Thursday, 6 November 2008

** பராக் ஒபாமா வருகிறார் பராக்! மாற்றம் ஏற்படுத்த வருகிறார் பராக்!

கறுப்பு இன வம்சாவளியினரான பராக் ஒபாமாவை தமது நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்திருக்கின்றார்கள் வெள்ளையர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க மக்கள்.ஜனநாயக அரசியல் சமுதாயத்தில் இது ஒரு புதிய மாற்றம் மட்டும் அல்ல, பராக் ஒபாமா திரும்பத் திரும்பப் பிரகடனப்படுத்திய மாதிரி புதிய உலக மாற்றத்துக்கான அமெரிக்க மக்களின் அறைகூவலாகவும் அங்கீகாரமாகவும் கூட இது அமைகின்றது.

2000 ஆம் ஆண்டில் தெரியாமலும், 2004 ஆம் ஆண்டில் தெரிந்தும் தவறிழைத்த அமெரிக்க மக்கள், அந்தக் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்வது போல இந்தத் தடவை நடந்துகொண்டிருக்கின்றார்கள். 2000 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தமது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தனது ஏகாதிபத்திய - எதேச்சாதிகார - கொள்கைப் போக்கினாலும் நடவடிக்கைகளினாலும் அமெரிக்க தேசத்தை மட்டுமல்லாமல் முழு உலகையே போரியல் நெருக்குவாரத்துக்குள் ஆழ்த்தினார்.

‘உலகப் பொலிஸ்காரனான’ தனது வல்லாதிக்கச் செல்வாக்கை திமிர்த்தனத்தோடு சர்வதேசங்களின் மீதும் பிரயோகித்த அவர், தனது தேசத்தின் படை பல வலிமையை சர்வாதிகாரி போல உலகின் மீது ஏவிவிட்டார்.ஆப்கான் தேசம் மீது ஓர் ஆக்கிரமிப்பை ஏவிவிட்டு அந்த நாட்டின் அமைதிக்கும் சமாதான வாழ்வுக்கும் நிரந்தர சமாதி கட்டினார்.ஐ.நாவின் அனுமதியின்றி - சர்வதேச நாடுகள் பலவற்றின் ஆட்சேபனையையும் எச்சரிக்கையையும் உதாசீனம் செய்து, புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு - தம்பாட்டில் சில நேச நாடுகளையும் சேர்த்துக்கொண்டு ஈராக் மீது பெரும் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை ஆரம்பித்து, அந்த நாட்டைக் கைப்பற்றி, இறுதியில் அந்தத் தேசத்தைக் குட்டிச் சுவராக்கிச் சின்னாபின்னமாக்கினார்.

‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்குத் தம்பாட்டில் ஒரு வியாக்கியானத்தை உருவாக்கிக்கொண்டு, புஷ் எடுத்த நடவடிக்கைகள் உலகில் நீதி, நியாயம், நேர்மை, தார்மீகம் போன்ற உன்னதங்களைக் குழிதோண்டிப் புதைக்கக் காலாயின.புஷ் தலைமையிலான நிர்வாகத்தின் நியாயப் போக்கு இல்லாத அணுகுமுறை, நீதியின்பால் - உரிமை வேண்டி - தார்மீகப் பலத்தோடு - நடத்தப்பட்ட நியாயமான விடுதலைப் போராட்டங்களை எல்லாம் ‘பயங்கரவாதம்’ என்று பச்சை குத்தி சீரழித்ததோடு, நியாயத்துக்காகப் போராடிய சமூகங்களை எல்லாம் அநியாய சாகரத்துக்குள் நிரந்தரமாக அடக்கித் தள்ளியது.

அதேசமயம், சிறுபான்மையினரையும் நலிவுற்ற மக்கள் சமுதாயத்தையும் அடிமைப்படுத்தும் நோக்கோடு அதிகார வர்க்கங்கள் மேற்கொண்ட அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை அங்கீகரித்து, அவற்றை சட்டரீதியான செயற்பாடுகளாக அடையாளம் கண்டு தவறிழைத்தது புஷ் ஆட்சி.ஆப்கான் மீதும், ஈராக் மீதும் போர் தொடுத்து, வரலாற்றுக் குற்றம் இழைத்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை 2004 ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்து அமெரிக்க மக்கள் திரும்பவும் மாபெரும் தவறிழைத்தார்கள். அந்தத் தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்வதுபோல ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவைத் தமது பெருவாரியான வாக்குகளால் இம்முறை தேர்ந்தெடுத்து நீதி செய்ய முற்பட்டிருக்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.

பெரும்பான்மையினரான சிங்களவர்கள் வாழ்கின்ற நாட்டில் மிகச் சிறுபான்மையினரான தமிழர்களும், ஏனையோரும் உரிமை கேட்டுப் போராட்டம் நடத்தவோ, நியாயம் கேட்டுப் பிரச்சினை பண்ணவோ கூடாது என்றும், பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கு அடங்கி வாழ வேண்டியதே அவர்களது கடமை என்பது போலவும் அடாத்தாகவும் திமிர்த்தனமாகவும் பேசுகிறார் இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா.ஆனால், அமெரிக்காவிலோ - இலங்கையில் தமிழரின் விகிதாசாரம் போன்று - சிறிய எண்ணிக்கை வீதத்தினரான கறுப்பு இனத்தவர் ஒருவரை, அந்தத் தேசத்தினது தலைமைக்கு மட்டுமல்லாமல், உலகத் தலைமையின் அதிகாரம் என்ற வலுவைக் கொண்ட பதவிக்கும் கூடத் தேர்ந்தெடுத்து ஜனநாயக விழுமியங்களுக்கு மகுடம் சூட்டியிருக்கின்றனர் அமெரிக்க மக்கள்.

பேரினவாதம் என்ற மோசமான அறியாமை இருளுக்குள் மூழ்கிக்கிடந்து, மேலாதிகாரச் செருக்கோடு, கொடுமைப்படுத்தலில் ஈடுபட்டு வரும் சிங்களப் பேரினவாதப் போக்காளருக்கு அமெரிக்க மக்களின் இந்த முன்மாதிரி ஒரு நல்ல வழிகாட்டலாக அமையட்டும்.‘மாற்றம்’ ஒன்றைக் கொண்டுவரப் போகிறார் என்ற கோஷத்தோடு அதிகாரத்துக்கு வரும் பராக் ஒபாமா, நலிவுற்ற மக்களுக்கு - அடிமைப்பட்ட சமூகங்களுக்கு - அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்ட இனங்களுக்கு - நியாயமும் நீதியும் கிடைக்கும் வகையிலான ‘மாற்றம்’ சர்வதேச ரீதியில் ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அவர் ஏற்படுத்தப் போகும் மாற்றத்துக்காகப் பார்த்திருக்கிறது - காத்திருக்கிறது - சர்வதேசம்.
*****

No comments: