Saturday, 22 November 2008

** மூச்சு இருக்கும் வரை பேசுவோம் - நாஞ்சில் சம்பத்

மூச்சு இருக்கும் வரை புலிகள் குறித்து பேசுவோம் என மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதுரையில் மதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டத்தை துவக்கி வைத்து நாஞ்சில் சம்பத் பேசுகையில்,தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் குறித்து மூச்சு இருக்கும் வரை நாங்கள் பேசுவோம். வைகோ விடுதலைப் புலி ஆதரவாளர் என்பதாலேயே நான் மதிமுகவில் சேர்ந்தேன்.நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. ஈழப் போரை மத்திய அரசு அங்கீகரித்து தனி ஈழ நாடாக வாங்கித் தர வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஈழப் பிரச்னையில் அதிமுக-மதிமுக, கூட்டணியை உடைத்து விடலாம் என கருணாநிதி நினைக்கிறார், நாடகமாடுகிறார். அதிமுகவுடனான எங்கள் கூட்டணி தொடரும், நிலைத்திருக்கும்.இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சே முன் வர வேண்டும். மறுத்தால் அந்நாடு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.தூதரக உறவை முறித்து நெருக்கடிகளை கொடுத்தால் தான் இந்தியாவுக்கு இலங்கை பணியும் என்றார்.
_________

No comments: