Sunday, 16 November 2008

** புலிகள் பலவீனமடைந்துள்ளனரா?

<<தாயகன்>>
விடுதலைப் புலிகள் மிகவும் பலவீன மடைந்து விட்டனர். அவர்களால் இனி இராணுவத்தினரின் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாது. எனவே, யுத்தம் இறுதிக் கட்டத்தையடைந்து விட்டது. இதில் இராணுவத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறான கருத்துகள் அண்மைக்காலமாக தென்னிலங்கையில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. போர் நிறுத்தத்திற்குத் தாம் எந்த நேரத்திலும் தயார் என்ற விடுதலைப் புலிகளின் அறிவிப்பும் வன்னி பெரு நிலப்பரப்பில் அவர்கள் இழந்துவரும் நிலப்பரப்புகளின் அளவுகளுமே விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துவிட்டனரென்ற தோற்றப்பாட்டை வலுவாக ஏற்படுத்தியுள்ளது. இது தவிர்க்கமுடியாததும் கூட. விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட் டனரா? வன்னியில் அவர்கள் நிலப்பரப்புகளை இழக்கக் காரணமென்ன? இராணுவத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில்தானா போர்நிறுத்தத்திற்கு தயாரென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்? இராணுவம் கூறுவது போல் புலிகளிடம் போரிடுவதற்கான ஆட்பலமும் ஆயுத பலமும் இல்லாமல் போய்விட்டதா போன்ற பல கேள்விகள் பலதரப்பினரிடமும் எழுந்துள்ளன.

ஆனால், இத்தனை கேள்விகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ள விடு தலைப் புலிகளின் செயற்பாடுகள், அவர்கள் தொடங்கப் போகும் இறுதிப் போருக்கான வியூகங்கள் என்பது விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அவர்களின் வலிந்த தாக்குதல் வரலாறுகள் தொடர்பிலும் ஆழமான கணிப்பீடுகளையும் ஆய்வுகளையும் மேற் கொண்டு வருவோருக்கு புரியக்கூடிய விட யங்கள். விடுதலைப் புலிகளின் இந்த இராணுவ வியூகங்களை தமக்குச் சாதகமாக்கி அரசியல் வியூகங்களை ஏற்படுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றுள்ளது.

இராணுவ வெற்றி என்ற தேனைத் தடவியே வரவு-செலவுத் திட்டமென்ற கசப்பான மருந்தை சிங்களவர்களின் வாய்க்குள் திணித்துள்ளது. இராணுவ வெற்றி என்ற மயக்கத்திலிருக்கும் சிங்களவர்களும் கசப்பான மருந்தின் பின் விளைவுகள் தெரியாது. ஆகா, அற்புதம், அபாரம் எனப் பாராட்டிக்கொண்டு இந்த நாட்டை அழிவுப்பாதைக்குக்கொண்டு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ அரசிற்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். விடயம் புரிந்து எச்சரிப்பவர்கள் தேசத் துரோகிகளாக பட்டம் சூட்டப்படுவதால் அவர்களும் அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டனர். உண்மையில் விடுதலைப் புலிகள் பல வீனமடைந்து விட்டனரா என்ற சந்தேகம் தமிழ்மக்களுக்குக்கூட ஏற்பட்டுள்ளது.

இங்கு மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள்கூட ஒருவரை யொருவர் சந்திக்கும்போது புலிகள் பலவீனமடைந்துவிட்டனரா? புலிகள் வன்னியையும் படையினரிடம் பறிகொடுத்து விடுவார்களா? என்ற கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். புலிகள் உண்மையில் பலவீனமடைந் திருந்தால் இலங்கை விமானப்படைக்கும் வெளிநாட்டு விமானிகளுக்கும் ?தண்ணி? காட்டிய ?தள்ளாடி? இராணுவ முகாம் மற்றும் களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மீதான தமது துல்லியமான விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை எவ்வாறு அவர்களால் நடத்திவிட்டு வந்த வழியாகவே பாதுகாப்பாக திரும்பிச் சென்றிருக்க முடியும்? அல்லது வடமராட்சிக் கிழக்குக் கடலில் கடற்படையினரின் ரோந்துப் படையணியை துவம்சம் செய்து 20 இற்கு மேற்பட்ட கடற்படையினரை கொன்று அவர்களின் ஒரு ?டோரா? பீரங்கிப்படகையும் கலத்தையும் எவ்வாறு வெற்றிகரமாக தாக்கி மூழ்கடித்திருக்க முடியும்? இந்த வான், கடல் வழியான இரு வெற்றிகரமான தாக்குதல்களும் ஒரு வாரத்திற்குள்ளேயே நடத்தப் பட்டுமிருந்தன.

இறுதியாக விடுதலைப் புலிகள் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டுள்ள இராணுவ ஆய்வாளர்கள், புலிகள் நவீனரக குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் இவை வானத்திலேயே வெடிக்கக் கூடியவை என்றும் கூறியுள்ளனர். அதேவேளை வன்னிக் களமுனையிலும் புலிகள் சில இடங்களில் நவீன ரக ஷெல்களையும் குண்டுகளையும் பயன்படுத்துவதாக படைத்தரப்பும் கூறியுள்ளது. புலிகள் நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்து கின்றார்களென்றால் அவர்கள் தற்போதும் எவ்வித இடையூறுகளுமின்றி ஆயுதங்களை இறக்குமதி செய்கின்றனரென்பதை இக்கருத்து கள் மூலம் படைத்தரப்பும் இராணுவ ஆய் வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவ் வாறானால் இராணுவம் கூறுவது போல் புலிகளுக்கு ஆயுத தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
அடுத்ததாக புலிகளுக்கு ஏற்படும் உயிரிழப் புகள் தொடர்பாக அரசும் இராணுவமும் கூறும் எண்ணிக்கைகளை பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க.வே நிராகரித்துவிட்டது. அது மட்டு மன்றி இராணுவ தளபதியின் உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை தொடர்பிலான மாறுபட்ட கருத்துகள், பொய்ப்பிரசாரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஊடகவியலாளர் மாநாடுகளிலும் பாராளுமன்றத்திலும் அக்குவேறு ஆணிவேறாக பிய்த்துக்கொண்டி ருக்கின்றன. பொய்ப் பிரசாரங்களைக்கூட ஒழுங்காக முன்னெடுக்கத் தெரியாதவராகவே தற்போ தைய இராணுவத் தளபதி உள்ளார்.

2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளில் 3 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்த அவர் அண்மையில் இந்த வருடம் தமது படையினர் 12 ஆயிரம் புலிகளை கொன்றுள்ளதாகக் கூறியுள்ளார். அவ்வாறெனில் காயப்பட்டவர் களின் எண்ணிக்கையையும் பார்த்தால் புலிகள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை தாண்டிவிடுவார்கள் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. எனவே, புலிகளின் உயிரிழப்புகள் தொடர்பில் அரசும் இராணுவமும் கூறிவரும் கணக்குகளை சிங்களக் கட்சிகளே நிராகரித்துள்ள நிலையில் புலிகள் ஆட்பலத்தில் பலவீன மடைந்து விட்டனரென்ற கருத்தும் அடிபட்டுப் போகிறது. அப்படியானால் ஆயுத பலத்திலும் ஆட்பலத்திலும் புலிகள் பலவீனமடையாத நிலையில் ஏன் வன்னியில் நிலப்பரப்புகள் பறிபோகின்றன என்ற கேள்வி எழுவது இயற்கை. ஆனால், அங்கும் தினமும் கொல்லப்படும், காயமடையும், அங்கவீனர்களாகும் படையி னரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மீள முடியாத மரண சகதிக்குள் படையினர் சிக்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

படையினரின் கண்ணுக்குத் தெரிந்த கிளிநொச்சி இன்று காணாமல்போய் தற்போது படையினரின் கண்களுக்கு பூநகரி தெரியத் தொடங்கியுள்ளது. ஐ.தே.க.வின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவலின் படி கடந்த 9 மாதங்களில் மட்டும் வன்னிக் களமுனையில் 1828 படையினர் கொல் லப்பட்டும் 6424 படையினர் கடும் காயங் களுக்குமுள்ளாகியுள்ளனர்.
ஐ.தே.கட் சியே இவ்வாறானதொரு தொகையை வெளியிடுகின்றதென்றால் படையினருக்கு உண்மையில் ஏற்பட்ட இழப்புகளை 3ஆல் பெருக்க வேண்டியதுதான். அதேவேளை, ஆட்சி பீடமேறிய மஹி ந்த ராஜபக்ஷ அரசு 2006ஆம் ஆண்டு புலிக ளுடன் போரைத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். 2008 ஜனவரியிலிருந்து இதுவரை மட்டும் 15 ஆயிரம் பேர் இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக ?ராவய? செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்தில் வெற்றியடை ந்து வரும் இராணுவத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகையிலான படையினர் தப்பி யோடுவார்களா என்பதே இங்குள்ள பிரதான கேள்வி.

அடுத்ததாக களமுனைகளில் கொல்லப் படும், காயமடையும் படையினரின் எண்ணிக் கைகளை வெளியிடுவதில்லையென அரசும் இராணுவமும் சுயதணிக்கை செய்துள் ளன. போரில் வெற்றியடைந்துவரும் இரா ணுவத்திற்கு அவர்களின் இழப்புகளை மூடி மறைக்குமளவுக்கு சேதங்கள் ஏற்படுகின்ற தென்றால் எவ்வாறு அந்தளவுக்கு இழ ப்புகளை ஏற்படுத்தும் புலிகளை பலவீனமடைந்தவர்க ளென்று கூறமுடியும்? கடந்த வாரம் வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் பாராளுமன்றத்தில் பேசிய முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர சில உண்மைகளை சபையில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் முக்கியமாக குறிப்பிட்ட விடயம் ?இந்த அரசு தலைகீழாக நின்றாலும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது? என்பதுதான். அத்துடன் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் மூடிமறைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பலியாகும், காயமடையும் படையினரை அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவந்தால் மக்களுக்குத் தெரிந்துவிடுமென்பதால் பழைய பஸ்களில் ஆசனங்களை கழற்றிவிட்டு அதில் படையினரை தென்பகுதிக்கு கொண்டுவருவதாகவும் உயிரிழக்கும் பல படையினரை காணாமல்போகும் பட்டியலில் சேர்த்து அந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு துரோகமிழைப்பதாகவும் அவர் குறிப் பிட்டிருந்தார். யுத்த முனைகளில் படையினருக்கு அதிக இழப்புகள் இல்லாவிட்டால் அவற்றை மூடிமறைக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட வேண்டியதில்லையே. எனவே, இந்த ?மூடிமறைப்பு? என்பதன் பொருள் வெளியில் சொல்லமுடியாதளவுக்கு வன்னி களமுனைகளில் படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன என்பதுதான். இவ் வாறான நிலையில் இந்தப் படையினரால் எவ்வாறு போரில் வெற்றி பெறமுடியும்.

வன்னியில் நிலப்பரப்புகளை இராணுவம் கைப்பற்றியுள்ளமையும் கைப்பற்றி வருகின்ற மையும் உண்மையான விடயங்கள்தான். ஆனாலும், நிலப்பரப்புகளை கைப்பற்றுவதன் மூலம் யுத்தத்தை வெற்றிகொண்டுவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. நிலப்பரப்புகளை கைப்பற்றுவதென்பது போரியல் துறையில் தற்காலிக வெற்றியாகவே கருதப்படுகின்றது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான படையி னரையும் உலக வல்லரசுகளின் ஆயுத தள பாட ஒத்துழைப்புகளையும் கொண்ட ஒரு இராணுவத்துடன் சில ஆயிரம் பேரைக் கொண்ட புலிகள் அமைப்பு போராடி வருகின்றது.

இங்கு இராணுவத்தின் வெற்றியை ஆட்பலமும் ஆயுதபலமும் தீர்மானிக்கின்ற அதேவேளை புலிகளின் வெற்றியை மதிநுட்பமான திட்டமிடலும் ஆத்மபலமுமே தீர்மானிக்கின்றது. எனவே, தமக்கு சாதகமான சூழல் ஏற்படும் போதே வன்னிக்களமுனைகளில் புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்வார்கள். அதுவரை அவர்கள் தமது தேவையற்ற இழப் புகளை தவிர்ப்பதற்காகவும் இராணுவத்தின் பலவீனமான சூழலை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. புலி கள் தந்திரமாகவும் தமக்குச் சாதகமான நிலையிலுமே வன்னிக் களமுனையில் வலிந்த தாக்குதல் கதவுகளைத் திறக்க முடியும். இதேவேளை, விடுதலைப் புலிகள் தேசிய ரீதியாக, சர்வதேச ரீதியாக தமக்கு சாதகமான அரசியல், இராணுவ சூழ்நிலைகளைப் பொறுத்தே வலிந்த தாக்குதலை தொடங்கு வார்கள். தற்போது அதற்கான சூழ்நிலைகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் குழப்பி யடிக்கும் விதத்தில் புலிகள் ஒருபோதும் செயற்படமாட்டார்கள்.

அந்தச் சாதகமான சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக்கொள்ளவே முயற்சிப்பார்கள். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த சாதக நிலைக்கு பதிலீடாகவே விடுதலைப் புலி களின் தற்போதைய ?எவ்வேளையிலும் போர் நிறுத்தத்திற்குத் தயார்? என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளதே தவிர அவர்கள் பலவீனமடைந்ததால் அவ்வறிவிப்பு வெளிவரவில்லை. அத்துடன் இந்த அறிவிப்பு மூலம் தமிழக அரசியல் தலை வர்களின் வேண்டுகோளையும் புலிகள் நிறைவேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையும் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டை விளக்கியே இந்தப் போர்நிறுத்தத்திற்கு தயாரென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாயின் அது போரில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் தொடர்புபட்ட விடயம். இதில் ஒரு தர ப்பை மட்டும் போரை நிறுத்துமாறு நாம் கோர முடியாதென தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். கருணாநிதியின் அறிவிப்பையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கருணாநிதியின் அறிவிப்புத் தொடர்பில் புலிகள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமெனக் கேட்டது. இது தொடர்பாக தமது கருத்தை வெளியிடுகையிலேயே போர் நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்த தமது போர் நிறுத்த அறிவிப்பை புலிகள் வெளியிட்டனர்.

இதன் மூலம் தங்களிடமிருந்து தமிழக அரசியல் தலைமைகள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டு தமது கடமையை புலிகள் செய்துள்ளனரே தவிர தமது பலவீன நிலையில் அல்ல. தமது போர்நிறுத்தத்திற்கு தயாரென்ற அறிவிப்பு மூலம் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசையும் இந்திய மத்திய அரசையும் இலங்கை அரசையும் விடுதலைப்புலிகள் நெருக்கடிக்குள் தள்ளினர்.

தாம் போர் நிறுத்தத்திற்குத் தயாரென்றதன் மூலம் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நெருக்கடியையும் மத்திய அரசு இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு உடன்பட வைக்க வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தினர்.

ஆனால், கிளிநொச்சி என்ற கௌரவப் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளதாலும் போர் வெறியர்களுடன் அரசியல் கூட்டு வைத்துள்ளதாலும் இந்த போர் நிறுத்த அறிவிப்பை இலங்கையரசு ஒருபோதும் ஏற்காதென்பது புலிகளுக்கும் தமிழக, மத்திய அரசுக்கும் நன்கு தெரிந்த விடயம். இவர்கள் எதிர்பார்த்ததைப் போன்றே புலிகளின் அறிவிப்பு வெளியான மறுநாளே அதனை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாதென இலங்கையரசு பாராளுமன்றத்தில் அறிவித்து விட்டது.

இவ்வாறான நிலையில் புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாராகவிருப்பதால் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் இதற்கான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டுமெனவும் தமிழக சட்டசபையில் தமிழக அரசியல் கட்சிகள் கடந்த புதன்கிழமை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றின. இந்நேரத்தில்தான் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியாவுக்கு வந்திருந்தார். பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பலருடன் சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார்.

எனவே, விடுதலைப் புலிகளின் இந்த போர்நிறுத்தத்திற்கு தயாரென்ற அறிவிப்பு ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள், விளைவுகளை இன்னும் சிலநாட்களில் காணக்கூடியதாக இருக்கும். விடுதலைப் புலிகள் இவ்வாறு இராணுவ, போரியல் தந்திரங்களையும் அரசியல் காய்நகர்த்தல்களையும் செய்வதற்காக மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டதாலேயே புலிகள் பலவீனமடைந்துவிட்டதாக கருத்துகள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன. சில வேளைகளில் தம்மை பலவீனமாக காட்டிக்கொள்வதன் மூலமாக புலிகள் ஏதாவது ஒரு இலக்கையடையத் திட்டமிட்டி ருக்கலாம். புலிகள் எதற்கும் ஒரு கால எல்லையை வகுத்து செயற்படுபவர்கள்.

எனவே, இந்த விட்டுக் கொடுப்புகள், போர்நிறுத்த அறிவிப்புகள், இராணுவ முன்னேற்றங்களை அனுமதித்தல், பொறுமை காத்தல் போன்றவற்றுக்கும் நிச்சயம் ஒரு கால எல்லையை வைத்திருப்பார்கள். அந்தக் கால எல்லை எது என்பதுதான் இன்றுள்ள முக்கியமான கேள்வி. அரசியல், இராணுவ நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளும் நெருங்கி வருவதால் அந்தக் கால எல்லையை மாவீரர் தினத்துடன் முடிவுக்குக் கொண்டுவருவார்களா என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காததை, எதிர்பார்க்காத நேரத்தில் செய்வதே புலிகளின் வெற்றியின் இரகசியம் என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டதொன்று.
____________
Thinakkural.com

No comments: