Saturday, 22 November 2008

** பிரான்சில் ஆர்ப்பாட்டம் நடத்த சிங்கள மக்கள் ஏற்பாடு!

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை நியாயப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு பிரான்சிலுள்ள சிறீலங்கா தூதரகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறியவருகின்றது. உலக நாடுகள் எங்கும் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரான்சிலுள்ள சிறிலங்கா தூதரகம் அதனை நியாயப்படுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசின் முக்கியத்துவம் வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் அமைந்துள்ள ரொக்கடொரோ பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது.

எனினும் இதுவரை பிரெஞ்சு காவல்துறையினர் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்துவித முயற்சிகளிலும் இறங்கியுள்ளதாகவும், அனுமதி வழங்காத பட்சத்தில் அனுமதியை மீறி போராட்டத்தை நடத்தவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் எமக்கு அறியக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அனுமதி மீறி போராட்டங்களை நடத்துவதற்கு பிரான்சிலுள்ள தமிழ் விரோத சக்திகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதற்கிடையே சிங்கள மக்கள் போராட்டம் நடத்துவது குறித்து, பிரெஞ்சு காவல்துறையினர் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடன் தொடர்புகொண்டு, அனுமதி வழங்கப்பட்டால் தமிழ் மக்களால் சிங்களவர்களின் போராட்டத்திற்கு எதிரான வன்முறைகள் நிகழுமா எனக் கேள்வி எழுப்பியதாகவும் தெரியவருகின்றது. எனினும் தகவல் அறிந்துள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்களுக்கு அனுமதி வழங்காத பிரெஞ்சு காவல்துறையினர், படுகொலையை நியாயப்படுத்தும் சிங்கள மக்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கமாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
__________
Sankathi.com

No comments: