Monday, 10 November 2008

** இன்று மாலைதீவு செல்லும் மஹிந்த புதன், வியாழன் புதுடில்லியில் பேச்சு -அவரோடு முக்கிய விடயங்களை ஆராய்வதற்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றதாம் இந்தியா

மாலைதீவில் நாளை நடைபெறும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கொழும்பிலிருந்து மாலைதீவுக்குப் புறப்படும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அங்கிருந்து புதுடில்லிக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டிய பல முக்கிய விடயங்கள் குறித்து எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அவருடன் பேசித் தீர்மானங்களை எடுப்பதற்காக, இந்திய அரசியல் தலைமை, அவரது வருகைக்காகக் காத்திருக்கின்றது எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.

அண்மையில் நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமட் நஸீட் வெற்றிபெற்றார் என்பது தெரிந்ததே. நீண்ட முப்பது ஆண்டுகளாக மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கையூமிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை முகமட் நஸீட் பொறுப்பேற்கிறார்.
அவர் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிகழ்வு நாளை மாலைதீவுத் தலைநகர் மாலேயில் நடைபெறுகின்றது. அதில் பங்குபற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலைதீவுக்குப் புறப்படுகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை நாளை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து நேரடியாகப் புதுடில்லிக்குப் புறப்படுவார் என்றும் கூறப்பட்டது. ‘பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக வங்காள விரிகுடா எத்தனங்கள்’ (b i m s t e c) உச்சி மாநாடு நாளை தொடக்கம் வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் புதுடில்லியில் நடைபெறுகின்றது.
நான்கு வருடத்துக்குப் பின்னர் நடைபெறும் இந்த இரண்டாவது b i m s t e c மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேபாளம், பங்களாதேஷ், மியன்மார், பூட்டான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுகின்றனர்.

முதல் இரு நாட்களும் வெளிவிவகாரச் செயலாளர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலும், மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாட்டுத் தலைவர்கள் மட்டத்திலும் உச்சி மாநாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்கிறார் எனக் கூறப்பட்ட போதிலும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டிய பல முக்கிய விடயங்களை அவருடன் பேசித் தீர்மானிக்கவே அவரது வருகைக்காகப் புதுடில்லி அரசுத் தலைமை காத்திருப்பதாக விடயமறிந்த வடடாரங்கள் தெரிவித்தன.
Uthayan.com
******

No comments: