Saturday, 13 September 2008

28-வன்னியில் பேரவல நிலைக்கு வழி செய்யும் குரூர உத்தரவு.


போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான அவசர, அவசிய மனிதநேயப் பணிகளை ஆற்றிவந்த அனைத்துலகத் தொண்டர் அமைப்புகளையும், ஐ. நா. நிறுவனங்களையும் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு விடுத்திருக்கும் உத்தரவு, சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளையும், அவலப்படும் மக்கள் தொடர்பான சர்வதேசத்தின் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகளையும் தடுத்து மீறும் செயற்பாடாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும்.

""இலங்கையில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இலங்கை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த சர்வதேச அமைப்புகளை அங்கிருந்து வெளியேறுமாறு அரசு விடுத்திருக்கும் கட்டளையானது தமிழ் மக்களை வகைதொகையின்றி அழித்து ஒழிக்கும் இனக் குரூரத்தின் இன்னொரு உச்ச வெளிப்பாடாகும். இந்தத் தொண்டர் அமைப்புகள் அங்கு மனித நேயப் பணிகளை ஆற்றி வந்தனவேயன்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவில்லை'' இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, பேரவலப்படும் தமிழ் மக்களுக்கு உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய இயலாமல் கஷ்டப்படும் ஒரு மக்கள் கூட்டத்துக்கு உயிரூட்டுகின்ற ஒரு மனித நேயப் பணிக்கு வேட்டுவைக்கும் செயற்பாடாகவே அர்த்தப்படுத்தப்படவேண்டும்.

இப்படி மனிதாபிமானமின்றி தமிழ் மக்களை நடத்துகின்ற இலங்கைக்கு எதிராக ஐ.நா. தடைகளை அமுல்படுத்துவதற்கு பிரிட்டிஷ் அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று, பிரிட்டிஷ் நாட்டு சர்வகட்சி நாடாளுமன்றக்குழு வற்புறுத்தியிருக்கின்றது.புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் பெயரால் தமிழ் மக்களைப் பெரும் துன்பத்துக்குள்ளும், பேரவலத்துக்குள்ளும் தள்ளும் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதேயல்ல என்றும் அக்குழு தெரிவித்திருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் அவர்களுக்கு எட்டப்பட வேண்டும். மனிதநேய அமைப்புகள் அந்தப் பணியை முன்னெடுப்பதற்காக அந்த மக்களை நாடி, சர்வதேச தொண்டர் அமைப்புகளும், மனிதநேய அமைப்புகளும் செல்வதற்கு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், கெடுபிடிகளற்ற போக்குவரத்து வசதிகளைத் தலையீடின்றி வழங்குங்கள் என்று அரசுத் தரப்பையும், புலிகள் தரப்பையும், ஐ.நாவிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வரை தொடர்ந்து விடாது வலியுறுத்தி வருகையில்,அதற்கு முற்றிலும் முரண்பாடான உத்தரவை இலங்கை அரசு விடுத்திருக்கின்றது.

அதுவும் வன்னிக்குள் புதிதாக இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சம் அகதிகள், வாழ்வாதார வசதிகள், சுகாதார ஒழுங்குகள், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகள் இன்றி அந்தரித்துக்கொண்டிருக்கையில் அந்தப் பணியை முன்னெடுக்க வேண்டிய உள்ளூர், வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளை அங்கிருந்து வெளியேறப் பணிக்கும் கொடூர உத்தரவை, அந்த மக்களின் நலனைப்பற்றிச் சிந்திக்காமல் அரசு விடுத்திருக்கின்றது.அதுவும் ஏற்கனவே புதிதாக இரண்டு லட்சம் பேர் ஏதிலிகளாகி அந்தரிக்க மேலும் புதிதாகப் பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாகும் பேரவலம் அங்கு நேர்ந்திருக்கையில் இவ்வாறு ஏதிலிகளாவோருக்கு நிவாரணப் பணியாளர்களின் உதவி மிக உச்சமாகத் தேவைப்படும் சமயத்தில் சர்வதேசத்தின் தார்மீக எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் புறக்கணித்து, மேற்படி உத்தரவைக் கொழும்பு விடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.வன்னியில் சுமார் ஐந்து லட்சம் மக்களின் வாழ்வை, மரணத்துக்குள் மூழ்கடிக்க வழி செய்திருக்கும் இந்தக் கொடூரத்தை சர்வதேசம் இன்னும் பார்த்திருப்பது பெரும் மனிதப் பேரவலத்துக்கே வழி செய்யும்.

பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசின் இத்தகைய கொடூரப் போக்கை உணர்ந்து, அதனைக் கண்டித்துத் தண்டித்து இலங்கை ஆட்சி நிர்வாகத்தை வழிப்படுத்த முயலவேண்டும். அதற்கான காலகட்டம் வந்துவிட்டது என அனைத்துக் கட்சிகளுக்கான பிரிட்டிஷ் நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ள கருத்துகளில் அர்த்தம் உள்ளது; நியாயமும் உள்ளது.

இலங்கையின் போக்கில் மாற்றம் இல்லை எனில், இனிமேல் அதனுடன் மென்மையாகப் பேசும் காலம் சர்வதேச சமூகத்துக்கு காலாவதியாகிவிட்டது என்பதைக் காட்டும் விதத்தில் காத்திரமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும். இல்லையேல் இலங்கையின் இத்தகைய அராஜக அட்டூழிய போக்கு இன்னும் தீவிரமாகி மேலும் மனிதப் பேரழிவுக்கே அது வழி செய்யும்.சர்வதேச சமூகம் விரைந்து தலையிட வேண்டிய முக்கிய விவகாரம் இது.

*******
for contact - jaalavan@gmail.com

No comments: