தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கஜேந்திரனுடன் தொலை பேசியில்; தொடர்பு கொண்ட ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த யூன் மாதம் யேர்மனியில் நடை பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் பங்கு பற்றியமை தொடர்பான விசாரணைகளுக்கு வரவேண்டும் என கூறியமைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு இன்று சமூகமளித்திருந்தார்.
இன்று 19-11-2008 கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவு தலைமையகத்திற்ன் நான்காம் மாடியில் வைத்து காலை 10:30 மணி தொடக்கம் மாலை 6:30 மணிவரை அவரிடம் பொங்குதமிழ் நிகழ்வில் ஆற்றிய உரை தொடர்பாகவும் தீபம் தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பாகவும் தீவிர விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு 20 பக்க வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.விசாரணையின் போது யேர்மனியில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக உரையாற்றியதாகவும், தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரன் என்று கூறியுள்ளதாகவும் இலங்கை அரசுக்கு எதிராக கருத்துக் கூறியுள்ளதாகவும் இதன் மூலம் பிரிவினைக்கு ஆதரவாக பேசியுள்ளதாகவும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம் பெறும் கைதுகள் சித்திரவதைகள் காணாமல் போதல்கள் தொடர்காக வெளிநாட்டில் பேசியதன் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் அவதூறு ஏற்படுத்த முயன்றுள்ளதாகவும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வன்னிப்பகுதிக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்த கருத்தினை மறுத்து கஜேந்திரன் கூறிய கருத்து தொடர்பாகவும் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவற்றினை தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று தீபம் தொலைக்காட்சி நிருபர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுடனும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து நிலமைகளை விளக்கியுள்ளேன் என்று கஜேந்திரன் கூறியமை தொடர்பாக அவர்களிடம் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக என்ன கூறினீர்கள் ஏன் கூறினீர்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணைகள் இடம் பெற்றதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறான விசாரணைகள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அச்சுறுத்தி தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெறும் ஸ்ரீலங்கா இராணுவ வன்முறைகள் கைதுகள் சித்திரவதைகள் கொலைகள் கடத்தல்கள் போன்றவற்றினை வெளியே தெரியவிடாமல் மூடி மறைப்பதற்கு சிங்கள அரசு முயற்சிப்பதாகவும். தற்போது இடம் பெறும் வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கிலும், எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று இடம் பெறும் பட்சத்தில் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமல் அச்சுறுத்தி தடுப்பதற்கும் தற்போதய அரசு முயல்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment