.
கனவு
யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்று அது. சாதாரண மனிதர்கள் வாழாத சூனியப்பிரதேசமாய் அது இருந்தது. எங்களுக்குச் சொந்தமான அந்த மண்ணில் இப்போது அந்நியப் பாதங்களின் ஆட்சி. செங்கதிர்வாணன் எதிரியின் இருப்பை வேவு பார்ப்பதற்காக வந்திருந்தான்.
மக்கள் துரத்தப்பட்ட அந்த ஊரில் எதிரியின் கண்களுக்குத் தென்பட்டு விட்டால் தப்புவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்காது. உடைந்த கட்டடங்களும், கடற்கரையோரத்தில் காணப்படும் பள்ளங்களும் தான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தங்களை மறைத்தபடி இராணுவத்தின் கோட்டைக்குள் புகுந்து தரவுகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் வேவுக்காக நகர்ந்து கொண்டிருந்த அவர்கள் சடுதியாக இராணுவத்தை சந்தித்துக்கொண்டார்கள். சண்டையைத் தவிர்க்க சந்தர்ப்பம் இல்லை. தப்ப வேண்டுமாயின் சண்டை பிடித்தாக வேண்டிய சூழல். சுற்றிவர எதிரியால் சூழப்பட்ட அந்தச் சூழலுக்குள் சண்டை தொடங்கியது.
உள்ளுக்குள்ளே சண்டை தொடங்கியதால் முன்னணி அரண்கள் யாவும் விழிப்பாயிருக்கும். உடனடியாக வெளியேறுவது என்பது சாத்தியமற்றுப்போக எதிரியின் பகுதிக்குள்ளேயே மறைப்புத் தேட வேண்டியதாயிற்று.
இப்போது புதிதாய் இன்னொரு நெருக்கடி கூட வந்தவர்களில் ஒருவர் காலில் குண்டுபட்டு விழ அவரைச் சுமந்தபடி இராணுவப் பகுதிக்குள் இராணுவத்தைச் சுழித்துக்கொண்டு மறைப்பிடம் தேடினார்கள்.
இராணுவத்தின் தேடல் தொடர்ந்ததால் இடைவிடாது இடம்மாறிக் கொண்டிருந்தார்கள். இடம் மாறிமாறி நீண்டதூர நடை நாவறண்டு தண்ணீருக்காக காத்துக் கிடந்தது. பசிவேறு வயிற்றைக் குடைந்தது. எதுவும் உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியமேயில்லை.
செங்கதிர்வாணன் காயப்பட்ட வீரனை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். நீண்ட நடையும், நேரமும் கடந்து கொண்டிருந்ததுதான் மிச்சமாய்ப்போய் களைத்துப்போன தருணத்தில் கிணறு ஒன்று அவர்களின் கண்களுக்குப் பட்டது. கிணற்றைக் கண்டதுமே தண்ணீர்த் தாகம் தீர்ந்தது போன்ற உணர்வு. வாளியில்லாத அந்தக் கிணற்றில் வேறு வழியில்லாமல் உள்ளிறங்கி ஆனந்தத்தோடு தண்ணீரை வாயில் வைத்த போது மிஞ்சியது ஏமாற்றம். அது உப்பு நீர்.
உடல் சோர்ந்த போது காயப்பட்டவன் தண்ணீருக்காக தவமிருப்பது நினைவிற்கு வந்தது. உடற்களைப்பை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நடந்தான். அவனது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எங்கோ தொலைவில் ஒரு வீடு இருந்தது. அங்கிருந்தவர்கள் அரட்டை அடிப்பதில் மூழ்கியிருந்தனர்.
சத்தமில்லாமல் அவர்களின் வீட்டுக்குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து நிரப்பிக் கொண்டான். இன்னோரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் எடுத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நடந்தான்.
செங்கதிர் வாணனின் இடைவிடாத முயற்சியால் விழுப்புண்பட்டவனிற்கும் கூடவிருந்தோருக்கும் தண்ணீர் கிடைத்தது. விழுப்புண் பட்டவனின் விழுப்புண்ணிற்கு பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் கலந்த கைமருந்து வைத்தியமும் அவனால் நடந்தது.
பின்னர் உதவியணி வந்து அவர்களும் அடிவாங்கி விழுப்புண்பட்டோரின் எண்ணிக்கையும் கூடி, வெளியேறுவதற்கு பலமுறை முயன்று எதிரியிடம் அடிவாங்கிக் கடைசியாய் ஓர் நாள் சேற்றுக்குள்ளால் நடந்து ஒருவாறு வெளியேறினார்கள். இத்தனை துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிச்சல்லடையாக்கிய போதும் ஒன்று மட்டும் பத்திரமாய் எந்தச் சேதமுமில்லாமல் வந்து சேர்ந்தது. அது அவர்கள் திரட்டிய வேவுத் தகவல்கள் தான்.
இந்தச் செங்கதிர்வாணன் பின்னர் தேசத்தின் வெற்றிக்காகக் கரும்புலியாக மாறினான். வயதில் மூத்தவனான இவன் மற்றப் போராளிகளை மகிழ்வாய் வைத்திருப்பான். பயிற்சியின் போது கிடைக்கும் தேநீர் வேளை கூடபோராளிகளை மகிழ்வாக்க நொடி கேட்பது இவன் வழக்கம். இதனால் நொடி மாஸ்ரர் என்ற பட்டப்பெயரும் இவனுக்கிருந்தது.
இந்தச் செங்கதிரிடம் ஒரு ஆசையிருந்தது. ஆட்லறி ஒன்றிற்கு தனது கையால் குண்டு கட்டி அதை வெடிக்க வைக்க வேண்டுமென்று. அந்தக் கனவோடு மணலாற்றுப் பகுதிக்குள் வேவுக்காகச் சென்று திரும்பும் வழியில் 29.10.1999 அன்று அவன் வீரச்சாவடைய நேர்ந்தது. நிறைவேறாத அந்த வீரனின் ஆசையைப் பின்னாளில் பல ஆட்லறிகளை உடைத்து கூடவிருந்த கரும்புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள். நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (04.09.08)