சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தொடர்பில் அரசாங்கம் காட்டிய கவலையும் கரிசனையும் ஒரு இனத்தின் பிரச்சினை மீது காட்டப்படாத நிலையினையே காண்கிறோம். இதனை விட சாபக் கேடானதும் வேதனையானதுமானதொரு நிலை இருக்க முடியாது.
முன்னைய எல்லா அரசாங்கங்கள் போலவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறதே தவிர அரசியல் தீர்வு காண்பதில் தாம் உறுதியாயிருப்பதாகவே அரசு தரப்பினர் குறிப்பாகச் சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அண்மையில் கூட" இந்து" நாளிதழுக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம வழங்கிய செவ்வியில் கூட இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். உண்மையில் தனது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக யுத்தத்தை கோரமாக நடத்தி தென்னிலங்கை மக்களுக்கு வெற்றிகளை வெள்ளித் தட்டத்தில் வழங்குவதிலேயே அரசாங்கம் முனைப்பாயிருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்படுகின்றனர். நாடும் அழிவுப் பாதையில்
இதன் பொருட்டு தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்படுவது பற்றியோ அதற்கப்பால் முழு நாடுமே அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்படுவது பற்றியோ அரசாங்கம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இன, மத மக்களினதும் நலன் கருதி நீண்ட காலமாக உழைத்து வந்துள்ள எமக்கு இன்றைய நிலைமைகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டுமெனக் கூறிவந்த எல்லா அரசாங்கங்களும் அதன் தோற்றுவாயான அரச பயங்கரவாதம் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்ததில்லை.
மேலும், அரசியல் தீர்வு தான் பயங்கரவாதத்திற்கான உண்மையான பரிகாரம் என்பதும் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு தான் குட்டிச்சுவராக்கப்பட்டாலும் சரி மிதமிஞ்சிய வளங்களை கொட்டியாவது யுத்தத்தில் வெற்றியீட்டி ஒரு இராணுவத் தீர்வை நோக்கியே அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இன்றைய நிலையில் யுத்த முனைகளை நோக்குமிடத்து விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைப் பொறுத்தவரை அவர்களின் இலகு விமானங்களைத் துரத்தித் தாக்கி அழிப்பதற்கு F 7 போன்ற விமானங்கள் ஏற்றவையாயில்லாத படியால் ரஷ்ய தயாரிப்பான மிக் 29 ரக விமானங்கள் ஏறத்தாழ 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
இடம்பெயர்ந்த 2 1/2 இலட்சம் மக்களின் அவலம்
வடக்கில் குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கடுமையான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 2 1/2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பிரதேசத்தில் அவல வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஐ.நா. முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச/ தேசிய தொண்டர் அமைப்புகள் ஆதரவளித்து வந்த படியால் இடம்பெயர்ந்துள்ளவர்களின் உயிரும் உடலும் ஒட்டியிருப்பதற்காகவேனும் சந்தர்ப்பம் கிட்டியிருந்தது.
ஐ.நா. அடங்கலாக சகல தொண்டர் அமைப்புகளும் கிளிநொச்சியை விட்டு வெளியேறிவிட வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. அதாவது, அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத படியாலேயே அவை வவுனியாவுக்கு நகர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கிளிநொச்சிலுள்ள இடம்பெயர்ந்த மக்களும் வவுனியாவுக்கு நகர வேண்டும். அங்கே அவர்களை வரவேற்பதற்கு அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அங்கு சகல வசதிகளும் வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ( I C R C ) பணியாளர்கள் தாம் வன்னியை விட்டு வெளியேறப் போவதில்லையெனத் தீர்மானித்து அரசாங்கத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர்.
ஐ.நா. நிவாரணப் பணியாளர் கிளிநொச்சியை விட்டு வெளியேறி விட வேண்டுமென அரசாங்கம் பிறப்பித்திருந்த உத்தரவினை அடுத்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு அறிக்கையினை விடுத்திருந்தார். அதாவது, சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடுவதற்கு மனித நேய அமைப்புகள் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கு மற்றும் சண்டை காரணமாகப் பாதிப்புற்று மனிதாபிமான உதவிகளை வேண்டி நிற்பவர்களை அணுகி உதவுவதற்கும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் அக்கறை கொள்ள வேண்டுமென பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்தோடு சர்வதேச மனிதாபிமானச் சட்டம் அதிலும் குறிப்பாக விகிதாசார விதிமுறை மற்றும் இராணுவ இலக்குகளைத் தெரிவு செய்தல் ஆகிய அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் மூன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல் இலங்கை முகம் கொடுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்திக் கூறியிருந்தார். ஆயுத மோதல்களின் போது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு விடயமாக மக்கள் எங்கே தமக்குப் பாதுகாப்பும் மன அமைதியும் உண்டு என்பதைத் தனித்தனியாகவும் முடிவு செய்வதற்கு இடமுண்டு எனவும் மேற்குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குச் சாட்டையடி கொடுக்கும் விதத்தில் அரசாங்க சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். இவர் அண்மைக் காலம் முதல் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
விஜயசிங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்ப்போம்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் தொடர்பாக அரசாங்க சமாதான செயலகம் வியப்படைந்துள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக நடத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் கவலையடைந்துள்ளார் போல் தெரிகிறது. சாதாரண பொதுமக்களுக்காக அவர் கரிசனை காட்டுவது போல் நடந்து கொள்கிறாராயினும் "விகிதாசார விதிமுறை மற்றும் இராணுவ இலக்குகளைத் தெரிவு செய்தல்' என அவர் கூறியுள்ளதன் மூலம் ஒரு செய்தி அனுப்பப்படுகிறது போல் தெரிகிறது.
இலங்கையில் அண்மைய இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் (சிவிலியன்கள்) யாரும் பலியாக்கப்பட்டதாயில்லை. எனவே, யுத்தம் நடக்கும் வேறு நாடுகளில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் பலியாகும் நிகழ்வுகளால் தூண்டப்பட்டு பயங்கரவாதத்தினை முறியடிக்க முனையும் எல்லா ஆயுதப் படையினரும் ஒரு மாதிரியானவர்களென அவர் தவறாக எடைபோட்டு விட்டார்.
இதன் மூலம் அவர் வேறு நாடுகளுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்கு விளைந்துள்ளார். என்றாலும் கூட எதிர்காலத்தில் அவர் இலங்கை நிலைமைகளை கவனமாக ஆராய்வார் என நம்புகிறோம். அவர் அறிவைப் பெற்றுக் கொண்டால் ஞானம் பிறக்கும். இலங்கைப் படையினரின் தராதரம் அபரிமிதமானது என்பதையும் அவர்கள் இலக்குகளைக் கவனமெடுத்துத் தெரிவு செய்பவர்கள் என்பதையும் அதன் காரணமாக அதையொட்டிய அழிப்புகள் குறைவு அல்லது இல்லை என்பதையும் செயலாளர் நாயகம் அறிந்து கொள்வார்.
தனது அறிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவர் என்பதை செயலாளர் நாயகம் உணராமல் இருக்கக்கூடும். இலங்கை ஆயுதப் படையினர் தம்மீது நெருங்கி வருவதை நிறுத்தி வைப்பதற்கு விடுதலைப் புலிகள் அப்பாவி செயலாளர் நாயகத்தைக் கூட ஆயுதமாய்ப் பயன்படுத்துவர். இவ்வாறாகவே விஜயசிங்க ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சாடியிருந்தார்.
முன்பும் ஐ.நா. அதிகாரிகள் எள்ளி நகையாடப்பட்டனர்.
இவ்வாறாகவே முன்பு இலங்கை வந்து தத்தம் துறைசார் ஆய்வுகளை நடத்தி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. உயர் அதிகாரிகளாகிய சேர் ஜோன் ஹோம்ஸ், அலன் றொக் போன்றோர் இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் எள்ளி நகையாடப்பட்டனர். ஹோம்ஸ் ஒரு பிசாசு என்று கூட பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஹொரணையில் பொதுக் கூட்டமொன்றில் கூறிவைத்தவர்.
அதுமட்டுமல்லாமல் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் இலங்கையில் ஒரு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சிபாரிசு செய்தவராகிய முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் மீதும் நெற்றிக்கண் காட்டப்பட்டதாயினும் குற்றம் குற்றமே என அம்மையார் கூறிவைக்கத் தவறவில்லை.
ஒரு கட்டத்தில் காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தான் ஐ.நா. செயலாளருக்குக் கூட பயப்படாதவர் எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே, அமைச்சர்களும் அதிகாரிகளும் மனம் போன போக்கில் கதைப்பதற்கு கிஞ்சித்தும் தயங்காத பழக்கம் குடிகொண்டு விட்டது எனலாம். நிற்க, அரசாங்க சமாதானச் செயலக செயலாளர் நாயகம் விஜயசிங்க விடுத்துள்ள மேற்படி அறிக்கையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. சமாதான செயலகமும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளபடியால் இன்றைய செயலாளர் நாயகம் அது சமாதான செயலகம் என்பதை மறந்து பேசிவருகின்றார் போல் தெரிகிறது.
அப்படியிருந்தும் அவர் எல்லையை மீறிவிட்டார் என்பது அப்பட்டமாய்த் தெரிகிறபடியால் அரசாங்கம் அதனை மறுதலித்துள்ளதுடன், விஜயசிங்கவை ஜனாதிபதி ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்துள்ளார். கிழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை போல் தமிழரை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கே வடக்கிலும் தாம் செயற்பட்டு வருவதாக ராஜபக்ஷ அரசாங்கம் பறைசாற்றி வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்குப் பிரயத்தனம் செய்து வருவது கண்கூடு. கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டாலும் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எட்டப்படும் என்பது முயற்கொம்பு தான். சமாதானம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.
ஆனால், எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு வெற்றி கிட்டக் கூடும். அதுதான் அரசாங்கத்தின் இலக்கு என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒருவர் றொக்கற் விஞ்ஞானியாய் இருக்க வேண்டியதில்லை. இவ்வாறாக அரசாங்கம் அரசியல் இலாபம் பெற்றுத் தனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளக் கூடுமே ஒழிய, நாட்டுக்குப் பின்னடைவு ஒழிய நன்மை எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதே அனைத்து நாட்டு மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்பதையே இலங்கையில் கடந்த 60 வருட கால வரலாறு கூறுகின்றது.
கார்ள் மார்க்ஸ் கூறியதை மறந்து விடக்கூடாது
ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்குமாயின் அந்த இனமும் சுதந்திரமாய் இருக்க முடியாது என்றார் கார்ள் மார்க்ஸ். இது வரட்டு வேதாந்தம் அல்ல. இலங்கையைப் பொறுத்தவரை உண்மையில் சிங்கள இனம் தமிழர் இனத்தை அடக்குகிறது என்றால் அது தவறு. சிங்கள பேரினவாத முதலாளித்துவ வர்க்கத்தினரே தமிழ் இனத்தை அழித்தொழிக்கத் தலைப்பட்டு நிற்கின்றனர். அதற்காகவே 3 தசாப்தங்களாக யுத்தம் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசியமான பெருவாரியான வளங்கள் கரியாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சமாதானமும் சுபிட்சமும் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் பரந்து பட்ட சிங்கள மக்களும் மீட்சியின்றியே வாழ்ந்து வருகின்றனர். நிலைமைகள் மேலும் மோசமடையும் வாய்ப்புகளே காணப்படுகின்றன. எனவே, சிங்கள மக்கள் யுத்த வெற்றிகளை எதிர்பார்த்து ஏமாந்து குதூகலிப்பதை விடுத்து தமது எதிர்காலமும் இருள் மயமாகி வருவதைக் காண்பதற்கு விழித்தெழ வேண்டும்.
இந்திய அரசாங்கம் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்
நிற்க இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்திய ஆளும் வர்க்கத்தினர் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நாடகமாடி வந்துள்ளமை நன்கு தெரிந்ததே. அது அண்மையில் மிக துலாம்பரமாக வெளிப்பட்டிருந்தது. இலங்கையில் சமாதானம் நிலவுவது இரு நாடுகளுக்குமே நன்மை பயக்கும். யுத்தம் மூலம் இலங்கையில் சமாதானம் மலரப் போவதில்லை. இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு போகும் நிலைமைகள் தான் தொடரச் செய்யும் என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும். ஆனால், இந்திய அரச தரப்பில் அவ்வாறு காய்கள் நகர்த்தப்படும் என நம்பிக்கை வைப்பதற்கில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. அவ்வாறாகச் செயற்படக் கூடிய சர்வதேச சக்திகள் இருக்கவே செய்கின்றன. எனவே, நாட்டில் இரத்த ஆறுகள் தொடர்ந்தும் பெருக்கெடுத்துக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பினைத் திரட்ட வேண்டும். இவ்வாறாகவே அனைத்து இலங்கை மக்களுக்கும் நன்மை கிட்டும்.
வ.திருநாவுக்கரசு
தினக்குரல்.கொம்
for contact: jaalavan@gmail.com

No comments:
Post a Comment