Friday, 7 November 2008

** கருணாநிதி ராஜினாமா?-சமாதானத்தில் இறங்கிய அமைச்சர்கள்!

இலங்கை விவகாரத்தில் தன்னை அனைத்துத் தரப்பினரும் குறை கூறுவதால் மன வருத்தம் அடைந்த முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மூத்த திமுக தலைவர்களும் அமைச்சர்களும் கோட்டைக்கு விரைந்து அவரை சமாதானப்படுத்தினர்.முதல்வர் ராஜினாமா செய்தியால் நேற்று கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது.ராஜினாமா கடிதத்தை அவர் எழுதிவிட்டதாக தகவல் வந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோட்டைக்கு ஓடி வந்தனர்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கட்சிகள் ஒன்று திரள மறுப்பதோடு, தன்னையே குறை கூறி வருவதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முதல்வருடன் நெடு நேரம் பேசிய பின்னரே அவர் தனது முடிவை அரை மனதுடன் கைவிட்டதாக திமுக மற்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சில கட்சிகளும் அமைப்பினரும் திரையுலகினரும், அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் இலங்கை தமிழர்களின் நலிவு தீர்த்திட ஒரு வகையில் நாம் பயன்படுகிறோம் என்கிற மன நிறைவுடன் என்றும் போல் தமிழ்த் தொண்டு, தமிழினத் தொண்டு தொடர்வோம் என்று கூறி, தான் இதில் இனி தலையிடப் போவதில்லை என்றரீதியில் தனது கருத்தை அவர் அறிக்கையில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

போரை நிறுத்துமாறு எப்படி கேட்க முடியும்?:

இந் நிலையில் இலங்கையிடம் இந்தியா போரை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையி்ல்,போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும்தான் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இது சாத்தியமா என்பது தெரியவில்லை.இரு தரப்பினரின் கருத்துக்களையும் அறியாமல் 3வது தரப்பு, போரை நிறுத்துமாறு எப்படி கோரிக்கை விடுக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்புமே தாக்குதல்களை நிறுத்த வேண்டும். நடுநிலை நாடுகளின் உதவியுடன் அமைதிப் பேச்சுக்கு முன்வர வேண்டும். இது இந்தியாவுக்கு ஏற்புடையதாகும். பேச்சுவார்த்தையின் இறுதியில் ஏற்படும் உடன்பாடுகள் போரை நிரந்தரமாக நிறுத்த உதவ வேண்டும். இலங்கையில் நீடித்த அமைதி நிலவ அது வழி வகை செய்ய வேண்டும். இதுதான் எனது விருப்பம்.

கடந்த வாரம்தான் பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமகவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு கிடையாது. விடுதலைப் புலிகளை பாமக ஆதரித்ததில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மட்டுமே தமிழீழத்தை உருவாக்க முடியும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.விடுதலைப் புலிகள் குறித்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு கட்டத்தில், ஒவ்வொரு விதமான கருத்துக்களைக் கொண்டுள்ளன. ஆனால் திமுக இந்தப் பிரச்சினையில் ஒரே கருத்தில், நிலையில்தான் உள்ளது.2 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டசபையில், விடுதலைப் புலிகள் குறித்து திமுகவுக்கு 2 நிலைகள்தான் உள்ளன. ராஜீவ் காந்தி கொலைக்கு முந்தைய நிலை, ராஜீவ் காந்தி கொலைக்குப் பிந்தைய நிலை என்பதே அது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
thatstamil
*****

No comments: