Monday, 24 November 2008

** குஞ்சுப்பரந்தன் நோக்கிய மும்முனை நகர்வில் படையினருக்கு பாரிய அழிவு - களமுனையில் சிதறிக் கிடந்த படையினரின் சடலங்கள்!

கிளிநொச்சியில் மாவீரர் தினத்தன்று சிங்களக் கொடியை ஏற்றுவதற்கு சிறிலங்கா பகிரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு முனைகளினூடாக கிளிநொச்சியை நெருங்க முனையும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
-
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை குஞ்சுப்பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கொல்லப்பட்ட படையினரின் பல சடலங்கள் களமுனையில் சிதறிக் காணப்படுவதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது, செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:15 மளியளவில் உருத்திரபுரம் பகுதி ஊடாக குஞ்சுப்பரந்தன் நோக்கி மும்முனைகளில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர். இம்மும்முனை முன்நகர்வுகளுக்கு எதிராக பிற்பகல் 2.30 மணி வரை விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முறியடித்தனர்.

இதில் 40-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்களும் பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

இதுஇவ்வாறிருக்க, கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வில் படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் சிலர் மீண்டும் படையணிகளில் இணைய முடியாத நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
"புதுமுறிப்புக்குளம் மற்றும் தென்முறிகண்டி பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் பாரிய பதிலடி நடவடிக்கைக்கு 57ம் படையணி உள்ளானது.

இதில் படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். 70 பேரில் 35 பேருக்கு சிறு காயங்களும் மேலும் சிலர் மீண்டும் படையணிக்குத் திரும்ப இயலாத நிலையில் காயமடைந்தும் உள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
__________
Sankathi.com

No comments: