Tuesday, 11 November 2008

** சமஷ்டி தீர்வினை தற்போது வழங்கினால் கூட தமிழர்கள் ஏற்கும் நிலையில் இல்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி

தற்போதைய நிலையில் சமஷ்டி தீர்வினை வழங்கினாலும் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். தமிழீழமே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை போதிக்க வேண்டிய பிக்குமார் நாடாளுமன்றத்தில் வந்திருந்து கொண்டு படையினர் கிளிநொச்சியை இந்தா பிடிப்பார்கள் அந்தா பிடிக்கப் போகின்றனர் என்று கூறி சிங்கள மக்களை உணர்ச்சிப்படுத்தி அரசியல் லாபம் தேடுகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு-செலவு திட்ட மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மகிந்த அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகள் குறித்து காரசாரமாக விமர்சித்தார்.

நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த பிக்குமாரை பார்த்து விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி இனவாதத்தை கிளப்பி அரசியல் செய்ய முற்பட்டதால் பௌத்த ஆலயங்களில் பூசை செய்ய பிக்குமார் இல்லை என்று எடுத்துக்கூறினார்.

உங்களுக்கு கிளிநொச்சி எங்கிருக்கின்றது என்று தெரியுமா?கிளிநொச்சி என்ன நிறம் என்றுகூட தெரியுமா? உங்களுக்கு போரியல் அறிவு உள்ளதா? கிளிநொச்சியை படையினர் கைப்பாற்றுவார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?என கேள்விகள் எழுப்பிய அவர், பௌத்த மதத்தை போதிப்பதை விடுத்து மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக இராணுவத் தளபதிகள் போன்று பிக்குமார் பேசுவது வேடிக்கையானது என்றும் குறிப்பிட்டார்.
-
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தமாட்டோம் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறுவது முட்டாள்த்தனமானது என்றும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, புலிகளை போரில் தோற்கடிக்கவும் முடியாது. புலிகளை உங்கள் படைகள் போரில் ஒருபோதும் வெற்றிகொள்ளவும் மாட்டார்கள் எனவும் நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார்.

புலிகள் ஆயுதங்களை ஒருபோதும் கீழே வைக்கமாட்டார்கள் என்றும் சபையில் உரத்த சத்தமாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, சமஷ்டி தீர்வு குறித்து 20 வருடங்களுக்கு முன்னர் பேசியிருந்தால் தமிழர்கள் அது குறித்து ஓரளவு பாசீலித்திருப்பார்கள்.
ஆனால், இன்று இத்தனை அழிவுகளுக்குப் பின்னர் சமஷ்டி தீர்வு பற்றி பேசுவதும் அறியாத்தனம் என்றும் ஆவேசமாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் இந்த காரசாரமான உரையை மூத்த அமைச்சர்கள், ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட பிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சபையில் அமைதியாக இருந்து செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.
puthinam.com
*****

No comments: