இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை, நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு;தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.
அதிர்ச்சி தரத் தக்கதும் ஆறாத் துயரம் அடையத் தக்கதுமான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்தியத் 'திருவிழா'க்கள் ஆகி; இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றுள்ள சோக நிலை, உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக் கூடியதல்ல!. இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார்கள்; அல்லது தவறாகக் கூறுகிறார்கள்.
"இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக எதுவும் பேசுவோம், எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்'' என்கிற அவர்களின் பேச்சும், எழுத்தும் எனக்குப் புரிகிறது.ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலை மோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு; சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல்லவா? முதலில் அத்தகைய சட்டக் கட்டுப்பாடுகளை உடைக்கும் விதமாகப் பேசுகிறார்கள்.சட்டரீதியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திட நேர்ந்தால், 'கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக் கெதிராக நடந்து கொள்கிறார்' என்று என் மீது 'பெரும் பழி' சுமத்துகிறார்கள்.
சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக்கடுக்கான திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மன நிறைவு எனக்கிருந்தாலும்;எனக்கும், என் தலைமையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து; எவையெவை சட்ட விரோதமான செயல்களோ; அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.
இந்தப் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்று விடாமல்; அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறி என்னுடனிருந்து துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
இந்திய அரசு என் வேண்டுகோளையும், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்கு சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும்,இலங்கை தமிழர்களுக்கு மருந்து, உணவு, உடை ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் ஆகியவற்றின் மூலம் வழங்க இதுவரை 8 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கிய தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வழங்கிட வேண்டுகிறேன்.
நான் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள்; இலங்கை தமிழர்களின் காயத்திற்கும், இங்குள்ள சில தலைவர்களின் எரிச்சலுக்கும் தக்க சிகிச்சைக்கான மருந்தாகட்டும்.அவர்களின் நலிவு தீர்த்திட ஒரு வகையில் நாம் பயன்படுகிறோம் என்கிற மன நிறைவுடன் என்றும் போல் தமிழ்த் தொண்டு, தமிழினத் தொண்டு தொடர்வோம் என்று கூறியுள்ளார்.
***








No comments:
Post a Comment