Saturday, 29 November 2008

** உலகையே உலுக்கியுள்ள மும்பை தீவிரவாத தாக்குதல்!

உலகையே உலுக்கியுள்ள மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் 60 மணி நேரங்களைக் கடந்து இன்று காலையில் முடிவுக்கு வந்தது.


தீவிரவாதிகளின் பிடியிலிருந்து நாரிமன் ஹவுஸ் மற்றும் ஓபராய் ஹோட்டல் ஆகியவை மீட்கப்பட்டு விட்டன. அங்கிருந்த தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். இன்று காலை வரை தாஜ் ஹோட்டலை மீட்கும் முயற்சி நடந்தது. இன்று காலை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று தாஜ் ஹோட்டலையும் என்.எஸ்.ஜி. படையினர் மீட்டனர்.

நேற்று நடந்த என்.எஸ்.ஜி. அதிரடி நடவடிக்கையில் நாரிமன் ஹவுஸ் மற்றும் ஓபராய் ஹோட்டல் ஆகியவை முழுமையாக மீட்கப்பட்டன. நாரிமன் ஹவுஸில் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐந்து பிணையாளிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர்.

தற்போது நாரிமன் ஹவுஸ் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. அங்கு யாரேனும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பது குறித்து நள்ளிரவைத் தாண்டியும் தீவிர சோதனையில் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் ஈடுபட்டிருந்தனர். ஓபராய் ஹோட்டல் நேற்று மதியவாக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அங்கு 30 பிணையாளிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

தீவிரவாதத் தாக்குதலில் மொத்தம் 160 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் பாதுகாப்புப் படையினர் ஆவர். தீவிரவாதிகள் 11 பேரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். ஒருவன் மட்டும் பிடிபட்டுள்ளான். தாஜ் ஹோட்டல் இன்று காலை மீட்பு இந்த நிலையில் தாஜ் ஹோட்டலில் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். அங்கு ஒருவன் மட்டும் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் 3 பேர் இருப்பதாக பின்னர் தெரிய வந்தது.

500க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட தாஜ் ஹோட்டலில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளையும் உயிருடன் பிடிக்க என்.எஸ்.ஜி. படையினர் தீவிரமாக முயன்றனர். தாஜ் ஹோட்டலின் வெளிப் பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இருப்பினும் உள்ளே சென்று அறை அறையாக சோதனை போட முடியாத அளவுக்கு தீவிரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.

தாஜ் ஹோட்டலின் லே அவுட் முழுவதும் தீவிரவாதிகளுக்கு முன்பே முழுமையாக தெரிந்திருப்பதால் பாதுகாப்புப் படையினரை திணறடித்து வந்தனர். மேலும் போதிய அளவுக்கு ஆயுதங்களும் அவர்களிடம் இருந்ததால், உள்ளே சென்று தாக்குதல் நடத்த முடியாமல் என்.எஸ்.ஜி. படையினர் திணறினர். இந்த நிலையில் இன்று காலை கையெறி குண்டுகளையும், சரமாரியான துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி 3 தீவிரவாதிகளையும் என்.எஸ்.ஜி. படையினர் கொன்றனர். இதன் மூலம் தாஜ் ஹோட்டல் கிட்டத்தட்ட மீட்கப்பட்டு விட்டது.

அங்கு தற்போது தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
____________________

No comments: