உரிமைகளைக் கோரும் தமிழர்களை கொன்றொழிப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் முப்படையினருக்கு நாளொன்றுக்கு 456 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 90 வீதமான யுத்தம் நிறைவடைந்து விட்டதென்றால் பாதுகாப்பு அமைச்சுக்கு 177 பில்லியன் ரூபா எதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். நாட்டில் சவப்பெட்டிகளும் மலர் செண்டு களுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழர்களின் இறையாண்மை மதிக்கப்படாவிடின் இலங்கையில் தனி நாடு உருவாவதை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2009ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,''உரிமைகளைக் கோரும் தமிழர்களைக் கொன்றொழிப்பதற்கு நாளொன்றுக்கு 456 மில்லியன் ரூபா முப்படையினருக்கும் ஒதுக்கப்படுகின்றது.சிங்கள கொடியை ஏற்றி அடுத்த தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் பலியெடுக்கப்படுவது மட்டுமல்ல, இராணுவத்தினரும் பலியாகின்றனர். இதற்கும் யூதர்களை போன்ற ஹிட்லருக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது.
கடந்த மூன்று வருடங்களில் படையினர் 2500 பேர் பலியானதுடன் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மீள திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் படையினர் தப்பியோடி விட்டனர். இவையெல்லாம் தேவைதானா? எனினும் இழப்புகள் சிங்கள மக்கள் மத்தியில் மூடி மறைக்கப்படுகின்றன.1983ஆம் ஆண்டு கருவாடு உற்பத்தியில் யாழ். மாவட்டம் 51 வீதமாக இருந்தது. இன்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து டின் மீன்களை இறக்குமதி செய்ய வரி விதிக்கப்படுகின்றது.
எங்களை விடுவிக்குமாறு யார் கேட்டனர்? மக்களை விடுவிக்கவா 6000 தடவைகள் விமானக் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது? வரவு செலவுத் திட்டம் சிங்களத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே தவிர வடக்கு, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவல்ல. சவப்பெட்டியும் மலர்ச்செண்டுமே அபிவிருத்தி செய்யப்படுகின்றன. சவப்பெட்டியும் விலை கூடி விட்டதால் படையினர் களத்திலேயே புதைக்கப்படுகின்றனர்.
படையினரின் கண்ணை கட்டி கறுத்த துணிகளால் மூடப்பட்ட பஸ்களில் ஏற்றி யுத்த களத்திற்கு கொண்டு சென்று விடப்படுகின்றனர். நடுக்காட்டில் திக்குத் தெரியாமல் படையினர் தவிக்கின்றனர். பதுளைக்கு அழைத்துச் செல்வதாக கூறியவர்கள் இங்கு ஏன் கொண்டு வந்துவிட்டனர் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.,இலங்கை சிங்கள நாடு என்ற செய்தியின் மூலமாக 'தமிழர்களை கொன்றொழி' என்ற சிந்தனையே இராணுவ சிப்பாய்களுக்கு ஊட்டப்படுகின்றது.
வைத்தியசாலைகளுக்கு பால் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு தேநீர் வழங்கப்பட்டது. இன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான யுத்தம் அல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் என்றால் இரண்டரை மாதங்களில் 2 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டதேன்? இதுவா விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம்?,இந்தியாவில் அசாம், நாகதாதி, ராஜஸ்தான் போன்ற இடங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன. அங்கு அந்நாட்டு விமானப் படை மூலமாக விமானக் குண்டு வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா? ஜே.வி.பி.க்கு எதிராக தெற்கில் விமான குண்டு வீச்சோ, ஆட்லறி தாக்குதல்களோ மேற்கொள்ளப்பட்டனவா? ஆனால் குறுகிய வன்னிப் பகுதிக்குள் மட்டும் தொடர்ச்சியாக விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.,தமிழ் மக்கள் மனதை வெல்வதன் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
சில நேரங்களில் கிளிநொச்சியை பிடிப்பீர்கள் எனினும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மருந்து பொருட்களும் கொடுக்கப்படுகின்றன என அரசாங்கம் கூறுகிறது. எனினும் பாம்புக் கடி, வைரஸ், மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட சகல வியாதிகளுக்கும் 'பெரசிட்டமோல்' தவிர வேறு மருந்துகள் அங்கில்லை.,இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களே சகல பேச்சுவார்த்தைகளையும் புலிகளே முறியடித்தனர் என்று கூறுகின்றனர். காலி முகத்திடல் உண்ணாவிரதம் முதல், போராட்டங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டீர்கள். எனினும் பிரபாகரன் 1977ஆம் ஆண்டிற்குப் பின்னரே உருவானார்.,
யுத்தத்திற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை அழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட முழு வீதம் கூட இதர பிரிவுகளின் கூட்டுத் தொகையில் இல்லை. கடந்த 30 வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கைகள் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியானதுடன் 10 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர். இவையெல்லாம் தேவைதானா? மனித உரிமைகளை மீறிக் கொண்டு சிங்கள இளைஞர், யுவதிகளை ஏன் வீதிக்கு இழுத்து வருகின்றீர்கள். இறைமையை மதிப்பதாக கூறுகின்றீர்கள். எனினும் தமிழர்களின் இறைமை மதிக்கப்படாவிடின் இலங்கையும் ஜோர்ஜியா, செக்கஸ்லோவியா, கிழக்கு தீமோர் போல பிரிந்து தனி நாடாகி விடும்.
நாங்கள் சேர்ந்து வாழ்வதற்கு தயாராக இருக்கின்றோம். எனினும் அதற்கு நீங்கள் தயாரா? இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்களின் இறையாண்மை மதிக்கப்படாவிடின் தனி நாடு உருவாவதைத் தடுக்க முடியாது'' என்றார்.
வீரகேசரி நாளேடு
******








No comments:
Post a Comment