Tuesday, 11 November 2008

** ஈழத் தமிழர் பிரச்சினை: தமிழக சட்டசபையில் அமளி-துமளி

தமிழக சட்டசபையில் இன்று செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திரா காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் முழக்கம் எழுப்பினர்.

இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
தமிழக சட்ட சபையில் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:

ஜி.கே.மணி: முதலமைச்சர் குறிப்பிட்டது போல இலங்கை பிரச்சினையை விவாதத்திற்கு எப்போது எடுப்பீர்கள்?.

சபாநாயகர்: நேற்று நீங்கள்தான் தனிநபர் தீர்மானம் தந்தீர்கள். அதன் பிறகு நீங்களே இப்படி பேசினால் எப்படி?

ஞானசேகரன் (காங்): இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசும் பல தலைவர்கள் உள்ளனர். நடிகர்கள், இயக்குநர்கள், கூட பிரபாகரனை, உலகத் தமிழர் போல புகழ்ந்து பேசுகிறார்கள். இதனை எப்படி அனுமதிக்க முடியும்?.
வைகோ, கண்ணப்பன், இயக்குநர்களான சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் இன்னும் சிலர் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுகிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டும். இந்த பிரச்சினை பற்றி பேசத் தான் வாய்ப்பு கேட்கிறோம்.

சபாநாயகர்: எல்லாவற்றையும் பேசி விட்டு வாய்ப்பு கேட்டால் எப்படி?.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஏற்கனவே கூறி இருந்தார். எங்கள் கட்சி தலைவர் தா.பாண்டியனும், அறிக்கை வெளியிட்டார்.
தற்போது விடுதலை புலிகள் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். ஆனால் சிறிலங்கா மறுத்து விட்டது. பிடிவாதம் காட்டி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. இதனை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?.

(இதற்கு ஞானசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரசார் எழுந்து சிவபுண்ணியம் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்)

ஞானசேகரன்: இலங்கை தமிழர் பிரச்சினையில் அப்பாவி தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.

சிவபுண்ணியம்: மத்திய அரசு துரித கவனம் செலுத்தினால் போர் நிறுத்தம் ஏற்படும். ஆனால் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.

(அதற்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக பேசிக் கொண்டனர்).

விடுதலைப் புலிகளை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை. அப்பாவி மக்கள் அங்கு கொல்லப்படுவதை ஞானசேகரன் ஏற்றுக் கொள்கிறாரா?

(இதற்கும் ஞானசேகரன் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்).
puthinam.com
****

No comments: