Monday, 10 November 2008

** தமிழரின் வீர வரலாறு கடலில் எழுதப்படுகிறது: கடற்புலிகள் சிறப்புத் தளபதி கேணல் சூசை

கடற்புலி மாவீரர்களின் உயர்ந்த அர்ப்பணிப்புக்களினால் கடலிலே தமிழர்களுடைய வீரவரலாறு எழுதப்படுகின்றது என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார். வடமராட்சிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் டோறாக் கலமும் கூகர் படகும் மூழ்கடிக்கப்பட்டதில் வீரவரலாறான ஏழு கடற்கரும்புலி மாவீரர்களின் வீர வணக்க நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் தொடர்பான பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கடற்புலிகள் கடலிலே வல்லமையை இழந்து விட்டார்கள் என்ற பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசு திட்டமிட்டு பரப்பி வந்தது.
இந்நிலையில் கடலிலே தமது வல்லமைகள் பலமான நிலையிலேயே உள்ளது என்பதை இக்கடற்கரும்புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதல் என்பது சிறிலங்கா அரசின் பொய்யான பரப்புரைகளைத் க்கியெறிந்துள்ளன.இத் தாக்குதல் மூலம் ஏழு கடற்கரும்புலிகளும் தமிழர்களுடைய வீரமரபை வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் வீரகாவியமான ஒவ்வொரு மாவீரர்களும் தனித்துவமான வரலாறுகளைக் கொண்டவர்களாகவுள்ளனர். ஒவ்வொரு மாவீரர்களின் உயர்ந்த அர்ப்பணிப்பினால் தான் விடுதலைப் பயணம் வீறுகொண்டு நகர்ந்து செல்கின்றது. மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதன் மூலம் தமிழினம் உயர்ந்த விடுதலைக் குறிக்கோளை அடைந்து கொள்ளும் எனவும் கேணல் சூசை அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சிக் கிழக்கு நகர்ப் பகுதியில் கடற்படையின் கலன்களை வெற்றிகரமாக மூழ்கடித்த கடற்கரும்புலிகள் நினைவாக கடற்புலிகளின் களமுனைப் போராளிகளுக்கு கேவில் கரையோர மக்களால் உலருணவு வழங்கப்பட்டது.

களமுனைப் போராளிகளுக்கு கேவில் கரையோர வாழ் மக்களினால் கடற்புலிகளின் கட்டைக்காடு வட்டப் பொறுப்பாளர் அறிவு அவர்களிடம் உலருணவுகள் வழங்கப்பட்டது. கடற்புலி களமுனைப் போராளிகளுக்கான உலருணவுகளை கடற்புலிகளின் தாக்குதல் தளபதி கலாத்தன் அவர்களிடம் மக்கள் வழங்கினர்.
Tamilwin
*****

No comments: